Featured Articles
All Stories

வியாழன், 14 டிசம்பர், 2023

இணையப் புகைப்படங்களை ஒன்றாகத் தரவிறக்கலாம்

 வணக்கம் உறவுகளே,

இணையத்தில் நாம் பல்வேறு பட்ட புகைப்படங்களை தொகுப்பாகக் காண்போம் ஆனால் அதை தரவிறக்குவதானால் (download) ஒவ்வொன்றாகச் சென்று சேமிக்க (Save) வேண்டியிருக்கும். ஆனால் நான் கொடுக்கும் இத்தளத்தினூடாகச் சென்றால் ஒரே கிளிக் இல் ஒன்றாக அவ்வளவு புகைப்படங்களையும் சேமிக்கலாம்.


https://backlinkvalidator.com/tools/image_downloader.php




9:59 AM - By ம.தி.சுதா 0

வெள்ளி, 6 அக்டோபர், 2023

உங்கள் இல்லத்திரையில் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு

 ஈழத்தின் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் கைப்பேசியில் படமாக்கப்பட்டு சர்வதேசம் எங்கும் சென்றடைந்ததை அறிந்திருப்பீர்கள்.

16 நாடுகளில் 30 சர்வதேச விருதுகளைப் பெற்றிருந்த இத்திரைப்படமானது திரையரங்க வெளியீடுகளைத் தொடர்ந்து. திரையரங்கல் ஒரு திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுப் பணத்தில் வீட்டில் இருந்து பார்ப்பதற்கு அளிக்கப்படுகின்றது.

பார்க்க விரும்புபவர்கள் இந்த இலக்கத்திற்கு நேரடியாகவோ வட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்ளலாம்.

+94773481379


மேலும் விபரங்கள் இச் சுவர்ப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.


இப்படிவத்தினூடாகவும் விண்ணப்பிக்கலாம்.

https://forms.gle/1itskitqfuPRnacr7


திரைப்படம் பார்த்த மக்களின் உணர்வு பொங்கிய கருத்துக்களில் சிறு தொகுப்புக்களை இந்த தொடுப்பில் சென்று காணலாம்.

Link - https://youtube.com/playlist?list=PLvypgJcFnUlNniMykmgp_ikjJW22DmEUt&si=WAn2NGXf_KTLH8MB





10:04 AM - By ம.தி.சுதா 0

சனி, 26 நவம்பர், 2022

ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” முன்னோட்டம் வெளியீடு

 ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு”

”மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன”





இத்திரைப்படமானது ஈழ யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப்படும் முதலாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை உருவாக்கிய மதிசுதாவால் கடந்த 4 வருடங்களாக ஒவ்வொருவரிடமும் சிறுகச் சிறுகச் சேகரித்த குழுமச் சேர்ப்புப் பணத்தில் இத்திரைப்படம் உருவம் பெற்றிருக்கின்றது. இதில் 203 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பங்காற்றியிருந்தார்கள். இலங்கை அளவில் அதிகளவானவர் இணைந்து தயாரித்தது என்ற பதமானது ஒரு வரலாற்று சாதனையாகும்.


இதுவரை 15 நாடுகளில் 28 சர்வதேச விருதுகளை இத்திரைப்படம் பெற்றிருக்கின்றது. ஈழத்தின் பழம்பெரும் பாடகியான பார்வதி சிவபாதம் அவர்கள் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்ததுடன் 2 நாடுகளில் சிறந்த நடிகைக்கான சர்வதேச விருதையும் பெற்றிருக்கின்றார்.


உலக அளவில் சிவிலியன்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட முதல் பங்கர் திரைப்படம் இதுவாகும். 


சிங்கள மொழித் திரைப்படங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கையில் இத்திரைப்படமானது 3 வரலாற்று சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளது.

  1. ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்

  2. அதிகளவான மக்கள் இணைந்து முதலிட்டுத் தயாரித்த திரைப்படம்.

  3. அதிகளவான விருதைப் பெற்ற கைப்பேசித் திரைப்படம்.




இத்திரைப்படமானது எங்களோடு வாழ்ந்து எங்களுக்காக மாண்டவர்களின் வரலாற்றுக் கதையாகும். இதை உங்களது நண்பர்கள் உறவுகள் அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டுகின்றோம்.


ஈழ சினிமாவின் தேவையை நீங்கள் உணரும் பட்சத்தில், இது போன்ற திரைப்பட முயற்சிகளின் வெற்றிக்காக எம்மோடு தோள் கொடுக்கும்படி அன்போடு வேண்டிக் கொள்கின்றோம். 


