வெள்ளி, 15 நவம்பர், 2013

வன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணைக்கப்பட்டுள்ளது)

2:22 PM - By ம.தி.சுதா 4

எமக்குத் தெரியாமலே எமக்கருகில் ஆயிரம் விடயங்கள் பரந்து கிடக்கலாம். அதை அறிந்தவர் கூறும் போது பலருக்கு அதிசயமாக இருக்கும் சிலருக்கு கட்டுக்கதையாக இருக்கும் வாருங்கள் இக் கிரமத்தை நோக்குவோம்.


அமைவிடம்
யாழ் - கண்டி வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டி சுட்டான் போகும் பாதை வழியே சென்றால் 4 கிலோமீற்றரில் ஒலுமடுச் சந்தி வருகிறது. இதிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் விமான ஓடுபாதைக்கான காட்டு வழிப்பாதை வழியே எட்டுக் கிலோமீற்றர் புலுமலுச்சிநாள குளம் மற்றும் அம்பகாமம் போன்ற காட்டுக் கிராமங்களைக் கடந்து சென்றால் நாம் அடையும் இடம் தான் மம்மில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிசயக் கிராமமாகும். போரின் முன்னர் 155 குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் தற்போது 115 குடும்பங்கள் வாழ்கிறது.
சிறப்பு
இவ்வூரின் சிறப்புக்குக் காரணம் அங்கிருக்கும் பிள்ளையார் ஆலயமாகும். அப்பிள்ளையாரின் பெயர் தான் மம்மில் என்பதாகும். இவ் ஆலய வாசலால் தான் பழைய யாழ் - கண்டி வீதி அமைந்திருந்தமை வரலாற்று உண்மையாகும். கண்டியின் ராஜசிங்கன் மற்றும் சங்கிலியனுக்கான தொடர்பாடல் பாதையாக இருந்தது இதன் வாசலாகும். இப்பாதையானது காட்டுவழியே கறிப்பட்ட முறிப்பை (கரி பட்ட முறிப்பு - கரி என்பது யானையாகும்) சென்றடைந்து கனகராயன் குளத்தைச் சென்றடைந்து இப்போதைய கண்டி வீதியுடன் இணைகிறது. இப்போது புதிய கண்டி வீதியில் செல்வோர் முறுகண்டிப் பிள்ளையாரை (முறிவண்டிப்பிள்ளையார்) வணங்கிச் செல்வது போல் பண்டைய காலத்தில் மம்மிலாரை வணங்கியே செல்வார்கள்.
ஊரின் சிறப்பு
இவ்வூர் மக்கள் வாழ்ந்த வாழக்கை முறையானது ஒரு சமூகத்துக்கு மிக மிக எடுத்துக்காட்டானது. ஆனால் நாகரீக உட்புகுத்தலாலும் வழிகாட்டியாக இருந்த பெரியவர் மறைந்ததன் காரணமாகவும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வித்தியாசமானது. இந்த ஊருக்கென்று ஒரு வைத்தியசாலை இதுவரை இருந்ததில்லை. இளைய சமுதாயம் நோய்கள் சார்ந்த விடயங்களுக்காக வைத்தியசாலை சென்றாலும் வயோதிபர்கள் யாருமே வைத்தியசாலை சென்றதில்லை. ஒரு வயோதிபர் குறிப்பிடும் போது சொன்னார் ”தடிமன் காய்ச்சலைத் தவிர வேறு வருத்தம் வந்ததாக தனக்கு நினைவில்லையாம்“ என்றார்.
இவர்களது உணவுமுறை இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். 3 நேரமும் சோறு தான் சாப்பிட்டார்கள். விசேட நாட்களில் எம் வீடுகளில் விதம் விதமான பலகாரம் சுடுவது போலத் தான் விசேட நாட்களில் அங்கே பிட்டு, தோசை போன்ற உணவுகள் சமைக்கப்படும்.
பொருட்களை பண்டமாற்று முறையிலேயே மாற்றிக் கொள்வார்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மிளகாயை பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுத்தால் அவர் உங்களுக்கு தன் தோட்டத்தில் இருந்து வெங்காயம் கொடுப்பார்.
அதே போல வயல் வேலைகளுக்கு முன்னரே திட்டமிட்டபடி ஒவ்வொருவரது வயலுக்கும் மற்றவர் மாறி மாறி போய் உதவுவார்கள். அதனால் கூலியாளோ பணமோ அவர்களில் தாக்கம் செலுத்துவதில்லை.
