Featured Articles
All Stories

வியாழன், 31 அக்டோபர், 2013

ஒளிப்பதிவாளர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காட்சி அமைப்புக்கள் - குறும்பட ஆர்வலருக்காக

extreme long shot
medium close up
long shot
extreme close up
medium shot
medium long shot
cut in
close up

8:40 PM - By ம.தி.சுதா 2

சனி, 28 செப்டம்பர், 2013

கவிஞர் அஸ்மினிடம் சில சந்தேகங்கள்,,,, நீங்கள் நிறை குடமா? குறை குடமா?

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துறையில் மேலே வருவதற்கு பெரும் போட்டிகளைச் சந்திக்க வேண்டிவரும். அதிலும் எதிர் போட்டியாளனை போட்டியாளனாக மட்டும் பார்த்து போட்டியிடுபவனது வெற்றி மட்டுமே வெற்றியாகக் கருதப்படும். மற்றவைக்கெல்லாம் வேறு பெயர் கொண்டே அழைக்கப்படும்.
நான் இணையவெளிக்குள் நுழைவதற்கு முன்னமே ரசித்துப் படிக்கும் கவிஞர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்மினாவார். ஆனால் அண்மையில் நடந்ந்து முடிந்த அரச இசை விருது வழங்கள் விழாவின் பின்னர் அவரது பேஸ்புக்கை பார்ப்பவருக்கு பல கேள்விகள் எழலாம். எழாமலும் விடலாம் ஆனால் எனக்கெழுந்ததையே இங்கே முன்வைக்கிறேன்.
இலங்கையில் நடைபெறும் விருது வழங்கல்கள் யாவும் தகுதியானவர்களால் தான் இடம்பெறுகிறது என்ற வாதத்தை நான் இங்கு முன் வைக்க முனையவில்லை.
ஆனால் “பாம்புகள் குளிக்கும் நதி“ எனும் கவிதைத் தொகுப்பில் ஒரு விருது விழாவுக்க வந்த அனைவரையும் (நடுவர், பேச்சாளர் உட்பட) அனைவரையும் மிருகங்களோடு ஒப்பிட்டு கவி புனைந்திருந்தீர்கள் நினைவிருக்கிறதா? அதை ஓரளவு ஏற்றுக் கொண்டேன் காரணம் உங்கள் உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியிருக்கலாம்.

ஆனால் அதன் பின்னர் இந்த வருடம் நடந்த அரச இசை விருது வழங்கல் விழா பற்றிக் குறிப்பிடும் போதும் அதே தோரணையில் குறிப்பிட்டுள்ளீர்கள். என்னிடம் இருக்கும் கேள்வி என்னவென்றால் இந்தளவு காட்டமாக இருந்து இத்தனை ஆக்கங்களில் இந்தளவு ஆதங்கத்தை வெளியிட்ட நீங்கள் ஏன் அந்தப் போட்டிக்கு பங்கு பற்றினீர்கள் என்பதே?
அப்போட்டியில் விருது பெற்றவர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தகுதியற்றவர்களுடன் போட்டியிட்டதாகவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி சக போட்டியாளனை அவமதிக்கும் நீங்கள் எதைத் தகுதி எனக் கருதுகிறீர்கள். அந்தத் தகுதி எங்கிருந்து எப்படி வருகிறது என அறியலாமா?

இதை நான் உற்று நோக்கியமைக்கான காரணம் அவ் விருது விழாவில் முதல் விருது பெற்றது ஒரு யாழ்ப்பாணத்து மாணவன் (மதீசன் தனபாலசிங்கம்) என்பதனாலாகும். அவனுக்கு ஒரு சொல்லாவது வாழ்த்து சொல்லியிருப்பீர்களா? அல்லது ஒரு சக கவிஞருக்கு எங்காவது ஒரு இடத்தில் வாழ்த்துரைத்திருக்கிறீர்களா? இவையனைத்தையும் கடந்து எப்படி ஒருவருக்கு தகுதி கிடைக்கும்.
சரி நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட ஒரு விடயத்தை பகிர்கிறேன் கேளுங்கள் காரணம் தாங்கள் இது பற்றி அறிந்தீர்களோ தெரியாது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலுக்கு தாங்கள் வரிகள் எழுதியது பற்றியதாகும்.
விஜய் ஆண்டனி அவர்கள் சிங்களப்பாடல் ஒன்றுக்கு இசையமைத்ததற்காக தமிழ் நாட்டில் பல சல சலப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது அறிந்ததே. விஜய் ஆண்டனிக்கு தன் இடத்தை தக்க வைக்க ஈழத்தோடு சேர்ந்து ஒரு பாடல் செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது ஈழ அடையாளத்தைக் கொண்டு தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டதாகவே பொது முகநூலில் கூட பேசிக் கொண்டார்கள்.
இப்படியான தங்களது நடத்தை கலைஞர்களுக்குள் ஆரோக்கியமானதல்ல. ஏனென்றால் இப்போது தொடர்பாடல் என்பது நொடிக்குள் நடந்தேறி முடிந்து விடுகிறது. இச் செயற்பாடுகளால் நீங்கள் என்போன்ற நல்ல ரசிகர்களை இழப்பதோடில்லாமல் பலரால் புறம்தள்ளப்படுவீர்கள்.
இனியாவது புரிந்து நடந்து கொண்டு ஆரோக்கியமான கலைஞர் உலகத்தை உருவாக்க தாங்கள் ஒரு சீனியராக பாதைகாட்டுவீர்கள் என நம்புகிறேன்.
(உங்கள் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருப்பேன் முன்னொரு காலத்தில் நட்பு வட்டத்தில் லைத்திருந்த நீங்கள் ஒரு உயரத்தை அடையும் போது என்னையும் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டீர்கள். அதன் பின்னர் தங்களுடன் நான் இணையவில்லை)


