Featured Articles
All Stories
விழிப்புணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜனவரி, 2017

டயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோர் சட்டங்களும்

வணக்கம் உறவுகளே...

இலங்கை என்பது நல்லாட்சியும் நீதி நிர்வாகங்கள் காக்கப்படும் ஒரு நாடாகவும் நல்லதொரு விம்பம் உருவாக்கப்பட்டக் கொண்டிருந்தாலும் மேல் தட்டு வர்க்கத்துக்கு கிடைக்கும் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களுக்கும் கிடைப்பதில்லை.


குறிப்பிட்டுச் சொல்லப் போனால் நுகர்வோர் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அது எந்தளவுக்கு ஒரு நுகர்வோனுக்கு உதவுகிறது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது.

இன்று எந்தக் கடையில் போய் பொருள் வாங்கினாலும் 10 ரூபாவிற்கு மேற்பட்ட மிகுதியானால் மட்டுமோ காசாகக் கிடைக்கும் அதற்கு கீழ் என்றால் உதிரியாகத் திணிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். பத்து ரூபாய் என்றால் தீப்பெட்டியும் ஐந்து ரூபாய் என்றால் ஏதாவது ஒரு உயர் சீனிப்பண்டமாக இருக்கும். இந்தச் சில்லறை விடயத்தில் சட்டத்தை இறுக்கத் தவறுவதால் பழக்கமற்றவனைக் கூட சொக்லேட் சாப்பிடப்பழக்குவதுமில்லாமல் இலங்கை அரசாங்கமே தனது சலரோக நோயாளருக்கான மருத்துவச் செலவை அதிகரித்துக் கொள்கின்றது.

வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் 3rd party இன்சூரன்ஸ் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அது கட்டத் தவறி சில நாட்கள் கடந்தால் கூட நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதுடன் தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும். இந்தக் காப்புறுதியின்படி யாராவது ஒருவரை அவ்வாகனம் தாக்கினால் கூட அவருக்கான காப்பீடாக அது கருதப்பட்டாலும் இதுவரை யாருக்காவது அப்படிக் கிடைத்திருப்பதாக தகவல் இல்லை. ஆனால் பல வழக்கறிஞர்கள் கூட பாதிக்கப்பட்டிருப்பினும் இதைக் கண்டும் காணாமல் விடுவதை அறிவுசார் விடயமாக கருத முடியவில்லை.

நேற்று டயலொக் மற்றும் மொபிடல் உடைய கட்டணப்பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. அதில் பார்த்தால் மொபிடலை விட டயலொக்கின் அரச வரிகள் மிக அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிவிக்கும் போது பொதுவான அரச வரிகள் தான் அறிவிக்கப்படும். அப்படி இருக்கையில் எப்படி வலையமைப்புக்கு வலையமைப்பு அரச வரிகள் மாற முடியும். மொபிடல் என்பது அரசுசார் வலையமைப்பு என்றாலும் தனியார் வலையமைப்புக்கு வரி வீதம் அதிகம் என்று அறிவிக்கப்படவில்லையே.



ஆக மொத்தத்தில் நாம் (நானும்) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பதால் தான் யாரோ ஒரு முதலாளித்துவ வர்க்கத்துக்கு அநியாயமாகப் பணத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இச்சட்டங்களை அடிமட்ட மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எல்லா ஊடகத்தினதும் 90 % க்கு மேற்பட்ட பக்கங்களை அரசியலும் கேளிக்கையும் தான் நிரப்புகிறதே தவிர அத்தியாவசியம் நிரப்பவில்லை.

மேலே நான் குறிப்பிட்டவற்றில் கூட நான் அறியாத நுகர்வோர் சட்டத்திற்குள் அடங்கிய ஏதாவது இருக்கலாம். தெரிந்தால் எனக்கும் சுட்டிக் காட்டுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

மிச்சக்காசு பிரச்சனை ாடர்பாக நான் இயக்கிய குறும்படத்தை இங்கே காணுங்கள்.


8:39 PM - By ம.தி.சுதா 1

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்

முற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.

வணக்கம் சகோதரம்
சேமம் எப்படி?
தங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய வேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...

முதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.
இங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.
ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?
இதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.
உதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா?

இலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா?
உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...

தயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.

இதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


வெள்ளி, 11 மே, 2012

AIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

தொழில்நுட்பத்தில் உயரிய வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் அதிகளவான ஆதிக்கத்தை செலுத்தி நிற்பது தொலைத்தொடர்பு தான். அந்தவகையில் தொலைபேசி வலையமைப்பு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உயிர்களோடு விளையாடும் யாழின் உணவுத் தரமும் தரக்கட்டுப்பாடும் (காணொளி இணைப்பு)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
பதிவிற்குள் செல்ல முன் ஒரு சில விநாடிகள்...
இப்பதிவில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் நியமானதே. எனது சொந்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டுள்ள இப்பதிவிற்கு முன் இது சார்ந்த நிறுவன முகாமையாளரை தொடர்பு கொண்டு அவரது நியாயப்பாட்டை கேட்ட பின்னரே மக்கள் நலன் கருதி இக் கேள்விகளைத் தொடுத்துள்ளேன்.
இந்தக் குளிர் களி நிறுவன முகாமையாளர் எனது உறவினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உணவுகள் என்பது பல்வேறு முறைகளில் தயாரிக்கப்பட்டாலும் அவற்றுக்கான காலவதித் திகதி என்பன பல விடயஙகளில் தங்கியிருக்கும். அதிலும் உலர் உணவுகளின் காலவதி அளவே மிகவும் அதிகமானதாக இருக்கும். ஆனால் ஈரம் சார்ந்த உணவுகளுக்கு குறிப்பிட்ட சில எல்லைகளுடனேயே கால அளவு வழங்கப்படும்.
இங்கு நான் சம்பவத்தை விபரித்த பின்னர் சர்ச்சைகுரிய சில விடயங்களுக்குள் தங்களை அழைத்துச் செல்கிறேன். நேற்று காலை எமது ஊர் கடையில் ஒரு ஐஸ் சொக் (குளிர்களி) வாங்கினேன். அதை உடைக்கும் போதே உமிழ் நீர் போல இழுபட்டு வந்ததுடன் கரைந்து விட்டது. அத்துடன் சுவையோ மிகவும் தரங்கெட்டுப் போய் இருந்தது. நேற்றையா தினம் வடமராட்சிக்கான மின்சாரத் தடை நாள் என்பதால் குளிர்சாதனப் பெட்டியின் இயக்கமின்மையால் ஏற்பட்டிருக்கலாம் என்று அப்படியே விட்டு விட்டு அதன் உறையைப் பார்த்தேன். அதில் உற்பத்தித் திகதி 13.11.2011 என்றும் காலவதித் திகதி 19.04.2013 என்றும் இடப்பட்டிருந்தது. ஒரு சாதாரண பிஸ்கட்டுக்கே 9 மாதங்கள் தான் கால எல்லை வழங்கப்படும் நிலையில் இது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் வழங்கப்பட்டிருக்கிறதே இது எப்படிச் சாத்தியம் என்பதற்காக இன்றும் ஒன்றை வாங்கியதுடன் அதன் நிலமையை காணொளி மூலம் தங்களுடன் பகிர்ந்திருககிறேன்.


(இங்கே திகதியை உற்று நோக்கினால் இன்னும் ஒரு விடயம் உங்களை உறுத்தும். காரணம் ஏதோ ஒரு மட்டம் தட்டிய நாட்கணக்கில் தான் கால அளவு வழங்கப்படும் ஆனால் இங்கே உற்பத்திக்கும் காலவதிக்கும் இடையேயான நாட்கணக்கைப் பாருங்கள்)

என் கேள்விகள்...

