Featured Articles
All Stories

சனி, 25 மே, 2013

சிறு நீரக மாற்றத்துக்காக மரணத்தோடு தவிக்கும் பெண்ணை காப்பாற்ற உதவுங்கள் (ஒலிக் கோப்பு இணைப்பு)

எனது அரவணைப்போம் செயற்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இந் நபர் பற்றிய விபரங்கள் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் பெரிதாக்கிப் பார்வையிடலாம்.

இவர்கள் வன்னியின் இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது குடும்ப விபரம், வாழும் சூழல், பணம், தொழில் விபரம் பற்றி ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.


உதவ மனமுள்ளவர்கள் உங்களால் முடிந்த 100 ரூபாயைக் கொடுத்தால் கூட இப்பணம் இலகுவாக சேகரிக்கப்பட்டுவிடும். சிறு துளி பெரு வெள்ளம்

இந்த உலகத்தில் ஒவ்வொருத்தனும் மாற்றம் ஒன்றை விரும்பினால் நடைமுறைப்படுத்துவது பெரிய சிரமமான விடயமல்ல ஒரு கணம் சிந்தித்து முடிவெடுப்போம்.

உங்களால் முடியாவிட்டாலும் யாரோ ஒரு உதவ மனமுள்ளவர் உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கக் கூடும். இப்பதிவை பேஸ்புக்கிலோ அல்லது  சமூக வலைத்தளங்களிலோ பகிர்ந்து இவருக்கு உதவுங்கள்
என் தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.

PM 2:51 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

வெள்ளி, 24 மே, 2013

எம்மவர் பாடல் வளர்ச்சிக்கு உதாரணமாய் அமைந்த அருமையான அம்மா பாடல்

பாடல் என்பது மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தாலும் எல்லா வகைப் பாடல்களையும் எல்லா நேரத்திலும் கேட்க முடிவதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்த பாடல்களும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட பாடல்களில் தாயிற்காக அமைந்த பாடல் மிக முக்கியமாகும்.
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த அம்மா பாடல் ஒவ்வொரு தாயின் மகவையும் கட்டிப் போடும் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.
பாடல் தயாரிப்பளரான ஐஸ்வர்யன் எண்டர்ரெயின்மெண்டைச் சேர்ந்த உமாமகேசின் சிரத்தையால் இப்பாடல் தென் இந்தியப் பாடகர் மதுபால கிருஷ்ணனின் மதுரக் குரலில் ஒலிக்கிறது. இப்பாடலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்திருப்பதும் இன்னும் சிறப்பைக் கூட்டும் விடயமாகும். அவருடன் சேர்ந்து றொசிற்றாவும் பாடியிருக்க பின்னணி இசையை ஈழத்து முன்னோடி இசைக் குழுவான அருணா இசைக்குழு ஸ்தாபகரின் மகனான அருணா கேதிஸ் வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பிரபலமான அம்மா பாடல் ஒன்றின் லயத்துடன் பாடல் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் எள்ளளவு கூட அலுக்க வாய்ப்பில்லை.
இது தான் பாடல் வரிகள்...

ஆரிராரோ பாட்டுச் சத்தம் கேட்குது
அம்மாவின் ஞாபகங்கள் தாலாட்டுது
ஆராரோ பாடி என்னை வளர்த்தாய் என் தாயே
ஆனாலும் நம் உறவை பிரிக்க முடியாதே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயே
ஈரேழு ஜென்மத்திலும் தாயாய் வரவேணும்
ஆலயங்கள் செல்வதில்லை நான் தாயே
தெய்வமாய் இருக்கின்றாய் என் தாயே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
கானகத்து பூங்குயிலே கண்ணுறங்கு
கானகத்து வெண்ணிலவே கண்ணுறங்கு
அழுகின்ற என் மகனே நீயுறங்கு

