Featured Articles
All Stories
review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஏப்ரல், 2017

மணிரத்தினமும் இராவணனும்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மணிரத்தினம் என்றால் படுபயங்கரமான நுண்ணரசியல் படம் எடுப்பார் எம்மை அறியாமலே எமக்குள் ஏதாவது விதைத்திருப்பார் என்ற விமர்சனங்களோடு அவரைக் கடக்க நேரிட்டாலும் ஒரு இயக்குனராக, ஒரு ஆசானாக அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


இத்தனை விமர்சனங்களும் எனக்குள்ளும் உண்டு ஆனால் என் ஒற்றை நாயகனை வைத்து என் வாயை ஒரு தடவை முழுவதுமாய்க் கட்டிப் போட்டார்.


விக்ரம் ரசிகன் என்பதற்கப்பால் விக்ரமுக்கூடாக நான் கற்பனையில் வைத்திருந்த இராவணன் என்ற என் நாயகனைக் காட்டியிருப்பார்.


இல்லாத பொல்லாதது எல்லாம் வைத்து கம்பன் வம்பளக்க உருவகம் கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே இன்றும் இராவணன் எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்தளவுக்கு இராவண எதிர்ப்புக் கொண்ட ஒரு வட தேசத்துக்கு அவனைக் காட்டியதில் கூட ஒருவகை நுணுக்கமான நேர்மைத் தன்மையைக் கடைப்பிடித்திருப்பார்.


தங்கையை ஒருவன் வஞ்சம் தீர்த்தான் என்றதற்காக இன்னொருத்தன் மனைவியைக் கடத்தலாமா எனத் தான் ஒவ்வொரு இராமாயண வாசகர்களும் கேட்பார்கள். அது பற்றி தாராளமாக பல பட்டிமன்றங்கள் வாதிட்டு விட்டது அது ஒரு பக்கம் இருக்கட்டும் சரி கடத்தி வந்தவன் நடத்திய விதத்தைக் காட்டிய இடத்தில் மணிரத்தினத்தின் கண்ணியத்தை நான் மதிக்கிறேன்.


- அவள் விபத்தில் சிக்கி விட்டாள் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தொடலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் இராவணன் இருக்கிறான் முனையவும் நினைக்கிறான் ஆனால் தொடுவதற்கான சந்தர்ப்பத்தை இயக்குனர் கொடுக்கவில்லை அவள் விழித்துக் கொள்கிறாள் தடியால் காப்பாற்றுகிறான்.



- அவளுக்கு இவனில் வந்த கோபத்தில் தாக்க முனைகிறாள். அந்த இடத்தில் சராசரி ஆணாக இராவணன் நிற்கிறான். அவள் ஆக்ரோசம் கொண்டு பாய இவன் விலத்த அவள் கூந்தல் மட்டும் இவனை பட்டும் படாமல் தட்டிச் செல்கிறது. அந்த இடத்தில் அவனுக்குள் ஆணாக ஒரு உணர்வு எட்டிப் பார்க்கிறது என்பதை இசை உணர்த்தும் அந்த இடத்தில் இராம ரசிகருக்கு சபலம் என்ற வாரத்தையாலும் இராவணன் ரசிகருக்கு காதல் என்ற வார்த்தையாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்தலாம் ஆனால் அந்த இடத்திலும் இயக்குனர் இராவணனைக் காப்பாற்றி விடுகிறார். அவளைத் தடுக்கி தன் மேல் விழ வைத்திருக்கலாம் தானே போரிடுகையில் அணைத்திருக்கலாம் ஆனால் இராவணன் தன் உணர்வெழுச்சியை அடக்கியவனாகவே அடுத்தடுத்த காட்சிகளில் தோன்றுவான்.


