வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்

முற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.

வணக்கம் சகோதரம்
சேமம் எப்படி?
தங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய வேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...

முதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.
இங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.
ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?
இதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.
உதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா?

இலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா?
உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...

தயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.

இதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

14 கருத்துகள்:

தமிழன் சொன்னது…

இதனை நிச்சயமாய் அனைத்து தமிழரும் உணரவேண்டும்

தனிமரம் சொன்னது…

நிச்சயம் பலர் திருந்த வேண்டும் சகோ!

பெயரில்லா சொன்னது…

உங்களின் வலியை என்னால் உணர முடிகின்றது. வரலாற்றுக் காலங்களில் தமிழர்கள் செய்த பல முட்டாள் தனமான புறக்கணிப்புக்களும், அதீத கோரிக்கைகளும் நம் நியாயமான உரிமைகளைக் கூட இழக்கச் செய்து விட்டது..! அது 50-50 திட்டமோ, இந்திய வம்சாவளித் தமிழரை விரட்டியது தொடங்கி .. 13 சட்ட திருத்ததை புறக்கணித்தமை, இந்திய ராணுவத்தை விரட்டியமை . இறுதியாக ரணில் வெல்லக் கூடாது என தேர்தலைப் புறக்கணித்து, சாத்தானை அரியணை ஏற்றியது வரை. இன்றைய நிலையில் தமக்கு என மிஞ்சிக் கிடக்கும் கூட்டமைப்பையும் புறக்கணித்தால் மொத்தமாய் எல்லோரும் தோணி பிடிச்சி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என போக வேண்டி வரும்..! வட மாகாணத்தின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், வேலை வாய்ப்பு, உட்கட்டமைப்புகளை கொஞ்சமாவது பாதுகாக்க வேண்டும் எனில் மாகாண சபையில் வாக்கிட்டு அதன் மூலம் 13-ம் சட்டத்தையாவது கொண்டு வர முயல்தலே வழி. அதை விட்டு சர்வ சுதந்திரத்தோடு இருக்கும் புலத்து ஈழத் தமிழர்கள், குறைவற்ற சுதந்திரத்தோடு இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழரும் சில வேலை வெட்டி இல்லாத யதார்த்தம் மீறியோரின் கனவுலகப் பேச்சைக் கேட்டு குழப்பம் விளைவிக்காமல் இருந்தாலே புண்ணியமாப் போகும்..! உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருந்தாலே போதும்..! அங்குள்ளவர் அவர்தம்மே தம் முடிவுகளை தீர்மானிக்கட்டும். இயன்றால் பொருளாதார் உதவிகளைச் செய்து கல்வி, தொழில் வேலை வாய்ப்பை அளிக்க முயல்வோமாக. நன்றிகள் !

karai ks vijayan சொன்னது…

தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள். அதுபோல.வெளியில் இருப்பவர்கள் என்ன்வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகலாம்.... அங்குள்ள கஷ்டம் அங்கேயே இருப்பவர்களுக்குத்தான் தெரியும்

நிச்சயம் அனைவரும் உணரவேண்டும்....

Unknown சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?////உண்மையில்13-ஆம் திருத்தச் சட்டம் என்பது வெறும் கோது தான்.மத்திய அரசின் கைகளிலேயே அதிகாரங்கள் முழுவதும் இருக்கும்.அதாவது,மத்திய அரசாலேயே ஆளுநர் நியமிக்கப்படுவார்.மாகாண சபையில் தீர்மானம் நிறைவேறினாலும்/நிறைவேற்றினாலும்,ஆளுநர்+ஜனாதிபதியே இறுதி முடிவை எடுப்போராக இருப்பர்.சுயமாக எந்த முடிவும்(உதாரணமாக ஒரு சிற்றூழியர் நியமனம் கூட முடியாது)எடுக்க முடியாத ஒரு கட்டமைப்பே மாகாண சபை!///ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான்......////ஒரு வகையில்,உண்மை தான்.வாக்களித்து,'அவர்' ஜனாதிபதியாக வந்திருப்பின்????????????////1988-ல் இந்த ஒப்பந்தம் உருவாகி,கைச் சாத்தான போது,ஒரு ஆண்டுக்குள்,வடக்கு+கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தி வட+கிழக்கு இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதும் உள்ளடக்கமாக இருந்தது/இருக்கிறது.////இலங்கை முழுவதும் உள்ளடக்கி ஒரு பொது வாக்கெடுப்பைக் கோருவது அடி முட்டாள் தனம்!////நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை தேர்தலில் ஒட்டு மொத்த வடக்குத் தமிழ் மக்களும் வாக்குப் பலத்தைப் பிரயோகித்து ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுவதே வரலாற்றுக் கடமையாகிறது!////தமிழக உடன் பிறப்புகளின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.சில புரிந்து கொள்ளப்படாத அரசியல் நுணுக்கங்கள் உள்ளன.புரிய வைப்பதற்கும் எவருக்கும் நேரமில்லை.சில அரை வேக்காட்டு ஊடகங்களும்................ஹூம்!

