Featured Articles
All Stories

வெள்ளி, 24 மே, 2013

எம்மவர் பாடல் வளர்ச்சிக்கு உதாரணமாய் அமைந்த அருமையான அம்மா பாடல்

பாடல் என்பது மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தாலும் எல்லா வகைப் பாடல்களையும் எல்லா நேரத்திலும் கேட்க முடிவதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்த பாடல்களும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட பாடல்களில் தாயிற்காக அமைந்த பாடல் மிக முக்கியமாகும்.
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த அம்மா பாடல் ஒவ்வொரு தாயின் மகவையும் கட்டிப் போடும் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.
பாடல் தயாரிப்பளரான ஐஸ்வர்யன் எண்டர்ரெயின்மெண்டைச் சேர்ந்த உமாமகேசின் சிரத்தையால் இப்பாடல் தென் இந்தியப் பாடகர் மதுபால கிருஷ்ணனின் மதுரக் குரலில் ஒலிக்கிறது. இப்பாடலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்திருப்பதும் இன்னும் சிறப்பைக் கூட்டும் விடயமாகும். அவருடன் சேர்ந்து றொசிற்றாவும் பாடியிருக்க பின்னணி இசையை ஈழத்து முன்னோடி இசைக் குழுவான அருணா இசைக்குழு ஸ்தாபகரின் மகனான அருணா கேதிஸ் வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பிரபலமான அம்மா பாடல் ஒன்றின் லயத்துடன் பாடல் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் எள்ளளவு கூட அலுக்க வாய்ப்பில்லை.
இது தான் பாடல் வரிகள்...

ஆரிராரோ பாட்டுச் சத்தம் கேட்குது
அம்மாவின் ஞாபகங்கள் தாலாட்டுது
ஆராரோ பாடி என்னை வளர்த்தாய் என் தாயே
ஆனாலும் நம் உறவை பிரிக்க முடியாதே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயே
ஈரேழு ஜென்மத்திலும் தாயாய் வரவேணும்
ஆலயங்கள் செல்வதில்லை நான் தாயே
தெய்வமாய் இருக்கின்றாய் என் தாயே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
கானகத்து பூங்குயிலே கண்ணுறங்கு
கானகத்து வெண்ணிலவே கண்ணுறங்கு
அழுகின்ற என் மகனே நீயுறங்கு

தாய் மடி தேடி வந்தேன் உன் பிள்ளை நான் தானே
தாய் புகழ் பாடி வந்தேன் கவிப்பிள்ளை நான் தானே
அம்மாவின் அன்பாலே ஆனந்தம் காண்பேனே
அப்பாவின் ஆசியுடன் அகிலத்தை ஆழ்வேனே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

இந்த அருமையும் ஆழம் நிறைந்ததுமான வரிகளை கமலநாதன் மற்றும் றஜித் வரைந்திருக்க கிருத்திகன் கமராவால் வர்ணம் தீட்டியிருக்கிறார்.
இப்பாடலை சயன் இயக்க நடிகர்களாக கவிமாறன் மற்றும் சுகந்தினி ஆகியோர்  நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பை டனா செய்திருக்கிறார்.
எம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்

அந்த அழகிய பாடலை ரசித்துப் பாருங்கள்

10:38 PM - By ம.தி.சுதா 5

செவ்வாய், 21 மே, 2013

உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நாளுக்கு நாள் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை ஒவ்வொரு பரிமாணத்திற்கும் சடுதியாக இட்டுச் செல்கிறது.
ஸ்மாட் போன் பாவனையாளர்கள் தங்களிடையேயான இலவச தொடர்பாடலுக்கு பாவித்து வந்த viber என்ற அப்ளிகேசனானது புதிய மாற்றத்துடன் பலரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த அப்ளிகேசன் ஆனது ஏற்கனவே துல்லியம், குறைந்தளவு தரவுச் செலவீடு, போனுக்கு வேலைப்பளுவைக் கொடுக்காத மென் பொருள் என பல விடயங்களால் பலரை கவர்ந்திருந்த ஒரு அப்ளிகேசனாகும்.