- இத்தனை இடங்களிலும் அவளைத் தொடாமல் காத்து வந்த மணிரத்தினம் ஒரே ஒரு இடத்தில் அவளை தொட வைத்து விடுவார். அந்த அழுத்தமான தொடுகை அல்லது உரிமையான தொடுகையில் இராவணன் நாயகனாகவும் இராமன் தன் மனைவியில் கூட இரக்கமற்ற, பணயம் வைக்கும் கொடூரனாகவும் ஒரு காட்சியிலேயே விழித்து முடித்திருப்பார். இராவணனைச் சுட பொலிசார் சுற்றி வளைத்து விட்டார்கள். தன் மரண நாழிகையை கண் முன் அவன் கண்டு விட்டான் ஆனால் தன் முன்னே அவள் நிற்கிறாள். அவளைக் காப்பாற்ற வேண்டிய ஏதோ ஒன்று அவனுக்குள் இருக்கிறது. தன்னை அறியாமலே அவள் தலையை கீழ் நோக்கி அழுத்தி அவளை முதன் முதல் தொடுகிறான்.


இராவணனின் இறுதிக் கணத்தில் அவள் ஒரு பார்வை பார்ப்பாள் அவனும் பார்ப்பான் ஆனால் அவளது பார்வை சொல்லும், அதற்குள் பாசம் வழியும் அதை காதலாக என்னால் விழிக்க முடியாது ஆனால் அவள் கண் சொல்லும் நீ நல்லவன், வல்லவன் என இந்த உணர்வை அப்படியே எனக்குள் கொடுத்த மணிரத்தினத்திடம் இதை விட பெரிதாக என்னத்தை நாம் கற்று விட முடியும்.
அந்த இடத்தில் அவள் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை ஆனால் ஒரு வில்லனை எல்லோருக்கும் நாயகனாக்கியிருப்பாள்.



குறிப்பு - (கார்த்திக் வருவது குரங்குச் சேட்டை விடுவது எல்லாம் படு கேவலமான இடம் ஆனால் இங்கு இராவணன் பற்றி மட்டுமே பேசப்படுகிறது.)

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தொடர்ந்து என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழ் இருக்கும் பேஸ்புக் like பொத்தானை சொடுக்கிச் செல்லவும்.
8:43 PM - By ம.தி.சுதா 1

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல”

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

எந்த ஒரு படைப்பாளி செய்யும் படைப்புக்களும் முற்று முழுதான நிறைவானதாக இருப்பதில்லை ஆனால் குறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை எனக் கடக்க வைக்கும் படைப்பாக இருந்தாலே அது வெற்றி பெற்ற படைப்புத் தான்.
அந்த வகையில் அண்மையில் வெளியாகி என் மனதைக் கவர்ந்த படைப்பாக நான் காண்பது அஜினோவின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ”அஞ்சல” பாடலைக் குறிப்பிடுவேன்.
ராகம் இசைக்குழு வின் பாடலிசைக்கு குமணனின் வரிகளல் அருள் தர்சன் , நிக்சன் குரல்களில்  உறுதியான அத்திவாரமிட்டு பாடலை காதுகளால் ரசிக்க வைக்க கண்களுக்கு வஞ்சகம் செய்யாமல் நிசாந்தன் கமராவால் புகுந்து விளையாடியிருக்கிறார்.
ஜேய் இன் கத்தரிக்கோல் காட்சிகளை அழகாகவே அடுக்கியிருக்கிறது. காட்சி அசைவுக்கு றெக்சன் முற்று முழுதாக ஆக்கிரமித்து முத்திரை பதித்துள்ளார்.
பாடலின் இடையிடையே எட்டிப் பார்க்கும் சிறுவர்கள், பின்னுக்கிருந்து பார்க்கும் சிறுவர்கள், சந்தை நடத்தை என காட்சி விபரிப்புக்கள் பார்வைக்கு சலிப்பில்லாமலே கொண்டு செல்கிறது.
பாடலில் எனக்கு உறுத்தியவை இரு விடயங்களே, கிரேன் ல் அமைத்த காட்சிக்காக ஆசைப்பட்டு பாடலில் அருமையாக இருந்த மற்றைய காட்சிகளின் தரத்தை smooth இல்லாத இக்காட்சி கெடுத்து விடுகிறது.
றெக்சன் அருமையாக ஆடியிருந்தாலும் சில இடங்களில் குழுவுடனோ பாடலுடனோ ஒட்டாமல் ஆடி விட்டிருப்பது பயிற்சி போதாமையோ அல்லது படப்பிடிப்பு அவசரமோ என சிந்திக்க வைத்தாலும் என்னைப் பொறுத்தவரை அஞ்சல என்ற பாடல் கண்கவர் பாடலே
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
(என் பதிவுகளுடன் இணைந்திருக்கு... இப்பதிவின் கீழ் வரும் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்)
8:39 PM - By ம.தி.சுதா 5

