Featured Articles
All Stories

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)




adulterers 2015 
அறிமுகம்
ஹொலிவூட் படமான adulterers ஆனது வயது வந்தோருக்கான படமாகும். வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒருவன் தனது முதலாம் வருட திருமண நாளைக் கொண்டாட அவசர அவசரமாக பரிசுடன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்.
ஆனால் அவன் மனைவி இன்னொரு ஆடவனுடன் உறவில் இருப்பதை நேரில் பார்த்து விடுகிறான். சுவாரசியமான இறுதிக்காட்சிக்கான திரைக்கதை நகர்தலுடன் 80 நிமிடங்களைக் கொண்ட இப் படம் நகர்கிறது.
பதிவு விடயம்
இதில் அதிசயத்தோடு நான் ரசித்த விடயம் அந்த நாயகனின் கைகளில் குத்தப்பட்டிருந்த பச்சையாகும். பச்சை குத்தும் கலாச்சாரம் இப்போது வெகுவாக நம்மவர் இடையே அதிகரித்திருக்கும் இந்நிலையில் ஒப்பீட்டளவில் அதிகமானவர் மேற்கத்தைய பாணிணை நோக்கியே விரும்பி ஓடுகிறோம்.
ஆனால் இப்படத்தின் நாயகன் சுத்த தமிழில் அழகாகப் பச்சை குத்தியிருக்கிறான். ஒரு ஹொலிவூட் படத்தில் இதைக் கண்டது எனக்கு சந்தோசமாகவும் வியப்பாகவும் இருந்தது. அதுவும் நேர்த்தியான எழுத்துக்களில் அவை இருந்தன.

உடனே படத்தின் பின்பகுதி போய் பெயர் விபரங்களைப் பார்த்தால் தமிழ் பெயர்கள் எதையும் காணக்கிடைக்கவில்லை ( சிலவேளை கிறிஸ்தவ மதம் சார்ந்த தமிழர்கள் யாராவது பணியாற்றியிருந்தால் பெயரில் கண்டு பிடித்திருக்க முடியாமல் போயிருக்கலாம்.)
ஒரு கையில் ”வாழ்க்கை ஒரு பரிசு” என்ற வாசகமும் இன்னொரு கையில் ”இறுதியில் தொடங்கி” என்று முடிகிறது.




தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
2:29 PM - By ம.தி.சுதா 1

திங்கள், 22 ஜூலை, 2019

இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்

இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன்.

தமிழிழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கேட் அணியாகும்.
யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதை விட பாலிநகரில் எனது ஆரம்ப கால குருவான தவராஜா சேரால்  ஒரு அணியும் முல்லைத் தீவில் சென்யூட் மற்றும் வித்யா அணிகள் பலம் வாய்ந்தவையாக இருந்தன.
தேசிய மட்டத்தில் இடம்பெறும் மிக முக்கிய போட்டிகளாக 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டியான சங்கர் கிண்ணமும் 20 ஓவரைக் கொண்ட T20 போட்டியான ரமணன் கிண்ணமும் மற்றும் NEC இன் T20 போட்டித் தொடரும் அடங்கும்.
கிளிநொச்சியில் 2007 இன் ஆரம்பங்கள் வரை இளந்தென்றல் அணியே கொடிகட்டிபறந்தது அதன் நிர்வாகப் பொறுப்பை புலனாய்வுத்துறையின் தலமைச் செயலகத்தைச் சேர்ந்த பிரசன்னா கவனித்துக் கொண்டார். அவர்களது பலத்தின் காரணமே கர்ண கொடூரமான ஆரம்ப வேகப்பந்து விச்சாளர்கள் தான்.
1) செந்தாமரை (எ) செந்தா
2) ராஜ்குமார் (புலிகளின் குரல் செய்திவாசிப்பாளரான அன்பரசியின் கணவர்)
அதே 2007 காலப்பகுதியில் தான் எமது மருத்துவக்கல்லூரி அணி வைத்தியராக இருந்த அமுதனால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பொருட்கள் சேகரிப்பதற்கு மும்முரமாக இருந்தது சிவதரண்ணா  தான். மென்பந்து அணியாக இருக்கும் போது கற்கைகளுக்காக நான் அணித்தலைமையில் இருந்து விலத்திய பின் சிவதரண்ணா தான் அணியை வழி நடத்தினார் பின்னர் கடினப்பந்தான பின் என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பப் போட்டிகளிலேயே இளந்தென்றல் அணியை வெல்லாவிடினும் அவர்களுக்கு அச்சுறுத்தலாகப் போராடினோம். 
எங்கள் ஆட்டம் எமது தலைமை மருத்துவரும் கிரிக்கேட் வெறியருமான சுஜந்தன் டொக்ரரை கவர எமது அணியை நிரந்தரமாக்குவது என்றும் அணி வீரர்களின் கடமைகளுக்கு பிரதியீடாக ஏனையவரை அனுப்புவதும் என முடிவாகிறது. அதற்கு கற்கை நேரங்களை மாற்றியதுடன் வாமன் டொக்ரரும் மலரவன் டொக்ரரும் தமது கடமை தவிரந்த ஏனைய நேரங்களில் எங்களோடு செலவிட்டார்கள் பிற்பகுதியில் தூயவன் டொக்ரரும் இசைவாணன் டொக்ரரும் இணைந்து கொண்டனர்.
நட்புரீதியான ஆட்டம் ஒன்றில் இளம்தென்றல் அணியை வெல்கிறோம் அந்த வெற்றி மேல்மட்டங்கள் வரை கடத்தப்பட எம் நிகழ்வு ஒன்றுக்கு வந்த தமிழ்ச்செல்வன் அண்ணை மேலிடத்தின் வாழ்த்தை நேரடியாகப் பரிமாறிச் சென்றார்.
காலை , மாலை என தொடர் பயிற்சிக்கு நேரம் அளிக்கப்பட்டாலும் இடை நேரத்தில் கற்கையும் அது தவிர்ந்த நேரத்தில் மருத்துவக் கடமைக்கும் என ஒரு சுற்றுவட்டத்தில் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தோம். காரணம் அக்காலப்பகுதியில் பள்ளமடுப் பகுதியிலும் முகமாலையிலும் மணலாறிலும் உக்கிர சண்டை நடந்து கொண்டிருந்த நேரமாகும்.
கிளிநொச்சி முத்தவெளி விளையாட்டு மைதானத்தில் சங்கர் கிண்ண ஒருநாள் போட்டிகளின் தெரிவு அணிக்கான கிளிநொச்சி மாவட்ட இறுதிப் போட்டியில் இளந்தென்றல் அணியை எதிர் கொள்கிறோம். நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரமது. அதை வென்றால் தேசிய மட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது அணியான வித்தியாவை எதிர் கொண்டு இலகுவாக இறுதிப் போட்டிக்கு வரலாம்.
ஆனால் 8 ம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த தர்சண்ணா  அடித்த அரைச்சதத்தால் அப் போட்டி தோற்கிறோம்.
அணித்தலைவரான நான் தோல்விக்கான முழுக் காரணத்தை ஏற்றாலும் அன்று அமுதன் டொக்ரரிடம் வாங்கிய தண்டனை என்பது மிகுதி 10 பேருக்குமான ரோசத்தைக் கிளறுவதற்காகவே எனக்கு வழங்கப்பட்டது.
அடுத்த ஒருவாரத்தில் சென்யூட் உடனான அந்த அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கிறோம். முல்லைத்தீவின் சம்பியன் அணியான சென்யூட் ஐ வென்றால் தான் இறுதிப் போட்டியாகும். அதன் தலைவர் ஹாட்லிக் கல்லூரியின் தலைவராக இருந்த கோகுலன் ஆவார். தோற்ற எம் அணி மைதானத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற தண்டனையும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குரிய இன்னொரு சோடி உடைகளும் பாடப்புத்தகங்களும் அளிக்கப்படுகிறது. குளிப்பதற்கும் கழிவுக் கடன் கழிப்பதற்கு மட்டும் விளையாட்டுத்துறையின் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் 3 நேரச் சாப்பாடும் மைதானத்துக்கு தரன் மூலம் வரும்.
காலை 6-11 வரையும் பிற்பகல் 3-6 வரையும் பயிற்சி இடை நேரத்திலும் இரவிலும் மைதானத்தில் தான் கற்கை. இத்தண்டனைக்குரிய காரணம் எமக்காக கடமையேற்ற சக மாணவருக்கு நாம் கொடுத்த பரிசான தோல்வி என்பதை எவரும் ஜிரணிக்கவில்லை.
ஆனால் அடுத்தவார அரையிறுதியில் சென்யூட் அணியை வெல்கிறோம். ஆனால் மறுபக்கம் தேசிய இறுதிப் போட்டிக்கு மீண்டும் இளந்தென்றல் வந்தாலும் சென்யூட் உடனான வெற்றி எம்மை மைதானத்தில் இருந்து விடுதலை செய்கிறது. அவ்வெற்றிக்கும் மேலிடத்தில் இருந்து பாராட்டுக் கிடைக்கிறது. இறுதிப் போட்டியில் இளந்தென்றலை வென்று அவர்களிடம் இருந்த கிண்ணத்தை பெறுகிறோம்.
