Featured Articles
All Stories
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2016

என்னுடைய முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு

வணக்கம் உறவுகளே...

தொழில்நுட்ப வளங்களை முழுமையாக அடையாத என் மண்ணில் இருந்து தயாரிப்பாளரும் கிடைக்காத நிலையில் என்னிடம் இருந்த வளம் சினிமா அறிவு என்பவற்றை வைத்து “உம்மாண்டி“ என்ற இந்த முழு நீளத் திரைப்படத்தை முடித்து அதன் முன்னோட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இதை கிளிக் செய்து உங்கள் பேஸ்புக்கிலும் பகிர்ந்து மற்றைய நண்பர்களையும் சென்றடைய உதவுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


8:44 PM - By ம.தி.சுதா 2

புதன், 22 ஏப்ரல், 2015

மற்றவர் மரணத்தில் இலாபம் தேடுவது வைரமுத்துவுக்கு இது முதல் முறையல்ல

வணக்கம் உறவுகளே
நலம் எபபடி?


ஆரம்ப காலத்தில் சண் தொலைக்காட்சி ஒரு திரைப்பட நிகழச்சித் தொகுப்பை வழங்கும் அதன் பெயர் வாரம் ஒரு நட்சத்திரம் என்பதாகும். இதே போல இப்போது சமூக வலைத் தளங்களிலும் வாரம் ஒரு நட்சத்திரமாக பலியாடுகளாக அவர்களாகவே தலையை கொடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குமுதம் மூலம் இந்த வாரம் தலையைக் கொடுத்திருப்பவர் கவிஞர் வைரமுத்துவாகும். மறைந்த மதிப்பிற்குரிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் பெயரில் தன்னை பாராட்டி எழுதியதான கடிதம் ஒன்றை அதுவும் அவரது இறுதிக் கடிதம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப் போக அதற்குப் பின்னிருந்த மறைக்கபட்ட நிகழ்வுகளை ஜெயகாந்தனின் மகளான தீபலக்சுமி தனது பேஸ்புக்கில் அப்பட்டமாக போட்டுடைத்துள்ளார்.

இதற்கப்பால் இதற்கு முன்னரும் மற்றவர் மரணத்தில் தனது விளம்பர வண்டி ஓட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பலருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை.
ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்காக ஆரம்ப காலத்தில் பல தென்னிந்தியப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் மிக நீண்ட காலமாக வைரமுத்து அவர்களை பாடல் புனையும்படி புலம் பெயர் சமூகத்தில் இருந்து பலர் கேட்டக் கொண்டிருந்தாலும் தனது பேருக்கு கெடுதல் ஏற்பட்டு விடும் என மறுத்து வந்தார்.
குறிப்பாக கருணாநிதி அவர்கள் தனது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுடன் ஒத்திசைந்து நடக்க வேண்டிய நேரத்தில் தான் தனது அரசியல் பக்க பலத்தை கட்டி எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் வைரமுத்துவுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் கருணாநிதியுடன் மிகவும் நெருங்க வேண்டிய சூழ்நிலை ஒன்றுக்கு தள்ளப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவ் ஆட்சியில் அவர் பெற்ற சலுகைகள் பட்டங்கள் பற்றி எல்லாம் இந்த உலகமே அறியும்.
இப்படி நடந்தவர் போர் ஓய்ந்து சமாதான காலப்பகுதியில் கிடைத்த சுனாமி என்ற சந்தர்ப்பத்தை ஈழம் நோக்கி சரியான விளம்பர ஆயுதமாக பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர் பணத்தைக் கறந்து தானே ஒரு அல்பத்தை வெளியிட்டு புரட்சிவாதி போல அடையாளப்படுத்திக் கொண்டார்..
இது தொடர்பாக 2011 ம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் இடப்பட்ட கருத்துப் பெட்டியில் அறிவிப்பாளரும் பதிவருமான நிருபன் அவர்கள் புட்டுப் புட்டு வைத்திருந்தார். அவை தொடர்பான ஸ்கிரீன் சொட்கள் இங்கே பகிர்கிறேன்.

