திங்கள், 23 ஏப்ரல், 2018

திரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்

10:39 AM - By ம.தி.சுதா 0

வணக்கம் உறவுகளே.
கடந்த ஆண்டு (2017) லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் (மதிசுதா) மற்றும் நடிகை (ஜெஸ்மின்) க்கும் பரிந்துரைக்கப்பட்ட ”பாதுகை” குறும்படத்தைஇணையத்தில் வெளியிடுகிறேன்.
பட முயற்சியின் தடங்கல்.
2015 ம் ஆண்டு இப்படத்தை எடுப்பதற்கான முன்னயாயத்தத்திற்கு 2 தரம் முல்லைத் தீவு போய் வந்ததுமல்லாமல் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் படம்பிடிக்க போகிறோம். இப்படத்தின் ஆரம்பக் காட்சியானது அத்தனை உடல்களும் தெப்பமாய் மிதந்த வட்டுவாகல் பாலத்தில் அமைய வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்நேரம் படப்பிடிப்புக்கு அங்கு அனுமதியில்லை இருகரையிலும் இரணுவ முகாமே. போதாத குறைக்கு அடுத்த முக்கிய காட்சி அமைய வேண்டிய வற்றாப்பளையிலும் படம் பிடிக்க இராணுவக் கெடுபிடி. சரி என எடுத்த ஒரே ஒரு காட்சியோடு யாழ் திரும்பிக் கொண்டோம்.

ஆனால் அந்த வெறி விடவில்லை மீண்டும் 2016 கிளம்பிப் போனோம் ஆனால் வற்றாப்பளை ஆலயம் மீள் கட்டுமானத்துக்காக தரைமட்டமாகிவிட்டது. வட்டுவாகலிலும் அதே கதை தான். அதற்காக ஒரு திட்டம் இட்டோம். சன்சிகனும் தர்சனும் அந்த வட்டு தொடுவாயில் மீன் பிடிப்பவரை போட்டோ எடுப்பதற்கென்று அனுமதி எடுக்கா நான் தனியே சைக்கிளில் இவர்களுக்கு சம்மந்தமில்லாதது போல மறு கரைக்கு சென்று அங்கிருந்து அவர்களது ரகசிய அழைப்புக்கமைய பாலத்தில் வர வேண்டும். அவர்கள் மீன் பிடிப்பவரை எடுப்பது போல என்னை எடுப்பார்கள்.
திட்டமிட்டபடியே காட்சி அமைந்ததுமல்லாமல் நான் ஆசைப்பட்ட ஒரு விடயத்தை முடித்த திருப்தியோடு வீடு ஏகினோம்.

இக்குறும்படத்துக்காக என்னோடு உழைத்த மதுரன், சன்சிகன், தர்சன், பவுண் அக்கா, சமீல் போன்றோருடன் குந்தவை அவர்களின் சிறுகதையை எனக்கு அனுமதி வாங்கித் தந்த குணேஸ்வரன் அண்ணா, தங்குமிட ஒழுங்கு செய்து தந்த ஜெரா, நியாகரன் போன்றோருடன்
முதற்கட்ட படப்பிடிப்புக்கு பணம் தந்த தமிழ் பொடியன் ரமணனுக்கும் மீள எடுப்பதற்கு பண உதவி செய்த செவ்வேள் அத்துடன் கமரா பக்கத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட செல்லா அண்ணா அனைவருக்கும் நன்றிகள்.

பிற்குறிப்பு - 2 வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததற்கு பொருத்தருளவும்.




இதனுடைய மூலச் சிறுகதை இது தான்.