வியாழன், 24 செப்டம்பர், 2015

ஈழத்துத் திரைப்படமான முற்றுப்புள்ளியா? என்ன சொன்னது

வணக்கம் உறவுகளே நலம்
எப்படி?

அண்மையில் நடந்து முடிந்த யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவானது பலதரப்பட்ட திரைப்படங்களை எம்மவர்க்கு அறிமுகப்படுத்தியதுமல்லாமல் தணிக்கைக் குழுவால் திரையரங்கத் திரையிடலுக்கு தடைசெய்யப்பட்ட படங்களை பார்க்க அனுமதியும் வழங்கியிருந்தது.
அந்த வகையில் எமக்கு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்த திரைப்படங்களில் ஒன்று தான் மனிதநேயச் செயற்பாட்டளாரான இயக்குனர் ”செரின் சேவியர்” ன் ”முற்றுப்புள்ளியா” என்ற திரைப்படமாகும்.
பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர் கொண்ட இந்த திரைப்படத்தை நான் ஒரு விமர்சகனாகவோ திறணாய்வாளனாகவோ எடுத்துரைக்க வரவில்லை. வன்னிப் போரில் வாழ்ந்த ஒரு குடிமகனாகவும் ஒரு படைப்பாளியாகவுமே அணுகுகின்றேன்.
அரசியல் ரீதியாக பெற்ற முன்னுரைக்கு மேலாக செரின் சேவியர் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மனிதநேய ஆர்வலராகத் தான் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் வசனங்களும் அவரது பெயரைக் காப்பாற்றியே இருக்கிறது என்பதை ஆணித்தரமாக ஏற்றுக் கொள்வேன்.
பொதுவாகமே எம்மவர்கள் எங்களுக்கென்று தனித் தனி அரசியலுக்கான ஒரு கண்ணாடியை வைத்துக் கொள்வோம் அப்படி போடப்பட்ட கண்ணாடியால் பார்க்கப்பட்ட ”செரின் சேவியர்” பலதரப்பட்ட கருத்துக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒரு படைப்பாளிக்கு தனது குழந்தையை சிலாகித்தால் எவ்வளவு கோபம் வருமோ அதே அளவுக்கு தன் படைப்பபை சிலாகித்தாலும் பொறுக்க முடியாது. ஆனால் இந்த இடத்தில் இதை சர்வசாதாரணமாக அவர் எதிர் கொண்டமை அவரது ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தது.
படத்தில் எம் பிரச்சனைகள் பச்சைப்படி அப்பட்டமாக வெளிக் கொணரப்பட்டிருந்தது. ஆனால் இப்படி காட்டப்பட்டதற்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்ட அரசியலாகவே பார்க்க முடிகிறது.

1. எம்மால் பேசவோ/ எழுதவோ/ எடுக்கவோ முடியாத பரப்பு ஒன்றை இயக்குனரால் தொட முடிந்திருக்கிறது 2. செரின் தன்னை ஒரு மனிதநேய செயற்பாட்டாளராக காட்டவே இப்படம் எடுத்தார்.
3. இப்படியான படம் எடுக்கப்பட்டால் கருத்து சுதந்திரம் இங்குள்ளது எனக் காட்ட முடியும்.
4. 50 இலட்சத்துக்கு மேல் செலவளிக்க வேண்டியிருந்திருக்கும் அப்படியானால் அந்த பணத்தை வைத்து தயாரித்தது யார்?