NEC இன் T20 இன் தொடரின் ஆரம்பத்தில் எனக்கு காலில் ஏற்பட்ட என்பு வெடிப்பால் உதவித் தலைவராக இருந்த நிரோஷ் அணியை வழி நடத்த ஆரம்பிக்கிறான்.
அந்நேரம் எங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கிறது. திருகோணமலையில் இருந்து இலங்கை A அணியின் குழுவுக்குத் தெரிவாகி பின் போராட்டத்தில் இணைந்திருந்த அருண் அண்ணையை அணிக்குள் அனுப்பவுதற்கான அனுமதியை தலைமைச் செயலகம் கொடுக்கிறது. அணியின் பலம் அதிகரிக்கிறது. அதன் பின் ரொசான், பார்த்தி  , அமலன் என புதிய வீரர்கள் உள்வாங்கப்பட அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பல வீரர்கள் வெளியேறி மருத்துவக் கடமையில் இணைந்து கொள்கிறார்கள்.
(சிவதரன் அண்ணை , கிரி , அரவிந்தன் , மயிலழகன் , சபேஷ் , ஜெயசீலன் , அசோக் என ஒரு பட்டியலே உள்ளது)
அதன் பின் NEC இன் T20 இன் லீக் ஒன்றிலும் இறுதிப் போட்டியிலும் இளந்தென்றலை வெல்கிறோம். அவ் இறுதிப் போட்டிக்கு அணி மீண்டேன் ஆனா அவ் இறுதிப் போட்டிக்கு எந்த அணியிலுமே நடக்காத ஒன்று நடந்தது. இருவர் அணித்தலைவராக செயற்பட்டோம்.
அந்த போட்டியில் நான் எடுத்த 4 கடுமையான பிடிகளுக்காகவும். இறுதி விக்கேட்டான சதீசை மட்டும் வைத்துக் கொண்டு செந்தா அண்ணா வீசிய போட்டியின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்தைப் பெற்று அணியை வெற்றி பெற வைத்ததற்காகவும் சிறந்த ஆட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டேன்.
மருத்துவப்பிரிவின் பொருப்பாளரான ரேகா அண்ணை தலைமையின் பாராட்டுடன் நேரடியாக வருகிறார். அவர் ஒதுக்கிய பணத்திலேயே அன்றைய ஐஸ்கிரீம் விருந்து வீரர்களுக்கு கொடுக்கப்பட்டாலும். ஒத்துழைத்த கல்லூரி மணவர்களுடன் A9 விடுதியில் பெரிய விருந்தளிக்கப்படுகிறது. எமது அணிக்கு இந்தளவு முன்னுரிமை கொடுக்கப்பட்டதற்குக் காரணம் எல்லோரும் சராசரி 22 வயதை கொண்டவர்கள். அதில் 8 வேகப்பந்து வீச்சாளர்கள். 9 பேர் சகலதுறை வீரர்கள். இந்த அணி தமிழீழ தேசிய அணியல்ல ஆனால் அப்படி ஒன்று உருவாகுவதற்கு இதில் உள்ளவர்களின் பயமே இல்லாத அந்தத் துணிவு முன்னுதாரணமாக இருக்கும் என நம்பினர்.
காரணம் பயிற்சியின் போது சுஜந்தன் டொக்ரர் இதைத் தான் சொல்வார். ”லேதர் போல் என்பது ரவுண்ஸ் அல்ல அதனால் உங்களைத் துளைக்க முடியாது அதால பயப்படாதிங்கோ” இந்த வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறது என இப்ப புரியாது ஆனால் சண்டைக்குள் குண்டு துளைக்கும் என தெரிந்தே இருப்பவர்களுக்கு இந்த துளைக்காத குண்டில் என்ன பயம் வந்துவிடப் போகிறது.
இவை எல்லாம் வரலாறுக்காக கூறினேன்.
இனி சொல்வது தான் மேலிடத்தின் தூர நோக்காகும். கேணல் ரமணன் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் ஆரம்பிக்க இருந்த நிலையில் இராணுவம் ஒரு பக்கம் மல்லாவிக்கும் முழங்காவிலுக்கும் வந்து விடுகிறது. அதனால் போட்டித் தொடரை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரான ராஜா அண்ணா தலைமைச் செயலகத்துக்கு அறிவிக்கிறார். ஆனால் அங்கிருந்து கிடைத்த பதில் நாட்டிற்கு இதுவும் தேவையானது தான் போட்டித் தொடர் நடக்கட்டும் என்பதே.
ஆனால் கடமைகளுக்காக நானும் , கேசவனும் , சதீசும் சண்முகராஜா டொக்ரரால் முள்ளியவளை அழைக்கப்பட்டோம். அருண் அண்ணை சண்டை அணிக்குள் போன இடத்தில் வீரச்சாவடைந்து விடுகிறார். மற்றவர்களும் வெவ்வேறு பக்கம் கடமை நிமித்தம் சென்று விட போரும் உக்கிரமாக அந்த கனவு அணி உடைந்து போகிறது. அதன் பின் அமலனும் தலையில் ரவை ஒன்று பாய்ந்து இறந்து போகிறான்.
இலங்கை தேசிய அணியில் தமிழருக்கு இடம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஏன் தலைவரின் சிந்தனையை பின்பற்ற தவறுகிறோம்.
எம் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அணியை உருவாக்கி போட்டிகளை வைத்து ஒரு மாகாண அணியை உருவாக்குவோம் அதைக் கொண்டு அத்தனை சிங்கள கழகங்களுக்கும் அடிப்போம். ஏன் வெளிநாட்டுக் கழகங்களுக்கும் போய் அடித்து எம்மை நிருபிப்போம். அயர்லாந்தைச் சேர்ந்த இயான் மோகனையும், இந்தியாவைச் சேர்ந்த நசீர் குசைனையும் அணித்தலைவராக்கிய இங்கிலாந்து அணி ஒரு ஈழத்தவனை அணிக்கு எடுக்காதா ? துரை சிங்கத்திற்கு இடம் கொடுத்த கனடா அணி எம்மவருக்குக் கொடுக்காதா ?
எல்லாவற்றுக்கும் முதல் சென் பற்றிக்ஸ் இல் மட்டும் புல்தரை ஆடுகளத்தை வைத்துக் கொண்டு தேசிய அணிக்கு ஆசைப்படும் நாம் எம் வீரர்களை மெட்டிங் இல் இருந்து புற்தரை ஆடுகளத்துக்கு மாற்றி விட்டு எம் கனவுகளைக் காணலாம் காரணம் மெட்டிங் இல் ஆடும் ஒருவரால் புற்தரைக்கு பழக்கமாகவே நீண்ட காலம் எடுக்கும்.
தீர்வுப் பொதிக்காக மட்டும் மேசைக்கு மேலால் போராடிக் கொண்டிருக்கும் எம் அரசியல் தலமைகளை எம் அடையாளங்களுக்காகவும் கொஞ்சம் போராடச் சொல்லுவோமாக ?
குறிப்பு - (அவர்களில் செந்தா அண்ணை சண்டை ஒன்றில் இறந்து விட்டார் அந் நேரம் சிறந்த வீரர்களாக இருந்த நவநீதன் , அச்சுதன் போன்றோர் இப்போதும் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களை விட சோலைக்கு விளையாடிய கீரன் மிகச்சிறந்த சகலதுறை வீரர்.)