”எம் வரலாறை எம் பேனைகளாலும் கமராக்களாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எழுதுவோம்”


இத்திரைப்படத்தை எங்கிருந்தாலும் காண்பதற்குரிய நுழைவுச் சீட்டுக்களையும் முன்பதிவுகளையும் கீழ் வரும் தொடுப்பில் சென்று மேற்கொள்ளுங்கள்.


https://enkada.events/ta/vtk




12:14 PM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 14 டிசம்பர், 2021

ஈழத்தின் வெந்து தணிந்தது காடு Poster இணையத்துக்கு வந்தது

 ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” திரைப்பட சுவர்ப்படம் உங்கள் பார்வைக்கு வெளியாகின்றது. எங்கட கதையை ஊர் உலகம் அறியட்டும். கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு உதவுங்கள்.

உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுங்கள்.
இப்படைப்புக்காக உழைத்த அனைவருக்கும் அத்துடன் இதற்கு முதலிட்ட 160 பேருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
எங்கள் சினிமாவின் வெற்றிக்கு உதவுங்கள்.


7:30 PM - By ம.தி.சுதா 0

”வெந்து தணிந்தது காடு” தலைப்பு விடய சுமூகத் தீர்வு....

 //////// அவர்களது படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ”வெந்து தணிந்தது காடு” என்றும் எனது படம் ”மதிசுதாவின்” வெந்து தணிந்தது காடு என்றும் வரலாம் என்ற உடன்பாடு முன்வைக்கப்பட்டாலும். இப்படம் எம் இனத்தின் கதை என்பதால் எனது பெயருக்குள் அடக்கமாட்டேன் என்ற காரணத்தை முன் வைத்ததுடன் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” என்றே வரும் என்ற முடிவை முன் வைத்தேன்.///////

---------------------------------------



கடந்த ஒரு வாரமாக என் தூக்கத்தைத் தொலைக்க வைத்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமான சுமூகமான தீர்வை எனக்கு கொடுத்துள்ளது.
”சில இடங்களில் பெரிய மனிதர்கள் தம் பெரிய மனங்களை திறந்தே வைத்திருப்பார்கள்”
தலைப்பு விடயத்துக்கு தூக்கம் எல்லாம் ஏன் போக வேண்டும் என சிலர் தமது கணக்கிலும் போலிக் கணக்கிலும் தட்டச்சிட ஆரம்பித்திருப்பார்கள்.
இத்தலைப்புப் பிரச்சனையால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தளத்துக்கும் திரைப்படத்தை விற்க முடியாத நிலை வரும் என்பது தான் என் பிரச்சனையாக இருந்தது என்பதை புரிந்து இதற்காக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தபடி இருந்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. அடிக்கடி என்னோடு தொடர்பில் வந்து பேசியபடி இருந்தவர்களுக்கும் நன்றிகள்.
பிரச்சனை தொடர்பாக ஊடகங்களால் கேட்கப்பட்ட செவ்வி அனைத்தையும் தவிர்த்தேன் (ஏகலைவன் அண்ணாவுடையதைத் தவிர) பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும் நேரம் நான் தவறுதலாக உதிர்க்கும் ஒரு வார்த்தை கூட தேவையற்ற திசைதிருப்பலை ஏற்படுத்தி விடுமோ என்ற காரணமாகவே தவிர்த்தேன். அதைப் புரிந்து கொண்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள்.
தீர்வு -
இப்பேச்சு வார்த்தையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அண்ணாவுக்கும் நாசர் ஐயாவுக்கும், அன்பு அண்ணன் இயக்குனர் கவிதாபாரதி அண்ணனுக்கும் பெரு நன்றிகள். இதற்காக பொது மனிதராக தெரிவு செய்யப்பட்டிருந்த சுரேஷ் காமாட்சி அண்ணாவுக்கு 3 நாள் அவகாசத்தில் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் உறுதியாகவே ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்.
”தமது படத்துக்கு முன்னதாக இப்படம் வர இருப்பதால் அதனால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முதலே வருவதால் படத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. அதன் வெளியீட்டுக்கு தம்மாலான உதவிகளை செய்வேன் எனவும், அவர்களது கதை உலகுக்கு தெரிய வேண்டியது அதற்கு எப்பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு தம்மால் உதவ முடியும்” என்பதையும் தெரிவித்திருக்கின்றார்.
அவர்களது படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ”வெந்து தணிந்தது காடு” என்றும் எனது படம் ”மதிசுதாவின்” வெந்து தணிந்தது காடு என்றும் வரலாம் என்ற உடன்பாடு முன்வைக்கப்பட்டாலும். இப்படம் எம் இனத்தின் கதை என்பதால் எனது பெயருக்குள் அடக்கமாட்டேன் என்ற காரணத்தை முன் வைத்ததுடன் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” என்றே வரும் என்ற முடிவை முன் வைத்தேன்.
பாரதியாருக்குரிய அவ்வரி எனக்குரியதல்ல அது பொதுவானது , ஆனால் என்படத்துக்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி என்ற எனது கோரிக்கைக்கு எந்தவித தாக்கமும் இன்மையால் 7 நாளாக காத்திருந்த இவ்விடயம் முடிவுக்கு வந்திருக்கின்றது.
இதற்காக குரல் கொடுத்த யாரையும் தனித்தனியே பெயர் சொல்லாமைக்கு பொறுத்தருளவும். அதில் ஒருவருடைய பெயரை தவற விட்டாலும் அது தவறு என்பதற்காகவே குறிப்பிடவில்லை.
விரைவில் படம் தொடர்பான அடுத்த பெரு அறிவிப்புடன் சந்திக்கின்றேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
7:25 PM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்...