பாதுகை
-              குந்தவை

வீட்டுச் சுவர் அப்படியே இருந்தது. மேலே ஓடுகளும் பனம் சிலாகைகளுமில்லை. அவற்றுக்குப் பதில் மரக்கம்புகள் தாங்கி நின்ற அஸ்பெஸ்டர் கூரை தான் தெரிந்தது.
வாசலில் இருந்த இரட்டைச் சிறகு கதவுமில்லை. செழுமைப்படுத்தப்படாத ஒரு ஒற்றைக்கதவுதான் இருந்தது.
வாசலில் நின்று 'அம்மா அம்மா' என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை.
முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். 'ரமணா' என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக  உள்ளே நுழைந்துதான் பழக்கம்.
மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான்.
பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.
'ஆர் தம்பி தயாளனா?' என்று கேட்டபோது வந்தவள் அவனின் இடது கையைப் பற்றிக் கொண்டாள். அவனின் நரம்போடிய  புறங்கையைத் தடவியவாறு  'எப்படியம்மா இருக்கிறீங்க?' என்று கேட்டான் தயாளன்.
'ஏதோ இருக்கிறம் தம்பி எப்பொழுதும் ரமணனின்ர நினைவுதான்' என்றாள் அம்மா. சொல்லும்பொழுதே கண்களில் நீர் கோர்த்துவிட்டது.
ஒரு கணம்தான் இங்கு வந்திருக்கக்கூடாதோ என்று இருந்தது. தன் மகனோடு படித்தவன் எப்பொழுதும் அவனோடு கூடித் திரிந்தவன். குதூகலித்தவன் இன்று வாட்டசாட்டமாய் தன்முன் வந்து நிற்கின்றான். தன் மகன்தான் இல்லை என்ற நினைவு அவளை முள்ளாய் குத்தக்கூடும்.
'உங்களை எல்லாம் பாக்கவேணும் போல இருந்துது அதுதான் வந்தன் அம்மா'
'உள்ளை வா தம்பி' என அவள் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள். தயாளனும் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே போனான்.
உள்ளே ஒரு சாமானில்லை. நாலு பிளாஸ்டிக் கதிரைகளைத் தவிர மரப்பின்னல் செற்றி வட்டமாய் கதிரைகள், ரீபோய் ஒன்றுமில்லை கொடி கட்டி, உடுப்புகளை அதில் போட்டிருந்தார்கள்.
'ஒரு மாதமாகுது அவங்கள் இஞ்சை கொண்டுவந்து விட்டு. வெறும் சுவர்தான் இருந்தது. இப்ப கொஞ்சம் கொஞ்சமா வீட்டைத் திருத்திறம். இஞ்சை வந்த பிறகாவது ரமணன் வருவானோ என்ட நினைப்பு'
'அப்பா  எங்கை அம்மா?' என்று கேட்டான் தயாளன்.
'திரும்பவும் தோட்டம் செய்யலாமோ எண்டு பாக்கப் போயிட்டார். அவருக்கும் ஏலாதுதான் ஆனா என்ன செய்யிறது? நெடுக அவங்க தர்ற நிவாரணத்தை நம்பியிருக்க முடியுமோ? அவருக்கும் ரமணன் இல்லாதது பெரிய அடி என்ன செய்யிறது?'
'இரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்.' என்று அவள் குசினிப் பக்கம் போய் விட்டாள்.
முன்பு ரமணனும் அவனும் ரியூசன் முடிந்த கையோடு மாலை ஐந்தரை மணிக்கு இங்குதான் வருவார்கள். ரமணனின் அம்மா சுடச்சுடச் தேநீர் போட்டுத் தருவாள். வெறும் தேநீர்தான். ஆனால் அதில் உள்ள ருசி அவன்முன்பின் அறிந்தில்லை. அளவான தேயிலைச் சாயம் லேசான வேர்கம்பு வாசனை.
தேநீர் குடித்த பிறகு மீண்டும் அவர்கள் புறப்பட்டு விடுவார்கள். கூல் பார் விறாந்தையில் நண்பர்கள் கூடி அரட்டை அடித்து ஏழு மணிக்கு இங்கிலிஸ் சென்ரில் ஆங்கில வகுப்புகளுக்குப்போய் ...எட்டரை மணியளவில் தான் வீடு திரும்பல்.
ரமணனனுக்கு ஆங்கிலம் நன்றாக ஓடும். இவன்தான் தடுமாறுவான். ரமணனுக்கு ஆங்கில ஆசிரியராக வரவேண்டும் என்ற கனவு. கிளிநொச்சியிலே வேலை பார்க்க வேண்டும் என்றும் ஆசை. 
தயாளன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானபொழுது தான் சில புள்ளிகளால் அதைத் தவற விடடதை மறந்து இவ்வளவு சந்தோசப்பட்டான்.
சிறு விருந்து வைத்துக் கொண்டாடி தன்னை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்த நண்பர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே? நினைக்கும்பொழுது ஆற்றாமை நெஞ்சைப் பிடுங்கியது.
நான்கு ஆண்டு சிறப்புப் பட்டப்படிப்புக்காலம், ஹர்த்தால், ராணுவச் சுற்றி வளைப்பு, கல்வியைப் பறக்கணிக்குமாறு புலிகள் இட்ட உத்தரவு, இன்னோரன்ன காரணங்களால் ஐந்து ஆறு ஆண்டுகள் என இழுபட்டது.
பல்கலைக்கழக அனுமதியைக் காட்டிய அவனுக்கு வன்னியை விட்டு வெளியேற பாஸ் கிடைத்தவேளை, அவனது பெற்றோருக்கும் கிடைத்துவிடவே, யாழ்ப்பாணமே அவர்களின் நிரந்தர இருப்பிடமாயிற்று.