இதில் குறையென்று பெரிதளவாக சொல்ல முடியாவிட்டாலும் புதிய பதிப்பு திறப்பதற்காக எடுக்கும் நேரம் அதிகம் அதோ போல எதிர் முனையில் உள்ளவர் கைப்பேசி அணைந்திருந்தாலும் றிங் பண்ணுதல் போன்ற குறைகள் இருக்கவே செய்தது.

ஆனால் இத்தனைக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்க முன்னர் இந்த அப்ளிகேசன் ஆனது கணணிகளுக்கு ஏற்றது போலவும் வெளியிடப்பட்டுள்ளது வெகு சிறப்பாகும். இதன் மூலம் கைப்பேசியில் இருந்தபடி கணிணியில் உள்ள ஒருவருடன் தகவல் பறிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இவை ஏற்கனவே ஸ்கைப் போன்ற மென் பொருள்களின் மூலம் கிடைத்தாலும் தரவுச் சிக்கன பாவனையாளருக்கு இது பெரும் சாதகமான ஒரு விடயமாகும்.

ஆனால் இக்கணக்குத் திறப்பதற்கு ஏற்கனவே ஒரு ஸ்மாட் போனில் viber கணக்கு திறந்திருக்க வேண்டும். அந்த இலக்கத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க முடியும் அதே போல ஒருவர் அழைப்பெடுத்தால் இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் றிங் பண்ணுகின்றது.

http://www.viber.com/ இந்த இணையத்தளம் சென்றால் அங்கே தரவிறக்குவதற்கான நேரடித் தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள் இலகுவாக இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு சில நாளில் இன்னும் இம் மென் பொருள் மேம்படுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

11:54 AM - By ம.தி.சுதா 3

சனி, 18 மே, 2013

உணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்

உறவுகள் தொலைத்தோம்
உணர்வுகள் வளர்த்தோம்
ஆண்டாண்டு தோறும்
அடிமை அடிமை இல்லையென
உரக்க ஊர்முழக்கி
வீரப்பட்டம் பெறுகிறோம்.

இதுவரை எது செய்தோம்
உணர்வினில் தவம் செய்தோம்
இனிவரை எது செய்வோம்
சிதைவழிந்த அஸ்திவாரம் செதுக்கி
சுவர்களை சீரக்கி முகடெழுப்பிய பின்
கொடிக் கம்பங்களை நடுவோம்

மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது

மடியில் கனமிருந்தவர்
கடல் தூர பறந்து விட்டார்
காலிற்கு செருப்பற்றவன்
பற்றை கடக்க வழியின்றி அழுகிறான்

ஒரு முறை நினைப்போம்
உறவினை வளர்ப்போம்
உணர்வுகள் சிரஞ்சீவியாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

இன்றைய நாள் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் வாழ்விலும் உருக்குலைந்த நாளாகும். மரணத்தைக் கடந்தவரோ மரணத்தை தேடி அடைய முடியாமல் வாழ்கின்றார். அவரையும் ஒருகணம் எம் உணர்வால் அரவணைப்போமா?

இன்றை இந் நாளில் சகோதரன் மதீசனின் இசை மற்றும் வரி உருவாக்கத்தில் உருவான இப்பாடல் நல்ல ஒரு உதாரணமான பாடலாகும். அதிலும் இந்த இடம் என்னை ஒரு தடவை நிற்க வைத்து விட்டது

ஃஃஃஃகடவுளுக்கு பணம் இறைக்கும் கொடையாளரே இவனுக்கும் உதவுங்கள் அருளாகுமேஃஃஃஃ


7:59 PM - By ம.தி.சுதா 4

சிறீசாந்தின் சூதாட்ட வண்டவாளம் படங்களின் வாயிலாக





12:05 AM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 14 மே, 2013

புலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள் பாகம்-1

எந்த நாடு போனாலும் இந்தக் கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும் தான் நாடு மாறுது என்ற வரி என்மனவானில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கும். இவ்வரி ஒரு நாடோடிக்கூட்டத்தின் வறுமையை சிததரிப்பதற்காக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழனைப பொறுத்தவரை இவ்வரி மாறிய வருகிறது. எந்த நாடு போனாலும் அவனுக்கென்று தனி முத்திரையை எதோ ஒரு வகையில் பதித்திருப்பான்.