 

1) எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை

2) மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா
போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் கடந்து செல்வது ஆரோக்கியமாகும்.
ஒரு ஆலமரத்தின் கீழ் முளைக்கத் துடிக்கும் அறுகம் புல்லாக சின்ன சின்ன விடயத்துக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
A) தென்னிந்திய சினிமாவின் ஊடக ஆக்கிரமிப்புக்களால் எம் மக்களிடம் எம் படைப்புக்களை கொண்டு சேர்க்க ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
B ) தயாரிப்பாளர் என்று எவருமே இல்லாத இடத்தில் ஒவ்வொருவரிடமும் சிறுக சிறுக 1000 ஆயிரம் ஆக சேர்த்து, இருக்கும் காசுக்கு ஏற்ப இருக்கும் வளத்தை வைத்து தான் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டியுள்ளது.
C) இந்தக் கனவோடு பயணிக்கும் ஒவ்வொருத்தனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பலதை துறந்து தான் தியாக மனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்.
இது சில உதாரணங்களே, இந் நிலையில் ஒரு உண்மையான கலைஞனாக இன்னொரு படைப்பாளியின் படைப்புக்கும் உழைப்புக்கும் உள்ள உரிமைக்கு சின்ன அங்கீகரத்தைக் கொடுத்திருக்கலாம். தன் மொழியில் உள்ள ஒரு தலைப்பை முதன் முதலாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் ஒரு உரிமை கூட தன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு இல்லையா ?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது திரைப்படத்தலைப்பான "வெந்து தணிந்தது காடு" என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். பலமாதங்களுக்கு முன் திட்டமிட்ட இத்தலைப்பை பட வேலைகளை முடித்த பின் அறிவிப்போம் என்ற நிலைப்பாட்டில் படத்தை கையில் வைத்துக் கொண்டே அறிவித்தோம்.
"மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன" என்ற மூலக் கருவைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் 111 பேரிடம் இருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு ஐ போன் மூலம் உருவாக்கியிருந்தோம்.
இன்றைய நாள் , கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்பட பெயர் அதே பெயரில் வெளியாகியிருக்கின்றது.
1) பாரதியாரின் கவிதை தானே யாரும் அதை வைக்கலாம் என கருத்துப்பட சிலரது எதிர்வாதங்களைக் கண்டேன்
அக்கருத்தை நான் மறுக்கவில்லை ஆனால் அதே தலைப்பை எந்த வகைப் படைப்புக்கு முதல் முதல் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விடயமும் கணக்கில் எடுக்கப்படும். நான் தலைப்பிட முன் தேடிய வகையில் இப் பெயரில் கவிதை நூல் ஒன்று மட்டுமே இருந்தது. திரைப்படம் எதுவும் இருக்கவில்லை.
- ஒரு திரைப்பட தயாரிப்புக் குழுவின் முக்கிய வேலைகளில் ஒன்றாக தலைப்புகளை ஆய்வு செய்தலும் அடங்கும். அவ்வகையில் பல இந்திய ஊடகங்களிலும் வெளியாகியிருந்த எமது திரைப்படத்தின் தலைப்பை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. நிச்சயம் கூகுலிலாவது ஒரு தடவை தேடிப் பார்த்திருப்பார்கள்.
- அவர்களது பணபலம், விளம்பர பலம் , star value என்பவற்றின் மூலம் இச் சிறிய படைப்பு மறைக்கப்பட்டு விடும் என கருதியுமிருக்கலாம்.
2) இரண்டு வெவ்வேறுபட்ட நாடுகள் தானே இதைக் கணக்கெடுக்க தேவையில்லை என்ற கருத்துக்கான பதில்
இலங்கையில் பணம் கொடுத்து வாங்கக் கூடிய OTT கள் இல்லாத நிலையில் இந்தியாவை மையப்படுத்திய OTT களுக்கு மட்டுமே விற்க முடியும்.
எமது படம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் அப்பட பதிவிருப்பதால் அங்கு இப்படைப்பை விற்பதில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது
- ஏற்கனவே இத் திரைப்படத்துக்கு வியாபார விடயம் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் (பெயர் குறிப்பிட முடியவில்லை) இத் தலைப்பால் இப்படைப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து பதில் தர 3 நாள் அவகாசம் கேட்டுள்ளன. பெரும்பாலும் இத் தலைப்பில் ஒரு படைப்பு முதலே வருவதை விரும்பமாட்டார்கள்.
ஏதோ , என் மூன்றரை வருட ஒட்டு மொத்த கனவும், உழைப்பும், காத்திருப்பும் ஒரு சம்பவத்தால் சுக்கு நூறக்கப்பட்டு விட்டதை நான் முழுமையாக உணர்கின்றேன்.
வழமை போல இந்தப் படைப்பை ஓடுவதற்கு தற்போது தியெட்டர்களும் இல்லை. படத்துக்கு தேடி வந்த யூரியூப்காரர்களும் தமது channel க்கு தாருங்கள் வரும் பணத்தில் 50% தருகிறோம் என்ற வியாபார கணக்கோடு வரிசையிடுகின்றார்கள்.
என்ன செய்வது சிறு புன்னகையுடன்🙂 இந்த விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் இருந்து ஈழ சினிமாவை பறித்துக் கொண்டு பயணப்பட்டுக் கொண்டே இருப்பான்.😉x
11:21 AM - By ம.தி.சுதா 0