அம்மா தேநீர் கொண்டுவந்து தந்தாள். எப்பிடிப் பேச்சு எடுத்தாலும் அது ரமணனில் தான் போய் முடிகிறது என நினைத்தவன்
'கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து கஸ்டப்பட்டிருப்பீங்கள் ? என்றான்'
'ஓம் படாத கஷ்டமோ? விசுவமடு ஆனந்தபுரம் என்று எங்கபோனாலும் ஷெல் அடிதான். கடைசியா மாத்தளனுக்கு வந்த பொழுது சண்டை முடிச்சு ஆமிகாரன் உள்ள வந்திட்டான். நாங்கள் எல்லாரும் கைகளைத் தூக்கிக் கொண்டு நிண்டம். அவங்கள் எங்களை இரணைப் பாலையில கொண்டுவந்து, ஆம்பிளை பொம்பிளை எண்டு வேறுவேறாகப் பிரிச்சு செக் பண்ணினான். அங்கதான் என்ர பிள்ளையைப் பறிகுடுத்திட்டன்'
'ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை  செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான்.
பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் 'விசரி' மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல' 
அவள் கொண்டுவந்த தேநீர் முன்போல் ருசிக்கவில்லை. கசந்தது. ஒரு மிடறுக்கு மேல் அவளால் குடிக்கமுடியவில்லை.
'பெரிய சண்டைக்கை ஷெல் அடிக்கும் குண்டு வீச்சிற்குமிடையில பொத்திக் காப்பாத்தின என்ரை பிள்ளையை சண்டை முடிச்ச பிறகு துலைச்சிட்டம். ஆமியட்டை வந்த பிறகு'
ஒரு தாயின் வேதனை. புலம்பல். மனத்தை அரித்தெடுத்தது.
'எங்கயும் தடுப்பில வைச்சிருப்பாங்களம்மா விட்டுவிடுவாங்கள்.' இதைத்தான் அவனால் திரும்பத் திரும்ப கூற முடிந்தது.
'எல்லா இடமும் கேட்டுப் பாத்தாச்சு. ஒருத்தனும் சரியான பதில் சொல்ல இல்ல.' என்றாள் அம்மா.
மற்ற நண்பர்களின் வீடுகளுக்கும் போய் விசாரித்துவிட்டு வருவதாகக் கூறி அவள் புறப்பட்ட பொழுது 'இஞ்ச ஒரு நாள் தங்கி விட்டுப் போ தம்பி எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்' என்றாள் அந்தத் தாய்.
கிளிநொச்சிச் சந்திக்கருகில் யாழ்ப்பாணம்  திரும்ப என்று பஸ்ஸிற்குக் காத்து நின்றான் தயாளன். அவன் வளர்ந்த அந்த இடமே இப்பொழுது வேற்று முகம் கொண்டு அவனை நோக்குவதாய் பட்டது.
ஆமிக்காரர்களே சாப்பாட்டுக் கடைகளை நடத்தினார். முன்பு புலிகளிருந்த இடங்களில் எல்லாம் அவர்களே தெரிந்தனர்.
நாகலிங்கண்ணை மட்டும் முன்பு தான் நடத்திய பெரிய மளிகைக் கடை இருந்த இடத்தில் விடாப்பிடியாக ஒரு சின்னக் கடை போட்டிருந்தார். ஷெல் பட்டோ என்னவோ இடது கை சற்று ஊனமாயிருந்தது.
அவன் படித்த ரியூட்டறி முகப்பு இடிந்து பாழ்பட்டுக் கிடந்தது. நண்பர்கள் கூடி அரட்டை அடித்த அதே கூல்பார் விறாந்தை மண்ணோடு மண்ணாய் கிடந்தது.
இந்த இடத்தில் அவர்கள் கூடி ஆய்ந்தலசிய எத்தனையோ விடயங்கள் நினைவிற்கு வந்தன.
திருக்கோணமலைக் கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மனக் கொதிப்புடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
