Featured Articles
All Stories

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அவளைப் பிரசவித்தேன் - என் பத்திரிகைக் குறுங்கதை

அவளைப் பிரசவித்தேன்
நன்றி - தினக்குரல்

அவளைப் பிரசவித்தேன்….


காரை நான் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியா வின் வலி வெளிப்பாடுகை சற்று அதிகமாகிக் கொண்டிருந்தது.
”தம்பி இன்னும் கொஞ்சம் வேகமா போறிங்களா” சொன்னது மாமி.
பின் இருக்கையில் பற்களை இறுக்கிக் கடித்தபடி மாமியின் கைகளை இறுகிப் பற்றிக் கொண்டு நித்தியா கத்திக் கொண்டிருந்தாள்.
“வருண் ப்ளீஸ் வேளைக்கு போடா”
வேகமாகவே போய்க் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியாது தான் வழமையை விட சற்று வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியாவுக்கான படபடப்பு ஒரு பக்கம், பாதைக் கவனிப்பிலான படபடப்பு ஒரு பக்கம் என என் மூளை உச்ச வேலையில் இயங்கிக் கொண்டிருந்தது.
முதலாவது குத்து எழும்பும் போது தான் மாமி எனக்கு போன் பண்ணியிருந்தார். நித்தியாவின் பெரு மூச்சொன்று பின்னுக்கிருந்து கேட்டது. இரண்டாவது குத்தும் கடந்து விட்டாள் என்பதை ஊகித்துக் கொண்டேன்.
இருவரும் அவசரப்படுத்துகிறார்கள் என்பதற்காக என் நிதானத்தில் இருந்து நான் தவறத் தயாரில்லை.
வாசலுக்குள் காரை நுழைக்கிறேன் தள்ளு வண்டிலுடன் ஊழியர் தயாராகிக் கொள்கின்றான்.
“மாமி நீங்கள் சேர்ந்து போங்கோ நான் bag எடுத்திட்டு வாறன்”
அடுத்த குத்துக்கு முதல் போக வேண்டும் என்ற அறிவுறுத்தல் நித்யாவுக்கு தெரியும் ஆனால் நான் பையுடன் வர பிந்தி விடுமோ என்ற ஒரு ஏக்கப்பார்வை ஒன்றுடன் நகரும் கதிரையில் போய்க் கொண்டு இருந்தாள். மணிரத்தினம் படத்தில் ரயில்களுக்கூடாகக் கடக்கும் நகரும் கமரா போல அவள் பார்வை என்னையே சுற்றிக் கொண்டிருந்தது.
ஆசுவாசமாய் கண்களாலேயே நான் வருகிறேன் என சின்ன சைகை கொடுத்தேன். சின்னதாய் ஒரு புன்னகை அவள் உதடுகளில் வெளிப்பட்டது. அடிக்கடி பார்த்தலுத்தது தான் ஆனாலும் அந்த புன்னகையில் இருக்கும் காந்த ஈர்ப்பு ஒன்று இழுத்தே தீரும்.
நான் பையைக் கொடுத்து விட்டு அறையின் வாசலில் காத்து நிற்கிறேன். உள் பதிவு வேலைகள் முடித்துக் கொண்டு அதே கதிரையில் அவளை இருத்தி லேபர் அறைக்கு அழைத்து போக வெளியே வந்தார்கள். அருகே வந்து கதிரையை நிறுத்திய மருத்துவமாது file எடுக்க என நினைக்கிறேன் உள்ளே போனார்.
“வருண் பிரச்சனை ஒன்றும் வராது தானே”
”ச்சே என்ன பழக்கம் குழந்தை மாதிரி” நித்தியாவை தேற்ற நான் சொல்லிக் கொண்டாலும் அவளின் விடயத்தில் நான் தான் அதிகம் பயந்தவன்.
”சீசர் அப்படி எதுவும் செய்வாங்களா”
”இல்லடி உனக்கு குழந்தை சரியா தானே இருக்கு பயப்பிடாதை”
”இல்லை ஏதோ ஒரு பயம் இருக்கு, pray பண்ணுறியா ”
தலையசைத்துக் கொண்டேன். என்னிடம் அவள் ஒன்றை உரிமையுடன் கேட்கிறாள் என்றால் ஒன்றில் என் குழந்தையாகக் கேட்பாள் இல்லை கண்டிப்புடனான என் தாயாகக் கேட்பாள்.
அவள் கதிரையின் கை பிடியை விரல்களால் சுரண்டிக் கொண்டாள். அவளுக்கு என்னில் எவ்வளவு தான் உரிமை இருந்தாலும் என் அன்பையோ ஸ்பரிசத்தையோ கேட்டுப் பெற்றுக் கொண்டதில்லை. கதிரைப் பிடியுடன் அவள் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.
தலைமுடி இழுத்து ஒரு துணியால் கட்டப்பட்டிருந்தது. அவள் வழமைக்கு இது எடுப்பில்லைத் தான் ஆனாலும் அவளது அழகிய நெற்றி எல்லாக் குறையையும் ஈடு செய்திருந்தது.
மறு கையால் தலையை மெதுவாய் வருடி விட்டுக் கொண்டேன்.
என் கண்கள் எதை? எப்போது? எப்படி? பார்க்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த சூட்சும ரகசியமாகும். விளங்கிக் கொண்டவள் மீண்டும் ஒரு புன்னகை உதிர்த்தாள். அவளுக்கும் தெளிவாகவே தெரிந்தது தான் அவள் எப்போது எந் நிலையில் இருந்தாலும் அதில் ஒன்றையாவது அழகாய் நான் ரசிப்பேன்.
