Featured Articles
All Stories

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வலி தந்த அப்பாவுக்காக சில வரிகள்

வருடத்தின் முதல் பதிவே அப்பாவுக்காக எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை கிடைத்தது சின்ன வருத்தமாக இருந்தாலும் எனக்கான கடமைகளை நான் சரிவர செய்தேன் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியே..

வாழ்க்கையில் ஒன்றை பெற வேண்டுமென்றால் ஒன்றை இழக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எதைப் பெறப் போகிறோம் எனத் தெரிந்த எமக்கு எதை இழக்கப் போகிறோம் என்பது தெரியாமலே நடந்துவிடுகிறது. அப்படி நடந்தது தான் எனது தந்தையின் பிரிவும்.
அவர் வாழ்வு பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் எதிர்பார்ப்புகள் எல்லை தொடாமலே போய்விட்டது.

பல விடயங்கள் முன் கூட்டியே எதேச்சையாக நடந்ததால் அவர் இழப்பு ஏமாற்றமாக அமைந்த போதும் மனதில் குறைகளை வைத்திருக்கவில்லை.  தனது இறுதிக்காலத்தில் யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்பார் அது போலவே யாருக்குமே சிறு சிரமம் கூட வைக்கவில்லை.
அப்பாவுக்கு சாய்மனைக் கட்டில் என்றால் மிகவும் பிடிக்கும். வன்னியில் நடந்த இடப் பெயர்வடன் அவருடைய கட்டிலும் தவறி விட்டது. ஆனால் அவரது பிரிவுக்கு சில நாளுக்கு முன்னர் தான் எனது சம்பளப்பணம் கிடைத்ததும் வாங்கிக் கொடுத்தேன்.
அதே போல அவரே தனது மறைவை முதலே அறிந்தது போலவே நடந்து கொண்டார். காரணம் இத்தனை வருட காலத்தில் என்னிடம் வாய்விட்டு ஒரு உணவுப் பொருளும் கேட்டதில்லை.  ஆனால் நான் வெளியூர் கிளம்பும் புகிறேன் என்றதும் தனக்கு மசாலா தோசை வாங்கித் தரும்படி கேட்டார். அந்த அன்றே வாங்கிக் கொடுத்தேன். இப்படி வீட்டார் ஒவ்வொருவரிடமும் பல விதங்களில் நடந்து கொண்டிருக்கிறார்.

ஒரு தந்தையாக எம்மை வளர்த்த முறை ஊரிலுள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகும். நான் வளர்வதற்கு முன்னர் ஊரிலே அவரைப் போல ஒரு குடிகாரனோ அடிதடிக்காரனோ இருக்கவில்லையாம். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படி ஒரு அப்பாவை நான் கண்டதே இல்லை. ஆனால் அவரது நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள் அவருக்கு பயப்படாத ஒரே ஆள் நான் தானாம். ஆனால் அவர் ஆசைப்பட்டது போலவே நாம் வாழ்ந்தது அவருக்கு என்றுமே மகிழ்ச்சியைக் கொடுத்த ஒரு செயற்பாடாகும்.
அப்பாவின் அந்தியெட்டிக் கிரியையின் போது
இல்லறப் பருவத்தின் ஆரம்ப காலத்தில் வியாபார ரீதியாக இந்திய சென்று வந்த இவர் அதன் மூலம் பல நண்பர்களைப் பெற்றுக் கொணடார்.
வாழ்க்கையில் பாதையில் சற்று விலத்திச் சென்று கொண்டிருந்த இவருக்கு எற்பட்ட நோயொன்றானது பூரண ஆன்மிகவாதியாக மாற்றியது. அதன்பின்னரான காலப்பகுதியில் செல்வச்சிநிநிதியின் சித்தர்களில் ஒருவரான முருகேசு சாமியார் அவர்களின் பிரதான சிஷ்யர்களில் ஒருவராகவும் மாறிக் கொண்டார். அதன் மூலம் சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஒரு முக்கிய தொண்டராக மாறிக் கொண்டார். சந்நிதியான் ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டியவர்களில் அப்பாவும் ஒருவராகும்.
அதன் பின்னரான பொதுவாழ்க்கையானது இவரை இன்னும் பலருக்கு அறிமுகமானவராக மாற வைத்தது.
1985 ன் முற்பகுதிகளில் ஒரு பேருந்து உரிமையாளராகவும் தனது வாழ்க்கையை நகர்த்தியிருந்தார்
தமிழரசுக் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரான இவர் அதன் மூலம் தன் சார்ந்த மக்களுக்கும் பல உதவிகளை செய்திருந்தார். இவரது கிராமமான சமரபாகு தேவன் குறிச்சிக்கு (தற்போது இலக்கணாவத்தை எனப்படுகிறது) முதன் முதல் மின்சாரம் வருவதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவரில் இவர் பெயரும் அடங்கியுள்ளது.
அதன்பின்னரான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரஜைகள் குழு (சிட்டிசன் கொமிட்டி) வில் உறுப்பினராக இருந்தார். இவரது பொது வாழக்கை சம்பந்தமான பல விடயக் குறிப்புகளை மதிப்பிற்குரிய பழ நெடுமாறன் அவர்கள் தனது ஈழ வருகை சம்மந்தமான புத்தகத்தில் எழுதியிருந்தார்.

இவரது பொதுவாழ்க்கையில் பெயெரெடுக்க வைத்த சம்பவங்களில் ஒன்றாக அமைந்த விடயம் 1993 ன் பிற்பகுதிகளில் வன்னிக்கான தரை வழிப்பாதை தடைப்பட்டிருந்த நேரம் பார ஊர்திகளை அங்கிருந்து இங்கு கொண்டு வருவதற்காக மண்ணெண்ணேய் பரல்களைக் கொண்டு இவர் திட்டமிட்டுக் கொடுத்த ஓடம் (வாச்சி) இவரது மதிப்பை மென்மேலும் உயர வைத்திருந்தது.
வெளியூரிலிருந்து அப்பாவுக்காக வாங்கி
வைத்திருந்த சரங்களும் அம்மாவுக்காக
வாங்கி வைத்திருந்த பட்டுச் சேலையும்
இன்று அநாதரவாக....
தனது இறுதிக் காலங்களில் அமைதியை பேண விரும்பிய காரணத்தால் பல விடயங்கில் இருந்து ஒதுங்கி வாழத் தலைப்பட்டார்.
அவரது மனதில் இறுதிவரை இருந்தும் நிறைவேறாமல் போன பெரும் ஆசை 22 வருடங்களாக பார்க்க முடியாமல் இருக்கும் அண்ணனை சந்திக்க முடியாமல் போய் விட்டதே என்பது தான். அவர் ஆசையோடு எடுத்து வைத்திருந்த கடவச் சீட்டை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் என்னையாறியாமலே அழுகை வந்து விடுகிறது.
ஒரு மனிதனின் வாழ்வின் மதிப்பு அவனது இறுதி நாளில் கூடும் கூட்டத்தில் தான் தெரியும் என்பார்கள். அதே போல எந்தவொரு உயர் கல்வியோ பதவியோ வகிக்காத இவருக்காக கூடிய மக்களே அதற்கு சாட்சியாக அமைந்தார்கள்.

 வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்.


17 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top