தாய் மடி தேடி வந்தேன் உன் பிள்ளை நான் தானே
தாய் புகழ் பாடி வந்தேன் கவிப்பிள்ளை நான் தானே
அம்மாவின் அன்பாலே ஆனந்தம் காண்பேனே
அப்பாவின் ஆசியுடன் அகிலத்தை ஆழ்வேனே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

இந்த அருமையும் ஆழம் நிறைந்ததுமான வரிகளை கமலநாதன் மற்றும் றஜித் வரைந்திருக்க கிருத்திகன் கமராவால் வர்ணம் தீட்டியிருக்கிறார்.
இப்பாடலை சயன் இயக்க நடிகர்களாக கவிமாறன் மற்றும் சுகந்தினி ஆகியோர்  நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பை டனா செய்திருக்கிறார்.
எம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்

அந்த அழகிய பாடலை ரசித்துப் பாருங்கள்

PM 10:38 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

செவ்வாய், 21 மே, 2013

உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நாளுக்கு நாள் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை ஒவ்வொரு பரிமாணத்திற்கும் சடுதியாக இட்டுச் செல்கிறது.
ஸ்மாட் போன் பாவனையாளர்கள் தங்களிடையேயான இலவச தொடர்பாடலுக்கு பாவித்து வந்த viber என்ற அப்ளிகேசனானது புதிய மாற்றத்துடன் பலரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த அப்ளிகேசன் ஆனது ஏற்கனவே துல்லியம், குறைந்தளவு தரவுச் செலவீடு, போனுக்கு வேலைப்பளுவைக் கொடுக்காத மென் பொருள் என பல விடயங்களால் பலரை கவர்ந்திருந்த ஒரு அப்ளிகேசனாகும்.

இதில் குறையென்று பெரிதளவாக சொல்ல முடியாவிட்டாலும் புதிய பதிப்பு திறப்பதற்காக எடுக்கும் நேரம் அதிகம் அதோ போல எதிர் முனையில் உள்ளவர் கைப்பேசி அணைந்திருந்தாலும் றிங் பண்ணுதல் போன்ற குறைகள் இருக்கவே செய்தது.

ஆனால் இத்தனைக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்க முன்னர் இந்த அப்ளிகேசன் ஆனது கணணிகளுக்கு ஏற்றது போலவும் வெளியிடப்பட்டுள்ளது வெகு சிறப்பாகும். இதன் மூலம் கைப்பேசியில் இருந்தபடி கணிணியில் உள்ள ஒருவருடன் தகவல் பறிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இவை ஏற்கனவே ஸ்கைப் போன்ற மென் பொருள்களின் மூலம் கிடைத்தாலும் தரவுச் சிக்கன பாவனையாளருக்கு இது பெரும் சாதகமான ஒரு விடயமாகும்.

ஆனால் இக்கணக்குத் திறப்பதற்கு ஏற்கனவே ஒரு ஸ்மாட் போனில் viber கணக்கு திறந்திருக்க வேண்டும். அந்த இலக்கத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க முடியும் அதே போல ஒருவர் அழைப்பெடுத்தால் இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் றிங் பண்ணுகின்றது.

http://www.viber.com/ இந்த இணையத்தளம் சென்றால் அங்கே தரவிறக்குவதற்கான நேரடித் தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள் இலகுவாக இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு சில நாளில் இன்னும் இம் மென் பொருள் மேம்படுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

AM 11:54 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

சனி, 18 மே, 2013

உணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்

உறவுகள் தொலைத்தோம்
உணர்வுகள் வளர்த்தோம்
ஆண்டாண்டு தோறும்
அடிமை அடிமை இல்லையென
உரக்க ஊர்முழக்கி
வீரப்பட்டம் பெறுகிறோம்.