சனி, 11 ஜூலை, 2020

Darak Days of Heaven - Official Announcement

Official Announcement
Dark Days of Heaven

இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருடனும் சேர்த்தே பெருமைப்படுகிறேன்.
ஏனென்றால் இந்த மாத முடிவுடன் எனது பணச் சேகரிப்புப் போராட்டத்தின் 2 வருடங்களைப் பூர்த்தி செய்கிறேன்.
இதில் சந்தோசமான செய்தி என்னவென்றால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முற்று முழுதாகப் பூரணப்படுத்தியுள்ளதுடன் படத்தொகுப்பிலும் குறிப்பிட்டதொரு கட்டத்தை கடந்திருக்கிறேன்.
28 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு 1,936,039 ரூபாய்கள் சேர்ந்திருந்தன. இதில் Production வரை தீர்மானித்திருந்த செலவு 9 இலட்சத்து 50 ஆயிரமாகும் ஆனால் 935,977 ரூபாய்கள் செலவாகியிருக்கின்றது.
168 பேர் இணைந்திருந்த இந்த Crowdfunding இல் 101 பேர் பணமிட்டிருந்தார்கள். இது ஒட்டு மொத்த இலங்கை அளவில் அதிகமானவர் இணைந்திருந்த Crowdfunding திரைப்படம் என்ற வரலாற்றுக்குரியதாகும்.
முற்று முழுதாக ஐபோனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் சர்வதேச விருதுகளுக்குள் நுழையுமானால் இலங்கை அளவில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு பெற்று சர்வதேச அங்கீகாரம் பெறும் முதலாவது ஐபோன் திரைப்படமுமாகும்.
இப்படைப்பில் பணியாற்றிய அனைவரையும் தனித்தனிப்பதிவில் நினைவுகூர இருக்கின்றேன். இப்படைப்புக்காக என்னோடு இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர்களது போராளி வாழ்க்கைக்காக அவர்கள் ஒவ்வொருவரது நினைவும் பகிரப்பட வேண்டியதாகும்.