10:29 PM - By ம.தி.சுதா 5

புதன், 28 ஆகஸ்ட், 2013

துலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..


வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
என் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் பொருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.
இது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.
இன்னுமொரு படைப்பை படைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இப்படைப்பை படைப்பதற்காக என்னோடு எந்தவித எதிர் பார்ப்புமின்றி உழைத்தவர்கள் தொடர்பாக முன்னோட்ட வெளியீட்டுப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் (பதிவுக்கான தொடுப்பு இங்கே)

சில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக இக்குறும்படத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிக்கொணர முடியாமல் போனமைக்காக சிரம் தாழ்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


என சிலவற்றை பூரண திரைக்கதையுடன் கைவசம் வைத்திருந்தாலும் காலம் நேரம் அதற்கான பொருளாதார வசதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு படைப்புடன் சந்திக்கிறேன்.
குறிப்பு - படைப்புகளுக்காக இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட திரைக்கதை தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

குறும்படத்திற்கான தொடுப்பு இது தான்
http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E&feature=player_embedded

படம் இதோ
4:09 PM - By ம.தி.சுதா 9

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

யாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ஒப்பீடு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

இலங்கையின் இரு வேறு அந்தங்களில் காணப்படும் பகுதியாக இருந்தாலும் இரு கண்டங்களை அடைவது போன்ற மன நிலைப்பாட்டைக் கொடுத்திருந்த யாழ் கொழுப்பு பிரயாணமானது சுமூக நிலைக்கு வந்ததன் பிற்பாடு பல்வேறு வகையான போக்குவரத்து மார்க்கங்கள் வந்த பின்னரும் சராசரி மக்களின் மார்க்கமாக இருப்பவை ஏசி பொருத்திய சொகுசு பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஹையெஸ் வாகனம் என்பனவாகும்.

இதில் குறிப்பிட்ட மூன்றிலும் பயணித்தவன் என்ற ரீதியில்  பொதுவான ஒப்பீட்டை வரைகிறேன் (இங்கு குறிப்பிடப்படும் பெரும்பாலான ஒப்பீடுகள் வடமராட்சி கொழும்புக்கானது).
செலவு குறைந்த சிக்கனப் பயணத்திற்கு நாங்க பாவிக்கும் வழிமுறை ஒன்றிருக்கிறது பதிவின் இறுதியில் படியுங்கள்.

சொகுசுப் பேருந்து
சராசரியாக 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபாய் வரை அறவிடப்படும் இச்சேவையில் கிடைக்கும் பெரிய அனுகூலம் அலுவலக நாள் அன்று காலை கொழும்பு போய்ச் சேர்ந்தாலும் ஏதோ படுக்கையில் இருந்து எழுந்து போகும் மனநிலையே இருக்கும்.
ஆனால் பலருக்கு இருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட அரை நாட்களை தின்று விடும் என்பதேயாகும். யாழ்ப்பாணம் பட்டணப்பகுதியில் இருந்து இரவு 7.30 ற்கு வெளிக்கிடுபவருக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லையானாலும் வடமராட்சி போன்ற இடங்களில் இருந்து 5 அல்லது 5.30 ற்கு வெளிக்கிடுபவர் நிலை தான் கவலைக்கிடமானதாகும். ஆனால் முடிவிடத்துடன் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காலை சரியான நேரத்திற்கு நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்திருப்பீர்கள்.
அனால் இதிலும் CTB (SLTB) பேருந்துகளிலும் இருக்கும் உணவுப்பிரச்சனை ஒன்றிருக்கிறது. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் எந்தக்கடையில் சரியான சலுகையும் உபசரிப்பும் கிடைக்கிறதோ அங்கேயே பேருந்துகள் நிறுத்தப்படும்.