அந்த வகையில் இன்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கனடா மார்க்கம் நகரசபைஅங்கத்தவராக இருக்கும் திரு லோகன் கணபதிப்பிள்ளையாவார். யாழின் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் நாடடின் சூழல் இவரை கொண்டு சேர்த்த எல்லை தான் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் கனடிய தேசமாகும்.

ஆனால் ஒரு நகரசபையில் இருக்கும் மக்களின் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஈழத் தமிழன் அங்கத்தவராக வருவதென்பது எல்லோருக்கும் பெருமையான விடயம் ஒன்று தானே.
அந்நகரசபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவராக இருக்கும் இவர் செய்தது என்ன?
அந்நகரசபையின் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” “vanni street in markham canada”என பெயர் சூட்டுவோம் என இவர் முன்மொழிந்து அதை நடைமுறைப்படுத்தி திறக்கவும் உள்ளார்.

இதே நகரசபை தான் தமிழரின் விழா மாதமான தைத்திருநாள் மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக மாற்றி அதை விழாவாகவும் எடுத்து எமது கலை பண்பாட்டை கட்டிக் காக்க உதவி வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பல நல்ல செயல்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது வழியில் பின்பற்றி எமது மொழி கலை பண்பாட்டுக்கு நாமும் உதவுவோம். அவருக்கு என் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
(ஏனையவர்கள் சாதனைகள் பற்றிய பதிவு தொடரும்)

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

1:25 PM - By ம.தி.சுதா 3

சனி, 11 மே, 2013

எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீடான ”விட்டில்கள்” குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் விபத்துக்கள் போலவே அமைந்து விடுகிறது. எமக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாவிடினும் சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.

அந்த வகையில் எனக்குத் தொற்றிக் கொண்ட ஆர்வத்தில் ஒன்று தான் இந்த குறும்படப் பைத்தியம் ஆனால் எவையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் செய்ய வேண்டியவையே... அந்தக் காலம் கடந்தால் மிகவும் சிரமமானதே..

வீடியோ தொகுப்பாளரான நண்பன் வேல் முருகனிடம் எப்போதோ காணும் போது சொல்லியிருந்தேன். ”எங்காவது படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்கள் நேரம் கிடைத்தால் பார்க்க வருகிறேன் என்று“ நான் அதை மறந்தாலும் அவர் மறக்க வில்லை.
சில நாட்களின் முன்னர் நவிண்டிலில் ஒரு படம் செய்யுறம் நேரம் கிடைத்தால் வந்திட்டுப் போங்கோ என்றார் சரி பிற்பகல் தானே போவோம் என போனால் நடந்த இடம் எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னமே எம் குடும்ப நண்பராக இரந்த செல்லாஅண்ணாவின் ஸ்ருடியோ அங்கே பார்த்தால் என்னுடன் முன்பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்த பிரதீப் அவனுடன் ஏற்கனவே பழகிய நண்பனான தர்சன் என ஒரு பட்டாளம் நிற்க படத்தின் இயக்குனர் யாரெனப் பார்த்தால் அவரும் பழைய நண்பராகவே இருந்தார்.
செல்லா அண்ணா, தர்சன், பிரதீப், நான்