மிக மிக இறுக்கமான பட்ஜெட் நெருக்கத்தால் 14 நாட்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் படப்பிடிப்பை 10 நாளில் முடிக்க காரணம் என்னோடு சலிப்பின்றி களைப்பின்றி உழைத்த அத்தனை பேரது வியர்வையும் தான் இந்த மரத்தின் துளிர்ப்புக்கு மிக முக்கிய காரணமாகும். அதிலும் தனது 70 வயது கடந்த வயோதிபநிலையிலும் இப்படத்தை தனது பாத்திரத்தால் தாங்கிய பார்வதி சிவபாதம் அம்மாவின் உழைப்புக்கு நீங்கள் அனைவரும் உங்கள் சிரம் தாழ்த்தி வணங்க வேண்டியிருக்கும் என்பதில் எனக்கும் என் குழுவுக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது.
இத்திரைப்படத்தை பூசையிட்டு ஆரம்பித்து வைத்தவர் - பார்வதிசிவபாதம் அம்மா
Clapboard அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் - வெற்றிச் செல்வி அக்கா
படத்தின் நடிகர் எண்ணிக்கை (cast) - 17 பேர்
தொழில்நுட்ப குழுவினர் - 9 பேர்
படத்தின் பின்நிலை வேலைகளில் சிலதை இந்தியாவில் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
குறிப்பு - Dark Days of Heaven என்ற பெயரை copy செய்து உங்கள் பேஸ்புக் தேடல் பெட்டியில் இட்டு அப்பக்கதை விருப்பிட்டுக் கொள்ளுங்கள். எம் முயற்சியை மற்றையவருக்கும் கொண்டு சேர்க்க உதவியாக அப் பேஸ்புக் பக்கத்தில் உள்ள Invite பொத்தனை அழுத்தி உங்கள் நண்பரையும் இணைத்து விடும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
படவிளக்கம் - படத்தில் பணியாற்றிய அதிகமானவர் ஒன்றாக நிற்கும் படம், எனது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியது தான் என்பதால் அப்படத்தையே பகிர்கிறேன். படத்தின் விளம்பரப்பிரிவுக்கு பொறுப்பாக இருப்பவர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்ட படங்கள் விரைவில் வெளியாகும்.

சொர்க்கத்தின் இருண்ட நாட்கள் திரைப்படத்தின் பேஸ்புக் பக்கத்தை விருப்பிட்டு அதன் தரவேற்றங்களுடன் இணைந்திருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்...


3:43 PM - By ம.தி.சுதா 0

வியாழன், 12 டிசம்பர், 2019

Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்

வணக்கம் உறவுகளே
சுகநலங்கள் எப்படி ?



வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணம் என்றாலும் அதில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தவை மின்னூல்களாகும்.

அளவுக்கதிகமாக காவத் தேவையில்லை, கைக்கடக்கமாக mobile phone , Tablets என்பவற்றில் படிக்கலாம் என்றிருந்த நிலையில் சந்தைக்குள் புகுந்த இன்னொரு விடயம் தான்  kindle ல்கள் ஆகும்.

மற்றைய சாதனங்களை விட கண்ணுக்கு பாதிப்புக் குறைந்தது என்ற விளம்பரத்தோடு வாசிப்புப் பிரியர்களின் கைகளை அலங்கரிக்க ஆரம்பித்திருந்தாலும், அதன் விலையானது எல்லா மட்டத்தினருக்கும் தக்கதாக அமையவில்லை.
இதே வேளையில் தான் amazon kindle கள் ஆனது தனது செயலியை கைப்பேசிகளுக்கும் மாற்றீடுகளுடன் அளித்தது. அப்போது தான் நானும் அதை தரவிறக்கி பயன்படுத்த ஆரம்பித்தேன்.
வழமையாக புத்தகங்களின் அனுபவத்தை மின்னூல்களால் கொடுக்க முடிவதில்லை என்பதால் நானும் முடிந்தவரை தவிர்த்து வந்திருக்கிறேன் ஆனால் இந்த செயலியில் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவமானது இன்னொரு ரசனைக்குரியதாக அமைந்திருந்தது.

இடது பக்க கீழ் மூலையில் புத்தகத்தை படித்து முடிப்பதற்குரிய பருமட்டான நேரம் காண்பிக்கப்படும் அல்லது அது அவ் அங்கத்தை படித்து முடிப்பதற்கான நேரமாகவும் அமைந்திருக்கும்.


அல்லது location க்குரிய இலக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.

அதே போல வலது பக்க மூலையில் புத்தகத்தின் எத்தனையாவது வீதத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

அது போல வலது பக்க மேல் மூலையில் எமது தற்போதைய நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.