Kuru சொன்னது…

இது சம்மந்தமான உங்கள் வாசிப்பு மேலோட்டமானது என்று புலப்படுகிறது சுதா.

//ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?// இது நீங்கள் ஊகிப்பில் எழுதியிருக்கிறீர்கள் என்றே தெரிகிறது.

ரணில் அரசாங்கத்திற்கு போரின் மீதோ இராணுவ நடவடிக்கைகள் மீதோ உடன்பாடு இல்லை என்று எதனூடாக முடிவு செய்கிறீர்கள் என்று தெரியவில்லை!!!
இராணுவத்தில் உடன்பாடில்லாத ரணில் அரசாங்கம் சமாதான காலத்தில் அரச ராணுவ இயந்திரத்தை மீள் திருத்தம் செய்ய வேண்டியதன் தேவை என்ன!! கருணாவிற்கு வலைவீசவேண்டியதன் தேவை என்ன!!

ரணில் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் நிகழ்ந்திருக்காது என்பது தமிழ் மக்களின் எடுகோள் அவ்வளவுதான். அதையே தமிழ் மக்களின் அரசியலாகவும் தவறாகவும் சித்தரிப்பது அடிமட்ட முட்டாள்த்தனம் என்பதற்கப்பால் அரசியல் வாசிப்பற்ற வெறுமையில் கிடக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

போராட்டங்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதை வாசித்துப்பாருங்கள். அவற்றுள் மிக முக்கியமானது மக்களை ஊகிப்புகளிற்குள்ளும்.. எடுகோள்களிற்குள்ளும் தள்ளுவது. இன்று சிங்கள மக்கள் அனுபவிப்பதும் அவர்கள் செய்த பல ஊகிப்புகள் தான். ...

Unknown சொன்னது…

"உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது."
இது எல்லாம் மக்களை பயக்க சொல்லப் படும் இனிப்பு வார்தைகள். என்ன தான் மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டாலும் , அதை செயற்படுத்த ஆளுநரின் ஒப்புதல் வேண்டும். இந்த ஆளுநர் யார்? ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டிருப்பார். அவர் எப்படியிருப்பார்? ஜனாதிபதியைதான் பிரதிபலிப்பார்.

தமிழ்கூட்டமைப்பின் தெளிவற்ற செயற்பாடுகள் தான் வெறுப்பை கொடுப்பன. அப்புக்காத்துகளுக்கு மட்டும் தான் அரசியல் தெரியும் என்ற ஈழத்தமிழரின் மூட நம்பிக்கையை தொடர்ந்து துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

தேர்தலில் வென்றி விக்கு முதலமைச்சர் ஆனாலும் அவரல் என்ன மாதிரியான செயல் திட்டங்களை நடைமுறை படுத்திட முடியும். அதற்கான தெழிவான திட்டங்களை எங்காவது சொல்லியிருக்கிறாரா தெரியவில்லை.

நமக்குதான் எல்வா வற்ரையும் அனுபவித்த பின்னர் அறிந்து கொள்ளும் பொறுமையிருக்கிறது. அப்படியே விக்கியை முதல்வராக்கி அனுபவித்துக் கொள்ளுவோம்.

செங்கோவி சொன்னது…

சமீபகாலமாக அங்குள்ள நிலை பற்றி இந்தியத் தமிழரான எமக்கு போதுமான தெளிவில்லை என்பது உண்மை தான்.

உங்களுக்கு எது நல்லது என்பது பற்றி, யதார்த்ததின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான். அதற்கு தார்மீக ஆதரவு அளிப்பது எம் கடமை.