இப்படி பல்வேறு விமர்சனங்கள் இப்படைப்பு மேல் முன்வைக்கப்பட்டாலும் பல படைப்பாளிகள் இப்படைப்பை கருத்தியலுக்கப்பால் எதிர் கொண்ட விதம் வேறு. அந்த இடத்தில் தான் திரைப்படம் பலரை திருப்திப்படுத்தாமல் விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டது. மேற் சொன்னவை எல்லாம் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களாகப்பட்டாலும் ஒரு படைப்புக்கு கட்டாயம் கிடைக்கும் விமர்சனம் தான் அவை ஆனால் ஒரு 10 வருடத்தில் செரின் சேவியர் தனது உண்மையான நிலைப்பட்டை வலுப்படுத்திய பின்னர் சொன்னவர்களே வெட்கித் தலை குனியலாம்.
ஆனால் படைப்பாக இப்படம் சில சிக்கல்களை எதிர் நோக்கியது அது என்ன?
ஆரம்பத்தில் சாதாரணமாக போடி போக்ககத் தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தில் திரையரங்கு போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. காரணம் வெளிநாட்டில் வசித்த ஒருவரால் இப்படி ஒரு படத்தைக் காட்டுவதென்றால் எவ்வளவு தேடல்கள் செய்திருக்க வேண்டுமே அந்தளவுக்கு செய்திருந்தார் (சில ஜதார்த்த மீறல்கள் தவிர). சாதாரணமாக ஒரு ஆவணப்படம் எடுக்கும் எனக்கே அனுமதி உள்ள விடயங்களைத் தேடவே எவ்வளவு காலம், நேரம் எடுக்கும் என்பது தெரியும்.
உதாரணமாக தமிழீழ அடையாள அட்டை, தமிழ்த்தாய் நாட்காட்டி, அதில் தமிழீழ வைப்பக விளம்பரம், அண்ணையின் வசனம், போராளிகளுக்குப் பின்னுக்கிருக்கும் படங்கள் இப்படி பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் நல்லூருக்குள் அப்படி புலிப்படம் முதுகில் போட்ட ஒருவர் எப்படி என்பது எனக்கிருக்கும் கேள்வியே?

ஆனால் படமாக போன எமக்கு இவை அதிசயத்தைக் கொடுத்தாலும் ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையாக பெரும் ஏமாற்றம் காத்திருந்தது ஏனென்றால் ஆரம்பம் முதல் திரைப்படம் என விளம்பரப்படுத்தியிருந்தாலும் அங்கே முற்று முழுதாக ஆவணப்படம் ஒன்றின் தோற்றப்பட்டில் ஒரு கதையை மட்டும் கொண்டு அத்தனை மணித்தியாலம் படமாக எதிர் பார்த்துப் போனவனுக்கு திருப்தி ஏற்பட்டிருக்காது அது தான் பலரது கருத்து வெளிப்பாடகும் ஒரு ஆவணத்திரைப்படம் என முதலே விளம்பரமிட்டிருந்தால் நிச்சயம் இந்தக் கருத்து நடத்திருக்காது. இத்தனைக்குமப்பால் ”செரின் சேவியர்” என்ற அறிமுக இயக்குனர் முதல் படம் இப்படியாவது செய்திருக்கிறார் என்பதை எந்த ஒரு படைப்பாளியாலும் வியப்பாகவே தான் பார்க்க முடியும். காரணம் படத்தில் அந்தளவுக்கந்தளவு Research செய்யப்பட்ட உழைப்புக்கள் கொட்டப்பட்டிருந்தது.