நல்ல ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் இந்த டிஜிட்டல் வளர்ச்சிகளின் பின்னே இருக்கும் ஆபத்துக்களும் முக்கியமானது.
நாம் என்னத்தைப் படிக்கிறோம். எதில் அதிக ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை ஏதாவது குற்றச் செயல்களின் போது ஆராய்வதற்கு எமது வாசிப்பும் ஏதுவாக அமையும்.

நாம் என்ன கொலை செய்வதற்கா திட்டம் போடுகிறோம் இல்லைத் தானே, படிப்பது இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தானே என்பது தான் இப்போதைக்குள்ள மனத்திருப்தி. ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதை இன்னொருவன் அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான் சின்ன மனப்பயம்.

android மற்றும் ios கைப்பேசிகளில் நான் பாவித்துப் பார்த்து விட்டேன். நீங்களும் முயற்சியுங்கள்..
அமேசனில் ஒரு நாளைக்கு சராசரி 20 புத்தகமாவது இலவசமாக பார்வைக்கு வைக்கிறார்கள்.

தரவிறக்கி வைத்துக் கொண்டால் நேரம் அமையும் போது படித்துக் கொள்ளலாம். தற்போது முக்கிய எழுத்தாளரான லக்சுமி சரவணகுமாரின் ரூஹ் நாவல் இலவசமாகக் கிடைக்கிறது. சில நாட்களுக்கு முன் சிவராஜ் இன் வஜ்ரவியூகம் என்ற அருமையான திரில்லர் நாவல் இலவசமாக கிடைத்திருந்தது. இது தான் நான் முதல் முதல் படித்த கின்டில் புத்தகமாகும்.

இப்போது எனது கின்டில் நூலகத்தில் 72 புத்தகங்கள் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. வழமையாக ஒவ்வொரு நாளும் 30 நிமிடத்தை வாசிப்புக்கு ஒதுக்கிக் கொண்ட நான் இப்பொது ஒரு மணித்தியாலம் ஆக்கியிருக்கிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால் தூக்க நேரம் தான் குறைந்து செல்கிறது. எங்களுக்கெல்லாம் இனி மனிதப்பிறபு் இல்லைத் தானே படிப்பதெல்லாம் இப்பிறப்பில் தான் படிக்க முடியும். அதனால் பரவாயில்லை படித்துக் கொள்வோம்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
10:14 PM - By ம.தி.சுதா 4