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
3:16 PM - By ம.தி.சுதா 0

வெள்ளி, 25 ஜனவரி, 2019

10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்



இந்த உலகத்தின் தமிழன் என்ற சொல்லுக்கே அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் தான் ஆனால் சினிமா என்று வரும் போது எம்மிடம் அது இல்லை. இந்த உலகுக்குச் சொல்ல வேண்டிய ஆயிரம் கதைகள் எம்மிடம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதைச் சொல்ல தனி ஒருவனிடம் அதற்கான பண முதலீடு இல்லை.

எமக்கு ஏன் சினிமா தேவை?
எம்மிடம் உள்ள வாழ்வியல், பேச்சு மொழி, பண்பாடு என்பவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். இதை இன்னொரு சந்ததிக்கு கடத்தவோ அல்லது எம் வாழ்வியலை இன்னொரு சமூகத்தக்கு காட்டவோ எம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் சினிமா மட்டும் தான்.
எமக்கிருக்கும் பிரச்சனை இங்கு தயாரிப்பாளர்கள் இல்லாமையே.

உங்களது 10 டோலரால் அல்லது 1000 ரூபாவால் ஒரு இனத்தின் சினிமா கட்டமைக்கப்படும் என்றால் ஏன் இந்த முயற்சியை ஒரு சில நிமிடங்கள் செலவழித்துப் படித்துப் பார்க்கக் கூடாது.?

இதுவரை 106 பேரை இத்திட்டத்தில் இணைத்து வைத்திருக்கும் மதிசுதா தன் முயற்சியில் அரைவாசிக் கட்டத்தை நெருங்கி விட்டார்.

இது தொடர்பாக எமது சினிமாவுக்கென்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதா குறிப்பிடுகையில்..


“சிறு துளி பெரு வெள்ளம், ஊர் கூடி ஒரு தேரை இழுப்போமா ? ”

அன்புக்குரிய எனதன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இம்மடலூடாக உங்களோடு பேசிக் கொண்டிருப்பது ஈழத்தில் தீவிர திரைச் செயற்பாடுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதாவாகும்.

என்னுடைய இலட்சியம் யாதெனில், தனக்கென பண்பாட்டையும் கலையையும் கொண்டிருக்கும் பல நாடுகளும் அது சார்ந்த இனங்களும் தமக்கென்று ஒரு சினிமாவை தமக்குரிய தனித்துவத்துடன் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் தமிழுக்கென்று உலகில் அடையாளப்படுத்தக் கூடிய சினிமாத் தளம் இல்லை. உலகின் எந்த மூலையில் தமிழன் என்று சொன்னாலும் அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் ஆனால் தமிழ் சினிமா என்று வரும் போது தமிழ்நாடே அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழுக்கு அடையாளம் கொடுத்தது போல திரைக்கும் நாமே அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியமாகும்.
 ஆவணப்பட உருவாக்கலில் ADVANCE DIPLOMA கற்கையை நோர்வே அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட நான் இதுவரை ஒரு முழுநீளத் திரைப்படத்தையும் 15 குறும்படங்களையும் 5 ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளேன். கனடா, அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், இந்தியா, நோர்வே போன்ற நாடுகளில் எனது குறும்படங்கள் விருதுகள் பெற்றிருப்பதுடன் இவை தவிர பங்களாதேஷ், துருக்கி , தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகளில் தெரிவாகித் திரையிடப்பட்டும் உள்ளது.

இம்மடல் மூலம் தங்களிடம் அன்பாக வேண்டி நிற்பது குழுச் சேர்க்கை (Crowdfunding) மூலம் சேகரிக்கும் பணத்தில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குவதற்கான பங்கு சேர்ப்பதற்காக இம்மடலை வரைகிறேன்.
வாக்குறுதிப் பட்டியல்
1)       இப்படைப்பானது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவுபெற்று படப்பிடிப்பு அனுமதி பெறப்பட்ட கதையுடனேயே ஆரம்பிக்கப்படுகிறது.
2)       படப்பிடிப்புக்கு 10 நாட்கள் ஒதுக்கப்படுகிறது படத்தைப் பூரணப்படுத்த 6 மாத காலங்கள் தேவைப்படும்.
3)   பங்களிப்பாளர் இடக்கூடிய மிகக் குறைந்த பங்குகளின் பெறுமதி ஆயிரம் ரூபாய்கள் ஆகும், (வெளிநாட்டில் இருந்து பங்கெடுப்பதானால் 10 அமெரிக்கன் டொலர்களாகும்)
4)       மொத்த பட்ஜெட் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும். முழுமையான பட்ஜெட் விபரம் பத்திரத்தின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
-          முன்னாயத்த வேலைக்கு 100,000
-          படப்பிடிப்பை மேற்கொள்ள 850,000
-          படப்பிடிப்பின் பின்னான பட உருவாக்கத்திற்கு 900,000
-          விருது மற்றும் விநியோகத்திற்கு 1,000,0000

5)       தேவையான பங்குகள் எண்ணிக்கை 2,850
(இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு படத்தை முழுமைப்படுத்தத் தேவையான குறைந்த பட்ச பட்ஜெட் தொகையாகும். இதைவிட 500 பங்குகளாவது அதிகமாகக் கிடைக்குமாக இருந்தால் படத்தை இன்னும் மெருகூட்ட இலகுவானதாக இருக்கும்)



6)       பங்குதாரருக்கு மீள் அளிப்பதற்கான வாக்குறுதி
-          ஒரு பங்கை மட்டும் இடுபவருக்கு 2 நுழைவுச் சீட்டுக்களோ (இலங்கையில்)
அல்லது
-          படம் திரையிடப்பட்டு முடிந்தவுடன் ஒரு டீவீடியோ (வெளிநாடு உள்ளடங்கலாக)
அல்லது
-          அவர்களது பணமோ மீளளிக்கப்படும்.
-          பண மீளளிப்பு படம் வெளியிடப்பட்டு 6 மாத காலத்தில் தான் மீளளிக்கப்படும்.

7)       இப்படைப்பில் என் பங்காக ”தர்மா” குறும்படத்துக்காக எனக்கு கிடைத்த பரிசுத் தொகையான ஐம்பது ஆயிரம் ரூபாய்களை இட்டு 50 பங்குகளை நானும் வாங்கி இணைந்து கொள்கிறேன். ஆனால் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருப்பதால் இந்த பட்ஜெட் தொகையில் எனது சம்பளமாக எதையும் இட்டுக் கொள்ளவில்லை..


8)   இப்படத்துக்கான பங்கு முதலீட்டாளர்கள் இரண்டாவது படைப்பில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களின் இப்படத்துக்கான பங்கு எண்ணிக்கையுடன் இப்படத்தின் வருவாய்த் தொகையில் அவர்களது பங்குக்குரிய இலாபமும் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது படத்தின் வருமானத்தில் அவர்களுக்கும் பங்கு அளிக்கப்படும். ஆனால் முதல் படத்துடன் விலகும் பட்சத்தில் அவர்களது முதலீட்டுத் தொகையுடன் 5 % ம் இணைத்து அளிக்கப்படும்.