இதை விட படத்தின் மொழி அவ்வளவாக எம்மோடு ஒட்டாமல் போனதும் ஒரு காரணம் இலங்கையில் டப்பிங் செய்ய முனைந்த போது 6 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னமே சில ஊடகவியலாளர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
படம் முழுக்க எனக்கு உறுத்தலாக இருந்த விடயம் அந்த தளபதியின் ஜீன்ஸ் தான் (என் தனிப்பட்ட கருத்து). அப்படிப் பிட்டத்துக்கு கீழ் வரும் ஜீன்சை எந்த ஒரு போராளி அணிந்தும் நான் கண்டதில்லை மிக மிக உறுத்தலாக இருந்ததுடன் அவர் சீருடை கழட்டி விட்டு அணியும் மினுக்கிய சேட் அவர் கதை, இந்திய பாத்திரங்களை நினைவுட்டம் மிடுக்கற்ற அந்த மீசை என முற்று முழுதாக அந்த பாத்திரம் என்னில் இருந்து அந்நியமானாலும் நடிகையான அன்னபூரணி போராளியாகவும் சரி முகாம் வாழ் பெண்ணாகவும் சரி என்னை திருப்திப்படுத்தியிருந்தார்.
தேடலுக்கு போன இடத்தில் பல தவறான தகவல்களும் செரினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு திருமணவீட்டிலும் பெண்ணுக்கு golden மணிக்கூடு கட்டப்படுகிறது. அவதானித்த வரை casio மணிக்கூடு தான் கட்டப்படுவதுண்டு.
அத்துடன் போராளியின் கை நூலை வைத்து பிரிவு அடையாளம் காணும் முறை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இருவர் கையிலும் தகடு இல்லை. கையில் தகட்டுக்காக மட்டுமே நூல் கட்டியிருக்க முடியும் என்பது தான் விதிமுறை மீறினால் கடுமையான punisment எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
இப்படி சில மீறல்கள் வன்னித் தள வாசிகளை படத்துக்கு வெளியே அடிக்கடி இட்டுச் சென்றாலும் ஒரு இடத்தில் வன்னிவாசிகளை மட்டுமல்லாமல் போரியல் வாழ்வோடு ஒட்டியிருந்த அனைவரையும் கட்டிப் போட்டார். அந்த இடம் எமது துயிலுமில்லப்பாடலாகும் (பாடல் இசை தான் வந்தது) எத்தனை தரம் அதைக் கேட்டாலும் எத்தனை பேருக்கு மண் போட்டோமோ அத்தனை பேரது முகங்களும் வரிசையாக வந்து போகும் சக்தி அந்தப்பாடலுக்குண்டு.

மற்றைய விடயம் தாலியாகும்...... எனக்கு மட்டுமல்லாமல் இன்னுமொரு சக படைப்பாளிக்கும் குழப்பமளித்த இடமாகும் காரணம் தாலியை அவர் கப்பல் ஏறும் போது கழட்டிக் கொடுத்தார் (பகல்) என்றே கதை நகர்ந்தது. ஆனால் முடிவில் இந்த இரவு நேர கூடாரத்தில் கொடுப்பதாகவும் கதை நகர்கிறது.

ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன் பல விடயங்களில் இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும் காரணம் விடுதலைப்புலிகள் எடுத்த படங்களைத் தவிர அவர்களை அதிகபட்சம் சரியாகக் காட்டி வெளித்தளத்தில் இருந்து ஒருவரால் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தானிருக்கும் (எல்லாளன் இந்திய ஈழ இயக்குனர்களின் கூட்டுத் தயாரிப்பாகும், ஆணிவேர் ஜான் இயக்கினாலும் முற்றுமுழுதாக போராளிகளின் பங்கே இருந்தது)

படத்தில் தளபதிகளின் வாழக்கை சமாதானகாலத்தில் மாறியமையும் தோல்விக்கு காரணம் எனப்பட்டிருந்தது. இயக்குனர் எப்படியான வாழ்க்கை என தெளிவாக காட்டவில்லையே எனக் கூட நினைத்தேன். ஆடம்பர வாழ்க்கை தொற்றிக் கொண்டமை காரணம் என்றால் நானும் ஏற்றுக் கொள்ளத் தயார். (அதற்கு உதாரணமானவர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அப்படியானார்கள்) ஆனால் திருமணம் தொடர்பாக முற்று முழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழனின் முற்று முழுதான போர் வாழ்வியலில் திருமணம் தடை செய்யப்பட்டிருப்பதாக வரலாறிருக்கவில்லை.
ஆனால் ஆடம்பர வாழக்கை தொற்றிக் கொண்டதும் ஒரு வகை காரணமே தவிர தோல்விக்கு அது தான் காரணம் என்பது தவறு.