நொச்சிகாமத்தில் உள்ள ஒரு கடையில் நின்றால் ஓட்டுனரின் முன்பக்கக் கண்ணாடியைக் கூட துடைத்து விடுவார்கள். அதே போல இன்னொரு இடத்தில் (பெயர் குறிப்பிடவில்லை) உள்ள முஸ்லீம் கடை ஒன்றில் நிறுத்தும் பேருந்துகளுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வந்தால் (வேக கட்டுப்பாட்டை மீறல் தொடர்பான) அவர்களே சுமூகமாககி வைப்பார்கள்.

CTB (SLTB) பேருந்து
இங்கே குறிப்பிடப்படுவது சாதாரண பேருந்து பற்றியதாகும். ஆனால் உள்ளுரில் ஓடும் சாதாரண பேருந்துகள் ஓடப்படுவதில்லை எல்லா இருக்கைகளும் தலை சாய்கக் கூடியவையே (இருக்கைகள் நகர்த்த முடியாது) அத்துடன் தொலைக்காட்சியும் இருக்கிறது. 675 ரூபா வுடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் பயணமானது காலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும் அதே போல காலை 5.30 ற்கு ஆரம்பிக்கும் பயணமும் மாலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும்.
இரு இருக்கைகள் உள்ள பக்கம் உங்களால் முற்பதிவு செய்ய முடிந்தால் பெரிய உடல் அசதியிருக்கப் போவதில்லை.
இங்குள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை 3.30 ற்கு கொழும்பு வீதிகளில் ஒரு பெண்ணால் நிற்க முடியாது என்பதேயாகும். உங்களுக்கான வாடிக்கையான ஒரு ஆட்டோக்காரர் இருப்பாரானால் எந்த சிக்கலுமில்லை.
சிலதடவை நான் இரவு கொழும்பு போய் எனது வேலையை முடித்துக் கொண்டு காலை பேருந்தில் திரும்பியிருக்கிறேன் (24 மணி நேரத்திற்குள்).

ஹையெஸ் வாகனம்
சராசரியாக 1200  ரூபாய் அறவீட்டுடன் ஆரம்பிக்கும் இப்பயணத்தில் உள்ள மிகப் பெரும் சாதகமான விடயம் என்னவென்றால் வீட்டு வாசலில் ஏற்றப்பட்டு நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கப்படுவோம். இதைப் போல பாதுகாப்பான பயணம் எதிலும் கிடைப்பதில்லை. ஆனால் மற்றையதில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்புவதற்கு கிடைக்கும் சந்தர்ப்ப விகிதம் இதில் மிக மிகக் குறைவு.
அத்துடன் என் போல சற்று கால் நீளமானவருக்கு ஏதுவான இருக்கை கிடைக்காவிடில் விடிய இறங்கும் போது தேநீர் குடிப்பதற்கு இரண்டு சிரட்டைகள் கையில் இருக்கும்.
ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனை உள்ளவருக்கு சிறந்ததாகும் (super luxary சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது)
அதே போல நல்ல கடைகளில் சாப்பிடலாம்.

இதை விட தனியார் அரைச் சொகுசு பேருந்துகளும் போகின்றன அவை பற்றி நான் விபரித்துத் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.

சரி நாம் பாவிக்கும் சிக்கன வழி இது தான். தயவு செய்து பேருந்து முதலாளியிடம் போட்டுக் கொடுத்திட வேண்டாம். பிற்பகல் 5 மணிக்கு வவுனியா பஸ் எடுத்திடவேண்டும். அங்கே 9 அல்லது 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்து சொகுசுப் பேருந்துகள் வரும். அதற்கு முன்னர் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு 10 ரூபாயை வவுனியா பஸ்நிலைய கழிப்பறைக்கு கொடுத்து மதியப் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நின்றால் பேருந்துகள் வரும். நடத்துனரிடம் சென்று “அண்ணே ஏதாவது சீட் இருக்கா“ என்று கேட்டால் அவர் பதிலளிப்பார் இருந்தால் 500 அல்லது 600 ஐ அவரிடம் கொடுத்து விட்டு அலுப்பற்ற சந்தோசப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். 400 கொடுத்து பயணிக்கும் என் நண்பர் ஒருவரும் இருக்கிறாரென்றால் பாருங்களேன். இப்ப சொல்லுங்கள் நாம் பழம் தின்று கொட்டை போட்டவரா இல்லையா?

