Featured Articles
All Stories

புதன், 3 அக்டோபர், 2012

ஒரு மூத்த பதிவரை இழந்து நிற்கும் இலங்கைப் பதிவுலகம்

மனித பயணங்களில் எத்தனையோ மனிதரை கடக்க வேண்டியிருக்கும். அதில் சிலருடனேயே தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். சிலரை நடுவழியில் பிரிய வேண்டி நேரிடும்.

அந்த வகையில் கடந்த 30.9.2012 அன்று இலங்கையின் ஆரம்ப கால பதிவர்களில் ஒருவரான புவனேந்திரம்-ஈழநாதன் இழந்திருக்கிறோம் என்று சொல்லும் போது மனது கனத்தாலும் அவ்வார்த்தையை கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

2004 அளவில் பதிவுலக வாழ்க்கையை சிங்கப்பூரில் ஆரம்பித்த இளங்கோ அண்ணா தனக்கு கிடைத்த நேரங்களில் தமிழுக்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் உழைத்தவர். ஆனால் தனது சொந்த பெயர்களை பல இடங்களில் பாவிக்காமல் ஈழவன், ஈழநாதன் போன்ற புனை பெயர்களில் பல படைப்புக்களை வழங்கியிருந்தார்.

யாழ் கருத்துக்களத்தில் தீவிர பங்காற்றியவர்களில் இவரும் ஒருவர். அதிலும் ஈழத்து நூல்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட www.noolaham.net  தளத்தில்  இவரது உழைப்பு மிகப் பெரியதாக இன்றும் கருதப்படுகிறது. அத்தளத்தின் வளர்ச்சிக்காக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு வெற்றியும் கண்டார்.

இவையனைத்திலும் எனக்குள் ஆயிரம் வலிகளை விதைக்க இவர் செய்த இச்செயல் காரணமாகிவிட்டது. உண்மையில் இத்தனை விடயங்களை துருவி ஆராய வெளிக்கிடும் எனக்கு அவர் செய்த செயல் வெட்கித் தலைகுனிய வைத்து விட்டது.

ஆரம்ப நாட்களில் நான் வன்னி சம்பந்தமான பதிவுகளை எழுதும் போது பல அழுத்தங்கள் கிடைத்தது. நீ பொய் பேசுகிறாய், வன்னி அவலம் என்று கதை விடுகிறாய், புலம்பெயர்ந்தவரை கேவலப்படுத்துகிறாய் என பகிரங்கமாகவும், தனிமடல்களிலும் பலர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரம் ஈழநாதன் என்ற ஒரு பதிவர் பகிரங்கமாகவே வந்து என்னை உற்சாகப்படுத்தி கருத்திட்டுச் செல்வார்.

ஏதாவது அப்படியான பதிவு போட்டால் உடனே மின்னஞ்சல் ஒன்று போடுவார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். சில தேவைகளுக்காக உங்களை அடக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் எழுதுங்கள் என்று போடுவார். அடிக்கடி எமக்குள் தொடர்பிருந்தாலும் அவரது இளங்கோ என்ற கணக்கில் இருந்து எந்த தொடர்பும் என்னுடன் இல்லாததால் இவர் தான் அவர் என சந்தேகிக்க முடியாமலே போய் விட்டது.

இத்தனைக்கும் எனக்கு அவர் உறவு வழியில் உடன் பிறவாத அண்ணனாக இருந்தாலும் ஒரு தடவை கூட ஈழநாதன் தான் இளங்கோ என்பதை அறிமுகப்படுத்தவே இல்லை.