பதிவுக்கான தொடுப்பு - இங்கே சொடுக்கவும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
2:53 PM - By ம.தி.சுதா 2

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

DD தொலைக்காட்சியில் ஒன்றாய் கலந்துரையாடிய 4 ஈழத்து கலைஞர்கள் - காணொளி இணைப்பு

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?


கடந்த சித்திரைப் புதுவருட நாள் நிகழ்ச்சயாக டிடி தொலைக்காட்சியானது 4 ஈழத்துக் கலைஞர்களை அழைத்து சமகாலத்தில் கலைத்துறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பாடலாசிரியரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான வெற்றி துஷ்யந்தன் தொகுத்து வழங்கியிருந்தார்.
இக்கலந்துரையாடலில்...
ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், இயக்குனருமான லோககாந்தனும்
நடிகரும், இயக்குனரும் ஆன கவிமாறனும்
நடிகரும், பாடகருமான ஜெராட்டும்
நானும் கலந்து கொண்டிருந்தோம்.
கலந்துரையாடலின் முழுமையான வடிவம் இணைக்க முடியாமையால் முக்கியமான பகுதிகளை மட்டும் சிறு நேரம் ஒன்றுக்குள் சுருக்கி இணைத்த்துள்ளேன்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
10:47 AM - By ம.தி.சுதா 0