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:13 PM - By ம.தி.சுதா 4

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்

முற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.

வணக்கம் சகோதரம்
சேமம் எப்படி?
தங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய வேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...

முதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.
இங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.
ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?
இதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.
உதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா?

இலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா?
உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...

தயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.

இதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


வியாழன், 11 ஜூலை, 2013

பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக சாதனைகள்

 வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


உலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.
தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில்  பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.
இந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின் மூலையில் இருந்து கொண்டு ஒரு தனிமனிதன் இந்தளவு வளர்ச்சி கண்டு இவ்வளவு சாதித்திருப்பது என்பது வியக்க வேண்டிய விடயமொன்றாகும். பணம் எதுவும் செய்யும் என்ற ஒரு வாக்கியத்தால் மறுவாதங்களை பிரயோகித்தாலும் உலகில் எவருமே எட்ட முடியாத ஒரு எல்லையைத் தான் அவர் எட்டியிருக்கிறார்.
இவருக்கு உலகமெங்கிலும் 114 மையங்களில் 1200 சத்யசாய் அமைப்புக்கள் உள்ளன. அவரது பக்தர்கள் 100 கோடி பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்புக் கூறுகின்றது.
அவருடைய நிறுவனங்கள் உலகமெங்கிலும் 136 நாடுகளில் சமூகசேவையாற்றுகின்றது. அதன் ஒரு பகுதி அமைப்பான விழுமிய சமூக அமைப்பானது ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தது.
விழுமிய கல்வி அமைப்பானது பல மாணவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. அதே போல விழுமிய மருத்துவ நிறுவனம் பல இலவச வைத்திய முகாம்களை அமைத்து உலகின் பல்வேறு இடங்களிலும் இலவச மருத்துவ உதவியை அளித்து வருகிறது. அத்துடன் புட்டர்பத்தியிலும் பெங்களுரிலும் மிகப் பெரும் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ வசதியளிக்கப்படுகிறது.
இவரது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுபவற்றில் பிரதானமானது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்காரர் ஆட்சியிலிருந்தே ஆந்திராவில் ஆனந்பூர் மற்றும் கோதாவாரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வறட்சியில் காணப்பட்டது. இப்பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பல் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவ்வளவு இடத்திற்கும் குடிநீர் கிடைக்கச் செய்து வழி செய்தார்.
சென்னையில் இருந்த குடி நீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆந்திர அரசுடன் இணைந்து இரு அரசும் முயற்சித்த தெலுங்கு கங்கை நீர்த்திட்டத்தை சுமார் 200 கோடி செலவழித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
இவை இப்படியிருக்கையில் பகுத்தறிவு பேசியும் ஆன்மீகவாதிகளை கீழ்த்தரப்படுத்தியும் அரசியல் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கூவம் நதியை துப்பரவு செய்து தரும்படி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இவர் மரணம் அடைந்த பொழுது உலகமெங்கிலும் இருந்து 4 லட்சம் பக்தர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவரது இறுதி நேரம் உறுதியாகிவிட்ட நிலையில் 6000 போலிஸ்காரர்கள் புட்டர்பத்தியில் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆந்திரா அரசு 4 நாட்கள் துக்கதினமாக அறிவித்து அனுஸ்டித்து அவரை கௌரவித்தது.
எல்லாம் தெரிந்தவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லை என சில பகுத்தறிவு பேசும் அரைகுறை அறிவாளிகள் கூறிக் கொண்டாலும் சித்தர்களைத் தவிர சமூக மாயைக்குள் வாழ்ந்த எந்த மனிதனும் மரணச் சக்கரத்தைக் குழப்பி வாழவில்லை என்பது அறிவுறுத்தியும் எடுபடப் போவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி வாழ்பவர்கள் தம்மை ஒரு குழுவிற்குள் வேறுபடுத்திக்காட்டவும் தம் நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தவுமே பகுத்தறிவு பேசுகிறார்கள்.
ஒரு தனிமனிதனால் 100 கோடி பேர் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதைப் போல சாதனை இந்த பாதக உலகத்தில் வேறெதுவாக இருக்க முடியும். அப்படி நம்பி வாழ்பவரை கீழ்த்தரப்படுத்துவதால் பாவிகள் உலகத்தை சிருஸ்டிக்கும் நீங்களே பாவிகளாக மாறிக் கொள்கிறீர்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

7:53 AM - By ம.தி.சுதா 6

வெள்ளி, 28 ஜூன், 2013

என் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKKO PORIYAL TRAILER)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு- இக்குறும்படமானது எனக்குள் இருந்த குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக உருவாக்கப்படுவதே தவிர இது எனது தொழில் முறை ரீதியான முயற்சியல்ல என்பதை கூற விரும்புகின்றேன். இதற்குப் பிறகும் எனது படைப்புக்கள் வருமா என்பது என் தொழில் தான் தீர்மானிக்கும்.