'தரைவழியாக இல்லாவிட்டிலும் வான்வழியாக இஞ்சையும் வந்திடுவங்கள் குண்டுபோட' என எரிச்சலூட்டினான் குமரன்.
அதற்கு முகுந்;தன் பாமரத்தனமாக பதில் சொன்னான். 'எந்தக் கிபிர் வந்தா என்ன புலியள் சுட்டு விழுத்திப் போடுவங்கள்' பொதுவாக இந்த அதீத நம்பிக்கை எல்லோரிடமும் இருந்ததுதான்.
அப்பொழுதுதான் ரமணன் சொன்னான். 'இவங்க கிபிரை சுடுவங்களோ என்னவோ அப்பாவிகளான தமிழ்ப்பயணிகள் போற சின்னப்பிளேனை சுட்டு விழுத்திப்போட்டு கெட்டித்தனம் பேசுவங்கள் ஏகத்தனமாக சொன்னான்.
கொஞ்ச காலத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் புறப்பட்ட தமிழ்ப்பயணிகளை ஏற்றிய சிறு தனியார் விமானத்தை நெடுந்தீவுக் கடற்கரைக்கு அப்பால் புலிகள் சுட்டு விழுத்தினர். எயர் விமானத்தில் போகவேண்டாம். என புலிகள் ஒட்டிய நோட்டீசை கவனியாது விமானத்தில் ஏறியதால் அந்தப் பயணிகளுக்கு புலிகள் அளித்த தண்டனை அது.
அவர்களில் பலர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் உறவுகளைப் பார்ப்பதற்கு என்றுவந்த கொழும்புத் தமிழர்கள். அவர்களுக்கு அந்தப் புலிகளின் நோட்டீசைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இருந்திராது.
தயாளன் பரபரத்தான். டேய் சந்தியில நின்று இப்பிடியெல்லாம் கதைக்காத. காத்துக்குக்கூட காது இருக்கும். நீ சொல்லுறதை அள்ளிக் கொண்டுபோய் சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லிவிடும் என மெல்லியதாய் எச்சரித்தான்.
ரமணன் இப்பித்தான் துணிச்சல்காரன். போரிடும் இரு தரப்பினரும் செய்யும் அக்கிரமங்கள் அவனைக் கொதிக்க கொந்தளிக்க வைத்துவிடுகிறது.
இப்பிடி துணிச்சலாக ஏதும் பேசித்தான்அகப்பட்டுக் கொண்டானோ?
'ரமணன் இப்பொழுது அங்க இருக்கின்றானோ? எந்தப் புதைகுழியில் எந்த வடிவத்தில்?'மனம் அரற்றியது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் ஓரிரு நெடுந்தூரப் பயணிகள் பேருந்துகள் போயின. அவை இடை இடை வழியில் நின்று ஆட்களை ஏற்றமாட்டா.
நாகலிங்க அண்ணை கடைமுன் அவரோடு கதைத்துக் கொண்டு நின்ற பொழுது அவர் சொன்னார். 'இனி இஞ்சை இருந்து யாழ்ப்பாணம் போற பஸ்கள் போகாது போல இருக்கு தம்பி ஆமிக்காரனும் கொஞ்ச பஸ்கள் தன்ரை தேவைக்கெண்டு எடுத்து வைச்சிருக்கிறான்'
ஆமிக்காரன் நடத்தும் சாப்பாட்டுக் கடையில மூன்று கொத்து ரொட்டிப் பார்சல்களை வாங்கிக் கொண்டு அவன் திரும்ப ரமணனின் வீடு பார்க்க நடந்தான்.
வழியில் தென்னிலங்கையில் இருந்து வந்து நிண்ட பஸ் ஒன்றிலிருந்து இறங்கிய பயணிகள் விழுந்து கிடந்த அந்தப் பெரிய நீர்த்தாங்கியோடு நின்று படமெடுத்து விட்டுத் திரும்ப பஸ் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்தபடி நடந்தான்.