இதற்கான உரிமையாளரிடம் தொடர்பு கொண்ட போது இப்படியான கால அளவில் தான் தாங்கள் உற்பத்தி செய்வதாகவும் இதற்கு கடை உரிமையாளரின் குளிர் சாதனப் பெட்டியே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடையின் மூலம் எனது கேள்வி சுகாதார உத்தியோகத்தர்களிடம் திருப்பப்படுகிறது.
எந்தெத்தக் காரணங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு அனுமதியை அவருக்கு அளித்திருப்பீர்கள். அதன் உள்ளீட்டுப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறதா?
குளிர்சாதனப் பெட்டியில் இருக்கையில் பக்டீரியா தாக்கம் இன்மையால் பழுதாக சந்தர்ப்பங்கள் குறைவு என நீங்கள் காரணம் பயின்றாலும் ஒரு சாதாரண பொருளுக்கான வாழ்தகவு என்று ஒன்றிருக்கிறது. அதற்கு பயன்படும் பால்மாவுக்கோ அல்லது கொக்கோவுக்கோ ஒன்றரை வருடங்கள் பழுதாகாமல் இருப்பதற்கான வாழ்தகவு இருக்குமா?
எல்லோருக்கும் பொதுவான பொதுக் கேள்வி ஒன்று ஈழப் போராட்டம் உச்சம் பெற்றதன் பிற்பாடு யாழ்குடா நாட்டின் எப்பகுதிக்கும் தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட்டதில்லை (நகரப்பகுதி உள்ளடக்கவில்லை) இன்றும் கூட பல பிரதேசங்களுக்கு ஒன்று விட்ட ஒரு நாள் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்படியிருக்கையில் குளிர்சாதனத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு உணவுப் பொருக்கு இந்தளவு பெரும் காலப்பகுதியை அளிக்கலாமா?
சில மாதங்களுக்கு முன்னர் தென்பகுதியில் ஒரு சாதாரண உணவு நஞ்சாக்கலால் (food poisoning) பல மாணவர்கள் உயிர் போகும் தறுவாய்குத் தள்ளப்பட்டதை பலர் அறிவீர்கள். சிறுவர்களை இலக்கு வைத்து தயாரிக்கப்படும் இப்படியான உணவுப் பொருட்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
(விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டுள்ள இவ்விடயம் பலரை சென்றடைய வேண்டும் என விரும்பினால் தங்கள் சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்)
(இப்பதிவை சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு கொண்டுவருவதற்காக இதை பயன்படுத்த விரும்புவோருக்கு எனது பெயர் அடிக் கோடிடலுடன் பயன்படுத்த முழு அனுமதியிளிக்கிறேன்.)
10:55 AM - By ம.தி.சுதா 16

சனி, 7 ஜனவரி, 2012

பாழ்பட்டுப் போகும் யாழ் மருத்துவம் (சில நெருடும் உண்மைகள்)