எப்போதுமே முதல் முயற்சிகள எல்லோருக்கும் வெற்றியளிப்பதில்லை ஆனால் அம் முயற்சி மீதிருக்கும் தீவிரம் அதை கைவிடாமல் வைத்திருந்தால் என்றோ ஒரு நாள் ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் அவ் இலக்கை அடைய உதவும் அந்த வகையில் எனக்குள் இருந்த ஆர்வத்திற்கு எனது மைத்துனர் ரஜிகரன் கொடுத்த உதவி தான் இப்படைப்பு.

படைப்பு பற்றிய ஒரு சிறு விபரம்
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைத்துக் கொள்ளும் நான் இம்முறை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.
இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். 

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.
படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் அளவில் தான் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனம் சற்றும் கூட சலிக்காமல் கமராவுடன் ஒத்துழைத்த செல்லா அண்ணா கணணியுடன் போராடிய செல்வம் அண்ணா நேர காலம் பாராமல் ஓடி வந்து ஒத்துழைத்த ஜெயதீபன், செல்வம் அண்ணா, ஏரம்பு ஐயா, ஆசிரியை சுதேசினி போன்றோர் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.
என்ன படைப்பு எப்படியானது என்று கூட அறியாமல் ”மதிசுதாவா செய்தவன் அப்படியென்றால் சரி” என்று சம்மதம் சொல்லி இசையமைத்து தந்த அற்புதன் அண்ணா.
பலவகையான தொடர்புகளுக்கு உதவிய வேல் முருகன்.
அதுமட்டுமல்லாமல் நேர காலம் பாராமல் என்ன வடிவத்தில் கேட்டாலும் மாற்றி மாற்றி வடிவமைத்துத் தந்த பதிவர் மதுரன் மற்றும் ஆலோசனைகள் தந்த அண்ணர் மௌனரூபன் ஆகியோருடன் சகல விதத்திலும் ஒத்துழைப்புத் தந்த செல்லா வீடியோ அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


என் 200 வது பதிவு பற்றியது

வன்னியில் இருந்து மீளும் போதே (நலன்புரி முகாமில் இருக்கும் போது) வலைத்தளம் ஒன்று அமைத்து எழுத வேண்டும் என்ற ஒரு லட்சியத்தோடு பொழுது போக்காக எழுத ஆரம்பித்த இத்தளத்தில் நான் பெற்ற வெகுமதிகள் நான் எதிர் பார்க்காதவையே. அதன் பின்னர் அடைந்த வேலைப்பழுக்கள் எனது பதிவிடுதலுக்கான நேரத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் 3 வருடத்தில் 200 வது பதிவைத் தொடுகிறேன்.
ஆனால் இத்தனைக்குள்ளும் 467,000 என்ற பார்வைகளின் எண்ணிக்கையானது ஒரு பதிவுக்கான சரசரி பார்வைகள் 2300 என்பதைக் கொடுத்துள்ளது அந்த வகையில் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ணிக் கொள்கிறேன்.
ஆரம்ப காலத்தில் இருந்து என் பதிவுலக வளர்ச்சிக்கு உதவியவர்களில் ஒருவரான ஜனா அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டவை இந்த தொடுப்பில் உள்ளது.

இந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா

 நன்றிச் செதுக்கலுடன் 

அன்புச் சகோதரன் 

ம.தி.சுதா


வியாழன், 20 ஜூன், 2013

2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

கடந்த 15.6.2013 அன்று வீரகேசரியில் வெளியாகிய எனது ஆக்கம்.....


வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குறும்படப் போட்டி 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

தொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஏதுவாக அத்துறையை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 31.5.2013 அன்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வடமாகாணத்திற்குற்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
முதற்கட்டத் தெரிவுப் போட்கள் வவுனியாவில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் நடுவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.

அப்படங்கள் தொடர்பான ஒரு சுருக்கப் பார்வை இதோ….
1. பாடங்கள்
வாழ்க்கையில் தலை முறை கடக்கவேண்டிய சில பாடங்களை படங்களாகக் கொண்டிருந்த ஒரு குறும்படமாக இருந்தாலும் ஆவணப்படம் ஒன்றின் சாயலை பிரதிபலித்ததால் மற்ற குறும்படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகத் தோற்றமளித்தது.