இதுவரை எது செய்தோம்
உணர்வினில் தவம் செய்தோம்
இனிவரை எது செய்வோம்
சிதைவழிந்த அஸ்திவாரம் செதுக்கி
சுவர்களை சீரக்கி முகடெழுப்பிய பின்
கொடிக் கம்பங்களை நடுவோம்

மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது

மடியில் கனமிருந்தவர்
கடல் தூர பறந்து விட்டார்
காலிற்கு செருப்பற்றவன்
பற்றை கடக்க வழியின்றி அழுகிறான்

ஒரு முறை நினைப்போம்
உறவினை வளர்ப்போம்
உணர்வுகள் சிரஞ்சீவியாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

இன்றைய நாள் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் வாழ்விலும் உருக்குலைந்த நாளாகும். மரணத்தைக் கடந்தவரோ மரணத்தை தேடி அடைய முடியாமல் வாழ்கின்றார். அவரையும் ஒருகணம் எம் உணர்வால் அரவணைப்போமா?

இன்றை இந் நாளில் சகோதரன் மதீசனின் இசை மற்றும் வரி உருவாக்கத்தில் உருவான இப்பாடல் நல்ல ஒரு உதாரணமான பாடலாகும். அதிலும் இந்த இடம் என்னை ஒரு தடவை நிற்க வைத்து விட்டது

ஃஃஃஃகடவுளுக்கு பணம் இறைக்கும் கொடையாளரே இவனுக்கும் உதவுங்கள் அருளாகுமேஃஃஃஃ


PM 7:59 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

சிறீசாந்தின் சூதாட்ட வண்டவாளம் படங்களின் வாயிலாக





AM 12:05 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

செவ்வாய், 14 மே, 2013

புலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள் பாகம்-1

எந்த நாடு போனாலும் இந்தக் கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும் தான் நாடு மாறுது என்ற வரி என்மனவானில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கும். இவ்வரி ஒரு நாடோடிக்கூட்டத்தின் வறுமையை சிததரிப்பதற்காக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழனைப பொறுத்தவரை இவ்வரி மாறிய வருகிறது. எந்த நாடு போனாலும் அவனுக்கென்று தனி முத்திரையை எதோ ஒரு வகையில் பதித்திருப்பான்.

அந்த வகையில் இன்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கனடா மார்க்கம் நகரசபைஅங்கத்தவராக இருக்கும் திரு லோகன் கணபதிப்பிள்ளையாவார். யாழின் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் நாடடின் சூழல் இவரை கொண்டு சேர்த்த எல்லை தான் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் கனடிய தேசமாகும்.

ஆனால் ஒரு நகரசபையில் இருக்கும் மக்களின் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஈழத் தமிழன் அங்கத்தவராக வருவதென்பது எல்லோருக்கும் பெருமையான விடயம் ஒன்று தானே.
அந்நகரசபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவராக இருக்கும் இவர் செய்தது என்ன?
அந்நகரசபையின் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” “vanni street in markham canada”என பெயர் சூட்டுவோம் என இவர் முன்மொழிந்து அதை நடைமுறைப்படுத்தி திறக்கவும் உள்ளார்.

இதே நகரசபை தான் தமிழரின் விழா மாதமான தைத்திருநாள் மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக மாற்றி அதை விழாவாகவும் எடுத்து எமது கலை பண்பாட்டை கட்டிக் காக்க உதவி வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பல நல்ல செயல்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது வழியில் பின்பற்றி எமது மொழி கலை பண்பாட்டுக்கு நாமும் உதவுவோம். அவருக்கு என் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
(ஏனையவர்கள் சாதனைகள் பற்றிய பதிவு தொடரும்)

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

PM 1:25 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

சனி, 11 மே, 2013

எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீடான ”விட்டில்கள்” குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் விபத்துக்கள் போலவே அமைந்து விடுகிறது. எமக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாவிடினும் சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.

அந்த வகையில் எனக்குத் தொற்றிக் கொண்ட ஆர்வத்தில் ஒன்று தான் இந்த குறும்படப் பைத்தியம் ஆனால் எவையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் செய்ய வேண்டியவையே... அந்தக் காலம் கடந்தால் மிகவும் சிரமமானதே..