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

வர்த்தக சினிமாவில் இன்னொரு கட்டத்துக்கு நகரும் ஈழசினிமா

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

ஈழத் தமிழருக்கென்று அடையாள சினிமா தேடும் போராட்டத்தில் ஒவ்வொரு கலைஞனும் தம் நேரம், பொருள், வாழ்வு என பலதை அர்ப்பணித்து கலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் தோற்றுப் போனாலும் எம் போராட்டமும் உழைப்பும் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு அனுபவப் புத்தகமாக இருக்கும்.
ஈழத்தில் இதுவரை உருவாக்கப்பட்ட குறும்படங்களில் எடுகோளான விழாக்களை எடுத்துக் கொண்டால் இதுவரை காலமும் ஒரு தொகுதியினர் கை கடிக்க கடிக்க தம் காசில் தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு எடுத்து விட்டு யூரியுப்பில் தரவேற்றிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் போட்ட காசை எடுக்கலாம் என்ற நம்பிக்கையிலும் படத்துக்கான விளம்பரமாக அமையலாம் என்ற எண்ணத்திலும் வெளியீட்டு விழாக்கள் மூலம் பிரதி விநியோகத்தின் மூலம் போட்ட காசில் குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் எடுத்துக் கொண்டனர்.
இவை எம் சினிமாவை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் வர்த்தக ரீதியில் பாரிய நட்டத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னர் பல இயக்குனர்களது பார்வை திரையங்குகள் பக்கம் திரும்பியது. இதற்கு ஏதுவாக ஹிமாலயா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தப்பட்ட போட்டிகளில் ஒன்றான 48 hours film project என்ற போட்டியின் இறுதி நிகழ்வானது ராஜா திரையரங்கில் நிகழ்த்தியதன் மூலம் கணிசமான வருகையாளர் எண்ணிக்கை ஒரு மாற்றமாக அமைந்த நிலையில்....
மாதவனுடைய ”என்னாச்சு” , சமிதனுடைய ”நீ நான் அவர்கள்” , சிவராஜ் உடைய ”பை” ”பிகரை தியெட்டர் கூட்டிப் போவது எப்படி” , நிலானுடைய ”காதல் என்ன விளையாட்டாப் போச்சா” வரோவின் ”இலவு” போன்ற குறும்படங்கள் திரையரங்க திரைகளை அலங்கரித்து வர்த்தக சினிமாவுக்கான ஒரு ஒளிப்பிரகாசம் அளித்தது.
முழு நீளப்படங்களில் ஏற்கனவே கவிமாறனுடைய ”என்னுள் என்ன மாற்றமோ” , ரமணாவின் ”மாறுதடம்” (இப்படம் தணிக்கை பிரச்சனையால் திரையரங்கில் தடை விதிக்கப்பட பின்னர் மண்டபம் ஒன்றில் திரையிடப்பட்டது) , ராதா வின் ”சிவசேனை” போன்றன திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தன.
அடுத்ததாக ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. கலைஞர்களாக அக் குறும்படத்துக்கு எம்மால் ஆனா ஒத்துழைப்பை கட்டாயம் வழங்க வேண்டும் காரணம் இது எம் சினிமா இதை வர்த்தகமயமாக கட்டி எழுப்ப வேண்டிய கடமை ஒவ்வொருத்தருக்கும் இருக்கின்றது. அத்துடன் இக்குறும்படத்தின் தரத்தை என்னால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்.
வர்த்தகமாக்கலில் உள்ள சவால் என்னவென்றால் கணிசமான மக்கள் இந்திய சினிமா மோகத்துக்குள் இருப்பதால் அம் மக்களை எடுத்த வீச்சமாக எமது சினிமாவுக்குள் இழுத்து வர முடியாத நிலை ஒன்று இருப்பதால் படிப்படியாகவே அவர்களை எம் சினிமாவுக்கு பழக்கப்படுத்தி அவர்களை இவற்றையும் எதிர் பார்ப்போடு ரசிக்க வைக்க வேண்டும். இது ஒரு மிகச் சவாலான விடயமே காரணம் அவர்களைச் சென்றடையும் படைப்புக்கள் அனைத்தும் தர மட்டத்தில் குறைந்தனவாக இருந்தால் ஒட்டு மொத்த படைப்பாளிகளையும் குப்பைகளாக மதிப்பீடு இட்டு விடுவார்கள்.
வர்த்தகமயமாக்கலில் எதிர் கொள்ளும் இன்னொரு மிக முக்கிய சிக்கல் என்னவென்றால் திரையரங்க உரிமையாளர்களின் ஒத்துழைப்பாகும். திரயரங்குக்கு கொண்டு செல்லும் குறும்படம் கூட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தணிக்கை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார்கள் இதற்கான அலைச்சலுக்கே ஒருவருக்கு 10,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அதற்கப்பால் தென்னிந்திய முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்ந்த சாதாரண படங்களை வைத்திருந்து பார்வையாளர்களே இல்லா நிலையில் இருக்குமு் திரை அரங்குகள் கூட இப்படி ஒரு திட்டத்துடன் அணுகும் போது ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 30,000 ஆயிரம் வரை கேட்கிறார்கள். மிக முக்கியமாக இப்பிரச்சனைகளை எல்லாம் ஒரு கலைஞனால் எதிர் கொள்ள முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் எமக்கென்று இதுவரை செயற்பாட்டுடன் கூடிய ஒரு சங்கம் இல்லாமையே..
இப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் எம்மால் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு படைப்பாளியும் உழைக்கிறான். இந்த உழைப்பானது ஒரு நாளில் நிச்சயம் வரலாறாகப் பேசப்படும். அதற்காகவாவது கை கோர்த்து உழைப்போம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

இணைப்புக் குறிப்பு - 

1) இப்படியான திட்டம் ஒன்று சென்ற மார்கழி மாதம் எனக்குள் இருந்தாலும் இதுவரை செய்த 9 குறும்படங்களில் ஒன்றுக்கு கூட வெளியீட்டு விழாக் கூட நடாத்தாத நிலையில் ஒரு சிறிய குறும்படத்துக்காக மட்டும் ஒரு பார்வையாளன் இருந்த களை மாற முதல் எழும்ப வைப்பது ஏதோ மனசை உறுத்தியது. ஆனால் இப்போது என் திட்டத்தை வெளிக் கொணரும் எண்ணம் இருக்கிறது. 2009 போரின் பின்னர் வன்னியின் போன் வெளிக்கள போர்க்காட்சியை மையப்படுத்திய என்னுடைய ”தாத்தா” குறும்படத்தையும்,
அண்ணன் தங்கையை மையப்படுத்திய ”கருவறைத் தோழன்” மற்றும் நோர்வே சர்வதேச திரைப்பட விழாவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான ”கரகம்” ஆவணப்படத்தையும் உள்ளடக்கி ஒரு முழுமையான சினிமா நேரமாக்கி. தயாரிப்பாளர் எதுவும் கிடைக்காமல் பண நெருக்கடியால் கிடப்பில் கிடக்கும் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி” திரைப்படத்துக்கான பணம் சேர்க்கும் நோக்குடன் வரும் மே மாத கடைசியில் திரையிடும் எண்ணம் இருக்கிறது.