2. சலனங்கள்
முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை நிலையைத் திசை திருப்ப வைக்கும் கதைச் சுருக்கத்தைக் கொண்டு அமைந்திருந்தது. அத்தனை காட்சிகளும் இரவில் படமாக்கப்பட்டது இயக்குனரின் தற் துணிவைக் காட்டியிருந்தாலும் பல இடங்களில் பாத்திரங்களது முகபாவனை இருளால் மறைக்கப்படடிருந்தது.

3. அப்பு
வன்னியின் முழங்காவிலில் இருந்து தேர்வாகியிருந்த இக்குறும்படமானது ஈழத்தின் முக்கிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படமானது முதுமையின் இடர்பாடுகளைக் கொண்ட கதைக்கருவையும் கை தேர்ந்த பாத்திரத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் பிறழ்வடையாத நாடகச் சாயலானது குறும்படம் என்ற எல்லைக்குள் உள் இழுக்கத் தவறி விட்டது.

4. தண்ணீர்
5 ரூபாய் தபால் முத்திரையில் எழுதிவிடக் கூடிய ஒரு அழுத்தமான கதையை மட்டும் கொண்டு காட்சிகளையும், யதார்த்தமான பாத்திரம் மற்றும் உணர்வைப் பிரதிபலிக்கும் இசை இவை மட்டும் கொண்டு தத்ரூபமாக வார்த்தெடுக்கப்பட்ட படமாகும்.

5. வேகம்
இளமையின் வேகம் எந்தளவு பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை உணர வைக்கும் குறும்படமாகும். இதில் கதை மற்றும் பாத்திரங்களின் வேகத்தை விட ஒளிப்பதிவாளரின் வேகம் தான் அதிகம் ரசிக்க வைத்தது.

6. வல்லூறு
போதை தரும் உறவுப் பிரிகையும் சிறுவர்களிடையேயான உணர்வுர்ச் சேர்கையையும் தத்ரூபமாக கூறிய படம். இக்குறும்படத்தின் வெற்றிக்கு இயற்கைச் சூழலும் அத்துடன் ஒளிப்பதிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இயற்கை ஒலிகளும் சாதகமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகம் சற்று ரசனையையும் தாமதப்படுத்தியிருந்தது.

7. தோள் கொடு
நியமாகவே வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறணாளியைக் கொண்டு அவன் மனநிலையையும் மனித நேயத்தையும் பொறுப்பற்ற மனிதருக்கு உணர்த்தும்படமாகும். சாதாரண கமரா மற்றும் ஒளித்தொகுப்பு தொழில்நுட்பத்துடன் உருவான நல்ல படங்களில் ஒன்றாகும்.

8. சாம்பல்
நாம் பயன்படுத்தும் பெறுமதி குறைந்த ஒரு அற்ப பொருளுக்குப் பின்னும் எத்தனை ஏழைகளின் உதிரம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கூறியுள்ள படம் சாம்பலாகும். சிறந்த ஒளிப்பதிவோடும் இசையோடும் மட்டும் பயணித்திருக்கும் இப்படத்திற்கு வசனங்களும் இணைந்திருந்தால் உணர்வுகள் மேலோங்கியிருக்கும்.

9. மரண அறிவித்தல்
பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க எண்ணி புலம்பெயர் தேசமனுப்பும் பெற்றோரின் வாழ்வு எவ்வளவு இருள்மயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த படமாகும். நிறப்பிரிகையோ காட்சி மாற்றமோ சரியாக அமையாத flash back காட்சிகள் இப்படம் தொடர்பான சிறு குழப்பத்தை ஏற்றுடுத்தியது.

10. விட்டில்கள்
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய தலைமுறையின் வாழ்வை எப்படி சீரழிக்கிறது என்பதை மட்டக்களப்பு கொலைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கூறும் படமாகும். சிறந்த படத் தொகுப்பும் ஒளி நிறக்கலவையும் படத்தின் தரத்தை மற்றைய படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் பின்னணி குரல் முயற்சியிலும் மற்றைய படங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. கதையின் கனதியற்ற தன்மையும் நாயகியின் நடிப்போடு ஒட்டாத தன்மையும் படத்திற்கு மறையாக அமைந்திருந்தது.

11. நோ
பல குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும் பெண்களின் வேதனையை கமராவுக்குள் கொண்டு வந்த குறும்படமாகும். ஆனால் அளவுக்கதிகமான வன்முறை சார்ந்த ஒரே காட்சிகள் மீள மீள வந்து போனது உறுத்தலாகிப் போனது.