செங்கோவி சொன்னது…

பெரிய குறிக்கோள் என்பது ஒரே ஷாட்டில் அடைவது இல்லை. அதை சிறுசிறு துண்டுகளாக்கி, ஒவ்வொன்றாக அவற்றை மெதுவாக அடைவது தான்.

சிறுதுண்டுகளை எலும்புத்துண்டுகள் என்று ஒதுக்குவது அறிவீனம். அவை வரலாற்று நோக்கில் ‘முதுகெலும்பு’த் துண்டுகளாகவும் ஆகலாம்.

செங்கோவி சொன்னது…

சிறுசிறு சமரசங்கள்மூலமே சிறு துண்டுகளை அடைந்தார் காந்தி. அந்த நிலையில் தன் தரப்பை வலுப்படுத்திக்கொண்டு, அடுத்த ‘துண்டு’க்கு நகர்ந்தார்.

வரலாற்றை முழுதாக நோக்கத் தெரியாத அறிவிலிகள், அதனாலேயே அவரை ‘பிரிட்டிஷ் கைக்கூலி’ என்று வசைபாடுகின்றனர், இப்போதும்.ஈழத் தியாகிகள், அப்படி ஒரு கைக்கூலி பட்டம் வந்துவிடக்கூடாது என்ற கவனத்திலேயே, எல்லா நாடுகளையும் பகைத்துக்கொண்டது வலிமிகுந்த உண்மை. உங்களையும் கைக்கூலி என்று வசைபாடினாலும், யதார்த்தத்தின் அடிப்படையில், உங்கள் பதிவு முழுக்கச் சரியே!

ஆனால் இப்போதாவது நாம், நம் தரப்பை பலப்படுத்தும் சிறு வாய்ப்பையும் புறக்கணிக்காமல், பயன்படுத்திக்கொள்வதே நல்லது.

Manimaran சொன்னது…

இது உங்கள் வாழ்வாதார பிரச்சனை..இதில் உள்ள வலிகள் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதில் நான் கருத்து சொல்ல உரிமை இல்லைதான். ஆனால் ஒரு உண்மையான ஈழத்தமிழனாக உங்கள் ஆதங்கத்தை நியாயமான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து போன நிலையில் அடுத்த ஆக்கப்பூர்வமாக என்ன செய்யவேண்டும் என்பதையை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. ஆனால் எங்கள் தேசத்தில் இதை வேறு மாதிரியாக திரித்து அரசியலாக்கி அதில் சுகம் காண நிறைய கூட்டங்கள் இருக்கிறது. உங்கள் நிலைபாட்டில் முழுவதும் உடன்படுகிறேன்.

Manimaran சொன்னது…


நிறைய நண்பர்களுடன் உங்கள் சார்பாக நிறைய தடவை நான் வாதடியிருக்கேன். இன்னொரு ஈழப்போர் வேண்டும் என சொல்பவர்களிடம் போர் நடந்தால் நீங்கள் போறீங்களா என கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் . இங்கு, ஈழ சோகத்தை ஒவ்வொரு குழுவாக பங்கு பிரித்து அரசியல் செய்கிறார்கள். உங்களுக்கு எது வேண்டும் -வேண்டாம் என முடிவு செய்ய இந்த பக்கிகள் யார்..? உங்கள் எண்ண நிலைபாடு என்ன என்பதை இவர்கள் எப்படி உணர்வார்கள்...உங்கள் எதிர்கால வசந்தத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். இந்த சில்லறை இயக்கங்களை விட்டுத்தள்ளுங்கள். இவர்களை தமிழ் நாட்டிலே யாரும் மதிப்பதில்லை.