வீடியோ தொகுப்பாளரான நண்பன் வேல் முருகனிடம் எப்போதோ காணும் போது சொல்லியிருந்தேன். ”எங்காவது படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்கள் நேரம் கிடைத்தால் பார்க்க வருகிறேன் என்று“ நான் அதை மறந்தாலும் அவர் மறக்க வில்லை.
சில நாட்களின் முன்னர் நவிண்டிலில் ஒரு படம் செய்யுறம் நேரம் கிடைத்தால் வந்திட்டுப் போங்கோ என்றார் சரி பிற்பகல் தானே போவோம் என போனால் நடந்த இடம் எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னமே எம் குடும்ப நண்பராக இரந்த செல்லாஅண்ணாவின் ஸ்ருடியோ அங்கே பார்த்தால் என்னுடன் முன்பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்த பிரதீப் அவனுடன் ஏற்கனவே பழகிய நண்பனான தர்சன் என ஒரு பட்டாளம் நிற்க படத்தின் இயக்குனர் யாரெனப் பார்த்தால் அவரும் பழைய நண்பராகவே இருந்தார்.
செல்லா அண்ணா, தர்சன், பிரதீப், நான்

அப்புறம் என்ன மச்சான் நீயும் ஒரு சீனில் நடிக்கிறாய் என்றால் எனக்கு எந்த ஆயத்தமும் இல்லை. சரி என்ன தெரியாத ஒன்றா செய்திட்டுப் போவோமென இறங்கியது தான் இந்த விட்டில்கள் குறும்படம்.
அடுத்து காட்சிகள் முடிந்து டப்பிங்கிற்கு போன போது தான் அதன் சாவால் தன்மை புரிந்தது. ஆனால் இயக்குனர் ஜெயதீபன் எனக்கு தந்த வசன சுதந்திரம் என் சிரமத்தைக் குறைந்தது. ஏன் என்றால் நான் பேசிய வசனங்கள் எனக்கு காட்சி விளங்கப்படுத்திய பின்னர் எனது சொன்ன மொழியில் பேசியவையே.. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றையவை அனைத்திற்கும் ஒரு சந்தர்ப்பமே எடுத்துக் கொண்டது வியப்பாகவே இருந்தது அத்தனைக்கு காரணம் அனுபவசாலியான வீடியொ தொகுப்பாளர் செல்வம் அண்ணை தான்.

இப்படத்தில் 1993 -1994 ல் சின்ன விழிகள் போன்ற ஈழப்படங்களில் நாயகனாக கலக்கிய செல்வம் அண்ணையுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆசிரியரான பரணிதரன் சேரும் எம்மோடு இருந்தது சந்தோசமாக இருந்தது.

டப்பிங்கில் மிக அதிக கவனம் செலுத்திக் கொண்ட விடயம் என்னவென்றால் எமது பிராந்திய மொழிவழக்கைத் தான் காரணம் பல தென்னிந்திய திரைப்படங்களும் நடிகர்களும் பேச முனைந்து தோற்றுப் போன விடயங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். பாயும்புலி அனோரமா தொடக்கம் தெனாலி கமல், நந்தா லைலா, ராமேஸ்வரம் ஜீவா மணிவண்ணன் என ஒரு பெரும் பட்டாளமே அந்த வரிசையில் நிற்கிறது.
 படத்தில் கதை என்று சொல்லப் போனால் நீங்கள் அறியாத ஒன்றல்ல ஆனால் 4 நாட்களுக்குள் வடமாகாண குறும்படங்களுக்கான போட்டிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்பட்டதால் ஒரு சில வழுக்களை நாமும் அறிந்திருந்தாலும் மீள் திருத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டது.

தங்களது மனம் திறந்த முகஸ்துதியற்ற விமர்சனங்களை எதிர்பாரத்த நிற்கிறோம் ஏனென்றால் அடுத்தடுத்த படைப்புக்களில் எம்மைச் சீர்ப்படுத்த இவை தான் ஏதுவாக அமையும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


12 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top