12. எழுத்துப்பிழை
ஒரு விலைமாதுவுக்கும் அவள் குழந்தைக்குமிடையேயான பாசப் பிணைப்பையும் உணர்வுகளையும் உணர்வு பூர்வாமாகக் கூறிய குறும்படமாகும். கதையில் வந்து போன அத்தனை பாத்திரங்களும் கதையோடு ஒன்றித்துப் போனது படத்தின் சிறப்பை மென்மேலும் அதிகரித்திருந்தது.

13. பாதினியம்
இன்றைய சூழலில் சமூகத்தில் இடம்பெறும் இளைஞர் தொடர்பான பிரச்சனைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமாகும். ஆனால் படத்தில் கவனிக்கத் தவறிய எழுத்துப்பிழைகளும் முன்னுக்குப் பின் முரணான திரைக்கதையும் படத்தின் கனதியைக் குறைத்திருந்தது.

14. ஏ கோல் (a call)
இக்குறும்படப் போட்டியில் ஒரு முற்போக்கான திரைக்கதையுடன் களமிறங்கிய ஒரே ஒரு படம் இது தான். 12பி திரைப்படத்தின் அடிப்படைக் கதை அமைப்பைக் கருவாகக் கொண்டு உருவான வித்தியாசமான படமாகும். ஆனால் மொழி ஆளுகை இழந்த தலைப்பு உறுத்தலாக இருந்ததுடன் இறுதிக் காட்சி ஏதோ ஒரு ஹெலிவுட் படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது.

15. விழித்திடு
இன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ள ஒரு படமாக அமைந்திருந்தது. ஆனால் எதற்கெதிராக ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறதோ அதையே அளவுக்கதிகமாகக் காட்டக் கூடாது கோட்பாட்டை கவனிக்கத் தவறியது படத்தின் மீதான பார்வையை வேறு திசைகளுக்கு மாற்றியிருந்தது.

சிறப்பாக திரையிடப்பட்டிருந்த குறும்படங்களானது ஈழத்தின் குறும்பட வளர்ச்சியை தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியிருந்தது. சில படங்கள் குறும்படங்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படாதவை என்ற ஒரு விமர்சன நோக்கெழுந்தாலும் இவை ஆரம்ப கட்ட வளர்ச்சிப்பாதை என்பதால் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் பெரும் மாற்றத்துடனான குறும்பட வளர்ச்சிப் போக்கு உருவாகும் என்பது அனைவரதும் திடமான நம்பிக்கையாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா

10:22 AM - By ம.தி.சுதா 3

வியாழன், 13 ஜூன், 2013

மலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில் நிலைத்து விடுகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம் எனக்கு கிடைத்த இப்பாடலானது தொண்டைக் குழியில் தங்கிஇடையிடையே வாய்வழியே எட்டிப் பார்க்கத் தவறவில்லை.
அப்பாடலுக்கான இசையை துஸ்யந்தன் செல்வராசா என்ற மலையகத்தைச் சேர்ந்தவர் இசையமைத்திருக்கிறார்.
ரஸ்லான் பாடலை பாடியிருக்க,
வயலின் சுறங்க ராஜபக்ச,
வீணை சரவண சுந்தரி முருகன் (கொழும்பு விஞ்ஞான பீட மாணவி)
பியனோ வி.செந்தூரன்
போன்றவரின் கூட்டணியுடன் கிட்டாரை துஸ்யந்தனே மீட்டியிருக்கிறார்.
இவர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவனாக இருக்கிறார்.
.இதில் ரஸ்லான் சக்தி சுப்பர் ஸ்டார்களில் ஒருவராவார்.

மிகவும் நேர்த்தியான இசைக் கோப்புடன் உருவாகியுள்ள இப்பாடலானது மலையக மண்ணின் ஒரு தடமாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.

இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்காக இசையமைத்த தமிழ் வாழ்த்துப்பாடல் கீழே இணைத்துள்ளேன்.. அப்படியே லயிக்க வைக்கும் ஸ்வரங்கள் இவர் விரல்களுக்கும் ஒளிந்திருப்பதை உணர அதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:37 PM - By ம.தி.சுதா 3

புதன், 12 ஜூன், 2013

என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற் குறிப்பு- இச்சம்பவம் ஆனது கடந்த சில நாட்களின் முன்னர் இடம்பெற்ற இயற்கைக் குழப்பத்தின் போது நடந்தது. அதன் வீடியோவை உடனே ஏற்ற முடிந்தாலும் பதிவெழுத நேரமின்மையால் காலதாமதமாகிவிட்டது.

யாழில் அமைந்துள்ள முக்கிய பெருந்தெருக்களில் யாழ் பருத்தித்துறை வீதிமுக்கியமானதும் அதிக வருவாய் தரும் விதியுமாகும் (பிரயாணிகள் மூலம்)
இதன் சீர் திருத்தப்பணிகள் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற போதும் இன்னும் முடிவதாகத் தெரியவில்லை.