பிரதான வாக்குறுதி -  இங்கு முதலிடப்படும் பணத்துக்கு முழுப் பொறுப்பாளி இயக்குனரே ஆகையால் படம் வென்றாலும் தோற்றாலும் அத்தனை முதலீட்டாளரது பணத்தையும் தனது சொந்தப்பணத்திலாவது எடுத்து மீளளிக்க வேண்டிய பொறுப்பாளி இயக்குனரே ஆவார். அப்படி மீளளிக்காத பட்சத்தில் பங்கு இட்டவர்களது சட்டரீதியான நடவடிக்கையையும் இயக்குனர் எதிர் கொள்ள வேண்டும்.

நன்றிச் செதுக்கலுடன்                                   
அன்புச் சகோதரன்                        
மதிசுதா 
தொடர்புக்கு   
0094773481379 (Viber / Whatsapp)

அன்பு வேண்டுகை – இம்மடல் படிக்கக் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கோப்பை தங்கள் நண்பர்கள் எவருக்கேனும் பகிர்ந்துதவுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன். சிறு துளி தான் பெரு வெள்ளமாக உருவெடுக்கும்.

(படத்தின் மேல் சொடுக்கி உருப்பெருக்க வைத்துப் பார்க்கவும்)







10:50 PM - By ம.தி.சுதா 1

செவ்வாய், 12 ஜூன், 2018

instagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்

வணக்கம் உறவுகளே
சுகநலங்கள் எப்படி?

பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும்.

கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. அந்த 15 செக்கனில் சிறிய குறும்படங்கள் கூடப் பதிவேற்றும் அளவுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தாலும் சிக்கனமாக இணையம் பாவிப்பவருக்கு இருந்த தலையிடி என்னவென்றால் instagram இல் காணொளிகள் தன்னியக்கமாக இயங்க ஆரம்பிப்பதை தடுக்க முடியாது.

தேவையானால் ஒரேயொரு option கொடுத்திருக்கிறார்கள் use less data என்ற விடயமாகும் இருந்தாலும் இதில் உயர்தரக் காணொளிகளை மட்டுப்படுத்துமே தவிர காணொளித் தானியங்கலை நிறுத்தாது.


இந்த நிலையில் வரும் யூன் 20 இல் இருந்து UHD 4K தரத்திலான காணொளிகளை தரவேற்றுவதற்கான அனுமதியைக் கொடுப்பதுடன் அதன் நேர அளவை 20 நிமிடமாகவும் அதிகரிக்கிறது நமது instagram.

இந் நிலையில் தானியங்கலை நிறுத்தும் option ஐ கொண்டு வராவிடில் சிக்கனமாக இணையம் பாவிப்பவர் அனைவரும் தலை தெறிக்க ஓட வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்

8:59 AM - By ம.தி.சுதா 0

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

குறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி

Charles Shafiq Karthiga (2015) திரைப்படத்தின் இயக்குனரான சத்தியமூர்த்தி அவர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றிப் பேசும் நிமிடக் காணொளி இது.

இணையத்தில் நான் கற்ற காணொளிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட முக்கிய விடயங்களை ஓரிரு நிமிடங்களுக்குள் சுருக்கிப் பாகிர்கிறேன்.
தொடர்ந்தும் master class காணொளிகளைக் காண இப்பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்.

https://www.facebook.com/actormathisutha/
அல்லது என்னுடைய வலைத்தளத்தை தொடருங்கள்
நன்றி - நெட்4யூ
12:32 PM - By ம.தி.சுதா 2

திங்கள், 23 ஏப்ரல், 2018

திரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்

வணக்கம் உறவுகளே.
கடந்த ஆண்டு (2017) லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் (மதிசுதா) மற்றும் நடிகை (ஜெஸ்மின்) க்கும் பரிந்துரைக்கப்பட்ட ”பாதுகை” குறும்படத்தைஇணையத்தில் வெளியிடுகிறேன்.
பட முயற்சியின் தடங்கல்.
2015 ம் ஆண்டு இப்படத்தை எடுப்பதற்கான முன்னயாயத்தத்திற்கு 2 தரம் முல்லைத் தீவு போய் வந்ததுமல்லாமல் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் படம்பிடிக்க போகிறோம். இப்படத்தின் ஆரம்பக் காட்சியானது அத்தனை உடல்களும் தெப்பமாய் மிதந்த வட்டுவாகல் பாலத்தில் அமைய வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்நேரம் படப்பிடிப்புக்கு அங்கு அனுமதியில்லை இருகரையிலும் இரணுவ முகாமே. போதாத குறைக்கு அடுத்த முக்கிய காட்சி அமைய வேண்டிய வற்றாப்பளையிலும் படம் பிடிக்க இராணுவக் கெடுபிடி. சரி என எடுத்த ஒரே ஒரு காட்சியோடு யாழ் திரும்பிக் கொண்டோம்.

ஆனால் அந்த வெறி விடவில்லை மீண்டும் 2016 கிளம்பிப் போனோம் ஆனால் வற்றாப்பளை ஆலயம் மீள் கட்டுமானத்துக்காக தரைமட்டமாகிவிட்டது. வட்டுவாகலிலும் அதே கதை தான். அதற்காக ஒரு திட்டம் இட்டோம். சன்சிகனும் தர்சனும் அந்த வட்டு தொடுவாயில் மீன் பிடிப்பவரை போட்டோ எடுப்பதற்கென்று அனுமதி எடுக்கா நான் தனியே சைக்கிளில் இவர்களுக்கு சம்மந்தமில்லாதது போல மறு கரைக்கு சென்று அங்கிருந்து அவர்களது ரகசிய அழைப்புக்கமைய பாலத்தில் வர வேண்டும். அவர்கள் மீன் பிடிப்பவரை எடுப்பது போல என்னை எடுப்பார்கள்.
திட்டமிட்டபடியே காட்சி அமைந்ததுமல்லாமல் நான் ஆசைப்பட்ட ஒரு விடயத்தை முடித்த திருப்தியோடு வீடு ஏகினோம்.