2) ஆகாசின்  ”‎என்‬ ‪‎கனா‬ ‎உன்‬ ‪‎காதல்”‬ என்ற குறும்படம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு செல்லா திரையரங்கில் திரையிடப்படுகின்றது. எம்மால் ஆன ஒத்துழைப்பை வழங்குவோம். இப்படைப்பில் பணியாற்றிய விஷ்ணு, நிரோசா, சசிகரன், சுதர்சன், ஆதன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் சேரட்டும்.

3) அடுத்து வரும் காலப்பகுதியில் சக இயக்குனர்களின் குறும்படத்துடன் இணைத்து முழுமையான பட நேரம் ஒன்றுக்கு கொண்டு வந்து திரையிடும் எண்ணமும் இருக்கின்றது.
11:20 PM - By ம.தி.சுதா 3

வெள்ளி, 26 டிசம்பர், 2014

போரின் பிடியில் அவயம் இழந்த ஒரு தன்னம்பிக்கை மனிதன் காணொளி

வணக்கம் உறவுகளே


இந்தப்பதிவானது நேற்று மல்லாவியில் நான் சந்தித்த ஒரு மனிதனுக்காகப் போடப்படுகிறது. தன்னம்பிக்கை வரிகளை நானும் அளவுக்கதிகமாக விதைத்து உங்களை சலிப்படைய வைக்க விரும்பவில்லை. நான் பேச நினைக்கும் அனைத்தையும் இந்த ஒரு நிமிட காணொளி உங்களுடன் பேசும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

போர் என்பது உடல்களைத் தான் ஊனமாக்கியதே தவிர எவர் மனங்களையும் ஊனமாக்கவில்லை.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா



வன்னிப் போருக்கு பின்னான எம் சமூக நிலை பற்றி என்னால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் இரண்டு இதோ....



1:58 PM - By ம.தி.சுதா 0

சனி, 27 செப்டம்பர், 2014

ஈழத்தில் பணமிறைக்கும் தயாரிப்பாளர்களுக்கோர் மடல்

எம் ஈழத்து சினிமாக்கலையை வளர்க்க துடிக்கும் எம் புலம்பெயர் உறவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

தங்களின் அவாவின் வெளிப்பாடாக பெரும் பெரும் முதலிடுகளுடன் சின்ன சின்ன சின்ன குறும்படங்கள் இங்கு உருவாகியமை பலர் அறிந்ததே.
அதுவும் ஒரு பெரும் படத்துக்கான முதலீட்டில் உருவாக்கப்பட்ட சிறிய குறும்படங்களும் இருக்கின்றது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குட்பட்ட விடயம்.

ஆனால் வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால்
1. ஒரு படத்துக்கு இரவு பகலாக சிந்திக்கும் இயக்குனர் சல்லி காசு எடுப்பதில்லை (விதிவிலக்குகளை கண்டு கொள்ள வேண்டாம்)

2. பற்றை பருகு எல்லம் உருண்டு உருண்டு படம் பிடிப்பவன் கமரா தேய்மானத்துக்கு கூட காசு எடுப்பதில்லை,

3. அவ்வளவு வீடியோவையும் வெட்டிக் கொத்தி இயக்குனருடன் குத்து வெட்டுப்பட்டு இரண்டு மூன்று RAM துலைச்ச எடிட்டரும் அதில் தன் நேரச் செலவுக்கான காசும் எடுப்பதில்லை.

