வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இலங்கையின் இரு வேறு அந்தங்களில் காணப்படும் பகுதியாக இருந்தாலும் இரு கண்டங்களை அடைவது போன்ற மன நிலைப்பாட்டைக் கொடுத்திருந்த யாழ் கொழுப்பு பிரயாணமானது சுமூக நிலைக்கு வந்ததன் பிற்பாடு பல்வேறு வகையான போக்குவரத்து மார்க்கங்கள் வந்த பின்னரும் சராசரி மக்களின் மார்க்கமாக இருப்பவை ஏசி பொருத்திய சொகுசு பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஹையெஸ் வாகனம் என்பனவாகும்.
இதில் குறிப்பிட்ட மூன்றிலும் பயணித்தவன் என்ற ரீதியில் பொதுவான ஒப்பீட்டை வரைகிறேன் (இங்கு குறிப்பிடப்படும் பெரும்பாலான ஒப்பீடுகள் வடமராட்சி கொழும்புக்கானது).
செலவு குறைந்த சிக்கனப் பயணத்திற்கு நாங்க பாவிக்கும் வழிமுறை ஒன்றிருக்கிறது பதிவின் இறுதியில் படியுங்கள்.
சொகுசுப் பேருந்து
சராசரியாக 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபாய் வரை அறவிடப்படும் இச்சேவையில் கிடைக்கும் பெரிய அனுகூலம் அலுவலக நாள் அன்று காலை கொழும்பு போய்ச் சேர்ந்தாலும் ஏதோ படுக்கையில் இருந்து எழுந்து போகும் மனநிலையே இருக்கும்.
ஆனால் பலருக்கு இருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட அரை நாட்களை தின்று விடும் என்பதேயாகும். யாழ்ப்பாணம் பட்டணப்பகுதியில் இருந்து இரவு 7.30 ற்கு வெளிக்கிடுபவருக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லையானாலும் வடமராட்சி போன்ற இடங்களில் இருந்து 5 அல்லது 5.30 ற்கு வெளிக்கிடுபவர் நிலை தான் கவலைக்கிடமானதாகும். ஆனால் முடிவிடத்துடன் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காலை சரியான நேரத்திற்கு நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்திருப்பீர்கள்.
அனால் இதிலும் CTB (SLTB) பேருந்துகளிலும் இருக்கும் உணவுப்பிரச்சனை ஒன்றிருக்கிறது. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் எந்தக்கடையில் சரியான சலுகையும் உபசரிப்பும் கிடைக்கிறதோ அங்கேயே பேருந்துகள் நிறுத்தப்படும்.
நொச்சிகாமத்தில் உள்ள ஒரு கடையில் நின்றால் ஓட்டுனரின் முன்பக்கக் கண்ணாடியைக் கூட துடைத்து விடுவார்கள். அதே போல இன்னொரு இடத்தில் (பெயர் குறிப்பிடவில்லை) உள்ள முஸ்லீம் கடை ஒன்றில் நிறுத்தும் பேருந்துகளுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வந்தால் (வேக கட்டுப்பாட்டை மீறல் தொடர்பான) அவர்களே சுமூகமாககி வைப்பார்கள்.
CTB (SLTB) பேருந்து
இங்கே குறிப்பிடப்படுவது சாதாரண பேருந்து பற்றியதாகும். ஆனால் உள்ளுரில் ஓடும் சாதாரண பேருந்துகள் ஓடப்படுவதில்லை எல்லா இருக்கைகளும் தலை சாய்கக் கூடியவையே (இருக்கைகள் நகர்த்த முடியாது) அத்துடன் தொலைக்காட்சியும் இருக்கிறது. 675 ரூபா வுடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் பயணமானது காலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும் அதே போல காலை 5.30 ற்கு ஆரம்பிக்கும் பயணமும் மாலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும்.
இரு இருக்கைகள் உள்ள பக்கம் உங்களால் முற்பதிவு செய்ய முடிந்தால் பெரிய உடல் அசதியிருக்கப் போவதில்லை.
இங்குள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை 3.30 ற்கு கொழும்பு வீதிகளில் ஒரு பெண்ணால் நிற்க முடியாது என்பதேயாகும். உங்களுக்கான வாடிக்கையான ஒரு ஆட்டோக்காரர் இருப்பாரானால் எந்த சிக்கலுமில்லை.