அப்புறம் என்ன மச்சான் நீயும் ஒரு சீனில் நடிக்கிறாய் என்றால் எனக்கு எந்த ஆயத்தமும் இல்லை. சரி என்ன தெரியாத ஒன்றா செய்திட்டுப் போவோமென இறங்கியது தான் இந்த விட்டில்கள் குறும்படம்.
அடுத்து காட்சிகள் முடிந்து டப்பிங்கிற்கு போன போது தான் அதன் சாவால் தன்மை புரிந்தது. ஆனால் இயக்குனர் ஜெயதீபன் எனக்கு தந்த வசன சுதந்திரம் என் சிரமத்தைக் குறைந்தது. ஏன் என்றால் நான் பேசிய வசனங்கள் எனக்கு காட்சி விளங்கப்படுத்திய பின்னர் எனது சொன்ன மொழியில் பேசியவையே.. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றையவை அனைத்திற்கும் ஒரு சந்தர்ப்பமே எடுத்துக் கொண்டது வியப்பாகவே இருந்தது அத்தனைக்கு காரணம் அனுபவசாலியான வீடியொ தொகுப்பாளர் செல்வம் அண்ணை தான்.

இப்படத்தில் 1993 -1994 ல் சின்ன விழிகள் போன்ற ஈழப்படங்களில் நாயகனாக கலக்கிய செல்வம் அண்ணையுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆசிரியரான பரணிதரன் சேரும் எம்மோடு இருந்தது சந்தோசமாக இருந்தது.

டப்பிங்கில் மிக அதிக கவனம் செலுத்திக் கொண்ட விடயம் என்னவென்றால் எமது பிராந்திய மொழிவழக்கைத் தான் காரணம் பல தென்னிந்திய திரைப்படங்களும் நடிகர்களும் பேச முனைந்து தோற்றுப் போன விடயங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். பாயும்புலி அனோரமா தொடக்கம் தெனாலி கமல், நந்தா லைலா, ராமேஸ்வரம் ஜீவா மணிவண்ணன் என ஒரு பெரும் பட்டாளமே அந்த வரிசையில் நிற்கிறது.
 படத்தில் கதை என்று சொல்லப் போனால் நீங்கள் அறியாத ஒன்றல்ல ஆனால் 4 நாட்களுக்குள் வடமாகாண குறும்படங்களுக்கான போட்டிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்பட்டதால் ஒரு சில வழுக்களை நாமும் அறிந்திருந்தாலும் மீள் திருத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டது.

தங்களது மனம் திறந்த முகஸ்துதியற்ற விமர்சனங்களை எதிர்பாரத்த நிற்கிறோம் ஏனென்றால் அடுத்தடுத்த படைப்புக்களில் எம்மைச் சீர்ப்படுத்த இவை தான் ஏதுவாக அமையும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருட்டுத்தனமாக பேஸ்புக் தனிமடல் படிப்பது எப்படி?

இணையவெளித் தாக்கத்தில் பேஸ்புக் என்பது மிகவும் தாக்கம் செலுத்தும் தொடர் பாடல் மூலமாக மாறிவிட்டது. உத்தியோகபூர்வமான மடல்கள் தவிர்ந்த ஏனைய தனிமனித டதாடர்பாடலில் பெரும்பான்மையானவை பேஸ்புக் ஊடகவே நிகழ்கிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக பேஸ்புக் கொண்டுவந்திருக்கும் ஒரு மாற்றமானது தனிமடலைப் படித்து விட்டு படிக்காததுபோல நடிப்பவருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. காரணம் நீங்கள் படித்த நேரத்தைக் கூட அனுப்பியவருக்கு தெரிவித்து விடுகிறது.
இதிலிருந்து தப்ப என்ன வழி என பலர் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கையில் அறிந்த சிலர் தாம் பிரயோகிப்பதுடன் மட்டும் ரகசியமாகவே நின்று விடுகின்றனர்.
எப்படி நாம் தனிமடல் படித்ததை அனுப்பியவர் அறியாமல் வைத்திருப்பது.

உங்கள் chrome உலாவியை திறந்து கொள்ளுங்கள் அதில் தான் இந்த நீட்சிகளை நிறுவ வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களைச் சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான நீட்சியை அடையலாம். அங்கே add to chrome என்பதைச் சொடுக்கினாலே போதும்.

ஒன்றை நிறுவினாலே போதும் இனி நீங்கள் படித்ததைக் கூட அனுப்பியவர் அறியமாட்டார். நீங்கள் கண்ணை மூடாமலே பால் குடிக்கலாம் யாருக்குமே தெரியாது.