அதை விட முக்கியமாக இன்னொரு பழக்கம் இவர்களில் இருக்கிறது. ஒரு வீட்டில் மரண நிகழ்வு நடந்து விட்டால் ஒரு மாட்டு வண்டிலில் சென்று ஒவ்வொரு வீடாக உணவுப் பொருட்களை சேகரிப்பார்கள் சேர்த்த பொருட்களை அவ்வீட்டுக்கு கொண்டு சென்று ஒரு மாதம் வரை  மாறி மாறி நின்று அவர்களே சமைத்துக் கொடுப்பார்கள்.
ஒரே ஒரு 5 ம் தரம் வரை அமைந்த பாடசாலை இருந்தாலும் உயர்தரத்திற்காக 14 கிலோமீற்றர் தள்ளியிருக்கும் மாங்குளம் வரை செல்வார்கள். ஆனால் இங்கிருந்தும் 4 மாணவருக்கு மேல் பல்கலைக்கழகம் சென்றமை ஒரு சிறப்பான விடயமாகும்.
இந்தளவு கட்டுக் கோப்பும் எந்த மன்னனால் எப்படி உருவானது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக் கூடும்.
காரணம் யார்?
அக்கிராமத்தில் அமைந்திருக்கும் மம்மில் பிள்ளையார் என்ற நாயகனே இத்தனைக்கும் காரணம்.
சாதாரணமாக நாம் கல் தடுக்கினால் கூட அம்மா என்று தான் கத்துவோம் ஆனால் அங்கிருப்பவர்கள் கல் தடக்கினாலும் மம்மிலாரே என்று தான் சொல்வார்கள் அந்மளவுக்கு அவர் மீது நம்பிக்கை. இவ்வாலயத்தில் பெரும் திருவழாவாக சித்திராப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்ததாக ஆவணிச் சதுர்த்தி கொண்டாடப்படும்.
இன்றும் கூட பாம்பு கடித்து நுரை வருபவரைக் கூட வைத்தியசாலை கொண்டு செல்வதில்லை. ஆலயத்தில் கொண்டு வந்து வீபூதி போட்ட விட்டு ஆளை அங்கேயே வைத்திருப்பார்கள். அவர் எழுந்ததும் ஒரு பொங்கல் போட்டு விட்டுச் செல்ல வேண்டியது தான்.
மாங்குளம் சூழலில் இருக்கும் ராணுவத்தளபதியிலிருந்து ஒவ்வொரு ராணுவ வீரனுக்குமே அவர் மேல் மிகுந்த பயம்.
நான் 2010 ஆண்டளவிலேயே செல்ல ஆரம்பித்து விட்டேன். 8 கிலோமீற்றருக்கு நடுக்காட்டுக்குளால் செல்லும் அப்பயணத்தில் ராணுவம் மறித்தால் மம்மில் போகிறேன் என்று சொன்னால் போதும் ஒரு பரிசோதனை கூட இருக்காது. இத்தனைக்கும் என்ன காரணம். மக்கள் மீள குடியமர்த்தப்படுவதற்கு முன்னர் ராணுவ வீரர்கள் சிலர் ராணுவ சீருடையுடன் கொயில் மரத்தில் பூ பிடுங்கச் சென்றிருக்கிறார்கள். கோயிலிலிருந்து 9 பேருக்கு பாம்பு கடித்ததாம். ஆனால் யாருக்குமே எதுவுமே நடக்கவில்லை.
இவ்வூரில் உங்களுக்க களவு ஏதாவது போய் விட்டால் ஒவ்வொரு வெள்ளியும் மக்கள் கூடும் நேரம் தொலைத்தவர் கோயிலில் சொல்வாராம் “மம்மிலாரிடம் கட்டப் போகிறேன்“ என்பார். இப்படி ஒரு ஊசி தொலைந்தால் கூட ம்மிலாரிடம் முறையிட்டால் களவெடுத்தவருக்கு மரணம் தான் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி களவெடுத்த பலர் திடீரென இறந்தும் இருக்கிறார்கள்.
சிறுத்தைகள் வசித்த பகுதியாகையால் பலர் தனியே சிறுத்தையிடம் மாட்டுப்பட்டிருக்கிறார்கள். அப்போது “மம்மிலாரே காப்பாற்றும்“ என்றால் சரியாம். அப்படி சொல்லி சிறுத்தை மற்றும் குழுவன் மாடு (மதம் பிடித்த யானை போன்றது) போன்றவற்றிடம் இருந்து தப்பியவர்கள் இருக்கிறார்கள்.
1998 ல் நடந்த ஜெயசிக்குறு போரால் இவ்வூரில் இருந்து இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் இடம் பெயர்ந்தார்கள். அந்த உக்கிர யுத்தத்தில் கூட இவ்வூரைச சேர்ந்த 4 பேர் தான் மரணித்திருக்கிறார்கள்.