Unknown சொன்னது…

ஜன-நாயக நாட்டில் தேர்தல் என்பது மக்களின் நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு செயல் முறையே!ஒரு தேர்தலில்,பல் வேறு வகைப்பட்ட கொள்கைகள் கோட்பாடுகளை உடையோர்,தங்கள் தங்கள் கொள்கைகளை/கோட்பாடுகளை மக்கள் முன்னிலையில் எடுத்துக் கூறி ஆதரவு தேடுவார்கள்.அந்த வகையில்,மக்கள் பிடித்தமானவற்றை சீர் தூக்கிப் பார்த்து வாக்களிப்பார்கள்.////இலங்கைத் தீவானது பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற வேளை,சில கனவான்கள் தமிழருக்கு என்று சில தீர்வுகள்/தேவைகளை பிரிட்டிஷாரிடம் முன் வைத்த போதும்,வேறும் சில கனவான்கள் அதுவெல்லாம் வேண்டியதில்லை,பெரும்பான்மை(சிங்களவர்)யினர் தங்கமானவர்கள்,அவர்கள் எம்மை தரம் தாழ்த்தி விட மாட்டார்கள் என்று வக்காலத்து வாங்க பிடித்தது சனி!///உரிமைக்கான சாத்வீக வழிப் போராட்டங்கள் முகிழ்த்த போது வன்செயல்கள் மூலம் அடக்கி ஒடுக்க,பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தது ஆயுதப் போர்!அதுவும்,சர்வ தேசத்தின் முன் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு,அடக்கி ஒடுக்கப்பட்டு,இனம் அழிக்கப்பட்டு,இன்று கையில் ஒரு சிறு பிரம்பைக் கூட எடுக்க முடியா நிலையில் நாம்!அயலவரின் தீர்வுப் பொதி என்று,இரண்டு நாடுகள் கைச் சாத்திட்ட ஒரு உடன்படிக்கையின் பிரகாரம் முகிழ்த்தது 'மாகாண சபை' என்ற,அதிகாரம் எதுவுமற்ற ஓர் கட்டமைப்பு.போரை?!க் காரணம் காட்டி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட அந்த பிரிக்கப்பட்ட(ஒப்பந்தம் கைச்சாத்தான போது வட+கிழக்கு மாகாண சபையாக இருந்தது)வடக்கு மாகாண சபைக்கே,சர்வதேச வலியுறுத்தலால் இப்போது (செப்-21)தேர்தல் நடைபெற இருக்கிறது.அதில் பங்கு கொண்டு எங்கள்(தமிழர்)பலம் நிரூபிக்கப்பட வேண்டும்,நாம் தனித்துவமானவர்கள்,கூடி வாழ்தல் முடியாது என்றெல்லாம் சர்வ தேசத்துக்கு அடித்துச் சொல்ல வேண்டும் என்று சுதந்திர விரும்பிகள் எதிர் பார்க்கிறார்கள்.வரலாற்றில் இது வரை காலமும் ஒரு சில தவறுகள் எங்கள் தலைமைத்துவங்களால் நிகழ்ந்துள்ளன தான்.எப்போதும் தவறிழைக்க எவராலும் முடியாதே?இப்போது,இன்று வரை நாம் பட்டது போதும்.மாகாண சபையின் அதிகாரங்கள் மத்தியில் குவிந்து கிடக்கிறது என்பது என்னவோ,உண்மை தான்.ஆனாலும்,கொஞ்சம் பயன் பெறக் கூடிய வழிகளும் அதில் உண்டு.ஏனைய எட்டு மாகாண சபைகளும் ஆளும் கட்சி கையில் இருப்பதால் மாகாண சபை சட்டத்தில் என்ன பயன் இருக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை/தெரிந்தும் பயன் இல்லை!//////எங்கள் உரிமைப் போராட்டம் இப்போது சர்வதேச மயப்பட்டிருப்பதால்,நாம் இப்போதும் வாளாவிருந்தால் எந்தவோர் அமைப்பும் அடக்கப்பட்ட/அடக்கப்படும் ஓர் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க மாட்டாது.(பிராந்திய நலன்கள் வல்லரசுகளுக்கும்,வல்லரசுக் கனவிலிருப்போர்க்கும் முன்னுரிமை இருந்தாலும்)தற்போதைய பாசிச அரசாட்சியின் கீழ்,ஒரு சாத்வீகப் போராட்டம் கூட நடத்த முடியாத சூழ்நிலையில்,எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்,ஒரு திருப்பு முனைக்கு வித்திடக்கூடும்/வித்திடும் என்பது பரந்தளவிலான நம்பிக்கை.தமிழக உறவுகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை இந்த சந்தப்பத்தில் கை விட்டு யதார்த்தம் புரிந்து/தெரிந்து தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டிய வேளை இது.தமிழக மாணவர்கள் அண்மைக் காலங்களில் திராவிடக் கறை படியாது முன்னெடுத்த போராட்டங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top