1.Messenger UNSEEN on FACEBOOK



இந்தப் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நணபர்களுடனும் பகிருங்கள்.
1:27 PM - By ம.தி.சுதா 5

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சட்டத்தின் பிடியில் தவிக்கும் நடிகர் ஷாருக்கான் பிடித்ததும் பிடிக்காததும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
ஹிந்தித் திரையுலகம் என்றவுடன் சட்டென நினைவுக்கு வருபவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான் பிரதான இடத்தில் இருக்கிறார். இன்றும் கூட பல இளம் பெண்களின கனவு நாயகனாக வலம் வரும் ஸாருக்கானுக்கு 47 வயது கடந்து விட்டது என்று சொன்னால் யாருமே நம்பத் தயாராக இருக்கமாட்டார்கள்.
ஆப்கானிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ஸாருக்கான் 1965 ல் பிறந்தவராகும். 1988 ம் ஆண்டில் திரையுலகத்துக்குள் காலடி வைத்த இவர் King of Bollywood மற்றும் The Badshah of Bollywood என்ற பிரபல பட்டப் பெயர்களோடு அழைக்கப்படுகிறார்.
ஹிந்தித் திரையுலகத்தில் இவருக்கென்றும் பல தனி மதிப்பிருக்கிறது. உதாரணத்துக்கு இவர் தனது மனைவியான Gauri Khan தவிர்ந்த யாருக்குமே உதட்டு முத்தம் கொடுப்பதில்லை. எந்தப் பெரிய இயக்குனர் எப்படிக் கேட்டாலும் சம்மதிப்பதே இல்லை.

சரி இவரைச் சட்டம் என்ன செய்தது என்று பார்ப்போமா?

1) கடந்த வருடம் ஏப்ரல் 9 ல் ராஜஸ்தானில் இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் ராஜஸ்தான் றோயல் அணிக்கிடையிலான போட்டியில் கமரா முன்னாக பொது இடத்தில் புகைத்த குற்றத்திற்காக ராஜஸ்தான் பொலிசாரால் குற்றப்பத்தரிகையை ஏற்றிருந்தார். ஆனால் அந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா? 140 ரூபாய் மட்டுமே.
ஒரு பொது இடத்தில் புகைத்ததற்கான குற்றப்பணம் இவ்வளவும் தான் என சட்டம் நிர்ணயித்திருந்தாலும் அக் குற்றத்தைச் செய்தவர் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் உள்ளவர் என்பதை சட்டம் கணக்கிலெடுக்கத் தானே வேண்டும் என எனது நண்பரிடம் நான் வாதிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது.


2) அதன் பின்னர் மே மாதம் 16 ல் தான் அடுத்த தலையிடி வந்தது. மும்பை வன்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியை கொல்கத்த நைட் ரைடர் அணி வீழ்த்தியதன் பின்னர் நடந்த சம்பவமானது அவரை 5 ஆண்டுகள் அந்த மைதானப்பக்கமே தலை வைத்து படுக்க கூடாதென நீதிமன்றம் உத்தரவு போடுமறவுக்கு நிகழ்ந்தது.
நடந்தது என்ன?
ஷாருக்கான் தனக்கான தகுந்த ஆள் அடையாள அட்டை இல்லாமல் மைதானத்துக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டி காவலர்கள் முரண்டு பிடித்திருக்கிறார்கள். இவரும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அதற்கிவர் கொடுத்த விளக்கம் தனது குழந்தைகளுடன் அத்து மீறி நடந்ததால் தான் தான் தகராறில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. பாவம் நம்ம சாருவுக்கு 5 ஆண்டு தடை பிறந்து விட்டது.
இவ்வளவு ஓட்டையுள்ள சட்டத்தில் இந்த ஓட்டையை தேடி அலையும் சாருக்கானுக்கு பெரிய ஓட்டையாக கிடைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமும் ஆகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:52 AM - By ம.தி.சுதா 2

