Featured Articles
All Stories
eelam cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
eelam cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2023

உங்கள் இல்லத்திரையில் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு

 ஈழத்தின் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் கைப்பேசியில் படமாக்கப்பட்டு சர்வதேசம் எங்கும் சென்றடைந்ததை அறிந்திருப்பீர்கள்.

16 நாடுகளில் 30 சர்வதேச விருதுகளைப் பெற்றிருந்த இத்திரைப்படமானது திரையரங்க வெளியீடுகளைத் தொடர்ந்து. திரையரங்கல் ஒரு திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுப் பணத்தில் வீட்டில் இருந்து பார்ப்பதற்கு அளிக்கப்படுகின்றது.

பார்க்க விரும்புபவர்கள் இந்த இலக்கத்திற்கு நேரடியாகவோ வட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்ளலாம்.

+94773481379


மேலும் விபரங்கள் இச் சுவர்ப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.


இப்படிவத்தினூடாகவும் விண்ணப்பிக்கலாம்.

https://forms.gle/1itskitqfuPRnacr7


திரைப்படம் பார்த்த மக்களின் உணர்வு பொங்கிய கருத்துக்களில் சிறு தொகுப்புக்களை இந்த தொடுப்பில் சென்று காணலாம்.

Link - https://youtube.com/playlist?list=PLvypgJcFnUlNniMykmgp_ikjJW22DmEUt&si=WAn2NGXf_KTLH8MB





10:04 AM - By ம.தி.சுதா 0

சனி, 26 நவம்பர், 2022

ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” முன்னோட்டம் வெளியீடு

 ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு”

”மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன”





இத்திரைப்படமானது ஈழ யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப்படும் முதலாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை உருவாக்கிய மதிசுதாவால் கடந்த 4 வருடங்களாக ஒவ்வொருவரிடமும் சிறுகச் சிறுகச் சேகரித்த குழுமச் சேர்ப்புப் பணத்தில் இத்திரைப்படம் உருவம் பெற்றிருக்கின்றது. இதில் 203 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பங்காற்றியிருந்தார்கள். இலங்கை அளவில் அதிகளவானவர் இணைந்து தயாரித்தது என்ற பதமானது ஒரு வரலாற்று சாதனையாகும்.


இதுவரை 15 நாடுகளில் 28 சர்வதேச விருதுகளை இத்திரைப்படம் பெற்றிருக்கின்றது. ஈழத்தின் பழம்பெரும் பாடகியான பார்வதி சிவபாதம் அவர்கள் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்ததுடன் 2 நாடுகளில் சிறந்த நடிகைக்கான சர்வதேச விருதையும் பெற்றிருக்கின்றார்.


உலக அளவில் சிவிலியன்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட முதல் பங்கர் திரைப்படம் இதுவாகும். 


சிங்கள மொழித் திரைப்படங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கையில் இத்திரைப்படமானது 3 வரலாற்று சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளது.

  1. ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்

  2. அதிகளவான மக்கள் இணைந்து முதலிட்டுத் தயாரித்த திரைப்படம்.

  3. அதிகளவான விருதைப் பெற்ற கைப்பேசித் திரைப்படம்.




இத்திரைப்படமானது எங்களோடு வாழ்ந்து எங்களுக்காக மாண்டவர்களின் வரலாற்றுக் கதையாகும். இதை உங்களது நண்பர்கள் உறவுகள் அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டுகின்றோம்.


ஈழ சினிமாவின் தேவையை நீங்கள் உணரும் பட்சத்தில், இது போன்ற திரைப்பட முயற்சிகளின் வெற்றிக்காக எம்மோடு தோள் கொடுக்கும்படி அன்போடு வேண்டிக் கொள்கின்றோம். 