         இந்த உலகத்தில் எந்த மனிதனும் கடவுளை நேரே கண்டதற்கான ஆதாரங்கள் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதில்லை. இருந்தாலும் அதிகளவானோர் தமக்கு உயிர் கொடுக்கும் கண்கண்ட தெய்வங்களாக வைத்தியர்களையே மதிக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் வைத்தியர்களோ மக்களை தம் பணம் கொழிக்கும் மரங்களாகவே நினைக்கிறார்கள்.
            அவர்களது தொழில் பக்தி தொலைக்கப்பட்டதாகவே என்னால் உணர முடிகிறது. கடந்த வருடம் மருத்துவமாதான தர்சிகாவின் கொலை வழக்கு அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த நீதி எங்கே ஒழித்தோடிவிட்டது என எவராலும் இனி தேடமுடியாது. அந்த குற்றவாளியான வைத்தியருக்கு பிணை எடுத்துக் கொடுத்ததே ஒரு தமிழ் வழக்கறிஞர் தான் என்பதை பலர் அறிவீர்களோ தெரியாது.
          அதன் பின் சிறிது காலத்தின் பின் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமானது “அருந்ததியுடன் இருந்த வைத்தியர்கள்” என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. அதன் உள் அர்த்தம் கடமை நேரத்தில் சில வைத்தியர்கள் மக்கள் காணக்கூடிய அறையில் இருந்து அருந்ததி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். உண்மையில் அங்கிருந்தவருக்கு கடமை நேரமா? ஓய்வு நேரமா? என உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அதற்கு அடுத்ததாக அவர்கள் செய்த வேலை தான் மிகவும் நகைப்பிற்குரியதாகும். அதாவது அதற்கு விளக்கம் கொடுத்து துண்டுப்பிரசுரம் ஒன்றை அச்சடித்து அனைவருக்கும் வைத்தியர்கள் தங்கள் கையாலேயே விநியோகித்தார்கள்.
          கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வைத்தியர்கள் கடமைக்கு கையொப்பம் இட்டுவிட்டு தமது தனியார் வைத்திய நிறுவனத்துக்குச் சென்று கையும் களவுமாகப் பிடிபட்டதை பலர் அறிந்திருப்பீர்கள். அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பெயரை மையப்படுத்தி இயங்கும் இணையத்தளம் ஒன்று யாழ் வைத்தியசாலை சம்பந்தமான செய்திகளை அடிக்கடி வெளியிடுவது பலரும் அறிந்திருப்பீர்கள். இவையனைத்தும் அங்குள்ள ஒரு வைத்தியர் மூலம் தான் செல்கிறது என்பது பலரது சந்தேகமாகும். காரணம் அத்தகவல்களின் உறுதிப்பாடும் தரவுகளுமாகும்.
              உங்கள் சத்தியப்பிரமாணங்கள் எங்கே போய்விட்டது. ஏன் இந்த பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை.
                 எனது தந்தையார் ஒரு உயர் குருதியமுக்க நோயாளியாவார். இவரது மாதாந்த மருத்துவ அமர்வுகளை மந்திகை (பருத்தித்துறை) வைத்தியசாலையில் தான் மேற்கொள்வார். கடைசியாக அவர் சென்ற நான்கு தடவைகளும் அவருக்கு குருதி அமுக்கம் சோதிக்கப்படவில்லை. ஒரு உயர்குருதி அமுக்க நோயாளியின் அமுக்கம் கட்டுப்படுத்தப்படாவிடில் மூளையில் உள்ள சிறிய குழாய்கள் வெடிப்பதன் மூலம் பாரிசவாதம் ஏற்படும் என்பது ஒரு பாரதூரமான விளைவாகும்.அந்த வைத்தியர் அதே மாத்திரைகளை மீளக் கொடுத்துள்ளார். அவரது கையொப்பத்துடன் (repeat all drug) என்பதைத் தான் எழுதியுள்ளார். ஆனால் நான் வீட்டில் வந்ததும் சோதித்தால் 160/110 என்ற முறையில் தான் பாதரச அளவு காட்டுகிறது. அந்தளவு தொழிலில் பற்று இல்லாமல் அலுப்புத் தட்டினால் ஓய்வு பெற்று வீட்டில் போய் இருக்கலாமே.
               அதை விட முக்கியம் இனிமேல் குறிப்பிடப் போவது தான். இது தான் நான் இப்பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணமாகும். கடந்த (03.01.2012) அன்று எனது மைத்துனி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் மரணமாகியிருந்தார். 51 வயதை உடைய இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாதுடன், சலரோகத்தாலும் பாதிக்கபட்டிருந்தார். அதன் பிற்பாடு அவரது காலில் ஒரு மாறாத காயம் ஏற்பட்டிருந்ததால் மந்திகை வைத்தியசாலையில் அவருக்கு கால் கழட்ட முடிவெடுக்கப்பட்டது (amputation) இருந்தாலும் வைத்தியர்களின் 40 நாட்களின் மிகப் பெரும் போராட்டத்தால் கால் காயம் ஓரளவு குணமாக்கப்பட்டு அதற்கு தோல் பிரதியிடலும் (skin graft) ம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு 5 நாளின் பின் வலிப்பு ஏற்பட்டு (fits) மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மறுநாள் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மரணமானார்.
       வைத்தியர்களின் பதில் என்ன வென்றால் அவரது இதயத்தில் துவாரம் இருந்ததால் தான் மரணமானாராம். அதற்கு அவர்களிடம் அவருக்கு அப்படி எதுவும் இருக்கவில்லையே எனக் கேட்ட போது அது பிறப்பிலேயே இருந்திருக்கலாம் ஆனால் கவனிக்கப்படத் தவற விடப்பட்டிருக்கலாம் என கூறினார்கள். அத்துடன் அவரது கை நடுக்கத்தால் மின் வரையியில் (ecg) ல் தெரியாமல் விட்டிருக்கலாமாம். இது எந்தளவுக்கு சாத்தியம் மின் வரையி என்பது அவர் தன் கையால் வரைவதில்லையே 15 வருடத்திற்கு மேலாக தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்ததுடன் கடைசிக்காலத்தில் icu வில் இருந்தார். அது மட்டுமல்ல இதுவரை ஒரு நாள் கூட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில்லை என்பதை அறிவிர்களா?

       hole in the heart என்பது தொற்று நோயல்லவே மரணத்தின் சில மணி முன்னர் வருவதற்கு.
    என்ன இருந்தாலும் நான் சட்ட நடவடிக்கைக்கு முன் நிற்கவில்லை காரணம் அவ் வைத்தியர்களும் உண்மையில் போராடினார்கள்.
  என் கணிப்பின் படி அவருக்கு கிருமித் தொற்றால் செப்டிக் (septic) வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
   எது எப்படி இருப்பினும் கடவுள்கள் கூட தப்புச் செய்வதுண்டு. இம்முறை பக்தர்கள் நாங்கள் மன்னிக்கிறோம் என்றும் கடவுளாக இருக்க முயற்சியுங்கள்.
       இங்கு குறிப்பிட்டுள்ள தவறுகள் கடமை நேரம் பாராது இப்பணியை சிரமேற்கொண்டு இரவு பகலாக உழைக்கும் அழப்பரிய அர்ப்பணிப்புவாதிகள் மனதை பாதித்தால் என்னை மன்னிக்கவும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:35 PM - By ம.தி.சுதா 28

வியாழன், 13 அக்டோபர், 2011

இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்


   இணையமென்பது ஒவ்வொருத்தரும் தனது ஏதோ ஒரு தேவைக்ககப் பயன்படுத்தும் இடமாகும் அதே போலத் தான் அங்கே எழுதுபவர்களும் சிலர் பணத்துக்காக எழுதுகிறார்கள் பலர் தம் பேரை வெளிப்படுத்த எழுதுகிறார்கள்.
   