கருத்தியல் காட்சிகளுக்குப்பால் ஒரு திரைப்படமாக இப்படத்தை எதிர் கொள்ள முடியாமல் போய்விட்டது. சொல்ல வந்த கதை தொங்கிப் போய் நிற்க சென்னைவாசிகள், செய்ற்பாட்டாளர்கள் என இடையில் வந்தாலும் கதைக்கு தேவையானது என வைத்தாலும் தேவையற்ற அவர்களது இழுவையான காட்சிகள் படத்தின் மையக் கதைக்கு வெளியே அதிக நேரம் தரிக்க வைத்து படம் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற கணிப்பீட்டை எமக்கு கொடுத்து விடுவதை இயக்குனரால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் ஈழத்திரைத்துறையில் ”முற்றுப்புள்ளியா?” என்ற திரைப்படமானது ஒரு பெரும் முயற்சி அதுவும் ஒரு பெண் இயக்குனரின் முனைப்பு என்பது எமது வளர்ச்சிப்படியின் ஒரு பெரிய அத்திவாரமே. இத்தனை கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து ஒரு தரமான துணிவான திரைப்படத்தை ”செரின் சேவியர்” எமக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
9:17 PM - By ம.தி.சுதா 2

ஞாயிறு, 15 மார்ச், 2015

என்னைத் தாக்கிய சேரனின் ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு தலை எழுத்தாகவே மாற்றப்பட்ட விடயங்களில் ஒன்று தான் இந்த நடிகர்களுக்காகப் படம் பார்ப்பது என்ற கலாச்சாரமாகும். அதுமுட்டுமல்லாமல் சந்தோசப்படுத்தும் அல்லது மசாலக்கலவைகள் கலந்து படம் எடுக்க வேண்டும் என்ற திணிப்புக்கள் அதிகமாக உள்ள இடம் தான் இந்த தமிழ் சினிமா உலகமாக முத்திரையிடப்பட்டு வருகிறது.