அவருடனான சிறு வயது நெருக்கம் என்பது மிகவும் ஆழமானது. இருவருக்கும் 4 வயது இடைவெளி தான். அவரது தம்பிக்கும் எனக்கும் ஒரே வயது. மூவரும் பிள்ளையார் கதை என்றால் எமது ஆலயத்துக்கு பாடல்கள் படிக்கச் செல்வோம். இளங்கோ அண்ணா தீட்சை கேட்டவரென்பதால் அவர் பிள்ளையார் கதை படிப்பார். அவர் தம்பி இளம்பரிதியும் நானும் அப்போ தீட்சை பெறாததால் ஆலய விதிமுறைப்படி பிள்ளையார் கதையின் பின்னர் வரும் துதிப் பாடல்களைப் படிப்போம்.
எம்மை இச்செயற்பாட்டுக்கு அனுமதி தந்து மன உறுதி தந்து உற்சாகப்படுத்தி விட்டவர் இப்போதும் எமது ஆலயத்துக்கு தலைவராக அருக்கும் மகேந்திரம் ஐயா தான். அவர் தந்த உறுதிக்கும் அனுமதிக்கும் என்றும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அப்போது இளங்கோ அண்ணாவிடம் மட்டும் தான் தேவாரப் புத்தகம் இருந்தது. தான் படித்து முடிய தனது புத்தகத்தை் தான் எமக்கு படிக்கத் தருவார். அதில் வரும் ஒரு வரி எப்போதும் என் நாவோடு சண்டைபிடிக்கும். அந்த வரிக்கும் என் நாவுக்கும் சமாதான ஒப்பந்தம் போட்டவர் இளங்கோ அண்ணா தான்.

இனி நான் கூறப் போவது அவர் வீட்டாருக்கே தெரியுமோ தெரியாது. ஆனால் இந்த இடத்தில் கட்டாயம் கூறவேண்டும். இனியும் அவது வீட்டாருக்கு இதை மறைப்பதில் எதுவும் இல்லை.
இளங்கோ அண்ணா தமிழுக்காக மட்டும் உழைக்கவில்லை. ஈழத்திற்காகவும் பாடுபட்டவர். வன்னியில் சில மாணவர்களுக்கு கணனி தொடர்பான கற்கையை தான் இங்கு வரும் காலங்களில் கற்பித்துச் சென்றிருக்கிறார். 2003-2004 கொலப்பகுதியில் இங்கு வரும் போது நான் உடுப்பிட்டியில் இருந்து தான் உயர்தரம் கற்றுக் காண்டிருந்தேன். அப்போது அவருக்கு கிளிநோச்சியில் இடங்கள் தெரியாததால் என்னைத் தான் இடம் காட்டி அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி விடும்படி கேட்டுக் கொண்டார். 

இருவரும் ஒரு காலைப் பொழுதில் வெளிக்கிட்டு ஒன்றாகவே பயணித்தோம். அதன் பின்னர் இரு வீட்டாருக்கும் சந்தேகம் வராத வகையில் நான் அவரை கிளிநொச்சியில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு மல்லாவியில் இருந்த எனது அக்கா வீட்டுக்குச் சென்று விட்டேன். இது அப்போது என்னோடு ஒன்றாக கல்வி கற்கவரும் அவர் தம்பிக்குக் கூட நான் சொல்லவில்லை.

அவர் வன்னி தொடர்பாக தனிமடலில் கதைக்கும் போது கூட இவர் தான் இளங்கோ அண்ணா என்ற சந்தேகம் எனக்கு துளி அளவு கூட வராமல் போனதை இட்டு என்றும் வெட்கப்பட்டாலும். அவரது அணுகுமுறை வாழ்க்கை முறை என்பன அவர் ஒரு மாமரமாகவே வாழ்ந்து போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்நேரம் அவர் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கும் தாய், தந்தை, சகோதரர்கள், மைத்துனர்களுக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. ஆனால் அவர் இந்த மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பங்கிற்காக அவரது ஆத்மா எம் வேண்டுதல் இல்லாமலே சாந்தியடையும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
இளங்கோ அண்ணா நீங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்பதே என் ஆசை.

குறிப்பு- நான் தற்போது வெளியிடம் ஒன்றில் தங்கி நிற்பதால் அவருடனான தொடர்புகள் அவர் பதிவுகள் சம்பந்தமாக விரிவாக குறிப்பிட கால அவகாசம் போதவில்லை. விரைவில் அவரது சுவட்டை பதிவு செய்வேன்.

நன்றியுடன்
அன்புத் தம்பி
கரன் (ம.தி.சுதா)

18 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top