வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
நலம் எப்படி?
தமிழ் சினிமாவின் எல்லை வீச்சங்கள் என்பது அளவுகளற்று நீண்டிருக்கும் வேளையில் ரசனை வட்டங்களும் பலருக்கு பல விதத்தில் பிரிந்து கொள்ள என் போன்ற சிலர் கணிதவியல் தொடையில் வரும் இடைவெட்டுப் போல் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என ஆகும்படி ஆகிவிட்டது.
commercial, entertainment என்று படங்கள் ஆட்சி செய்யும் காலத்தில் என் போல் அழுத்தங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்காக அப்பப்போ சில படங்கள் வந்து போவதுண்டு. ஆனால் அதிலும் ஆர்ப்பாட்மில்லாமல் அடக்கிவாசிக்கப்பட்ட படங்கள் பெற்ற வெற்றியளவுக்கு கொக்கரித்து ஊரைக் கூட்டிக் கொண்டு வந்த படங்கள் சாதிப்பது என்பது மிக அரிது.
விண்ணைத் தாண்டி வருவாயாவையே ரசிக்காத நண்பர்கள் இருக்குமிடத்தில் இப்படியொரு படத்துக்குப் போய் இந்தளவு பில்டப் கொடுத்தது கௌதம்மேனன் விட்ட பெரிய தவறு என்றே நான் சொல்வேன். ஆனால் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதற்கு பல இடத்தில் முத்திரை குத்தியிருக்கிறார்.
வி.தா.வருவாயாவில் சொல்ல மறந்ததைத் தான் இங்கே சொல்லியிருக்கிறார் என நையாண்டி செய்யப்பட்டாலும் இரு காதலர்களுக்கிடையிலான உண்மையான உணர்வுப் பரிமாற்றத்தை அப்படியே படைத்திருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
குழந்தையாய் இருக்கும் போது எதிர்பார்ப்பிகள் குறைந்தநிலையில் தோன்றும் காதல் எப்படியானது
பள்ளிப் பருவத்தில் காம உணர்வுகள் முழுமை பெறாத வயதில் உண்டாகும் காதல் எப்படியானது?
உயர்கல்விக்காலத்தில் காமத்தைக் கடந்த நிலையில் எதிர்காலத் துணை ஒன்று எப்படி இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உண்டாகும் காதல் எப்படியானது?
எல்லாம் கடந்து வேலையானபின் சாகும் வரைக்குமான மனைவி என்ற சொத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படியானது என்பதை வாழ்க்கையின் கட்டங்களை ஆழத்தோடு உணர்த்தியிருந்தாலும் கௌதம் மேனன் எங்கே தவறிழைத்தார் என்பது அவருக்கே தெரியுமோ தெரியாது..
அதனுடன் அவர்களது காதலுக்கான கால ஓட்டத்தை சமந்தா கையில் மாறிக் கொண்டிருந்த கைப்பேசியால் சூசகமாகக் காட்டிக் கொண்டே இருந்தார். அத்துடன் அவர்கள் கடைசியாக பிரியும் போது கதைத்த மொட்டைமாடியில் இறுதிக் காட்சியில் சேரும் போது பார்த்தால் பல டிஷ் அன்ரெனாக்கள் முளைத்திருக்கும் இப்படி அத்தனை காட்சிகளிலும் கவனம் செலுத்தி கவர்ந்த கௌதம் ஒரே ஒரு கேள்வியையும் மனதில் எழ வைத்தார் இருவரும் அலைபாயுதே பார்ப்பது போல ஒரு காட்சி ஆனால் 4 வது வருடத்தில் சுனாமி வந்ததால் சமந்தா நற்பணிக்கு போய்விடுகிறார்....
இசைத் தோல்விக்கான காரணங்கள்
கௌதமின் குரலில் பாடப்பட்ட நீ தானே என் பொன்வசந்தம் பாடல் காட்சியோடு அப்படியே ஒத்துப் போனதால் ஓரளவு ரசிக்க முடிந்தது ஆனால் இளையராஜா இசை பற்றி கௌதமே ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஏதோ சொல்ல வந்து பிடியைக் கொடுத்திருந்தார். இளையராஜாவிடம் இசையமைக்கச் சொல்லி கேட்க போய் தனது மடிக்கணனியில் இருந்த படத்தைப் போட்டுக் காட்டியதும் அவர் பூரண சம்மதம் சொன்னாராம்.
அதன் பிறகு பேட்டியில் சொல்கிறார் ஒரே நாளில் எவ்வளவு மியூசிக் போட்டுத் தள்ளினார். தான் தடுக்காவிடில் ஒரு நாளிலேயே முழு கொம்போசிங்கும் முடித்திருப்பார் என்றார். இதிலிருந்த தெரிவது என்னவென்றால் அவர் போட்ட இசை அனைத்தையும் இவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் இசைத் தேர்வே செய்யவில்லை போலும்.
ஒரு இளமையான காதலுக்கும் காதலர்க்கும் இடையே இசைஞானியின் இந்த பழுத்த குரலில் ஒரு பின்னணிப் பாடல்கள் தேவையா என எண்ணுகிறேன்.
இருந்தாலும் ”காற்றைக் கொஞ்சம் நிக்கச் சொல்லி” பாடல் முணுமுணுக்க வைக்கிறது.
சமந்தா எவ்வளவு தான் அழகாயிருந்தாலும் அவர் குரலில் எந்தவொரு இளமையும் இருப்பதாகவே தெரியவில்லை.
ஜீவா தனது இளமையை ஒவ்வொரு காட்சிக்கும் அதற்கேற்றது போலவே மாற்றியமைத்துக் காட்டியிருக்கிறார்.
சந்தானம் நகைச்சுவை செய்திருந்தாலும் மெதுவாய் நகர்ந்த செல்லும் கதையோட்டத்தின் ஆரம்பத்தில் வந்த நகைச்சுவைகள் மட்டுமே மனதில் நிலைத்திருக்க அதன் பின்னர் ஒரு துணைநாயகனாக மாறிவிடுகிறார்.
மொத்தத்தில் நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படமானது பொன்வசந்தமாக இல்லாவிடினும் காதலர்களும், புதிதாக திருமணம் செய்தவர்களுக்கும் வசந்தமே
குறிப்பு- சில காட்சிகளில் ஜீவாவின் வலது பக்க காதுச் சோணை அறுபட்டிருப்பது தெரிகிறது யாருக்காவது காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
9 கருத்துகள்:
கருத்துரையிடுக