இயக்குனருக்காக அல்லது இந்த இயக்குனரின் படைப்பு என் பார்க்கும் ரசிகர்கள் மிக மிகக் குறைவானவர்களே. இது தவிர்ந்த வகையறாக்களுக்குள் மாட்டுப்பட்டுத் தவிக்கு தனித்தவமான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் சேரனும் மிக முக்கியமானவராகும். கடந்த வாரம் அவரது ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை” என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. எம் வாழ்க்கையோடு மட்டுமல்ல எம்மோடு பின்னிப்பிணைந்த ஒரு கதை. யதார்த்தத்தோடு சற்றும் விலகாமல் பயணித்திருந்தது.
பலர் அப்படம் தொடர்பாக சிலாகித்திருந்தார்கள். ஆனால் அது சேரனின் படம் என்று பார்க்கப் போனவர்கள் அனைவரும் திருப்தியோடு மட்டுமல்ல சேரனின் வழமைக்கு மாறான அனுபவம் ஒன்றுடன் தான் திரும்பினார்கள். காரணம் வழமையாக சேரன் கதை சொல்லும் விதத்திலிருந்து இம்முறை திரைக்கதை சற்று மாறுதல் அடைந்திருந்தது. காட்சிகள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் சென்டிமென்டை அள்ளிக் கொட்ட பல இடங்கள் இருந்தும் அளவாக சோகக் காட்சிகளைக் காட்டியிருக்கிறார்.
சில காட்சிகளுக்கான பதிலை முதலே பூடகம் போட்டிருந்தார்.
குறிப்பாக அந்த பறவைகளின் முடிவுக் கதையை முன்னமே வைத்திருந்தார். உன்னிப்பாக இருந்தவருக்கு படத்தின் முக்கால்வாசியிலேயே இறுதிக் காட்சி வழங்கப்பட்டு விட்டது.
மிக முக்கியமாக அந்த நாயகனைப் பாருங்கள். படத்தின் ஆரம்பம் எல்லாம் ஒரு நாயகனின் வளர்ச்சி சம்மந்தமானதாகும். ஆனால் நாயகனோ நித்திரையால் எழும்பியவன் போல் தான் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது . (சில வேளை இந்த இடத்தில் தான் சாமானிய மசால ரசிகன் குழம்பியிருக்கலாம். காரணம் அவன் பார்ப்பது முழுக்க நாயக எழுச்சி என்றால் ஒரு பாடலும் 10 பாஞ்ச் வசனமும் தான்).
அந்த பிளாஷ்பாக் காட்சியின் பின் அந்த நாயகன் ஏன் அப்படி நடக்கிறான் என்பது எந்த வித எரிச்சலும் இல்லாமல் கதையோடே ஒட்ட வைத்துப் பயணிக்க வைப்பார்.
மகன் இறப்புக்கு பெற்றோர் அழும் இடத்தில் பாருங்கள் காட்சியின் நேர நீட்சியை தவிர்ப்பதற்காகவும் அள்ளித் தெளிக்கும் சோகக் காட்சியையும் கிளிசேவ் ஆகாமலும் இருப்பதாற்காக அவர்கள் அழும் காட்சி வேறாகவும் அவர்கள் குரல் வேறாகவும் அமைத்திருப்பார்.
ஆணும் பெண்ணும் பழகினாலே பார்ப்பவர் முதல் பார்வை ஒரு சந்தேகப் பார்வையாகவே இருக்கும் ஆனால் இப்படத்தில் அவள் கட்டிப்பிடித்தும் கூட பார்ப்பவருக்கும் சந்தேகமில்லாமல் இருவரையும் ஒரு நல்ல நண்பர்களாகவே பார்க்க வைத்து வெற்றி கண்டிருப்பார்.
என்னைப் பொறுத்தவரை ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”  சேரனின் படமாகும். படத்தைச் சிதைக்கக் கூடாது என்பதற்காக கதைக்குள் ஆழமாக போகவில்லை. ஆனால் மனிதர்களோடு வாழ நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகும்.

பிற்குறிப்பு - இவ்வளவு நுணுக்கமாக படத்தைச் செதுக்கியவர் சந்தானம் வரும் முதல் காட்சியில் டப்பிங்கும் வைக்க மறந்து போய். அப்படி துள்ளும் ஒரு காட்சியை ஏன் வைத்தார் என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
12:05 PM - By ம.தி.சுதா 4

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஆரண்ய காண்டம் படத்தில் நான் ரசித்தவை

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் தமிழ் சினிமா ரசிகர்களின் குணத்துக்கு விதிவிலக்காக அமையாமல் போன படங்களில் ஒன்று தான் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ”ஆரண்ய காண்டம்” திரைப்படமாகும்.

படத்தில் ஆபாச வசனங்கள் சற்று தூக்கலாக இருந்தாலும் ஜதார்த்தத்தில் இருந்து ஒரு முடி அளவு கூட விலத்தாமல் கதையோடு நகர்ந்து செல்வதே அதன் தனிச்சிறப்பாகும்.


திரை உருவாக்கம் பற்றி அறிய நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகும். காரணம் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்ட திரைக்கதைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரச் செதுக்கல்கல்கள் ஆகும். எந்த ஒரு பாத்திரத்தில் கூட ஜதார்த்த விலகலைக் காட்ட முடியாது.

