Featured Articles
All Stories

செவ்வாய், 11 நவம்பர், 2014

என்னுடைய பத்திரிகைக் குறுங்கதை - காலம் செய்த கோலம்


குறுங்கதை 
காலம் செய்த கோலம்
(23may2010 மித்திரன்)


”கிறீச்…..” என்ற சத்தத்துடன் அந்தப்படலை சற்றுச் சிரமத்துடன் திறந்து கொள்கிறது. அவன் போகும் போது அப்படி இருக்கவில்லை. முற்றத்தில் நின்ற செவ்வந்தி, சீனியாஸ் கன்றுகள் பெண்பிள்ளைகள் உள்ள வீடென்பதைக்காட்டி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவன் வீட்டை விட்டுப் போய் 8 வருடங்கள் தான் ஆகியிருந்தது.
வீட்டின் பின் மூலையில் நாயொன்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தது. அது நன்றாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ‘சலக் சலக்‘ என்ற சங்கிலியின் சத்தம் உரப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
அவன் மீண்டும் இந்த வீட்டுக்கு திரும்பி வருவான் என்று சற்றுக் கூட எதிர்பாக்கவில்லை. அவன் ஆசைகள் கனவுகள் எல்லாம் 10 வருடத்திற்கு முன்னமே எல்லாம் பறந்தொடிவிட்டது. அப்பாவியான அவனை கொலைச்சந்தேக நபர் என்ற பெயரில் விழுங்கிக் கொண்ட சிறை தாடி, மீசை என்பவற்றை பரிசாகக் கொடுத்து கக்கிவிட்டிருந்தது. அந்தக் கஷ்ட காலம் வராவிடில் இவன் இப்போது ஏதோ ஒரு நாட்டில் உழைத்துக் கொண்டு வீடு வந்து போயிருப்பான். அதே போல் வீட்டுக்காரர் கூட இப்படி ஓலைக் கொட்டிலில் இருக்க வேண்டியிருக்காது.
போய் முற்றத்தில் நிற்கிறான். உள்ளே தேங்காய் துருவும் சத்தம் கேட்கிறது. விறாந்தையில் இவன் படத்திற்கு முன்னே ஊதுபத்தி எரிந்து கொண்டிருந்தது.
”பிள்ளை ஆரோ வருகினம் போல ஆரெண்டு பார்”
”பொறணை நாய் கத்திக்கொண்டு நிற்குது அவிட்டுப் போட்டு வாறன்”
அவள் ஒரு முறை அந்தப் புதிய மனிதரை எட்டிப் பார்த்து விட்டுப் போகிறாள். மற்றவழும் தெரியாதவள் போல நித்திய கல்யாணியில் பூ பிடுங்கிக் கொண்டு நின்றாள்.
தலையை நீட்டிப்பார்த்த தாய் ”ஆரப்பு அது ஆளையும் மட்டுப்பிடிக்கேலாமல் கிடக்குது”என்றாள்.
அவன் வாயடைத்துப் போய் நின்றான். அவன் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் அடங்கிப் போனது.
அவள் நாயை அவிட்டு விட்டிருக்க வேண்டும். நாய் சந்தோசத்தில் வீட்டை ஒரு முறை சுற்றி விட்டு இவன் காலை முகர்ந்து பார்த்தது.
”அடிக்…..கலையடி புள்ள. அதுக்கு புது ஆக்களெண்டால் சரிவராது”
முகர்ந்து பார்த்த நாய் இவன் மீது காலைப் போட்டது. அவன் ”பப்பி” என அதன் தலையை வருடி விட்டான். அது இவனை பாய்ந்து பாய்ந்து நக்கியது.
”அம்மா இப்ப கூட உங்கட மகனை தெரியலையா?“
”அப்பு என்ர ராசா இப்பிடி மாறிட்டியே” தாய் கத்திக் கொண்டு ஓடி வந்தார். இப்போது நாய் தன் எஜமானரை காக்கும் பணியில் ஈடுபட்டது. அவர்கள் பக்கம் திரும்பி குரைக்க ஆரம்பித்தது.
PM 10:33 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