'அம்மா ஒரு நாள் தங்கிப் போகச் சொன்னீங்கள். அதன்படிதான் நடக்குது. பாருங்கோ' எனச் சிரித்தவாறு கொத்து ரொட்டிப் பார்சல்களை முன் வைத்தான். 'இரவுக்கு ஒன்றும் தேடவேண்டாமம்மா. ஆமிக்காரன்ர கொத்து ரொட்டி நல்லாயிருக்கும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்'
சாப்பிட்டபிறகு அப்பா அவனோடு கொஞ்ச நேரம் தன் பாடு பரப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஹோலிற்குள்ளே மூன்று பாய்கள் தனித்தனி போடப்பட்டன. அப்பா படுத்துக் கொண்டு விட்டார்.
முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால்அந்தச் செருப்புகளை அவன் கண்டான். அவை ரமணனின் செருப்புகள். அவற்றை கிளிநொச்சி சப்பல மார்ட்டில ரமணன் வாங்கி பொழுது அவனும் கூட இருந்தான். அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நலல் லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள். அவற்றை அதிகம் ரமணன் அணிவதில்லை. வெளியூர்களுக்கு பாடசாலைக்குப் போகும் வேளையில் அணிவான். மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான்.
தயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அருகில் வந்தான். 'இது ரமணனின் செருப்பு தம்பி. இதை தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக்கொதி அடங்கி நித்திரை வரும்' என்றாள்.
தயாளன் தன் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். அரைக்கண் மூடி அன்று தான் சென்று பார்த்த தன் பழைய நண்பர்களின் வீடுகளை நினைத்துக் கொண்டான்.
முகுந்தன் கடைசி நேரத்தில் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம்  புலிகளோடு இணைக்கப்பட்டவன் அவர்களிமிருந்து தப்பி, சனங்களோடு சனங்களாக வெளியேறி ஓமந்தையில் இராணுவத்திடம் சரண் அடைந்தவன். இப்பொழுது வவுனியாவில் தடுப்பில் இருக்கிறான். பெற்றோருக்கு அவனைச் சென்று பார்க்க அனுமதி கிடைத்திருக்கிறது. கிழமைக்கொரு முறை போல பார்க்கின்றார்கள். அவனின் தடுப்பு பகிரங்கப்பட்டிருப்பதால் இனி ஆமியால் அவனுக்கு ஆபத்து வராதென்ற நிலையில் பெற்றோர் அவனின் விடுதலையை பார்த்திருக்கிறார்கள். குமரனின் அம்மா அவனை எப்படியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதெனக் குறியாய் உள்ளாள். இப்பொழுது அவன் கொழும்பில்
சிவரூபன் ஒருவன் தான் இங்கு இருக்கிறான். தோட்டம் செய்யப் போகிறானாம். குரக்கன் பயிரிட போகிறானாம். குசினி வேலைகளை முடித்துக் கொண்டு ரமணனின் அம்மா  ஹோலிற்குள் வருவது தெரிந்தது.
அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள்.
இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள்.
தயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்



About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top