”எம் வரலாறை எம் பேனைகளாலும் கமராக்களாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எழுதுவோம்”


இத்திரைப்படத்தை எங்கிருந்தாலும் காண்பதற்குரிய நுழைவுச் சீட்டுக்களையும் முன்பதிவுகளையும் கீழ் வரும் தொடுப்பில் சென்று மேற்கொள்ளுங்கள்.


https://enkada.events/ta/vtk




12:14 PM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 14 டிசம்பர், 2021

”வெந்து தணிந்தது காடு” தலைப்பு விடய சுமூகத் தீர்வு....

 //////// அவர்களது படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ”வெந்து தணிந்தது காடு” என்றும் எனது படம் ”மதிசுதாவின்” வெந்து தணிந்தது காடு என்றும் வரலாம் என்ற உடன்பாடு முன்வைக்கப்பட்டாலும். இப்படம் எம் இனத்தின் கதை என்பதால் எனது பெயருக்குள் அடக்கமாட்டேன் என்ற காரணத்தை முன் வைத்ததுடன் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” என்றே வரும் என்ற முடிவை முன் வைத்தேன்.///////

---------------------------------------



கடந்த ஒரு வாரமாக என் தூக்கத்தைத் தொலைக்க வைத்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமான சுமூகமான தீர்வை எனக்கு கொடுத்துள்ளது.
”சில இடங்களில் பெரிய மனிதர்கள் தம் பெரிய மனங்களை திறந்தே வைத்திருப்பார்கள்”
தலைப்பு விடயத்துக்கு தூக்கம் எல்லாம் ஏன் போக வேண்டும் என சிலர் தமது கணக்கிலும் போலிக் கணக்கிலும் தட்டச்சிட ஆரம்பித்திருப்பார்கள்.
இத்தலைப்புப் பிரச்சனையால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தளத்துக்கும் திரைப்படத்தை விற்க முடியாத நிலை வரும் என்பது தான் என் பிரச்சனையாக இருந்தது என்பதை புரிந்து இதற்காக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தபடி இருந்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. அடிக்கடி என்னோடு தொடர்பில் வந்து பேசியபடி இருந்தவர்களுக்கும் நன்றிகள்.
பிரச்சனை தொடர்பாக ஊடகங்களால் கேட்கப்பட்ட செவ்வி அனைத்தையும் தவிர்த்தேன் (ஏகலைவன் அண்ணாவுடையதைத் தவிர) பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும் நேரம் நான் தவறுதலாக உதிர்க்கும் ஒரு வார்த்தை கூட தேவையற்ற திசைதிருப்பலை ஏற்படுத்தி விடுமோ என்ற காரணமாகவே தவிர்த்தேன். அதைப் புரிந்து கொண்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள்.
தீர்வு -
இப்பேச்சு வார்த்தையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அண்ணாவுக்கும் நாசர் ஐயாவுக்கும், அன்பு அண்ணன் இயக்குனர் கவிதாபாரதி அண்ணனுக்கும் பெரு நன்றிகள். இதற்காக பொது மனிதராக தெரிவு செய்யப்பட்டிருந்த சுரேஷ் காமாட்சி அண்ணாவுக்கு 3 நாள் அவகாசத்தில் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் உறுதியாகவே ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்.
”தமது படத்துக்கு முன்னதாக இப்படம் வர இருப்பதால் அதனால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முதலே வருவதால் படத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. அதன் வெளியீட்டுக்கு தம்மாலான உதவிகளை செய்வேன் எனவும், அவர்களது கதை உலகுக்கு தெரிய வேண்டியது அதற்கு எப்பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு தம்மால் உதவ முடியும்” என்பதையும் தெரிவித்திருக்கின்றார்.
அவர்களது படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ”வெந்து தணிந்தது காடு” என்றும் எனது படம் ”மதிசுதாவின்” வெந்து தணிந்தது காடு என்றும் வரலாம் என்ற உடன்பாடு முன்வைக்கப்பட்டாலும். இப்படம் எம் இனத்தின் கதை என்பதால் எனது பெயருக்குள் அடக்கமாட்டேன் என்ற காரணத்தை முன் வைத்ததுடன் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” என்றே வரும் என்ற முடிவை முன் வைத்தேன்.
பாரதியாருக்குரிய அவ்வரி எனக்குரியதல்ல அது பொதுவானது , ஆனால் என்படத்துக்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி என்ற எனது கோரிக்கைக்கு எந்தவித தாக்கமும் இன்மையால் 7 நாளாக காத்திருந்த இவ்விடயம் முடிவுக்கு வந்திருக்கின்றது.
இதற்காக குரல் கொடுத்த யாரையும் தனித்தனியே பெயர் சொல்லாமைக்கு பொறுத்தருளவும். அதில் ஒருவருடைய பெயரை தவற விட்டாலும் அது தவறு என்பதற்காகவே குறிப்பிடவில்லை.
விரைவில் படம் தொடர்பான அடுத்த பெரு அறிவிப்புடன் சந்திக்கின்றேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
7:25 PM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்...