இக்குறும்படத்துக்காக என்னோடு உழைத்த மதுரன், சன்சிகன், தர்சன், பவுண் அக்கா, சமீல் போன்றோருடன் குந்தவை அவர்களின் சிறுகதையை எனக்கு அனுமதி வாங்கித் தந்த குணேஸ்வரன் அண்ணா, தங்குமிட ஒழுங்கு செய்து தந்த ஜெரா, நியாகரன் போன்றோருடன்
முதற்கட்ட படப்பிடிப்புக்கு பணம் தந்த தமிழ் பொடியன் ரமணனுக்கும் மீள எடுப்பதற்கு பண உதவி செய்த செவ்வேள் அத்துடன் கமரா பக்கத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட செல்லா அண்ணா அனைவருக்கும் நன்றிகள்.

பிற்குறிப்பு - 2 வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததற்கு பொருத்தருளவும்.




இதனுடைய மூலச் சிறுகதை இது தான்.


பாதுகை
-              குந்தவை

வீட்டுச் சுவர் அப்படியே இருந்தது. மேலே ஓடுகளும் பனம் சிலாகைகளுமில்லை. அவற்றுக்குப் பதில் மரக்கம்புகள் தாங்கி நின்ற அஸ்பெஸ்டர் கூரை தான் தெரிந்தது.
வாசலில் இருந்த இரட்டைச் சிறகு கதவுமில்லை. செழுமைப்படுத்தப்படாத ஒரு ஒற்றைக்கதவுதான் இருந்தது.
வாசலில் நின்று 'அம்மா அம்மா' என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை.
முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். 'ரமணா' என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக  உள்ளே நுழைந்துதான் பழக்கம்.
மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான்.
பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.
'ஆர் தம்பி தயாளனா?' என்று கேட்டபோது வந்தவள் அவனின் இடது கையைப் பற்றிக் கொண்டாள். அவனின் நரம்போடிய  புறங்கையைத் தடவியவாறு  'எப்படியம்மா இருக்கிறீங்க?' என்று கேட்டான் தயாளன்.
'ஏதோ இருக்கிறம் தம்பி எப்பொழுதும் ரமணனின்ர நினைவுதான்' என்றாள் அம்மா. சொல்லும்பொழுதே கண்களில் நீர் கோர்த்துவிட்டது.
ஒரு கணம்தான் இங்கு வந்திருக்கக்கூடாதோ என்று இருந்தது. தன் மகனோடு படித்தவன் எப்பொழுதும் அவனோடு கூடித் திரிந்தவன். குதூகலித்தவன் இன்று வாட்டசாட்டமாய் தன்முன் வந்து நிற்கின்றான். தன் மகன்தான் இல்லை என்ற நினைவு அவளை முள்ளாய் குத்தக்கூடும்.
'உங்களை எல்லாம் பாக்கவேணும் போல இருந்துது அதுதான் வந்தன் அம்மா'
'உள்ளை வா தம்பி' என அவள் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள். தயாளனும் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே போனான்.
உள்ளே ஒரு சாமானில்லை. நாலு பிளாஸ்டிக் கதிரைகளைத் தவிர மரப்பின்னல் செற்றி வட்டமாய் கதிரைகள், ரீபோய் ஒன்றுமில்லை கொடி கட்டி, உடுப்புகளை அதில் போட்டிருந்தார்கள்.
'ஒரு மாதமாகுது அவங்கள் இஞ்சை கொண்டுவந்து விட்டு. வெறும் சுவர்தான் இருந்தது. இப்ப கொஞ்சம் கொஞ்சமா வீட்டைத் திருத்திறம். இஞ்சை வந்த பிறகாவது ரமணன் வருவானோ என்ட நினைப்பு'
'அப்பா  எங்கை அம்மா?' என்று கேட்டான் தயாளன்.
'திரும்பவும் தோட்டம் செய்யலாமோ எண்டு பாக்கப் போயிட்டார். அவருக்கும் ஏலாதுதான் ஆனா என்ன செய்யிறது? நெடுக அவங்க தர்ற நிவாரணத்தை நம்பியிருக்க முடியுமோ? அவருக்கும் ரமணன் இல்லாதது பெரிய அடி என்ன செய்யிறது?'
'இரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்.' என்று அவள் குசினிப் பக்கம் போய் விட்டாள்.
முன்பு ரமணனும் அவனும் ரியூசன் முடிந்த கையோடு மாலை ஐந்தரை மணிக்கு இங்குதான் வருவார்கள். ரமணனின் அம்மா சுடச்சுடச் தேநீர் போட்டுத் தருவாள். வெறும் தேநீர்தான். ஆனால் அதில் உள்ள ருசி அவன்முன்பின் அறிந்தில்லை. அளவான தேயிலைச் சாயம் லேசான வேர்கம்பு வாசனை.
தேநீர் குடித்த பிறகு மீண்டும் அவர்கள் புறப்பட்டு விடுவார்கள். கூல் பார் விறாந்தையில் நண்பர்கள் கூடி அரட்டை அடித்து ஏழு மணிக்கு இங்கிலிஸ் சென்ரில் ஆங்கில வகுப்புகளுக்குப்போய் ...எட்டரை மணியளவில் தான் வீடு திரும்பல்.
ரமணனனுக்கு ஆங்கிலம் நன்றாக ஓடும். இவன்தான் தடுமாறுவான். ரமணனுக்கு ஆங்கில ஆசிரியராக வரவேண்டும் என்ற கனவு. கிளிநொச்சியிலே வேலை பார்க்க வேண்டும் என்றும் ஆசை. 
தயாளன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானபொழுது தான் சில புள்ளிகளால் அதைத் தவற விடடதை மறந்து இவ்வளவு சந்தோசப்பட்டான்.
சிறு விருந்து வைத்துக் கொண்டாடி தன்னை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்த நண்பர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே? நினைக்கும்பொழுது ஆற்றாமை நெஞ்சைப் பிடுங்கியது.
நான்கு ஆண்டு சிறப்புப் பட்டப்படிப்புக்காலம், ஹர்த்தால், ராணுவச் சுற்றி வளைப்பு, கல்வியைப் பறக்கணிக்குமாறு புலிகள் இட்ட உத்தரவு, இன்னோரன்ன காரணங்களால் ஐந்து ஆறு ஆண்டுகள் என இழுபட்டது.
பல்கலைக்கழக அனுமதியைக் காட்டிய அவனுக்கு வன்னியை விட்டு வெளியேற பாஸ் கிடைத்தவேளை, அவனது பெற்றோருக்கும் கிடைத்துவிடவே, யாழ்ப்பாணமே அவர்களின் நிரந்தர இருப்பிடமாயிற்று.