போலி குறும்படத்துக்காக யாழ் பஸ்நிலையத்தினுள் இயக்குனர் பிறேம் , ஒளிப்பதிவாளர் பாலமுரளி மற்றும் படத்தொகுப்பாளர் செந்தூரனுடன்

ஆனால் இந்த நடிப்பவருக்கான சம்பளம் என்ற ஒரு விடயத்தை கேட்டால் தான் தலை கிறுகிறுக்கும். உண்மையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் அர்ப்பணிப்போடு இருக்க. தம் சம்பளத் தொகை தான் தமது தகுதிக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

குறும்படத்துக்கான தமிழ் நடிகைகளின் சம்பளத் தொகை ஆனாது அக்குறும்படத்துக்கான மொத்த செலவை விட அதிகமாகும். ஆனால் ஒரு உண்மையான உழைப்பாளி வாங்குவதில் தப்பில்லை அதற்காக அவர்கள் அந்தளவுக்கு உழைக்கிறார்களா என்றால் மருந்துக்கும் இல்லை.
இத்தனைக்கும் நல்ல கதையம்சம் இருந்தால் செலவு காசுடன் நடிப்பதற்கு சிங்கள நடிகைகள் தயாராக இருப்பது உண்மையான விடயமாகும்.

ஈழ கலையை வளர்க்க வெண்டும் என்ற உங்கள் அவாவை தப்பாக சொல்லவில்லை ஆனால் நல்ல படைப்புக்கும் நல்ல படைப்பாளிகளுக்கும் செலவழித்து கலையை வளருங்கள். ஒரு படத்துக்காக நீங்கள் அள்ளிக் கொட்டி கொடுத்து குழப்பும் தொகைகள் ஆனாது ஒட்டு மொத்த பாதையையும் சீர் குலைக்கிறது.

இன்னும் இங்கு யாரும் வணிகரீதியாக இத்தொழிலை செய்யவில்லை என்பதும் எல்லோரும் எமக்கான ஒரு அடையாளத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பதும் தான் தெளிவான உண்மையாகும்.
உண்மையான உழைப்பாளிகளை உயர்த்துங்கள். போடி போக்காக எம் தனித்துவத்தை சீர்குலைக்கும் விடயங்களுக்கு துணை போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:27 AM - By ம.தி.சுதா 4

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்

முற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.

வணக்கம் சகோதரம்
சேமம் எப்படி?
தங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய வேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...

முதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.
இங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.
ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?
இதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.
உதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா?

இலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா?
உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...

தயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.

இதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


செவ்வாய், 14 மே, 2013

புலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள் பாகம்-1

எந்த நாடு போனாலும் இந்தக் கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும் தான் நாடு மாறுது என்ற வரி என்மனவானில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கும். இவ்வரி ஒரு நாடோடிக்கூட்டத்தின் வறுமையை சிததரிப்பதற்காக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழனைப பொறுத்தவரை இவ்வரி மாறிய வருகிறது. எந்த நாடு போனாலும் அவனுக்கென்று தனி முத்திரையை எதோ ஒரு வகையில் பதித்திருப்பான்.

அந்த வகையில் இன்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கனடா மார்க்கம் நகரசபைஅங்கத்தவராக இருக்கும் திரு லோகன் கணபதிப்பிள்ளையாவார். யாழின் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் நாடடின் சூழல் இவரை கொண்டு சேர்த்த எல்லை தான் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் கனடிய தேசமாகும்.

ஆனால் ஒரு நகரசபையில் இருக்கும் மக்களின் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஈழத் தமிழன் அங்கத்தவராக வருவதென்பது எல்லோருக்கும் பெருமையான விடயம் ஒன்று தானே.
அந்நகரசபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவராக இருக்கும் இவர் செய்தது என்ன?
அந்நகரசபையின் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” “vanni street in markham canada”என பெயர் சூட்டுவோம் என இவர் முன்மொழிந்து அதை நடைமுறைப்படுத்தி திறக்கவும் உள்ளார்.

இதே நகரசபை தான் தமிழரின் விழா மாதமான தைத்திருநாள் மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக மாற்றி அதை விழாவாகவும் எடுத்து எமது கலை பண்பாட்டை கட்டிக் காக்க உதவி வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பல நல்ல செயல்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது வழியில் பின்பற்றி எமது மொழி கலை பண்பாட்டுக்கு நாமும் உதவுவோம். அவருக்கு என் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
(ஏனையவர்கள் சாதனைகள் பற்றிய பதிவு தொடரும்)

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

1:25 PM - By ம.தி.சுதா 3

புதன், 3 அக்டோபர், 2012

ஒரு மூத்த பதிவரை இழந்து நிற்கும் இலங்கைப் பதிவுலகம்

மனித பயணங்களில் எத்தனையோ மனிதரை கடக்க வேண்டியிருக்கும். அதில் சிலருடனேயே தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். சிலரை நடுவழியில் பிரிய வேண்டி நேரிடும்.