 

1) எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை

2) மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா
போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் கடந்து செல்வது ஆரோக்கியமாகும்.
ஒரு ஆலமரத்தின் கீழ் முளைக்கத் துடிக்கும் அறுகம் புல்லாக சின்ன சின்ன விடயத்துக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
A) தென்னிந்திய சினிமாவின் ஊடக ஆக்கிரமிப்புக்களால் எம் மக்களிடம் எம் படைப்புக்களை கொண்டு சேர்க்க ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
B ) தயாரிப்பாளர் என்று எவருமே இல்லாத இடத்தில் ஒவ்வொருவரிடமும் சிறுக சிறுக 1000 ஆயிரம் ஆக சேர்த்து, இருக்கும் காசுக்கு ஏற்ப இருக்கும் வளத்தை வைத்து தான் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டியுள்ளது.
C) இந்தக் கனவோடு பயணிக்கும் ஒவ்வொருத்தனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பலதை துறந்து தான் தியாக மனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்.
இது சில உதாரணங்களே, இந் நிலையில் ஒரு உண்மையான கலைஞனாக இன்னொரு படைப்பாளியின் படைப்புக்கும் உழைப்புக்கும் உள்ள உரிமைக்கு சின்ன அங்கீகரத்தைக் கொடுத்திருக்கலாம். தன் மொழியில் உள்ள ஒரு தலைப்பை முதன் முதலாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் ஒரு உரிமை கூட தன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு இல்லையா ?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது திரைப்படத்தலைப்பான "வெந்து தணிந்தது காடு" என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். பலமாதங்களுக்கு முன் திட்டமிட்ட இத்தலைப்பை பட வேலைகளை முடித்த பின் அறிவிப்போம் என்ற நிலைப்பாட்டில் படத்தை கையில் வைத்துக் கொண்டே அறிவித்தோம்.
"மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன" என்ற மூலக் கருவைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் 111 பேரிடம் இருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு ஐ போன் மூலம் உருவாக்கியிருந்தோம்.
இன்றைய நாள் , கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்பட பெயர் அதே பெயரில் வெளியாகியிருக்கின்றது.
1) பாரதியாரின் கவிதை தானே யாரும் அதை வைக்கலாம் என கருத்துப்பட சிலரது எதிர்வாதங்களைக் கண்டேன்
அக்கருத்தை நான் மறுக்கவில்லை ஆனால் அதே தலைப்பை எந்த வகைப் படைப்புக்கு முதல் முதல் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விடயமும் கணக்கில் எடுக்கப்படும். நான் தலைப்பிட முன் தேடிய வகையில் இப் பெயரில் கவிதை நூல் ஒன்று மட்டுமே இருந்தது. திரைப்படம் எதுவும் இருக்கவில்லை.
- ஒரு திரைப்பட தயாரிப்புக் குழுவின் முக்கிய வேலைகளில் ஒன்றாக தலைப்புகளை ஆய்வு செய்தலும் அடங்கும். அவ்வகையில் பல இந்திய ஊடகங்களிலும் வெளியாகியிருந்த எமது திரைப்படத்தின் தலைப்பை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. நிச்சயம் கூகுலிலாவது ஒரு தடவை தேடிப் பார்த்திருப்பார்கள்.
- அவர்களது பணபலம், விளம்பர பலம் , star value என்பவற்றின் மூலம் இச் சிறிய படைப்பு மறைக்கப்பட்டு விடும் என கருதியுமிருக்கலாம்.
2) இரண்டு வெவ்வேறுபட்ட நாடுகள் தானே இதைக் கணக்கெடுக்க தேவையில்லை என்ற கருத்துக்கான பதில்
இலங்கையில் பணம் கொடுத்து வாங்கக் கூடிய OTT கள் இல்லாத நிலையில் இந்தியாவை மையப்படுத்திய OTT களுக்கு மட்டுமே விற்க முடியும்.
எமது படம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் அப்பட பதிவிருப்பதால் அங்கு இப்படைப்பை விற்பதில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது
- ஏற்கனவே இத் திரைப்படத்துக்கு வியாபார விடயம் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் (பெயர் குறிப்பிட முடியவில்லை) இத் தலைப்பால் இப்படைப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து பதில் தர 3 நாள் அவகாசம் கேட்டுள்ளன. பெரும்பாலும் இத் தலைப்பில் ஒரு படைப்பு முதலே வருவதை விரும்பமாட்டார்கள்.
ஏதோ , என் மூன்றரை வருட ஒட்டு மொத்த கனவும், உழைப்பும், காத்திருப்பும் ஒரு சம்பவத்தால் சுக்கு நூறக்கப்பட்டு விட்டதை நான் முழுமையாக உணர்கின்றேன்.
வழமை போல இந்தப் படைப்பை ஓடுவதற்கு தற்போது தியெட்டர்களும் இல்லை. படத்துக்கு தேடி வந்த யூரியூப்காரர்களும் தமது channel க்கு தாருங்கள் வரும் பணத்தில் 50% தருகிறோம் என்ற வியாபார கணக்கோடு வரிசையிடுகின்றார்கள்.
என்ன செய்வது சிறு புன்னகையுடன்🙂 இந்த விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் இருந்து ஈழ சினிமாவை பறித்துக் கொண்டு பயணப்பட்டுக் கொண்டே இருப்பான்.😉x
11:21 AM - By ம.தி.சுதா 0