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

”வல்வைப்படுகொலை ” ஆவணப்படம்


ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டுவோமானால் ஒவ்வொரு பக்கமும் இதற்கு முன் இரத்தக் கறைபடிந்த ஒரு கை தட்டிப் பார்த்த தடயத்துடன் தான் நாமும் தட்டவேண்டியிருக்கும்.
காலத்துக்குக் காலம் அவர்களது நிழலாக அவர்கள் மரணமும் துரத்திக் கொண்டே இருந்தது. அதில் ஒன்றாக 3 தசாப்தங்கள் கடந்தும் நினைவு விட்டகலாத ”வல்வைப் படுகோலை” நிகழ்வு ஆழ்மனதில் நிலையாய் அமர்ந்திருக்கிறது. அமைதிப்படை எனக் கூறிக் கொண்டு தமிழர் பிரதேசங்களுக்குள் நுழைந்த இந்தியராணுவமானது வல்வெட்டித்துறையில் ஆகஸ்டு மாதம் 2 ம் திகதி ஆரம்பித்த மக்களின் உயிர் வேட்டையை தொடர்ந்து 3 நாட்களுக்கு அரங்கேற்றியது.
யாரும் உள்நுழைய முடியாமல் ஊரடங்கைப் பிறப்பித்த அப்பிரதேசத்துக்குரிய இராணுவத்தளபதிகள் விடுதலைப்புலிகள் மேல் இருந்த கொலைவெறி வெறுப்பை அப்பாவி மக்களிடம் போக்கிக் கொண்ட நாட்களாகும்.
இப்படுகொலை தொடர்பாக திரு நா.அனந்தராஜா அவர்கள் எழுதிய India’s Mylai என்ற நூலை காணொளி வடிவமாக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கும் பொறுப்பை இற்றைக்கு 6 மாதங்களுக்கு முன்னர் என் பொறுப்பில் பெற்றுக் கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை இவ் ஆவணப்படமானது , 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த தலைவர்கள் செய்த தவறுக்காக இன்று இந்திய அரசாங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்க வைக்கும் நோக்கில் நான் அமைக்கவில்லை ஆனால் எங்களது அபிலாசைகளை அன்று இந்தியா எந்தளவுக்கு சிதைத்தது என்பதை என் தலை முறைக்கும் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒன்று இயற்கையாலேயே எனக்குள் அமைந்து விட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை இங்குள்ள தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் கலாச்சார பண்பாடுகளை விரும்பியோ விரும்பாமலோ உள்வாங்கிக் கொண்டு நகரும் வாழ்க்கை அமைப்பைக் கொண்ட குடித்தொகைகளைக் கொண்டதாகும். எல்லாவற்றையும் விட இப்படுகொலை நடந்த வல்வெட்டித்துறையை எடுத்துக் கொண்டால் அங்குள்ள பெரும்பாலான வீடுகளின் வாசல்களை இன்றுவரை இந்தியாவின் பெரும்தலைவர்களின் படங்களே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தன்மீது இந்தளவு பற்றுக் கொண்ட மக்களின் அபிலாசைகளை இந்தியா ஒரு பொருட்டாகக் கூட மதித்ததில்லை.
இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியல் நகர்வுக்கு இக்குடிமக்களின் துணை நேரடிப் பலமாக இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர்களின் பங்கு பேசு பொருளாகவேனும் பெரும் பங்காற்றுகிறது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை , இன்னொரு நாட்டின் மூலம் தமக்கு ஏதாவது அரசியல் இலாபம் கிடைக்குமானால் அது இந்தியாவால் மட்டும் தான் ஆக்கபூர்வமாகக் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் மற்றைய நாடுகளின் இலங்கைப் பிரவேசமானது இலங்கைப் பெரும்பான்மை அரசாங்கத்துடனான இராஜ தந்திர உறவுக்கானதாகவே அமையும் ஆனால் பாரத தேசத்திற்கு அண்மையாக இருக்கும் தமிழர் பிரதேசங்களானது இந்தியாவை மதித்துக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட இத்தனை பிரதேசங்களிலும் இந்திய கிரிக்கேட் அணியின் வெற்றிகளுக்கு பட்டாசு கொழுத்திக் கொண்டாடும் அம்மக்கள் கூட்டமே மிகப் பெரும் உதாரணமாகும்.
இவ் ஆவணப்படத்தின் மூலம் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு இம்மக்களை இத்தனை வருடத்துக்கு முன்னிருந்து நசுக்கினார்கள் என்பதை புதிய தலைவர்களுக்கு தலைமுறையினருக்கும் நினைவூட்டுவதற்காக நல்ல ஒரு சந்தர்ப்பமாக கருதியே இவ்வாவணப்படத்தை பூர்த்தி செய்திருக்கிறேன்.
இதன் நோக்கத்தைப் புரிந்து மீளவும் ஒத்துழைப்புக் கொடுத்த மக்கள் அனைவரும் நன்றி கூறப்படவேண்டியவர்களே. தமிழர் பிரதேசங்களின் பல்வேறு இடங்களில் இப்படியான மிலேச்சத்தனமாக வன்முறைகளை அவிழ்த்து விட்டு பசியாறிய இராணுவ வீரர்கள் இன்று தம் இயற்கையின் இறுதிக்காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
அக்காலத்திலேயே பல இராணுவ வீரர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள் வரலாற்றுப் பக்கங்களில் இருந்து இதை மூடி மறைத்திருந்தார். இன்று இருந்திருந்தாலும் அவர் இச்சம்பவத்துக்கு பிராஜச்சித்தம் செய்திருப்பாரோ தெரியாது ஆனால் நிச்சயம் இங்கு நடைபெற்ற கொலைகள் அவரது உள்மனதைக் குடைந்து கொண்டு தான் இருந்திருக்கும்.

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/



8:20 PM - By ம.தி.சுதா 1

சனி, 27 ஜூலை, 2019

NGK செல்வராகவன் படமே இல்லை என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் - திரை ரசனை 3

NGK செல்வராகவன் படமே இல்லை என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் - திரை ரசனை 3


தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவத்தோடு படம் எடுக்கும் அனைவரையும் ஒரு அங்கிகாரம் கொடுத்துக் கொண்டாடுவதில் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் பின்னிற்பதே இல்லை.
அந்தப் பட்டியலில் எப்போதும் செல்வராகவனுக்குத் தனி இடம் உண்டு. அவர் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு காத்திருக்க வைத்திருக்கும். ஆனால் NGK அதைப் பூர்த்தி செய்யவில்லை என்பதே எனது அபிப்பிராயம் மட்டுமல்ல பலரது அபிப்பிராயமுமாகும்.
ஆனால் செல்வா படத்தை நீண்ட காலத்துக்கு இழுத்ததும் அவருக்கு தலையிடியாகவே அமைந்திருக்கும் காரணம் LKG மற்றும் நோட்டாவில் இப்படத்தில் வரும் காட்சிகள் சில இருந்ததால் சில காட்சிகளை மாற்றி எடுத்ததாகவும் அரசல் புரசலாக ஒரு கதை அடிபட்டது.

