வெள்ளி, 17 ஏப்ரல், 2015

வர்த்தக சினிமாவில் இன்னொரு கட்டத்துக்கு நகரும் ஈழசினிமா

PM 11:20 - By ம.தி.சுதா 3

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

ஈழத் தமிழருக்கென்று அடையாள சினிமா தேடும் போராட்டத்தில் ஒவ்வொரு கலைஞனும் தம் நேரம், பொருள், வாழ்வு என பலதை அர்ப்பணித்து கலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் தோற்றுப் போனாலும் எம் போராட்டமும் உழைப்பும் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு அனுபவப் புத்தகமாக இருக்கும்.
ஈழத்தில் இதுவரை உருவாக்கப்பட்ட குறும்படங்களில் எடுகோளான விழாக்களை எடுத்துக் கொண்டால் இதுவரை காலமும் ஒரு தொகுதியினர் கை கடிக்க கடிக்க தம் காசில் தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு எடுத்து விட்டு யூரியுப்பில் தரவேற்றிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் போட்ட காசை எடுக்கலாம் என்ற நம்பிக்கையிலும் படத்துக்கான விளம்பரமாக அமையலாம் என்ற எண்ணத்திலும் வெளியீட்டு விழாக்கள் மூலம் பிரதி விநியோகத்தின் மூலம் போட்ட காசில் குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் எடுத்துக் கொண்டனர்.
இவை எம் சினிமாவை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் வர்த்தக ரீதியில் பாரிய நட்டத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் பல இயக்குனர்களது பார்வை திரையங்குகள் பக்கம் திரும்பியது. இதற்கு ஏதுவாக ஹிமாலயா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தப்பட்ட போட்டிகளில் ஒன்றான 48 hours film project என்ற போட்டியின் இறுதி நிகழ்வானது ராஜா திரையரங்கில் நிகழ்த்தியதன் மூலம் கணிசமான வருகையாளர் எண்ணிக்கை ஒரு மாற்றமாக அமைந்த நிலையில்....
மாதவனுடைய ”என்னாச்சு” , சமிதனுடைய ”நீ நான் அவர்கள்” , சிவராஜ் உடைய ”பை” ”பிகரை தியெட்டர் கூட்டிப் போவது எப்படி” , நிலானுடைய ”காதல் என்ன விளையாட்டாப் போச்சா” வரோவின் ”இலவு” போன்ற குறும்படங்கள் திரையரங்க திரைகளை அலங்கரித்து வர்த்தக சினிமாவுக்கான ஒரு ஒளிப்பிரகாசம் அளித்தது.
முழு நீளப்படங்களில் ஏற்கனவே கவிமாறனுடைய ”என்னுள் என்ன மாற்றமோ” , ரமணாவின் ”மாறுதடம்” (இப்படம் தணிக்கை பிரச்சனையால் திரையரங்கில் தடை விதிக்கப்பட பின்னர் மண்டபம் ஒன்றில் திரையிடப்பட்டது) , ராதா வின் ”சிவசேனை” போன்றன திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தன.
அடுத்ததாக ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. கலைஞர்களாக அக் குறும்படத்துக்கு எம்மால் ஆனா ஒத்துழைப்பை கட்டாயம் வழங்க வேண்டும் காரணம் இது எம் சினிமா இதை வர்த்தகமயமாக கட்டி எழுப்ப வேண்டிய கடமை ஒவ்வொருத்தருக்கும் இருக்கின்றது. அத்துடன் இக்குறும்படத்தின் தரத்தை என்னால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்.
வர்த்தகமாக்கலில் உள்ள சவால் என்னவென்றால் கணிசமான மக்கள் இந்திய சினிமா மோகத்துக்குள் இருப்பதால் அம் மக்களை எடுத்த வீச்சமாக எமது சினிமாவுக்குள் இழுத்து வர முடியாத நிலை ஒன்று இருப்பதால் படிப்படியாகவே அவர்களை எம் சினிமாவுக்கு பழக்கப்படுத்தி அவர்களை இவற்றையும் எதிர் பார்ப்போடு ரசிக்க வைக்க வேண்டும். இது ஒரு மிகச் சவாலான விடயமே காரணம் அவர்களைச் சென்றடையும் படைப்புக்கள் அனைத்தும் தர மட்டத்தில் குறைந்தனவாக இருந்தால் ஒட்டு மொத்த படைப்பாளிகளையும் குப்பைகளாக மதிப்பீடு இட்டு விடுவார்கள்.
வர்த்தகமயமாக்கலில் எதிர் கொள்ளும் இன்னொரு மிக முக்கிய சிக்கல் என்னவென்றால் திரையரங்க உரிமையாளர்களின் ஒத்துழைப்பாகும். திரயரங்குக்கு கொண்டு செல்லும் குறும்படம் கூட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தணிக்கை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார்கள் இதற்கான அலைச்சலுக்கே ஒருவருக்கு 10,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அதற்கப்பால் தென்னிந்திய முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்ந்த சாதாரண படங்களை வைத்திருந்து பார்வையாளர்களே இல்லா நிலையில் இருக்குமு் திரை அரங்குகள் கூட இப்படி ஒரு திட்டத்துடன் அணுகும் போது ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 30,000 ஆயிரம் வரை கேட்கிறார்கள். மிக முக்கியமாக இப்பிரச்சனைகளை எல்லாம் ஒரு கலைஞனால் எதிர் கொள்ள முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் எமக்கென்று இதுவரை செயற்பாட்டுடன் கூடிய ஒரு சங்கம் இல்லாமையே..
இப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் எம்மால் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு படைப்பாளியும் உழைக்கிறான். இந்த உழைப்பானது ஒரு நாளில் நிச்சயம் வரலாறாகப் பேசப்படும். அதற்காகவாவது கை கோர்த்து உழைப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