ஞாயிறு, 3 ஜூலை, 2011

மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
                    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா
                        இது ஒரு சுயலாபமற்ற திட்டம் சம்பந்தமானது . நாம்

வியாழன், 23 ஜூன், 2011

குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
          ஒவ்வொரு மனிதனும் தனது பிள்ளைகளை நல்ல வழியில் வளர்த்தெடுக்கவே பெரும் ஆசை கொள்வான். அனால் இன்றைய நவீன காலத்தில் கல்வி பெரும் வியாபாரமாகி விட்ட நிலையில் ஒரு சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்.
              அதற்கு ஒரு சிறிய தீர்வாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெரும் பொருட்செலவுகள் எற்படாது.

சனி, 28 மே, 2011

பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

வணக்கம் உறவுகளே இதுவும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு தான்....
          இது எந்த நிறுவனத்துக்கோ நபர்களுக்கோ எதிராக எழுதப்படும் பதிவல்ல நான் வாழும் இந்தச் சமூகத்திற்காக மட்டுமே எழுதும் பதிவு.
    இப்போது பலர் இதை நாட விரும்புகிறார்கள். ஆனால் அதனால் பல பிரச்சனைகள் இருக்கிறது.

புதன், 18 மே, 2011

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?

          இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
         இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா ?

ஞாயிறு, 1 மே, 2011

அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

                 சில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.
11:33 PM - By ம.தி.சுதா 42

வெள்ளி, 4 மார்ச், 2011

பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

வணக்கம் சகோதரங்களே சேமம் எப்படி ?

         அவசர பதிவொன்றுடன் அவசரமாக சந்திக்க வேண்டி வந்துவிட்டது. செவ்வாய் கிழமையே பதிவிட வேண்டியது நேரம் இன்மையால் தவற விட்டுவிட்டேன்.
        இப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எனச் சொல்லி பலர் பல வழியில் பணம் பறிக்கத் தொடங்கி விட்டார்கள். இவ்வளவு காலமும் தரகர்கள் மூலம் ஒரு பெரும் தொகைப் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது கொஞ்சம் பணம் படைத்தவர்கள் தான். அனால் இப்போ அப்படியில்லை நடுத்தர வர்க்கத்துக்கு கீழ்ப்பட்டவர்களையும் இலக்கு வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
          சென்ற சனிக்கிழமை காலை யாழ்ப்பத்திரிகையான உதயனில் ஒரு விளம்பரம் வந்தது இதில் கனடாவிற்கு உடனடி வேலை வாய்ப்புடனான வீசா எனவும் 0777140416 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் இருந்தது. ஒரு நண்பர் ஒருவர் தொடர்பு கொள்ளுமாறு வற்பறுத்தினார். அதற்கு கொழும்பிலிருந்து ஒருவர் கதைத்தார். அந்த உரையாடலை சுருக்கமாகத் தருகிறேன்.

அவர் - திங்கட் கிழமை கனடா தூதரகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கணுமாம்.             அதனால் மறு நாள் கையளிக்க வேண்டுமாம்.
நான் - சரி எங்கு கொண்டுவருவது உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது.
அவர் - இல்லை தம்பி நாளை ஞாயிறு அலுவலகம் திறக்காது உடனடியாக கொடுக்கணும் அதனால் நீங்கள் கொழும்பு வந்து எனக்கு போன் பண்ணுங்க நான் லொட்ஜ்ஜிற்கு வந்து வாங்கறன்.
நான் - முதல் எவ்வளவு பணம் கட்டணும்
அவர் - அதெல்லாம் தேவையில்லை நான் விசா கையில் தருகையில் நீங்கள் 32 லட்சம் தந்தால் சரி.
நான் - அப்படியென்றால் ஆவணம் மட்டும் போதுமா ?
அவர்- இல்லை ஒரு றிசிட் (பற்றுச் சீட்டு) போடணும் அதற்கு 12,200 ரூபா தரணும்.
நான் - வேலை எங்கே ?
அவர் - கனடா எயாப்பொட் ஒன்றில் துப்பரவுப் பணி மாதம் 3 லட்சம் சம்பளம்.

