Featured Articles
All Stories

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஒரு வெற்றி பெற்ற இயக்குனருடன் பரிமாறப்பட்ட என் மறக்க முடியா உணர்வுத் தாக்கம்

வணக்கம் உறவுகளே
இந்த வருடத்தின் முதல் பதிவை பெரும்பாலான  மனிதரும் சந்திக்கும் ஒரு ஆழ்மன உணர்வுடன் பகிர்கிறேன்.
அவர் அனுமதி பெறாவிட்டாலும் என் மன பாதிப்பு என்பதாலும் பகிர்கிறேன்.
எமக்கு எவ்வளவு தான் வெற்றி கிடைத்தாலும் எமக்கு பிடித்தமானவருடன் அந்த சந்தோசத்தை பகிராத வெற்றிகள் அனைத்தும் வெற்றியாக இருந்தாலும் திருப்தியாக இருக்க போவதில்லை.
அதே இடத்தில் நான் இருக்கும் நிலையை உணரும் போது தான் அதன் வலியையும் உணர்ந்தேன். நான் வாழ்க்கையில் விழுந்து போய் காலையும் மாலையும் கூலித் தொழிலாளியாக அப்பாவை கடக்கும் போது இயாலாமையால் பார்க்கும் அந்த முகத்தை இன்று வெற்றிகளோடு பார்க்க இருக்கவில்லை.
ஆனால் இன்று நான் வாங்கும் சம்பளத்தில் இருந்து விருதுகள் வரை அவர் படத்துக்கு முன் போய் தான் எனக்கு சொந்தமாகிறது.
அதே வலியுடன் ஒரு வெற்றியாளனை சந்தித்தேன். அவர் மறைக்க இயலாமல் மறைத்து மறைத்து சிந்திய அந்த சில துளி கண் கசிவுகள் இப்பவும் என் கண்ணில் தான் படமாக இருக்கிறது.
முந்த நாள் (2.1.2015) தான் அப்பா எம்மை விட்டு பிரிந்து சரியாக இரண்டு வருடங்கள் முடிவடைந்தது. என் தொழில் துறை, திரைத்துறை என எந்த வெற்றியையும் காணாமலே நான் தோற்றுப் போய் இருந்த காலத்திலேயே போய் விட்டார்.
சரி இந்த மனிதன் யார்?
அண்மையில் மௌன விழித்துளிகள் என்ற குறும்படம் மூலம் அமெரிக்காவரை சென்று ஜெயித்து வந்த இயக்குனர் இளங்கோ ராம் அண்ணாவைப்பற்றித் தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு விடயத்துக்கும் வழிகாட்டிய ஒரு நபரிடம் இருந்து அவர் காட்டிய இலக்கை அடைந்தவன் வந்து தன் வெற்றியை பகிர்ந்தாலும் அதற்கான கருத்தை கேட்க முடியாத நிலை என்பது மிகவும் வலிமிகுந்த ஒன்றாகும்.
மௌன விழித்துளிகளுக்காக பெற்ற விரதடன் அவர் தந்தையிடம் போயிருக்கிறார். ஆனால் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தந்தையால் மனதால் மட்டும் தான் வாழ்த்த முடிந்ததே தவிர கருத்தால் அல்ல.
”சின்னனில் இருந்து என்னோட சின்ன சின்ன வெற்றிகளையும் பாராட்டி அடுத்த கட்டத்துக்கான கருத்துக்கள் சொல்பவரிடம் இந்த வெற்றிக்கான பாராட்டை பெற முடியாமல் இருப்பதும் அடுத்த கட்டத்துக்கான கருத்தை கேட்க முடியாமல் இருப்பது நரக வலி சுதா” என அவர் கூறிய அந்த நிமிடம் அத்தனை வலியையும் ஒட்டு மொத்தமாக உணர்ந்தேன். அவர் எனக்கு மறைக்க நினைத்தாலும் அவராலேயே அடக்க முடியாமலே சில துளிகள் பொத்தென்று விழுந்தது.
என்னால் கூற முடிந்தது ஒரு சில வரிகள் தான் ”எமக்காக வாழ்ந்தவர்கள் ஆத்மாவாகவென்றாலும் எம்மோடு தான் இருப்பார்கள்”
அவர்களது ஆத்ம சாந்திக்காகவாவது போராடுவோம். 

அண்மையில் என்னோடு நெருங்கிப்பழகும் ஒரு சகோதரனுக்கு வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேன். அது அவன் மனதுக்கு தாக்கத்தை கொடுத்திருக்கலாம் ஆனால் அவன் பிற்பொழுது ஒன்றில் வருந்தும் போது ஆறுதல் சொல்வதை விட இப்போது பச்சையாக சொல்லலாம் தானே என்று தான் கூறினேன். அது என்னவென்றால் தந்தையாரின் கண்டிப்பு தொடர்பாக கொஞ்சம் தகப்பன் பற்றி காட்டமாக பேசினான். அப்போது தான் சொன்னேன் ”அப்ப அப்படித் தான்ர இருக்கும் ஆனால் அவர் செத்த பிறகு ஏன் அவர் அப்படி நடந்தார் எத்தனை விசயங்களை எமக்கு தெரியாமல் மறைத்திருக்கிறார். என்று தெரிய வரும் அப்ப தான் உணருவம்” என்று என் சொந்த அனுபவத்தை சொன்னேன்.
உண்மையில் அப்பாவுக்கு முன்னரே மாரடைப்பு வந்ததை மறைத்திருக்கிறார் என்பது இறப்பின் பின்னர் தான் தெரியும். அன்று என்னை சிரமப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்த அந்த ஒரு சில  ஆயிரங்கள் இன்று என்னிடம் கிடைக்கும் பல ஆயிரங்களுக்கு பெறுமதியே இல்லாமல் செய்து விட்டது.

எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்து நின்று போராடுவதற்கான தைரியம் கொடுப்பது அவர்களது நம்பிக்கை தான் என்ற ஒரு வித கோட்பாட்டுடனேயே பயணிப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
PM 11:31 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top