வெள்ளி, 15 மார்ச், 2013

பாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
       இயற்கையில் பல வகையான உணவுப் பொருட்களுக்குரிய மூலப் பொருட்கள் படைக்கப்பட்டிருந்தாலும்அத்தனையிலும் தேவையானதை தேர்ந்தெடுப்பதுடன் மட்டுமல்லாமல் தேவையான விகிதத்தில் கலந்து சுவையான உணவைக் கொடுப்பவனே சிறந்த சமையல்காரனாவான். அதே போலவே எவ்வகையான நடிகனாக இருந்தாலென்ன தகுந்த கதை தேவையான கதைக்களம் முக்கியமான இசை என அத்தனையிலும் சரியானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பவனே சிறந்த இயக்குனராக முத்திரை குத்தப்படுகிறான்.
11:27 PM - By ம.தி.சுதா 8

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வலி தந்த அப்பாவுக்காக சில வரிகள்

வருடத்தின் முதல் பதிவே அப்பாவுக்காக எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை கிடைத்தது சின்ன வருத்தமாக இருந்தாலும் எனக்கான கடமைகளை நான் சரிவர செய்தேன் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியே..

வாழ்க்கையில் ஒன்றை பெற வேண்டுமென்றால் ஒன்றை இழக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எதைப் பெறப் போகிறோம் எனத் தெரிந்த எமக்கு எதை இழக்கப் போகிறோம் என்பது தெரியாமலே நடந்துவிடுகிறது. அப்படி நடந்தது தான் எனது தந்தையின் பிரிவும்.
அவர் வாழ்வு பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் எதிர்பார்ப்புகள் எல்லை தொடாமலே போய்விட்டது.

பல விடயங்கள் முன் கூட்டியே எதேச்சையாக நடந்ததால் அவர் இழப்பு ஏமாற்றமாக அமைந்த போதும் மனதில் குறைகளை வைத்திருக்கவில்லை.  தனது இறுதிக்காலத்தில் யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்பார் அது போலவே யாருக்குமே சிறு சிரமம் கூட வைக்கவில்லை.
அப்பாவுக்கு சாய்மனைக் கட்டில் என்றால் மிகவும் பிடிக்கும். வன்னியில் நடந்த இடப் பெயர்வடன் அவருடைய கட்டிலும் தவறி விட்டது. ஆனால் அவரது பிரிவுக்கு சில நாளுக்கு முன்னர் தான் எனது சம்பளப்பணம் கிடைத்ததும் வாங்கிக் கொடுத்தேன்.
அதே போல அவரே தனது மறைவை முதலே அறிந்தது போலவே நடந்து கொண்டார். காரணம் இத்தனை வருட காலத்தில் என்னிடம் வாய்விட்டு ஒரு உணவுப் பொருளும் கேட்டதில்லை.  ஆனால் நான் வெளியூர் கிளம்பும் புகிறேன் என்றதும் தனக்கு மசாலா தோசை வாங்கித் தரும்படி கேட்டார். அந்த அன்றே வாங்கிக் கொடுத்தேன். இப்படி வீட்டார் ஒவ்வொருவரிடமும் பல விதங்களில் நடந்து கொண்டிருக்கிறார்.