அந்த வகையில் கடந்த 30.9.2012 அன்று இலங்கையின் ஆரம்ப கால பதிவர்களில் ஒருவரான புவனேந்திரம்-ஈழநாதன் இழந்திருக்கிறோம் என்று சொல்லும் போது மனது கனத்தாலும் அவ்வார்த்தையை கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

2004 அளவில் பதிவுலக வாழ்க்கையை சிங்கப்பூரில் ஆரம்பித்த இளங்கோ அண்ணா தனக்கு கிடைத்த நேரங்களில் தமிழுக்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் உழைத்தவர். ஆனால் தனது சொந்த பெயர்களை பல இடங்களில் பாவிக்காமல் ஈழவன், ஈழநாதன் போன்ற புனை பெயர்களில் பல படைப்புக்களை வழங்கியிருந்தார்.

யாழ் கருத்துக்களத்தில் தீவிர பங்காற்றியவர்களில் இவரும் ஒருவர். அதிலும் ஈழத்து நூல்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட www.noolaham.net  தளத்தில்  இவரது உழைப்பு மிகப் பெரியதாக இன்றும் கருதப்படுகிறது. அத்தளத்தின் வளர்ச்சிக்காக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு வெற்றியும் கண்டார்.

இவையனைத்திலும் எனக்குள் ஆயிரம் வலிகளை விதைக்க இவர் செய்த இச்செயல் காரணமாகிவிட்டது. உண்மையில் இத்தனை விடயங்களை துருவி ஆராய வெளிக்கிடும் எனக்கு அவர் செய்த செயல் வெட்கித் தலைகுனிய வைத்து விட்டது.

ஆரம்ப நாட்களில் நான் வன்னி சம்பந்தமான பதிவுகளை எழுதும் போது பல அழுத்தங்கள் கிடைத்தது. நீ பொய் பேசுகிறாய், வன்னி அவலம் என்று கதை விடுகிறாய், புலம்பெயர்ந்தவரை கேவலப்படுத்துகிறாய் என பகிரங்கமாகவும், தனிமடல்களிலும் பலர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரம் ஈழநாதன் என்ற ஒரு பதிவர் பகிரங்கமாகவே வந்து என்னை உற்சாகப்படுத்தி கருத்திட்டுச் செல்வார்.

ஏதாவது அப்படியான பதிவு போட்டால் உடனே மின்னஞ்சல் ஒன்று போடுவார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். சில தேவைகளுக்காக உங்களை அடக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் எழுதுங்கள் என்று போடுவார். அடிக்கடி எமக்குள் தொடர்பிருந்தாலும் அவரது இளங்கோ என்ற கணக்கில் இருந்து எந்த தொடர்பும் என்னுடன் இல்லாததால் இவர் தான் அவர் என சந்தேகிக்க முடியாமலே போய் விட்டது.

இத்தனைக்கும் எனக்கு அவர் உறவு வழியில் உடன் பிறவாத அண்ணனாக இருந்தாலும் ஒரு தடவை கூட ஈழநாதன் தான் இளங்கோ என்பதை அறிமுகப்படுத்தவே இல்லை.