சனி, 11 ஜூலை, 2020

Darak Days of Heaven - Official Announcement

Official Announcement
Dark Days of Heaven

இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருடனும் சேர்த்தே பெருமைப்படுகிறேன்.
ஏனென்றால் இந்த மாத முடிவுடன் எனது பணச் சேகரிப்புப் போராட்டத்தின் 2 வருடங்களைப் பூர்த்தி செய்கிறேன்.
இதில் சந்தோசமான செய்தி என்னவென்றால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முற்று முழுதாகப் பூரணப்படுத்தியுள்ளதுடன் படத்தொகுப்பிலும் குறிப்பிட்டதொரு கட்டத்தை கடந்திருக்கிறேன்.
28 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு 1,936,039 ரூபாய்கள் சேர்ந்திருந்தன. இதில் Production வரை தீர்மானித்திருந்த செலவு 9 இலட்சத்து 50 ஆயிரமாகும் ஆனால் 935,977 ரூபாய்கள் செலவாகியிருக்கின்றது.
168 பேர் இணைந்திருந்த இந்த Crowdfunding இல் 101 பேர் பணமிட்டிருந்தார்கள். இது ஒட்டு மொத்த இலங்கை அளவில் அதிகமானவர் இணைந்திருந்த Crowdfunding திரைப்படம் என்ற வரலாற்றுக்குரியதாகும்.
முற்று முழுதாக ஐபோனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் சர்வதேச விருதுகளுக்குள் நுழையுமானால் இலங்கை அளவில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு பெற்று சர்வதேச அங்கீகாரம் பெறும் முதலாவது ஐபோன் திரைப்படமுமாகும்.
இப்படைப்பில் பணியாற்றிய அனைவரையும் தனித்தனிப்பதிவில் நினைவுகூர இருக்கின்றேன். இப்படைப்புக்காக என்னோடு இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர்களது போராளி வாழ்க்கைக்காக அவர்கள் ஒவ்வொருவரது நினைவும் பகிரப்பட வேண்டியதாகும்.