இதே பாணியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த யாழ் பலாலி வீதியானது ஜனாதிபதியின் வருகையை அடுத்து ஒரே இரவில் முழுமையடையச் செய்யப்பட்டது பலர் அறிந்ததே. ஆனால் இதே வீதியில் பல குன்றும் குழிகளும் மாதக்கணக்காக இருப்பது மட்டுமல்லாமல் வீதி புனரமைப்பாளரால் பல மாதக்கணக்காக பாரிய குழிகள் தோண்டி விடப்பட்டுள்ளது.

இதில் பலவற்றுக்கு எச்சரிக்கை சமிஞ்ஞை கூட இல்லாத நிலையில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக காணப்படுவது வல்லைப் பாலத்திற்கு இருமருங்கிலும் இருக்கும் பாரிய பள்ளமாகும். இதன் ஒரு பகுதி சாதாரண பள்ளமாக இருந்தாலும் மறுபகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த 4 மாதங்களாக இருக்கும் இக் குழி ஏன் இருக்கின்றது என யாருக்குமே தெரியாது.

அதுமட்டுமல்லாமல் இதனூடாக நிச்சயம் யாழின் அனைத்து உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளும் ஏசி வாகனத்தில் ஊர்ந்து கடந்து சென்ற அனுபவம் இருக்கும் என்பது மிக மிக உறுதியான விடயமாகும்.

மேலும் இங்கு கடந்த சில தினங்களாக தலைகீழாக ஒரு எச்சரிக்கை பதாதை தொங்க விடப்பட்டிருந்தது ஆனால் இப்பதாதையானது யாழ் நோக்கிச் செல்வோருக்கு மட்டுமே தெரியும் யாழிலிருந்து பருத்துறை நோக்கி வருபவருக்கு இப்படி ஒரு கிடங்கிருப்பது தெரியாது. அதுமட்டுமல்லாமல் இப்போது அந்த பதாதையும் அங்கே இல்லை.
இப்போது பலத்த காற்று வீச ஆரம்பித்துள்ள நேரத்தில் சாதாரணமாகவே அவ் வெளியில் பல உந்துருளிப் பிரயாணிகள் கடலுக்குள் விழுந்த சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளது.
விபத்துக்கான காரணங்களை எங்கள் வசம் வைத்துக் கொண்டு விபத்து சம்பந்தமான போதனைகளைப் போதித்து என்ன ஆகப் போகிறது.
சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்களா?

சரி தலைப்பிற்கு வருவோம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் அப்பாலத்தில் நடந்த சம்பவம் இது.
நான் உடுப்பிட்டியில் இருந்து யாழ்  நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் அக்கிடங்கை கடந்து ஏறுகையில் எதிரே ஒரு ஆட்டோவும் பிக்அப் ரக வாகனமும் வேகமாக வந்து கொண்டிருந்தன.
சடுதியாகக் கிடங்கைக் கண்ட ஆட்டோக்காரர் பிறேக்கை (வேக நிறுத்தியை) பிடித்தார் அவர் பின்னால் வந்த பிக்கப் வேகமாக வந்ததால் அதன் ஓட்டுனரும் பிறேக்கைப் பிடித்தார். இரும்புப் பாலமாகையால் பிடிமானமில்லாத ரயர்கள் சறுக்க பிக்கப் திரும்பிக் குறுக்காக நின்றது.

என்னுடைய உந்துருளியாகையால் என்னால் பிறேக் பிடிக்க முடியாது பிடித்தால் சறுக்கி விழுத்தி விடும் அளவுக்கு மழை.
நான் சுதாகரிப்பதற்கு முன்னரே பிக் அப்பிற்கும் பாலத்திற்கும் இடைப்பட்டிருந்த 3 அடி (கிட்டத்தட்ட) இடைவெளிக்குள்ளால் புகுந்த உந்துருளி மறுபக்கம் கடந்து விட்டது. மறு நாள் போய் தான் இந்த வீடியோவை எடுத்ததுடன் மேலே குறிப்பிட்டிருந்த ஆக்கத்தையும் (சுய புராணத்திற்கு மேல் உள்ளது) ஒரு யாழ்ப்பாணத்து தினசரிப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை கண்டு கொண்டதாகத் தெரியாததால் பத்திரிகைக்கும் எனக்கும் உள்ள விதிமுறையை மீறி முதலே பதிவிட்டுக் கொள்கிறேன்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
3:14 PM - By ம.தி.சுதா 5

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top