இணைப்புக் குறிப்பு - 

1) இப்படியான திட்டம் ஒன்று சென்ற மார்கழி மாதம் எனக்குள் இருந்தாலும் இதுவரை செய்த 9 குறும்படங்களில் ஒன்றுக்கு கூட வெளியீட்டு விழாக் கூட நடாத்தாத நிலையில் ஒரு சிறிய குறும்படத்துக்காக மட்டும் ஒரு பார்வையாளன் இருந்த களை மாற முதல் எழும்ப வைப்பது ஏதோ மனசை உறுத்தியது. ஆனால் இப்போது என் திட்டத்தை வெளிக் கொணரும் எண்ணம் இருக்கிறது. 2009 போரின் பின்னர் வன்னியின் போன் வெளிக்கள போர்க்காட்சியை மையப்படுத்திய என்னுடைய ”தாத்தா” குறும்படத்தையும்,
அண்ணன் தங்கையை மையப்படுத்திய ”கருவறைத் தோழன்” மற்றும் நோர்வே சர்வதேச திரைப்பட விழாவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான ”கரகம்” ஆவணப்படத்தையும் உள்ளடக்கி ஒரு முழுமையான சினிமா நேரமாக்கி. தயாரிப்பாளர் எதுவும் கிடைக்காமல் பண நெருக்கடியால் கிடப்பில் கிடக்கும் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி” திரைப்படத்துக்கான பணம் சேர்க்கும் நோக்குடன் வரும் மே மாத கடைசியில் திரையிடும் எண்ணம் இருக்கிறது.

2) ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. எம்மால் ஆன ஒத்துழைப்பை வழங்குவோம். இப்படைப்பில் பணியாற்றிய விஷ்ணு, நிரோசா, சசிகரன், சுதர்சன், ஆதன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் சேரட்டும்.

3) அடுத்து வரும் காலப்பகுதியில் சக இயக்குனர்களின் குறும்படத்துடன் இணைத்து முழுமையான பட நேரம் ஒன்றுக்கு கொண்டு வந்து திரையிடும் எண்ணமும் இருக்கின்றது.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

3 கருத்துகள்:

Annogen சொன்னது…

ஆக்கபூர்வமான பதிவு.. ஈழத்து திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட அணைத்து பிரிவினரும் வாசிக்க வேண்டிய பதிவு..

ம.தி.சுதா சொன்னது…

@Annogen Balakrishnan
நன்றி சகோ

Yarlpavanan சொன்னது…

சிறந்த எண்ணங்களை வெளியிட்டமைக்குப் பாராட்டுகள்.
ஈழத்தில் சிறந்த படைப்பாளிகள், கலைஞர்கள் இருந்தும் முதலிட எவருமில்லாமையே ஈழத்துத் திரைப்பட முயற்சி தூங்கிக்கொண்டிருக்கிறது.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top