(இவ்வளவும் உங்களுக்கு விளங்கிக் கொள்ளப் போதும் என நினைக்கிறேன். 10 லட்ச ரூபாய் படி 10 பேரை கூட இப்ப ஏமாற்ற முடிவதில்லை அதனால் 10 அயிரம் ரூபா படி 1000 பேரை எமாற்ற ஒரு திட்டம் தான் இது)

சரி இன்னொரு விடயம் கனடாவில் அப்பிள் தோட்டத்தில் வேலை எனக் கூறியும் எடுக்கிறார்கள் முதலில் வீமான பயணச் சீட்டுக்கு 2 1/2 லட்சம் செலுத்தினால் சரி மிகுதி 15 லட்சத்தை வேலை செய்யும் போது கழிக்கப்படுமாம். இதற்கு கனடா நண்பர் யாராவது விளக்கம் தாருங்கள். காரணம் இப்போது அங்கே குளிர் காலம் சரியாக முடியவில்லை அதனால் மரத்தில் இலைகள் கூட இருக்காது. வைகாசி, ஆனி காலப்பகுதி வரை இங்கிருந்து போபவர்கள் என்ன செய்வார்கள்.

முடிந்தவரை மற்றைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள். யாருக்காவது தகவல் பகிரணுமுன்னா கீழே உள்ள FACE BOOK பொத்தானை சொடுக்கி உங்கள் சுவரில் பகிருங்கள். அல்லது மெயில் பொத்தனை சொடுக்கி மின்னஞ்சலாக அனுப்பலாம். 

நன்றி மீண்டும் சந்திப்போம்.
11:36 AM - By ம.தி.சுதா 52

திங்கள், 28 பிப்ரவரி, 2011

காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

வணக்கம் அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
இன்று இரண்டு விடயப் பரப்பை உள்ளடக்கிச் சந்திக்கிறேன். சரி வாருங்கள் உள்ளே போவோம்.
     இலங்கையில் மிக விரைவாக பரவலடைந்து வரும் தொலைத் தொடர்பு வலையமைப்புக்கள் பல்வேறுபட்ட மாற்றங்களுடன் பலருக்கு அறிமுகமாகின்றது. நாங்கள் நேர்மையானவர்கள் அதிகமா வெட்டுறதில்லை என பீற்றிக் கொள்ளும் டயலக் வலையமைப்பு சம்பந்தமான விழிப்புணர்வு விடயத்துடன் சந்திக்கிறேன்.
     முதலாவது RINGING TONE சம்பந்தமான விடயம் ஒன்றைப் பார்ப்போம். இந்த வசதியானத முற்கொடுப்பனவு பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இவர்களது இணையத்தளம் போனால் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது அதாவது செயற்படுத்தற்கட்டணம் 50 ரூபாவும் மாதாந்த வாடகை 30 ரூபாவும் தான். அதைத் தான் படம் காட்டுகின்றது. இந்த விதி முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு சேவைக்கட்டணமாக 50 ரூபா அறவிடப்படுகிறது. நம்மவர் பில்லை ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் வரிகளும் உள்ளடங்கலாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 39 ரூபா, பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 98 ரூபா இது பலருக்குத் தெரியாது.
    சரி அது அப்படியே இருக்கட்டும் நீங்கள் ஒரு பாட்டை மாற்றினால் ஆரம்பத்திலேயே அந்த மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும். அனால் முதல் இருந்த பாடல் செயலிழக்கமாட்டாது அதற்கான கட்டணமும் மாதம் மாதம் அறவிடப்படும். இது பற்றி எங்குமே அறிவுறுத்தப்படவில்லை.

அடுத்தது இணைய இணைப்புத் தொடர்பானது
   BROAD BAND இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கதே. நான் 2 ஜீபி தான் பாவிக்கிறேன். (என்னடா இவன் இந்தக் கொஞ்சமாய் வச்சிருக்கானே என்று நினைக்காதிங்க இவங்கட இணைப்பு வேகத்தில மாதம் முழுக்கப் பாவித்தாலும் இது முடியாது) இதற்கான கட்டணம் 690 ரூபாவாக இருந்தது ஆனால் இப்போது 490 ரூபாவாக மாற்றியுள்ளார்கள் சந்தோசமே அனால் எனது பில்லில் காசு குறையலா ஏன் எனக் கேட்டேன் அதற்கு தற்போது 3 ஜீபி 690 ஆகா மாற்றப்பட்டுள்ளதாம் அதனால் எனக்கு 3 ஜீபியாக மாற்றப்பட்டுள்ளதாம். அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?
   இந்த விறுத்தத்தில் அவர்களது இணைய வேகம் 7.2 mbps வரை போகுமாம். யாராவது கேட்டால் சிரிப்பாங்கள்.
   சகோதரங்களே அவதானமாக இருங்க இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதால் அறிய முடிந்தது உங்களுக்கும் இருக்கும் அதை மற்றவங்களுக்கும் பகிருங்க நாமும் நல்லாயிருக்கணும் எம்மைச் சுழ உள்ளவங்களும் நல்லாயிருக்கணும். நான் நல்லாயிருக்க வாக்கைப் போடுங்க மற்றவங்க நல்லாயிருக்க இதை எல்லோருக்கும் பகிருங்க..