மிக மிக இறுக்கமான பட்ஜெட் நெருக்கத்தால் 14 நாட்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் படப்பிடிப்பை 10 நாளில் முடிக்க காரணம் என்னோடு சலிப்பின்றி களைப்பின்றி உழைத்த அத்தனை பேரது வியர்வையும் தான் இந்த மரத்தின் துளிர்ப்புக்கு மிக முக்கிய காரணமாகும். அதிலும் தனது 70 வயது கடந்த வயோதிபநிலையிலும் இப்படத்தை தனது பாத்திரத்தால் தாங்கிய பார்வதி சிவபாதம் அம்மாவின் உழைப்புக்கு நீங்கள் அனைவரும் உங்கள் சிரம் தாழ்த்தி வணங்க வேண்டியிருக்கும் என்பதில் எனக்கும் என் குழுவுக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது.
இத்திரைப்படத்தை பூசையிட்டு ஆரம்பித்து வைத்தவர் - பார்வதிசிவபாதம் அம்மா
Clapboard அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் - வெற்றிச் செல்வி அக்கா
படத்தின் நடிகர் எண்ணிக்கை (cast) - 17 பேர்
தொழில்நுட்ப குழுவினர் - 9 பேர்
படத்தின் பின்நிலை வேலைகளில் சிலதை இந்தியாவில் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
குறிப்பு - Dark Days of Heaven என்ற பெயரை copy செய்து உங்கள் பேஸ்புக் தேடல் பெட்டியில் இட்டு அப்பக்கதை விருப்பிட்டுக் கொள்ளுங்கள். எம் முயற்சியை மற்றையவருக்கும் கொண்டு சேர்க்க உதவியாக அப் பேஸ்புக் பக்கத்தில் உள்ள Invite பொத்தனை அழுத்தி உங்கள் நண்பரையும் இணைத்து விடும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
படவிளக்கம் - படத்தில் பணியாற்றிய அதிகமானவர் ஒன்றாக நிற்கும் படம், எனது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியது தான் என்பதால் அப்படத்தையே பகிர்கிறேன். படத்தின் விளம்பரப்பிரிவுக்கு பொறுப்பாக இருப்பவர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்ட படங்கள் விரைவில் வெளியாகும்.

சொர்க்கத்தின் இருண்ட நாட்கள் திரைப்படத்தின் பேஸ்புக் பக்கத்தை விருப்பிட்டு அதன் தரவேற்றங்களுடன் இணைந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்...


3:43 PM - By ம.தி.சுதா 0

வெள்ளி, 25 ஜனவரி, 2019

10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்



இந்த உலகத்தின் தமிழன் என்ற சொல்லுக்கே அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் தான் ஆனால் சினிமா என்று வரும் போது எம்மிடம் அது இல்லை. இந்த உலகுக்குச் சொல்ல வேண்டிய ஆயிரம் கதைகள் எம்மிடம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதைச் சொல்ல தனி ஒருவனிடம் அதற்கான பண முதலீடு இல்லை.

