Featured Articles
All Stories

திங்கள், 10 ஏப்ரல், 2017

மணிரத்தினமும் இராவணனும்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மணிரத்தினம் என்றால் படுபயங்கரமான நுண்ணரசியல் படம் எடுப்பார் எம்மை அறியாமலே எமக்குள் ஏதாவது விதைத்திருப்பார் என்ற விமர்சனங்களோடு அவரைக் கடக்க நேரிட்டாலும் ஒரு இயக்குனராக, ஒரு ஆசானாக அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


இத்தனை விமர்சனங்களும் எனக்குள்ளும் உண்டு ஆனால் என் ஒற்றை நாயகனை வைத்து என் வாயை ஒரு தடவை முழுவதுமாய்க் கட்டிப் போட்டார்.


விக்ரம் ரசிகன் என்பதற்கப்பால் விக்ரமுக்கூடாக நான் கற்பனையில் வைத்திருந்த இராவணன் என்ற என் நாயகனைக் காட்டியிருப்பார்.


இல்லாத பொல்லாதது எல்லாம் வைத்து கம்பன் வம்பளக்க உருவகம் கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே இன்றும் இராவணன் எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்தளவுக்கு இராவண எதிர்ப்புக் கொண்ட ஒரு வட தேசத்துக்கு அவனைக் காட்டியதில் கூட ஒருவகை நுணுக்கமான நேர்மைத் தன்மையைக் கடைப்பிடித்திருப்பார்.


தங்கையை ஒருவன் வஞ்சம் தீர்த்தான் என்றதற்காக இன்னொருத்தன் மனைவியைக் கடத்தலாமா எனத் தான் ஒவ்வொரு இராமாயண வாசகர்களும் கேட்பார்கள். அது பற்றி தாராளமாக பல பட்டிமன்றங்கள் வாதிட்டு விட்டது அது ஒரு பக்கம் இருக்கட்டும் சரி கடத்தி வந்தவன் நடத்திய விதத்தைக் காட்டிய இடத்தில் மணிரத்தினத்தின் கண்ணியத்தை நான் மதிக்கிறேன்.


- அவள் விபத்தில் சிக்கி விட்டாள் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தொடலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் இராவணன் இருக்கிறான் முனையவும் நினைக்கிறான் ஆனால் தொடுவதற்கான சந்தர்ப்பத்தை இயக்குனர் கொடுக்கவில்லை அவள் விழித்துக் கொள்கிறாள் தடியால் காப்பாற்றுகிறான்.



- அவளுக்கு இவனில் வந்த கோபத்தில் தாக்க முனைகிறாள். அந்த இடத்தில் சராசரி ஆணாக இராவணன் நிற்கிறான். அவள் ஆக்ரோசம் கொண்டு பாய இவன் விலத்த அவள் கூந்தல் மட்டும் இவனை பட்டும் படாமல் தட்டிச் செல்கிறது. அந்த இடத்தில் அவனுக்குள் ஆணாக ஒரு உணர்வு எட்டிப் பார்க்கிறது என்பதை இசை உணர்த்தும் அந்த இடத்தில் இராம ரசிகருக்கு சபலம் என்ற வாரத்தையாலும் இராவணன் ரசிகருக்கு காதல் என்ற வார்த்தையாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்தலாம் ஆனால் அந்த இடத்திலும் இயக்குனர் இராவணனைக் காப்பாற்றி விடுகிறார். அவளைத் தடுக்கி தன் மேல் விழ வைத்திருக்கலாம் தானே போரிடுகையில் அணைத்திருக்கலாம் ஆனால் இராவணன் தன் உணர்வெழுச்சியை அடக்கியவனாகவே அடுத்தடுத்த காட்சிகளில் தோன்றுவான்.


- இத்தனை இடங்களிலும் அவளைத் தொடாமல் காத்து வந்த மணிரத்தினம் ஒரே ஒரு இடத்தில் அவளை தொட வைத்து விடுவார். அந்த அழுத்தமான தொடுகை அல்லது உரிமையான தொடுகையில் இராவணன் நாயகனாகவும் இராமன் தன் மனைவியில் கூட இரக்கமற்ற, பணயம் வைக்கும் கொடூரனாகவும் ஒரு காட்சியிலேயே விழித்து முடித்திருப்பார். இராவணனைச் சுட பொலிசார் சுற்றி வளைத்து விட்டார்கள். தன் மரண நாழிகையை கண் முன் அவன் கண்டு விட்டான் ஆனால் தன் முன்னே அவள் நிற்கிறாள். அவளைக் காப்பாற்ற வேண்டிய ஏதோ ஒன்று அவனுக்குள் இருக்கிறது. தன்னை அறியாமலே அவள் தலையை கீழ் நோக்கி அழுத்தி அவளை முதன் முதல் தொடுகிறான்.


இராவணனின் இறுதிக் கணத்தில் அவள் ஒரு பார்வை பார்ப்பாள் அவனும் பார்ப்பான் ஆனால் அவளது பார்வை சொல்லும், அதற்குள் பாசம் வழியும் அதை காதலாக என்னால் விழிக்க முடியாது ஆனால் அவள் கண் சொல்லும் நீ நல்லவன், வல்லவன் என இந்த உணர்வை அப்படியே எனக்குள் கொடுத்த மணிரத்தினத்திடம் இதை விட பெரிதாக என்னத்தை நாம் கற்று விட முடியும்.
அந்த இடத்தில் அவள் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை ஆனால் ஒரு வில்லனை எல்லோருக்கும் நாயகனாக்கியிருப்பாள்.



குறிப்பு - (கார்த்திக் வருவது குரங்குச் சேட்டை விடுவது எல்லாம் படு கேவலமான இடம் ஆனால் இங்கு இராவணன் பற்றி மட்டுமே பேசப்படுகிறது.)

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தொடர்ந்து என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழ் இருக்கும் பேஸ்புக் like பொத்தானை சொடுக்கிச் செல்லவும்.
PM 8:43 - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top