இங்கு எனக்கு மிகவும் குடைச்சலாக இருந்த காட்சி ஒன்றை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்கிறேன். இளவரசு மற்றும் சூர்யா ஆகிய இருவம் ரகுல் பிரிச் சிங் ஐச் சந்திப்பதற்கு அவர் இருக்கும் மாடிக்குச் செல்லும் காட்சியாகும்.
இது தான் ரகுல் பிரித் சிங் இன் அறிமுகக் காட்சியாகும். இருவரும் மாடிக்குச் செல்வதற்காக மின்னுயர்த்தியில் ஏறுவார்கள். இளவரசு 9 வது மாடிக்கு பொத்தானை அழுத்தச் சொல்ல அங்கே 8 தான் இருக்கிறது என்று சூர்யா சொல்வார் . 8 ஐயும் 1 யும் சேர்த்து அழுத்து என இளவரசு சொல்வார் அவர் அழுத்துவது நடப்பது படத்தின் 51 நிமிடம் 37 செக்கன்களிலாகும் ஆனால் அந்த 9 மாடிக்குச் செல்ல 53.24 நிமிடங்கள் ஆகிறது எடுத்துக் கொண்ட நேரம் 1 நிமிடமும் 47 செக்கன்களும் ஆகும்.  கிட்டத்தட்ட 40-50 மாடிகளுக்குச் செல்லக் கூடிய நேரமாகும். ஒரு நல்ல காட்சிக்கு இந்த நேர அளவு முக்கியமில்லை எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் உறுத்தலே இருக்காது நான் சொல்ல வருவதே இனித் தான் உள்ளடங்குகிறது.

ஒருவருக்கு இப்படி ஒரு அறிமுகக் காட்சியை ஒரு நடிகரை வைத்துச் சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது. 
”ஐயா ராசா அங்க வந்து தலைவரே என்று சொல்லாதை கண்ணு முழியை நோண்டிடுவாங்க”
என்று ஆரம்பித்து வானதி பற்றி சொல்லுவார் சொல்லுவார் சொல்லிக் கொண்டே இருப்பார். கடைசியா அவர் ஒரு லப்டப்பை வைத்து நோண்டிக் கொண்டிருப்பார் என்று ஒன்றையும் விடாமல் சொல்லி முடிப்பார். செல்வராகவன் படத்தில் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்த இப்படி ஒரு காட்சியா ? மிக மிக உறுத்தலான அலட்டல் காட்சியாகும். ஏனென்றால் செல்வாவின் ஒவ்வொரு படத்தையும் எடுத்துப் பார்த்தால் புரியும் ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் நச் என்று சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தி விட்டுக் கடந்து சென்று விடுவார்.


ஆனால் படத்தை பார்த்து முடிக்கும் போது கதை விடயத்தில் சூர்யாவை ஹீரோவாகப் போட்டதால் நல்ல கதைக்களம் ஒன்றை தவற விட்டு விட்டாரோ என்ற எண்ணமே எனக்குள் எஞ்சியது. ரகுல் பிரித் சிங் ஒரு மறைமுக தலைமைத்துவத்தை உள்ளடக்கி வைத்து தேர்தலையும் கட்சிகளையும் காட்டுப்பாட்டில் வைத்திருப்பதை வைத்து ஒரு பெரிய கதைக்களம் ஒன்றையே திறந்திக்கலாம் . ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தியை ஒரு குணச்சித்திரப் பாத்திரமாக வைத்து ரீம சென் ஐ  வைத்து எப்படிக் கதையை நகர்த்தினாரோ அப்படி நகர்த்த வேண்டியிருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஒன்றே ஒன்று தான் நட்சத்திர முத்திரையால் நல்ல ஒரு இயக்குனர் தனது பாணியை இழந்த படம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
9:50 PM - By ம.தி.சுதா 2

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top