எமக்கு ஏன் சினிமா தேவை?
எம்மிடம் உள்ள வாழ்வியல், பேச்சு மொழி, பண்பாடு என்பவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். இதை இன்னொரு சந்ததிக்கு கடத்தவோ அல்லது எம் வாழ்வியலை இன்னொரு சமூகத்தக்கு காட்டவோ எம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் சினிமா மட்டும் தான்.
எமக்கிருக்கும் பிரச்சனை இங்கு தயாரிப்பாளர்கள் இல்லாமையே.

உங்களது 10 டோலரால் அல்லது 1000 ரூபாவால் ஒரு இனத்தின் சினிமா கட்டமைக்கப்படும் என்றால் ஏன் இந்த முயற்சியை ஒரு சில நிமிடங்கள் செலவழித்துப் படித்துப் பார்க்கக் கூடாது.?

இதுவரை 106 பேரை இத்திட்டத்தில் இணைத்து வைத்திருக்கும் மதிசுதா தன் முயற்சியில் அரைவாசிக் கட்டத்தை நெருங்கி விட்டார்.

இது தொடர்பாக எமது சினிமாவுக்கென்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதா குறிப்பிடுகையில்..


“சிறு துளி பெரு வெள்ளம், ஊர் கூடி ஒரு தேரை இழுப்போமா ? ”

அன்புக்குரிய எனதன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இம்மடலூடாக உங்களோடு பேசிக் கொண்டிருப்பது ஈழத்தில் தீவிர திரைச் செயற்பாடுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதாவாகும்.

என்னுடைய இலட்சியம் யாதெனில், தனக்கென பண்பாட்டையும் கலையையும் கொண்டிருக்கும் பல நாடுகளும் அது சார்ந்த இனங்களும் தமக்கென்று ஒரு சினிமாவை தமக்குரிய தனித்துவத்துடன் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் தமிழுக்கென்று உலகில் அடையாளப்படுத்தக் கூடிய சினிமாத் தளம் இல்லை. உலகின் எந்த மூலையில் தமிழன் என்று சொன்னாலும் அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் ஆனால் தமிழ் சினிமா என்று வரும் போது தமிழ்நாடே அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழுக்கு அடையாளம் கொடுத்தது போல திரைக்கும் நாமே அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியமாகும்.
 ஆவணப்பட உருவாக்கலில் ADVANCE DIPLOMA கற்கையை நோர்வே அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட நான் இதுவரை ஒரு முழுநீளத் திரைப்படத்தையும் 15 குறும்படங்களையும் 5 ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளேன். கனடா, அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், இந்தியா, நோர்வே போன்ற நாடுகளில் எனது குறும்படங்கள் விருதுகள் பெற்றிருப்பதுடன் இவை தவிர பங்களாதேஷ், துருக்கி , தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகளில் தெரிவாகித் திரையிடப்பட்டும் உள்ளது.

இம்மடல் மூலம் தங்களிடம் அன்பாக வேண்டி நிற்பது குழுச் சேர்க்கை (Crowdfunding) மூலம் சேகரிக்கும் பணத்தில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குவதற்கான பங்கு சேர்ப்பதற்காக இம்மடலை வரைகிறேன்.
வாக்குறுதிப் பட்டியல்
1)       இப்படைப்பானது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவுபெற்று படப்பிடிப்பு அனுமதி பெறப்பட்ட கதையுடனேயே ஆரம்பிக்கப்படுகிறது.
2)       படப்பிடிப்புக்கு 10 நாட்கள் ஒதுக்கப்படுகிறது படத்தைப் பூரணப்படுத்த 6 மாத காலங்கள் தேவைப்படும்.
3)   பங்களிப்பாளர் இடக்கூடிய மிகக் குறைந்த பங்குகளின் பெறுமதி ஆயிரம் ரூபாய்கள் ஆகும், (வெளிநாட்டில் இருந்து பங்கெடுப்பதானால் 10 அமெரிக்கன் டொலர்களாகும்)
4)       மொத்த பட்ஜெட் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும். முழுமையான பட்ஜெட் விபரம் பத்திரத்தின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
-          முன்னாயத்த வேலைக்கு 100,000
-          படப்பிடிப்பை மேற்கொள்ள 850,000
-          படப்பிடிப்பின் பின்னான பட உருவாக்கத்திற்கு 900,000
-          விருது மற்றும் விநியோகத்திற்கு 1,000,0000