தயவு செய்து இந்த பதிவர்களை பற்றி விபரம் தாருங்கள்.
மகாதேவன் V.K  – இவர் தகவல் துளிகள் என்னும் வலைத் தளத்தை கட்டார் எனும் இடத்தில் இருந்து எழுதி வந்தார் வாரத்துக்கு 5 மின்னஞ்சலாவது பாசமாய் போடுவார் திடீரென இவரது எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

GSR - ஞானசேகரன் என்ற இவர் என்னில் மிகவும் பாசமுடைய ஒருவர் இந்த வருடம் பிறந்ததற்கு இன்னும் பதிவே போடல புரியாத கிறுக்கல்கள் என்ற வலைத்தளத்தில் அருமையான கணணித் தகவல்களைப் பகிர்ந்து வந்தார். இப்போ எந்தத் தொடர்புமே இல்லை

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்.


குறிப்பு - உறவுகளே இன்று முதல் எனது தளத்தின் பெயர் நான் ஆரம்பத்தில் வைக்க நினைத்தது போல !♔ மதியோடை ♔!என்றே மாற்றப்படுகிறது...

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
      இன்று தாய்மொழி தினமாக கொண்டாடுகிறார்கள் இந்த இனிய நன்நாளிலே என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை செய்கிறேன் பலர் என்னுடன் அரட்டையில் வரும் போது அடிக்கடி கேட்கும் ஒரு உதவி எப்படி தமிழ் அடிக்கிறீர்கள் என்று நானும் ஆரம்பத்தில் தங்களைப் போல் தான் தமிழுக்காய் அலைந்த்துண்டு அனால் இப்போது என் எச் எம் ரைட்டர் பாவிப்பதால் எந்த வித சிக்கலுமில்லாமல் விரல் நுனியில் தட்டச்சிடுகிறேன்.
     அதை நிறுவுவதெப்படி என பார்ப்பதற்கு முன்னர் அதன் உருவாக்கத்தை அறிய வேண்டுமல்லவா ?

என் எச் எம் ரைட்டர் (NHM writter) 
    சென்னையில் உள்ள நியூ ஹொரைசேன் மீடியா நிறுவனத்தினால் கே.எஸ்.நாகராஜனை பிரதான நிரலாக்கராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் உட்பட அசாமிய_மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம்மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது 2009-2010 ற்கான தமிழ் நாட்டின் கணியன் பூங்குன்றனார்  விருதை பெற்றது இதன் சிறப்பம்சமாகும். இவற்றுக் கெல்லாம் காரணம் இதன் இலகு தன்மை தான் இந்த மென் பொருள் மிக மிகச் சிறியது. அத்துடன் வின்டோஸ் 7 ல் கூட இலகுவாக நிறுவமுடியும். அத்துடன் இது பெரும்பாலான இணைய உலாவிகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கணணியில் கூட எல்லா வடிவக் கோப்புகளிலும் தட்டச்சிடலாம்.
      