ஒரு தந்தையாக எம்மை வளர்த்த முறை ஊரிலுள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகும். நான் வளர்வதற்கு முன்னர் ஊரிலே அவரைப் போல ஒரு குடிகாரனோ அடிதடிக்காரனோ இருக்கவில்லையாம். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படி ஒரு அப்பாவை நான் கண்டதே இல்லை. ஆனால் அவரது நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள் அவருக்கு பயப்படாத ஒரே ஆள் நான் தானாம். ஆனால் அவர் ஆசைப்பட்டது போலவே நாம் வாழ்ந்தது அவருக்கு என்றுமே மகிழ்ச்சியைக் கொடுத்த ஒரு செயற்பாடாகும்.
அப்பாவின் அந்தியெட்டிக் கிரியையின் போது
இல்லறப் பருவத்தின் ஆரம்ப காலத்தில் வியாபார ரீதியாக இந்திய சென்று வந்த இவர் அதன் மூலம் பல நண்பர்களைப் பெற்றுக் கொணடார்.
வாழ்க்கையில் பாதையில் சற்று விலத்திச் சென்று கொண்டிருந்த இவருக்கு எற்பட்ட நோயொன்றானது பூரண ஆன்மிகவாதியாக மாற்றியது. அதன்பின்னரான காலப்பகுதியில் செல்வச்சிநிநிதியின் சித்தர்களில் ஒருவரான முருகேசு சாமியார் அவர்களின் பிரதான சிஷ்யர்களில் ஒருவராகவும் மாறிக் கொண்டார். அதன் மூலம் சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஒரு முக்கிய தொண்டராக மாறிக் கொண்டார். சந்நிதியான் ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டியவர்களில் அப்பாவும் ஒருவராகும்.
அதன் பின்னரான பொதுவாழ்க்கையானது இவரை இன்னும் பலருக்கு அறிமுகமானவராக மாற வைத்தது.
1985 ன் முற்பகுதிகளில் ஒரு பேருந்து உரிமையாளராகவும் தனது வாழ்க்கையை நகர்த்தியிருந்தார்
தமிழரசுக் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரான இவர் அதன் மூலம் தன் சார்ந்த மக்களுக்கும் பல உதவிகளை செய்திருந்தார். இவரது கிராமமான சமரபாகு தேவன் குறிச்சிக்கு (தற்போது இலக்கணாவத்தை எனப்படுகிறது) முதன் முதல் மின்சாரம் வருவதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவரில் இவர் பெயரும் அடங்கியுள்ளது.
அதன்பின்னரான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரஜைகள் குழு (சிட்டிசன் கொமிட்டி) வில் உறுப்பினராக இருந்தார். இவரது பொது வாழக்கை சம்பந்தமான பல விடயக் குறிப்புகளை மதிப்பிற்குரிய பழ நெடுமாறன் அவர்கள் தனது ஈழ வருகை சம்மந்தமான புத்தகத்தில் எழுதியிருந்தார்.

இவரது பொதுவாழ்க்கையில் பெயெரெடுக்க வைத்த சம்பவங்களில் ஒன்றாக அமைந்த விடயம் 1993 ன் பிற்பகுதிகளில் வன்னிக்கான தரை வழிப்பாதை தடைப்பட்டிருந்த நேரம் பார ஊர்திகளை அங்கிருந்து இங்கு கொண்டு வருவதற்காக மண்ணெண்ணேய் பரல்களைக் கொண்டு இவர் திட்டமிட்டுக் கொடுத்த ஓடம் (வாச்சி) இவரது மதிப்பை மென்மேலும் உயர வைத்திருந்தது.
வெளியூரிலிருந்து அப்பாவுக்காக வாங்கி
வைத்திருந்த சரங்களும் அம்மாவுக்காக
வாங்கி வைத்திருந்த பட்டுச் சேலையும்
இன்று அநாதரவாக....
தனது இறுதிக் காலங்களில் அமைதியை பேண விரும்பிய காரணத்தால் பல விடயங்கில் இருந்து ஒதுங்கி வாழத் தலைப்பட்டார்.
அவரது மனதில் இறுதிவரை இருந்தும் நிறைவேறாமல் போன பெரும் ஆசை 22 வருடங்களாக பார்க்க முடியாமல் இருக்கும் அண்ணனை சந்திக்க முடியாமல் போய் விட்டதே என்பது தான். அவர் ஆசையோடு எடுத்து வைத்திருந்த கடவச் சீட்டை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் என்னையாறியாமலே அழுகை வந்து விடுகிறது.
ஒரு மனிதனின் வாழ்வின் மதிப்பு அவனது இறுதி நாளில் கூடும் கூட்டத்தில் தான் தெரியும் என்பார்கள். அதே போல எந்தவொரு உயர் கல்வியோ பதவியோ வகிக்காத இவருக்காக கூடிய மக்களே அதற்கு சாட்சியாக அமைந்தார்கள்.

 வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்.


மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top