புதன், 5 நவம்பர், 2014

புத்துணர்ச்சி பெற்றுள்ள கலைஞரின் நாளைய இயக்குனர்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

நாளுக்கு நாள் திரைத்துறைக் கனவுகளுடன் பல நூறு இளைஞர்கள் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு களம் தர என உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலைஞர் ரீவியின் நாளைய இயக்குனராகும்.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பத் தொடர்களில் சாதித்த ஒரு சிலரே இன்று திரை உலகில் நுழைந்திருக்க அதன் பின்னர் சொல்லும்படியாக எவரும் உள் நுழையவில்லை. என் கணிப்பின் படி அவர்களை உருவாக்கியது இந் நிகழ்ச்சியல்ல அவர்களுக்கு ஒரு அடையாளமாக மட்டுமே இந்நிகழ்ச்சி இருந்திருக்கிறது.

அதற்கு காரணம் நடுவர்களின் மனத் தோற்றப்பாட்டையே கூற வேண்டும். மிக நீண்ட வருடங்களாக இந்நிகழ்ச்சியை பார்த்து வரும் எனக்கு இதில் தோன்றிய நடுவர்களது திணிப்புக்கள் என்றைக்குமே உறுத்தலாகவே இருந்திருக்கிறது.

ஒரு குறும்படம் என்பது முழு சினிமாவின் விதிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சட்டதிட்டங்களை களைந்தெறிந்து உருவாக்கப்படுவதே ஆகும் ஆனால் அதற்கு இவர்கள் பல்வெறு விதமான கருத்துக்களைத் திணிப்பார்கள்.

குறிப்பாக அண்மையா நாட்களில் நடுவர்களாக இருந்த சுந்தர்.சி மற்றும் வசந் ஆகியோர் மிக மோசமாகப் படைப்பாளிகள் மேல் ஒரு வரையறைத் திணிப்பை இட்டு வந்தார்கள். கடவுள் செயலாக தனது சுய தேவைக்காக சுந்தர்.சீ ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்த்திக் சுப்புராஜ் நடுவராக உள்வாங்கப்பட்டள்ளார்.

இவரது வருகையின் பின்னரே நடுவர் பக்கத்தில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டிருக்கிறது என்று கூற வேண்டும். இதுவரை காலமும் நடுவர் ஒருவர் படத்தை பார்த்தாரேன்றால் அவருக்கு அப்படத்தில் இருந்த எது விளங்கியதோ அதனடிப்படையில் தான் அவரது கருத்து மழை கொட்டும்.

ஆனால் கார்த்திக் சுப்ராஜ் வந்ததன் பிற்பாடு ஒரு சின்ன மாற்றம். படைப்பாளியின் கருத்தும் ஒன்று உள்வாங்கப்படும். அவர் படத்தை விளக்கச் சொல்லி ஒரு சொல் கேட்பார். இதில் படைப்பாளிக்கு நல்லதொரு வாய்ப்புக்கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படியானதொரு பெரிய போட்டிக்கு சிறந்த கதை ஒன்றைத் தான் எடுப்பார்கள். ஆனால் பார்க்கும் எமக்கு அது சொதப்பலாகத் தெரியும். அப்படியானால் எங்கோ ஓரு இடத்தில் தப்பு நடந்திருக்கும். இவரது இச்செயற்பாட்டால் இலகுவாக அதை அடையாளம் காணக் கூடியதாக இருக்கின்றது. இது படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பயனைக் கொடுக்கிறது.

அரையிறுதிச் சுற்று நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த தொடருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இருப்பாராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். ஆனால் அவரிடமும் ஒரு குறை இருக்கின்றது. அதாவது ஒன்றில் தனி ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது தனி தமிழில் பேசலாம் இரண்டையும் கலந்து கோர்த்து கதைப்பாதால் அவர் பேச்சை விளங்கிக் கொள்வது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.

எப்படியென்றாலும் கடந்த ஒரு சிலவாரங்களாக போட்டியை மிகவும் ரசிக்கக் கூடிய மாதிரி இருக்கின்றது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 6:49 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top