சிலதடவை நான் இரவு கொழும்பு போய் எனது வேலையை முடித்துக் கொண்டு காலை பேருந்தில் திரும்பியிருக்கிறேன் (24 மணி நேரத்திற்குள்).
ஹையெஸ் வாகனம்
சராசரியாக 1200 ரூபாய் அறவீட்டுடன் ஆரம்பிக்கும் இப்பயணத்தில் உள்ள மிகப் பெரும் சாதகமான விடயம் என்னவென்றால் வீட்டு வாசலில் ஏற்றப்பட்டு நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கப்படுவோம். இதைப் போல பாதுகாப்பான பயணம் எதிலும் கிடைப்பதில்லை. ஆனால் மற்றையதில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்புவதற்கு கிடைக்கும் சந்தர்ப்ப விகிதம் இதில் மிக மிகக் குறைவு.
அத்துடன் என் போல சற்று கால் நீளமானவருக்கு ஏதுவான இருக்கை கிடைக்காவிடில் விடிய இறங்கும் போது தேநீர் குடிப்பதற்கு இரண்டு சிரட்டைகள் கையில் இருக்கும்.
ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனை உள்ளவருக்கு சிறந்ததாகும் (super luxary சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது)
அதே போல நல்ல கடைகளில் சாப்பிடலாம்.
இதை விட தனியார் அரைச் சொகுசு பேருந்துகளும் போகின்றன அவை பற்றி நான் விபரித்துத் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.
சரி நாம் பாவிக்கும் சிக்கன வழி இது தான். தயவு செய்து பேருந்து முதலாளியிடம் போட்டுக் கொடுத்திட வேண்டாம். பிற்பகல் 5 மணிக்கு வவுனியா பஸ் எடுத்திடவேண்டும். அங்கே 9 அல்லது 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்து சொகுசுப் பேருந்துகள் வரும். அதற்கு முன்னர் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு 10 ரூபாயை வவுனியா பஸ்நிலைய கழிப்பறைக்கு கொடுத்து மதியப் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நின்றால் பேருந்துகள் வரும். நடத்துனரிடம் சென்று “அண்ணே ஏதாவது சீட் இருக்கா“ என்று கேட்டால் அவர் பதிலளிப்பார் இருந்தால் 500 அல்லது 600 ஐ அவரிடம் கொடுத்து விட்டு அலுப்பற்ற சந்தோசப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். 400 கொடுத்து பயணிக்கும் என் நண்பர் ஒருவரும் இருக்கிறாரென்றால் பாருங்களேன். இப்ப சொல்லுங்கள் நாம் பழம் தின்று கொட்டை போட்டவரா இல்லையா?
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
4 கருத்துகள்:
இதெல்லாம் விட இலகுவான வழி உண்டு வவுனியாவுக்கு பஸ்ஸில் வந்து வடிவாக நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு இரவு தபால் புகையிரதத்தை பிடித்தால் விடிய 4.45 கொழும்பு புறக்கோட்டை நிலையம் அங்கேயே 100/- இல் குளித்து வெளிக்கிட முடியும்.(வவுனியா-கொழும்பு வெறும் 250/-) வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து புகையிரத நிலையம் 400m(10நிமிட நடை). ஆட்கள் குறைவு என்றால் தனி சீட்டில் படுக்கலாம் வசதியாக காலை நீட்டலாம் விரும்பும் நேரம் சிறுநீர் கழிக்கலாம்.இடையில் மாகோவில் சுட சுட உணவும் தேநீரும் பிறகு என்ன முயலுங்கள். வருட இறுதிக்குள் கிளிநொச்சி வரை ரயில் வந்தால் இன்னும் இலகு.முயன்று பாருங்கள்.
அடுத்த முறை இந்த ஐடியா தான்.. முயற்சிக்கிறேன் நன்றி சகோ...
ஜமாய்ங்க ராஜா!////'டி.எஸ்'(ஏ.சி) ல யாழில இருந்து அறுநூறுக்கும் போகலாமாம்!
தமிழகத்திலே இருக்கிறாப்போல அங்கே இலங்கையிலேயும் ஏசி பொருத்திய சொகுசு பஸ்செல்லாம் இருக்கா!!!
இவங்க ஈழ போராட்டகாரங்க இங்கே சொல்லும் கதைகளை கேட்டு நீங்க எல்லாம் கொழும்பு போவதானா கழுதை மேலே ஏறி தான் போக வேண்டும் என்றல்லவா கற்பனை செஞ்சுக்கிட்டிருந்தோம் :)
கருத்துரையிடுக