       சில வேளைகளில் தங்களுக்கு இதை நிறுவுவதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் (மென் பொருளால் அல்ல தங்களின் கணணி பிரச்சனையால்) கவலையை விடுங்க ஒரு வேர்ட் பாட் (word pad) ஐ திறந்து சாதாரண பாமினி எழுத்தில் தட்டச்சிட்டு விட்டு அதை அப்படியே copy பண்ணி விட்டு online conveter என்பதன் மேல் சொடுக்கி போனால் அங்கே என் எச் எம் ரைட்டர் online coveter இருக்கிறது அதில் paste பண்ணிவிட்டு மறுபக்கப் பெட்டியில் இருக்கும் யுனிகோட் என்பதை தெரிந்தெடுத்து விட்டு convert என்பதை சொடுக்கினால் சரி தங்களது யுனிகோட் எழுத்துரு வந்துவிடும். இது யாருக்கு உதவுமென்றால் வழமையாக திரையை பார்க்காமல் என் எச் எம் ரைட்டரில் தட்டச்சிடுவோர் தவறுதலாக ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு விடுவோம் எவ்வளவு கடுப்பாயிருக்கும் அப்போ இந்த வழி கட்டாயம் உதவும்.
பாமினி தட்டச்சுப் பலகை
alt+2 கொடுத்து பெறும் உச்சரிப்பு தட்டச்சுப் பலகை
தமிழ் 99 தட்டச்சுப் பலகை
     அத்துடன் பலருக்கு பாமினி எழுத்துருவில் தட்டச்சிடுவது பலருக்கு பழக்கமிருக்காது என்பதால் google translater பாவிப்பீர்கள் அதற்கும் இங்கே தீர்வு இருக்கிறது alt+2 க் கொடுத்தால் phoneti code வரும் இதில் வைத்து ammaa என அடித்தால் அம்மா என தோன்றும் இது உச்சரிப்பியல் சார்ந்த்தால் நீங்கள் sms அடிப்பது போல அடித்தாலே தமிழ் கண் முன் தோன்றும் (இது தமிழுக்கு உகந்ததல்ல என யாரும் திட்ட வேண்டாம் எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சிடும் ஒருவரை தமிழுக்கு மாற்றுவதே எண்ணமாகும்)

       உறவுகளே வருத்தத்திற்குரிய செய்தி ஒன்று ஒரு இரவு முழுதும் இருந்து இன்றைய நாளுக்காய் ஒரு பதிவை எழுதி விட்டு படங்களுக்காய் மீள என் எச் எம் ரைட்டரை தரவிறக்கி நிறுவி நிறுவலை படமாக்கி விட்டு பார்தால் (2008 ல்) ஏற்கனவே ஒருவர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்  (நன்றி FIZAL) என் சொந்த முயற்சியில் எழுதினாலும் நான் திருடனாக பட்டம் பெற விரும்பல அதனால் அந்த தொடுப்பையே அடியில் தருகிறேன். ஆனால் 
மேலே பதியப்பட்டுள்ள தகவலுக்கு நான் தான் உரிமையாளி என்பதை மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறேன். இதற்கு முன்னர் எழுதிய fizal இப்போ எழுதுவது இல்லை போல தெரிகிறது அதனால் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்.

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

என் எச் எம் ரைட்டரை தரவிறக்க இந்தப் பெயரை சொடுக்கங்கள் Click here to download NHM Writer அதன் பின் இறக்கிய கோப்பை திறவுங்கள் படத்தில் உள்ளது போல வரும்.


இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்


next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்


அடுத்து மொழியை தெரிவு செய்யுங்கள்.


next ஐ கொடுத்தால் இது போல படம் வரும்.


next ஐ கொடுத்தால் மென் பொருள் நிறுவப்படும்


அதன் பின் task bar ல் மணி போன்ற உருவம் வரும் அதைச் சொடுக்கி உங்களுக்குத் தேவையான எழுத்துருவை பெறலாம். இவ்வளவும் தான் விடயம்


பொறுங்க பொறுங்க தொடுப்பை சொடுக்க முதல் வாக்கையும் கருத்தையும் சொல்லிட்டு சொடுக்குங்க..
(இந்த தெளிவான படங்களை தந்ததவிய fizal ற்கு நன்றி)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

                   தமிழின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த ழகரம் தான் என்பது எல்லோருக்குமே தெரியும் இது பற்றி எனது தமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1 என்ற பதிவில் முன்னர் எழுதியிருந்தேன்.
                   இதைப் பற்றி விவாதிப்பதற்கோ வாதிடுவதற்கோ நான் ஒரு பண்டிதனில்லை ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்ட ஒரு சாதாரண வாசகன் என்ற முறையில் கூற விளைகிறேன்.
                   எம்மில் பலர் பலதை செய்கிறோம் அனால் ஏன் எனக் கோட்டால் யாரோ சொன்னார்கள் நாமும் செய்கிறோம் என்று தான் பதில் வரும் நானும் நண்பரும் பலரிடம் கேட்டு பல மாதிரியும் அடிபட்டும் பார்த்தோம் யாருடைய மூளைக்கும் எட்டவே இல்லை அதனால் தான் தங்களைக் கேட்கிறேன் எமது ழகரம் ஆனாது வேற்று மொழிக்காரருக்கு ஒரு பிரச்சனையான உச்சரிப்பிற்குரிய எழுத்துத் தான் அதையே நாம ஆங்கில உச்சரிப்புக்காக மாற்றி எழுதுகையில் தான் சிக்கலே வருகிறது.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top