ஆலயத்தின் புதுமைகள்

இவ் ஆலயமானது பல புதுமைகளைக் கொண்டிருந்தாலும் எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்கின்றேன்.
1. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மகப்பேற்று மருத்துவர்  பவானி அவர்களை பலருக்குத் தெரிந்திருக்கும். இவருடைய குழந்தை ஒன்று நரம்பியல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு 12 வயது வரை பேசவே இல்லை. அக் குழந்தையை அவர் இந்தியா போன்ற அந்நிய நாட்டுக்குக் கொண்டு சென்றும் குணமாகாத நிலையில் சக மருத்துவரான தர்மேந்திரா (முழங்காவில் வைத்தியசாலையில் நீண்டகாலம் வேலை செய்தவர்) அவர்கள் தனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த போது அங்கே சென்று நேர்த்தி வைத்ததன் பின்னர் தான் குழந்தை பிறந்ததாம்.
இவரும் தனது குழந்தையை அங்கே கொண்டு சென்றிருக்கிறார். அங்கே இருக்கும் பூசகர் (பார்ப்பனியம் சார்ந்தவர்கள் அங்கு இல்லை) குழந்தைக்கு விபூதி இட்டு விட்டு “குழந்தை மம்மில் என்று சொல்லு“ என்றிருக்கிறார். பிறந்து 12 வருடம் பேசாத குழந்தை முதல் முதலாக மம்மில் என்ற சொல்லை கூறியதாம்.

2. என் இரு நண்பர்களுக்கு நடந்த கதையிது. இருவரும் வெற்றி பெற்றதால் பெயரை மறைக்க வேண்டிய தேவையில்லை. இன்று 3 பிள்ளைகளுடன் இருக்குமு் வாசுகி மற்றுமு் கலைச் செல்வன் என்பதே அவர்கள் பெயர்களாகும்.
இதில் வாசுகி அக்கா நான் மருத்துவம் படிக்கும் போது என்னோடு தாதியியல் கற்றவர். அதே போல கலைச்செல்வன் அண்ணா நான் பயிற்சியில் நின்ற முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலையில் வேலை செய்தவர். இருவரும் மச்சான் மச்சாள் முறை தான். ஆனால் அவரது விருப்பத்துக்கு வாசுகி அக்கா நீண்ட நாட்களாக சம்மதிக்கவில்லை. வாசுகி அக்காவுக்கு வெளிநாட்டு வரண் ஒன்று தயாராக அவர் வெளிநாடு செ்லதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமானது (முன்னர் கள்ள பாதையால் என்றாலும் வெளிநாடு போய் அங்கே திருமணம் செய்வார்கள்).
கலைச் செல்வன் அண்ணா மனம் தளராமல் மம்மிலுக்கு 6 செவ்வாய் தொடர்ந்து சை்ககிளில் சென்றிருக்கிறார். வாசுகி அக்காவுக்கு பாஸ்போட் அலுவல் எல்லாம் முடிந்து கிளம்புவதற்கான முழு ஆயத்தமும் தயார். (அவர் அப்பா கண்டிப்பானவர்). 7 வது செவ்வயாவ் இவர் போய் வந்த பின்னர் பின்னேரம் இவாவே தானாகச் சென்று கேட்டாராம் என்னை எங்கையாவது கூட்டிக் கொண்டு போங்கள் என்றாராம். இன்றும் அவாவைக் கேட்டால் சொல்லுவா ”சுதா நான் பொய் சொல்லேலா எனக்கே என்ன நடந்தது என்று தெரியாது“ என்பார்.
இன்னும் பல புதுமைகள் இருந்தாலும் பதிவின் நீட்சி கருதி சுருக்கிக் கொள்கிறேன்.
கடந்த வருடம் சித்திரைப் பௌர்ணமி தினத்தன்று இடம்பெற்ற காட்சிகளின் ஒரு சின்னஞ்சிறு தொகுப்பு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதை விட பன்மங்கான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை சுதா!எனக்கும் கொஞ்சம் அந்தப் பக்கம் பரிச்சயம் உண்டு என்றாலும்,இன்று வரை அந்த ஊர்ப் புகழும்,பிள்ளையாரின் திருவிளையாடலும் தெரிந்திருக்கவில்லை.நன்றி,மனதார வேண்டுவது தவிர நம்மால் இப்போது சென்று பார்க்க&வணங்க முடியாது.

நல்லதொரு பகிர்வு.
அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....

தனிமரம் சொன்னது…

புதுமையான தகவல் சுதா! நன்றி பகிர்வுக்கு.

பெயரில்லா சொன்னது…

உப்புடிதான் பாம்பு கடிச்ச ஐயாவ சனம் கொண்டு போய் போட அவர் மோசம் போட்டார். புறவு சங்கரப்பரின்ட‌ மெடிக்ஸ் பொடியள் கோயில் போரவய மருந்து ஏத்தி காப்பாத்தின‌வ. வதனன் டொக்குதர் கிழம மறக்காம சனத்த பாக்கற‌வர். கோயில்வுழா உப்புடி நடக்குறதுல்ல. அமெதியா நடக்கும். நெறய மாறிப்போச்சி.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top