அம்மா தேநீர் கொண்டுவந்து தந்தாள். எப்பிடிப் பேச்சு எடுத்தாலும் அது ரமணனில் தான் போய் முடிகிறது என நினைத்தவன்
'கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து கஸ்டப்பட்டிருப்பீங்கள் ? என்றான்'
'ஓம் படாத கஷ்டமோ? விசுவமடு ஆனந்தபுரம் என்று எங்கபோனாலும் ஷெல் அடிதான். கடைசியா மாத்தளனுக்கு வந்த பொழுது சண்டை முடிச்சு ஆமிகாரன் உள்ள வந்திட்டான். நாங்கள் எல்லாரும் கைகளைத் தூக்கிக் கொண்டு நிண்டம். அவங்கள் எங்களை இரணைப் பாலையில கொண்டுவந்து, ஆம்பிளை பொம்பிளை எண்டு வேறுவேறாகப் பிரிச்சு செக் பண்ணினான். அங்கதான் என்ர பிள்ளையைப் பறிகுடுத்திட்டன்'
'ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை  செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான்.
பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் 'விசரி' மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல' 
அவள் கொண்டுவந்த தேநீர் முன்போல் ருசிக்கவில்லை. கசந்தது. ஒரு மிடறுக்கு மேல் அவளால் குடிக்கமுடியவில்லை.
'பெரிய சண்டைக்கை ஷெல் அடிக்கும் குண்டு வீச்சிற்குமிடையில பொத்திக் காப்பாத்தின என்ரை பிள்ளையை சண்டை முடிச்ச பிறகு துலைச்சிட்டம். ஆமியட்டை வந்த பிறகு'
ஒரு தாயின் வேதனை. புலம்பல். மனத்தை அரித்தெடுத்தது.
'எங்கயும் தடுப்பில வைச்சிருப்பாங்களம்மா விட்டுவிடுவாங்கள்.' இதைத்தான் அவனால் திரும்பத் திரும்ப கூற முடிந்தது.
'எல்லா இடமும் கேட்டுப் பாத்தாச்சு. ஒருத்தனும் சரியான பதில் சொல்ல இல்ல.' என்றாள் அம்மா.
மற்ற நண்பர்களின் வீடுகளுக்கும் போய் விசாரித்துவிட்டு வருவதாகக் கூறி அவள் புறப்பட்ட பொழுது 'இஞ்ச ஒரு நாள் தங்கி விட்டுப் போ தம்பி எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்' என்றாள் அந்தத் தாய்.
கிளிநொச்சிச் சந்திக்கருகில் யாழ்ப்பாணம்  திரும்ப என்று பஸ்ஸிற்குக் காத்து நின்றான் தயாளன். அவன் வளர்ந்த அந்த இடமே இப்பொழுது வேற்று முகம் கொண்டு அவனை நோக்குவதாய் பட்டது.
ஆமிக்காரர்களே சாப்பாட்டுக் கடைகளை நடத்தினார். முன்பு புலிகளிருந்த இடங்களில் எல்லாம் அவர்களே தெரிந்தனர்.
நாகலிங்கண்ணை மட்டும் முன்பு தான் நடத்திய பெரிய மளிகைக் கடை இருந்த இடத்தில் விடாப்பிடியாக ஒரு சின்னக் கடை போட்டிருந்தார். ஷெல் பட்டோ என்னவோ இடது கை சற்று ஊனமாயிருந்தது.
அவன் படித்த ரியூட்டறி முகப்பு இடிந்து பாழ்பட்டுக் கிடந்தது. நண்பர்கள் கூடி அரட்டை அடித்த அதே கூல்பார் விறாந்தை மண்ணோடு மண்ணாய் கிடந்தது.
இந்த இடத்தில் அவர்கள் கூடி ஆய்ந்தலசிய எத்தனையோ விடயங்கள் நினைவிற்கு வந்தன.
திருக்கோணமலைக் கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மனக் கொதிப்புடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
'தரைவழியாக இல்லாவிட்டிலும் வான்வழியாக இஞ்சையும் வந்திடுவங்கள் குண்டுபோட' என எரிச்சலூட்டினான் குமரன்.
அதற்கு முகுந்;தன் பாமரத்தனமாக பதில் சொன்னான். 'எந்தக் கிபிர் வந்தா என்ன புலியள் சுட்டு விழுத்திப் போடுவங்கள்' பொதுவாக இந்த அதீத நம்பிக்கை எல்லோரிடமும் இருந்ததுதான்.
அப்பொழுதுதான் ரமணன் சொன்னான். 'இவங்க கிபிரை சுடுவங்களோ என்னவோ அப்பாவிகளான தமிழ்ப்பயணிகள் போற சின்னப்பிளேனை சுட்டு விழுத்திப்போட்டு கெட்டித்தனம் பேசுவங்கள் ஏகத்தனமாக சொன்னான்.
கொஞ்ச காலத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் புறப்பட்ட தமிழ்ப்பயணிகளை ஏற்றிய சிறு தனியார் விமானத்தை நெடுந்தீவுக் கடற்கரைக்கு அப்பால் புலிகள் சுட்டு விழுத்தினர். எயர் விமானத்தில் போகவேண்டாம். என புலிகள் ஒட்டிய நோட்டீசை கவனியாது விமானத்தில் ஏறியதால் அந்தப் பயணிகளுக்கு புலிகள் அளித்த தண்டனை அது.
அவர்களில் பலர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் உறவுகளைப் பார்ப்பதற்கு என்றுவந்த கொழும்புத் தமிழர்கள். அவர்களுக்கு அந்தப் புலிகளின் நோட்டீசைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இருந்திராது.
தயாளன் பரபரத்தான். டேய் சந்தியில நின்று இப்பிடியெல்லாம் கதைக்காத. காத்துக்குக்கூட காது இருக்கும். நீ சொல்லுறதை அள்ளிக் கொண்டுபோய் சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லிவிடும் என மெல்லியதாய் எச்சரித்தான்.