5)       தேவையான பங்குகள் எண்ணிக்கை 2,850
(இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு படத்தை முழுமைப்படுத்தத் தேவையான குறைந்த பட்ச பட்ஜெட் தொகையாகும். இதைவிட 500 பங்குகளாவது அதிகமாகக் கிடைக்குமாக இருந்தால் படத்தை இன்னும் மெருகூட்ட இலகுவானதாக இருக்கும்)



6)       பங்குதாரருக்கு மீள் அளிப்பதற்கான வாக்குறுதி
-          ஒரு பங்கை மட்டும் இடுபவருக்கு 2 நுழைவுச் சீட்டுக்களோ (இலங்கையில்)
அல்லது
-          படம் திரையிடப்பட்டு முடிந்தவுடன் ஒரு டீவீடியோ (வெளிநாடு உள்ளடங்கலாக)
அல்லது
-          அவர்களது பணமோ மீளளிக்கப்படும்.
-          பண மீளளிப்பு படம் வெளியிடப்பட்டு 6 மாத காலத்தில் தான் மீளளிக்கப்படும்.

7)       இப்படைப்பில் என் பங்காக ”தர்மா” குறும்படத்துக்காக எனக்கு கிடைத்த பரிசுத் தொகையான ஐம்பது ஆயிரம் ரூபாய்களை இட்டு 50 பங்குகளை நானும் வாங்கி இணைந்து கொள்கிறேன். ஆனால் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருப்பதால் இந்த பட்ஜெட் தொகையில் எனது சம்பளமாக எதையும் இட்டுக் கொள்ளவில்லை..


8)   இப்படத்துக்கான பங்கு முதலீட்டாளர்கள் இரண்டாவது படைப்பில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களின் இப்படத்துக்கான பங்கு எண்ணிக்கையுடன் இப்படத்தின் வருவாய்த் தொகையில் அவர்களது பங்குக்குரிய இலாபமும் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது படத்தின் வருமானத்தில் அவர்களுக்கும் பங்கு அளிக்கப்படும். ஆனால் முதல் படத்துடன் விலகும் பட்சத்தில் அவர்களது முதலீட்டுத் தொகையுடன் 5 % ம் இணைத்து அளிக்கப்படும்.



பிரதான வாக்குறுதி -  இங்கு முதலிடப்படும் பணத்துக்கு முழுப் பொறுப்பாளி இயக்குனரே ஆகையால் படம் வென்றாலும் தோற்றாலும் அத்தனை முதலீட்டாளரது பணத்தையும் தனது சொந்தப்பணத்திலாவது எடுத்து மீளளிக்க வேண்டிய பொறுப்பாளி இயக்குனரே ஆவார். அப்படி மீளளிக்காத பட்சத்தில் பங்கு இட்டவர்களது சட்டரீதியான நடவடிக்கையையும் இயக்குனர் எதிர் கொள்ள வேண்டும்.

நன்றிச் செதுக்கலுடன்                                   
அன்புச் சகோதரன்                        
மதிசுதா 
தொடர்புக்கு   
0094773481379 (Viber / Whatsapp)

அன்பு வேண்டுகை – இம்மடல் படிக்கக் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கோப்பை தங்கள் நண்பர்கள் எவருக்கேனும் பகிர்ந்துதவுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன். சிறு துளி தான் பெரு வெள்ளமாக உருவெடுக்கும்.

(படத்தின் மேல் சொடுக்கி உருப்பெருக்க வைத்துப் பார்க்கவும்)







10:50 PM - By ம.தி.சுதா 1

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top