அறைக்குள் கதிரை செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன். மாமியும் பட படப்புடன் என்னுடனேயே நின்று கொண்டார்.
சில நிமிடங்கள் கடந்திருந்தது.
ஆழமாய் ஒரு வலிக்குரல் கேட்க ஆரம்பித்தது.
ம்ம்.. நித்யா தான். என்னால் கேட்க முடியவில்லை. மாமிக்கு அனுபம் என்பதால் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு இப்போது எந்தக் கடவுளை கேட்பது என்று தெரியவில்லை. கல்யாணத்துக்கு முதல் வரை தேவையானதை கடவுளிடமே கேட்டேன். நித்தியா வந்த பிறகு அவளிடம் மட்டும் தானே கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அவளுக்காக கேட்க சொன்ன போதும் அவள் தான் நினைவுக்குள் நின்றாள்.
கைகள் எல்லாம் பட படக்க ஆரம்பித்திருந்தது. காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. கல்யாணத்துக்கு பிறகு கூட நித்தியா என்னிடம் அழுதிருக்கிறாள் தான் ஆனால் இப்படி அழுவதை முதன் முதல் என்னால் கேட்க முடியவில்லை.
”தம்பி கொஞ்சத்துக்கு வெளிய போய் நிண்டுட்டு வாங்கோ”
மாமிக்கும் என்னைப் பற்றி வடிவாகத் தெரியும். உறவு முறையில் தான் மாமியாக இருந்தாலும் நித்தியாவுக்கு இருந்த அதே உறவு தான் என்னிலும் அவருக்கு இருந்தது.
திருப்பி எதுவும் பேசவில்லை விறு விறேன்று படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கண்களில் முட்டிப் போய் இருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு திரும்பிப் பார்த்தேன் அவரது பார்வை மட்டத்துக்கு கீழ் இறங்கியிருந்தேன்.
இருக்க மனமில்லை ஒரு வட்டமடித்துக் கொண்டிருக்கையில் பல நிமிடங்கள் கடந்திருந்தது. நெஞ்சின் பட படப்பு குறையவே இல்லை.
பொக்கெட்டில் இருந்த போன் சிணுங்க ஆரம்பிக்கவே கையில் எடுத்தால் மறுமுனையில் மாமி…
”வாங்கோ தம்பி அறைக்கு கொண்டு வந்திட்டினம்”
”நித்தியா…… ”
அவர் சின்ன நக்கல் சிரிப்புடன்.
”அப்பாவானவர் பிள்ளை என்ணெ்டு கேப்பமெண்டில்லை சரி வாங்கோ வாங்கோ உங்களைத் தான் தேடுறாள்”
அவர் இதைச் சொல்லி போன் நிறுத்தும் போதே நான் வாசலுக்குள் நுழைந்திருந்தேன்.
நித்தியா களைத்து முகம் எல்லாம் வாடிப் போய் படுத்திருந்தாள். தூரத்தில் பார்க்கும் போதே போகும் போது தலைக்கு கட்டப்பட்டிருந்த துணி இல்லை என்பதைக் கண்டு கொண்டேன். குடும்பி முடியப்பட்டிருந்தது. அதே அவள் பட்ட வேதனைக்கு எனக்கு சாட்சியமாக்க போதுமானதாக இருந்தது.
ஓடிப் போய் அவள் கன்னங்களில் தான் கையை வைத்துக் கொண்டேன். தன் கையால் கன்னத்தோடு சேர்த்து அழுத்தி அணைத்துக் கொண்டு மறு கையால் என் கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை குழந்தை பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் நான் அப்பாவாகியிருக்கிறேன் என்ற நினைவே எனக்கு வந்தது. அந்த பிஞ்சு விரல்களுக்கு அருகே என் விரல்களைக் கொண்டு போனேன். இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாயை சுளித்துக் கொண்டிருந்தது அந்த அழகுப் பதுமை.
”பார் அவளை இந்தப் பாடு படுத்திப் போட்டு அப்பரைக் கண்டதும் அவற்ற கையை பிடிச்சிட்டான்”
அட எனக்கு பொடியன் பிறந்திருக்கிறானா? என் படப்படப்பில் இதெல்லாம் சிந்திக்க நித்தியா விடவில்லையே… சொன்ன மாமியை நிமிர்ந்து பார்த்தேன் அவரது கண்ணும் கலங்கியிருந்தது. என்னிடம் மகளைக் கொடுக்க தயங்கியதை நினைத்தாரோ தெரியவில்லை.
அறையை விட்டு மெதுவாக வெளியேறிக் கொண்டார். எம் சுதந்திரத்தைக் கெடுக்க கூடாது என்று தான் போகிறரோ அல்லது வெளியே போய்த் தான் அழப் போகிறாரோ எனத் தெரியாது ஆனால் போனார்…
”டேய் உன்னை ஏமாத்திட்டனா?”
”இல்லை”
”ஏன் உனக்கு பொம்பிளைப்பிள்ளை தானே வேணும் என்று என்னோட சண்டை பிடிப்பாய்”
”எனக்கு இரண்டாவது பிள்ளை பொடியன் தான் வேணும் என்றும் சொல்லுறனான் மறந்திட்டியா”
அவள் கேள்விக்கு முரண் பதிலால் ஒரு பார்வை பார்த்தாள். குனிந்து அவள் அழகிய நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டேன்.