ரமணன் இப்பித்தான் துணிச்சல்காரன். போரிடும் இரு தரப்பினரும் செய்யும் அக்கிரமங்கள் அவனைக் கொதிக்க கொந்தளிக்க வைத்துவிடுகிறது.
இப்பிடி துணிச்சலாக ஏதும் பேசித்தான்அகப்பட்டுக் கொண்டானோ?
'ரமணன் இப்பொழுது அங்க இருக்கின்றானோ? எந்தப் புதைகுழியில் எந்த வடிவத்தில்?'மனம் அரற்றியது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் ஓரிரு நெடுந்தூரப் பயணிகள் பேருந்துகள் போயின. அவை இடை இடை வழியில் நின்று ஆட்களை ஏற்றமாட்டா.
நாகலிங்க அண்ணை கடைமுன் அவரோடு கதைத்துக் கொண்டு நின்ற பொழுது அவர் சொன்னார். 'இனி இஞ்சை இருந்து யாழ்ப்பாணம் போற பஸ்கள் போகாது போல இருக்கு தம்பி ஆமிக்காரனும் கொஞ்ச பஸ்கள் தன்ரை தேவைக்கெண்டு எடுத்து வைச்சிருக்கிறான்'
ஆமிக்காரன் நடத்தும் சாப்பாட்டுக் கடையில மூன்று கொத்து ரொட்டிப் பார்சல்களை வாங்கிக் கொண்டு அவன் திரும்ப ரமணனின் வீடு பார்க்க நடந்தான்.
வழியில் தென்னிலங்கையில் இருந்து வந்து நிண்ட பஸ் ஒன்றிலிருந்து இறங்கிய பயணிகள் விழுந்து கிடந்த அந்தப் பெரிய நீர்த்தாங்கியோடு நின்று படமெடுத்து விட்டுத் திரும்ப பஸ் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்தபடி நடந்தான்.
'அம்மா ஒரு நாள் தங்கிப் போகச் சொன்னீங்கள். அதன்படிதான் நடக்குது. பாருங்கோ' எனச் சிரித்தவாறு கொத்து ரொட்டிப் பார்சல்களை முன் வைத்தான். 'இரவுக்கு ஒன்றும் தேடவேண்டாமம்மா. ஆமிக்காரன்ர கொத்து ரொட்டி நல்லாயிருக்கும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்'
சாப்பிட்டபிறகு அப்பா அவனோடு கொஞ்ச நேரம் தன் பாடு பரப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஹோலிற்குள்ளே மூன்று பாய்கள் தனித்தனி போடப்பட்டன. அப்பா படுத்துக் கொண்டு விட்டார்.
முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால்அந்தச் செருப்புகளை அவன் கண்டான். அவை ரமணனின் செருப்புகள். அவற்றை கிளிநொச்சி சப்பல மார்ட்டில ரமணன் வாங்கி பொழுது அவனும் கூட இருந்தான். அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நலல் லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள். அவற்றை அதிகம் ரமணன் அணிவதில்லை. வெளியூர்களுக்கு பாடசாலைக்குப் போகும் வேளையில் அணிவான். மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான்.
தயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அருகில் வந்தான். 'இது ரமணனின் செருப்பு தம்பி. இதை தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக்கொதி அடங்கி நித்திரை வரும்' என்றாள்.
தயாளன் தன் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். அரைக்கண் மூடி அன்று தான் சென்று பார்த்த தன் பழைய நண்பர்களின் வீடுகளை நினைத்துக் கொண்டான்.
முகுந்தன் கடைசி நேரத்தில் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம்  புலிகளோடு இணைக்கப்பட்டவன் அவர்களிமிருந்து தப்பி, சனங்களோடு சனங்களாக வெளியேறி ஓமந்தையில் இராணுவத்திடம் சரண் அடைந்தவன். இப்பொழுது வவுனியாவில் தடுப்பில் இருக்கிறான். பெற்றோருக்கு அவனைச் சென்று பார்க்க அனுமதி கிடைத்திருக்கிறது. கிழமைக்கொரு முறை போல பார்க்கின்றார்கள். அவனின் தடுப்பு பகிரங்கப்பட்டிருப்பதால் இனி ஆமியால் அவனுக்கு ஆபத்து வராதென்ற நிலையில் பெற்றோர் அவனின் விடுதலையை பார்த்திருக்கிறார்கள். குமரனின் அம்மா அவனை எப்படியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதெனக் குறியாய் உள்ளாள். இப்பொழுது அவன் கொழும்பில்
சிவரூபன் ஒருவன் தான் இங்கு இருக்கிறான். தோட்டம் செய்யப் போகிறானாம். குரக்கன் பயிரிட போகிறானாம். குசினி வேலைகளை முடித்துக் கொண்டு ரமணனின் அம்மா  ஹோலிற்குள் வருவது தெரிந்தது.
அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள்.
இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள்.
தயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்



10:39 AM - By ம.தி.சுதா 0

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top