அதிலும் குறிப்பாக மிக மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்த பாத்திரமாக குடிகார ஜமிந்தாரையே குறிப்பிட்டு ஆக வேண்டும். 7ஜி ரெயின் போ காலணியில் வந்து போன ரவிகிருஸ்ணாவை சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்தியிருப்பார்கள். அந்த சப்பை பாத்திரத்துக்காக வாழ்தலில் சரியாக வாழ்ந்து முடித்துச் சென்றிருக்கிறார் ரவி கிருஸ்ணா.
அதற்கப்பால் மிக முக்கியமாக பேசப்பட வேண்டியவர்கள் 
1. சம்பத் - சாதாரணமாகவே அவரது எந்த நடிப்பானலும் எனக்கு மிக மிகப் பிடிக்கும் அதிலும் கோவா படத்தை ரசித்ததே அவருக்காகத் தான்.
2. ஜாக்கி செராப் (வில்லன் பாத்திரம்) - எங்கே தேடிப்பிடித்தார்களோ தெரியவில்லை அப்படி ஒரு தத்ரூபமான தெரிவாகும். அவர் தொடர்பாக தேட முனைந்த பொது தான் தெரிந்தது அவர் 150 படங்களுக்கு மேலாக நடித்த ஒரு குஜராத்தியர் என்பது.
3. மாஸ்டர் வசந் - அத்தனை பெரிய நடிகர்களுக்கும் ஈடாக அவரது நடிப்பிருக்கும். தந்தையை காப்பாற்றியவுடன் சம்பத் கேட்ட கேள்விக்கு அநாயசமாக ஒரு பதில் சொல்லுவான் பாருங்கள் அந்த இடம் அவன் நடிப்புக்கு பெரிய சான்றாகும்.

அதற்கப்பால் நடிகை, ஜாக்கி செராப் ன் வலது கையாக வரும் நடிகர் என ஒவ்வொரு பாத்திரங்களும் கதையோடு இயைபாக்கப்பட்டு நகர்கிறது.


படத்தில் பேச வேண்டியவற்றில் ஒன்று வசனமாகும். ”எது தேவையோ அது தான் தர்மம்” என்று படம் ஆரம்பிக்கும் இடத்தில் பிள்ளையார் சுழி ஓடு ஆரம்பித்து அத்தனை கேவலமான பாத்திரங்களையும் அந்த ஒரு வசனத்தாலேயே நியாயப்படுத்தி கோபம் வராமல் எம்மையும் ஒத்திசைய வைப்பதில் இயக்குனர் பெரு வெற்றி கண்டிருக்கிறார்.


இக்கதையை நம்பி 5 கோடி ரூபாயை போட்ட எஸ்பிபி சரணை பாராட்டத் தான் வேண்டும். அதே இடத்தில் அவ்வளவு காசையும் கொட்டியவர் அப்படத்தை சந்தைப்படுத்திய விதத்துக்கு திட்டித் தீர்த்தே ஆக வேண்டும். அந்தக் கடனை அடைக்க தந்தையாரான எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது ஸ்ரூடியோவை விற்ற கதை எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.


அத்துடன் பாடல்களே இல்லாத இப்படத்தில் யுவன் இசையால் ஒரு புது உலகுக்கு அழைத்துச் சென்றிருப்பார். காட்சிக்கு முன்னரே கதைக்களத்துக்கான உணர்வைக் கொடுத்து எம்மை தயார்ப்படுத்துவதில் இசை முழு வெற்றி கண்டிருக்கிறது.

இத்திரைப்படமானது சிறந்த படத் தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

52 காட்சிகள் நீக்கப்பட்டே வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த இப்படத்தில் விஜய் தொலைக்காட்சி தானும் தன் பாட்டுக்கு வெட்டி எறிந்திருந்தாலும் அதன் யூரியுப் பக்கத்தில் தணிக்கைக்கு உட்படுத்தாத படத்தை பகிர்ந்துள்ளது இப்பதிவின் கீழ் தணிக்கை செய்யப்படத அப்படத்தை இணைத்துள்ளேன்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
6:02 PM - By ம.தி.சுதா 2

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top