இப்போது விளங்கியிருக்க வேண்டும் என் பிடரி முடியைக் கோதி தன் நெற்றியால் ஒரு தடவை முட்டி விட்டுக் கொண்டாள்.

12:19 PM - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நா.முத்துக்குமாரின் பாடல் உருவான கதை - 2

வணக்கம் உறவுகளே?


சில பதிவுகளை பதிய எண்ணிப் பதியாமல் போனாலும் பதிய எண்ணும் காலம் அவர்கள் கொடுத்த அழுத்தமான காலமாகவே இருக்கிறது.

இப்பாடல் உருவான கதை என எப்போதோ எழுத என நினைத்து விட்டு எழுத தவற விட்டிருந்த என்னை அக்கவிஞரின் மரணமே எழுத நினைவூட்டியுள்ளது.

தமிழ் கவிஞன் என்றால் எம் மனக்கண் முன் நிற்கும் முன்னணி கவிஞரில் ஒருவராகவும் முத்து அண்ணா என உரிமையோடு எல்லோராலும் அழைக்கக் கூடியதுமாக இருந்த நா. முத்துக்குமார் அண்ணன் தன் தமிழுக்கு உயிர் கொடுத்து விட்டு தன்னுயிரை முடித்துக் கொண்டு விட்டார்.

அவரது அத்தனை பாடல்களும் மனதுக்குள் நிற்பவை தான் அதில் அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரால் எழுதப்பட்ட அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை எப்படி உருவாக்கினார் என நான் அறிந்ததை சுருக்கமாகவே தருகிறேன்.

ஒரு ஆணின் மேல் பெண்ணுக்கோ பெண்ணின் மேல் ஆணுக்கு காதல் வயப்பட்டால் எதிர்ப் பாலினத்தவர்களது நல்லது கெட்டதை ஒரு தராசில் போட்டு நிறை பார்த்துக் கொள்வார்கள். அதில் நல்ல பக்கம் தாழ்ந்திருந்தாலே காதல் என்பது உணர்வுபூர்வமாய் பரிணமிக்கும்.
இத்திரைப்படத்தில் நாயகனானவன் நாயகியின் அழகை ஒரு தராசில் போடுகிறான் அதை அழகாக வரியாக்கி இசைக்குள் நுழைத்து அத்தனை பேர் மனதையும் வருட வைத்ததில் பெரு வெற்றி கண்டவர் அமரர் நா. முத்துக்குமார் அவர்களாவார்.

சரி வரியை எப்படிக் கோர்த்தார் என்றால் அது கற்பனை வரியல்ல என அவரே ஒரு செவ்வியில் கூறியிருந்தார் எப்படியென்றால் தனது திருமண அழைப்பிதழில் தன் வாழக்கைத் துணை பற்றி வரைந்து வைத்திருந்த வரிகளைத் தான் அங்கடித் தெருவில் இசையால் உயிர் கொடுக்க வைத்து எம்மையும் உணர்வூட்டியிருக்கிறார் பாடலாசிரியர்.

அவ் வரிகள்.......

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் எப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன். முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை
இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

அவள் அப்படி…

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுப்பதில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்குவதில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
அவள் கைபிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தமன்றி வேறு எதுவும் இல்லை
வேறு எதுவும் இல்லை

அவள் அப்படி…

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவர் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் அன்றி வேறு எதுவும் இல்லை
சொந்தம் அன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி…

எமக்கு தமிழால் உணர்வளித்த அச் செம்மல் எம் மனதில் உயிராய் என்று வாழ அவர் வரிகளே போதும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
8:34 PM - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top