அவருடனான சிறு வயது நெருக்கம் என்பது மிகவும் ஆழமானது. இருவருக்கும் 4 வயது இடைவெளி தான். அவரது தம்பிக்கும் எனக்கும் ஒரே வயது. மூவரும் பிள்ளையார் கதை என்றால் எமது ஆலயத்துக்கு பாடல்கள் படிக்கச் செல்வோம். இளங்கோ அண்ணா தீட்சை கேட்டவரென்பதால் அவர் பிள்ளையார் கதை படிப்பார். அவர் தம்பி இளம்பரிதியும் நானும் அப்போ தீட்சை பெறாததால் ஆலய விதிமுறைப்படி பிள்ளையார் கதையின் பின்னர் வரும் துதிப் பாடல்களைப் படிப்போம்.
எம்மை இச்செயற்பாட்டுக்கு அனுமதி தந்து மன உறுதி தந்து உற்சாகப்படுத்தி விட்டவர் இப்போதும் எமது ஆலயத்துக்கு தலைவராக அருக்கும் மகேந்திரம் ஐயா தான். அவர் தந்த உறுதிக்கும் அனுமதிக்கும் என்றும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அப்போது இளங்கோ அண்ணாவிடம் மட்டும் தான் தேவாரப் புத்தகம் இருந்தது. தான் படித்து முடிய தனது புத்தகத்தை் தான் எமக்கு படிக்கத் தருவார். அதில் வரும் ஒரு வரி எப்போதும் என் நாவோடு சண்டைபிடிக்கும். அந்த வரிக்கும் என் நாவுக்கும் சமாதான ஒப்பந்தம் போட்டவர் இளங்கோ அண்ணா தான்.

இனி நான் கூறப் போவது அவர் வீட்டாருக்கே தெரியுமோ தெரியாது. ஆனால் இந்த இடத்தில் கட்டாயம் கூறவேண்டும். இனியும் அவது வீட்டாருக்கு இதை மறைப்பதில் எதுவும் இல்லை.
இளங்கோ அண்ணா தமிழுக்காக மட்டும் உழைக்கவில்லை. ஈழத்திற்காகவும் பாடுபட்டவர். வன்னியில் சில மாணவர்களுக்கு கணனி தொடர்பான கற்கையை தான் இங்கு வரும் காலங்களில் கற்பித்துச் சென்றிருக்கிறார். 2003-2004 கொலப்பகுதியில் இங்கு வரும் போது நான் உடுப்பிட்டியில் இருந்து தான் உயர்தரம் கற்றுக் காண்டிருந்தேன். அப்போது அவருக்கு கிளிநோச்சியில் இடங்கள் தெரியாததால் என்னைத் தான் இடம் காட்டி அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி விடும்படி கேட்டுக் கொண்டார். 

இருவரும் ஒரு காலைப் பொழுதில் வெளிக்கிட்டு ஒன்றாகவே பயணித்தோம். அதன் பின்னர் இரு வீட்டாருக்கும் சந்தேகம் வராத வகையில் நான் அவரை கிளிநொச்சியில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு மல்லாவியில் இருந்த எனது அக்கா வீட்டுக்குச் சென்று விட்டேன். இது அப்போது என்னோடு ஒன்றாக கல்வி கற்கவரும் அவர் தம்பிக்குக் கூட நான் சொல்லவில்லை.

அவர் வன்னி தொடர்பாக தனிமடலில் கதைக்கும் போது கூட இவர் தான் இளங்கோ அண்ணா என்ற சந்தேகம் எனக்கு துளி அளவு கூட வராமல் போனதை இட்டு என்றும் வெட்கப்பட்டாலும். அவரது அணுகுமுறை வாழ்க்கை முறை என்பன அவர் ஒரு மாமரமாகவே வாழ்ந்து போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்நேரம் அவர் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கும் தாய், தந்தை, சகோதரர்கள், மைத்துனர்களுக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. ஆனால் அவர் இந்த மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பங்கிற்காக அவரது ஆத்மா எம் வேண்டுதல் இல்லாமலே சாந்தியடையும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
இளங்கோ அண்ணா நீங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்பதே என் ஆசை.

குறிப்பு- நான் தற்போது வெளியிடம் ஒன்றில் தங்கி நிற்பதால் அவருடனான தொடர்புகள் அவர் பதிவுகள் சம்பந்தமாக விரிவாக குறிப்பிட கால அவகாசம் போதவில்லை. விரைவில் அவரது சுவட்டை பதிவு செய்வேன்.

நன்றியுடன்
அன்புத் தம்பி
கரன் (ம.தி.சுதா)

வியாழன், 17 மே, 2012

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

வணக்கம் ஐயா சேமம் எப்படி?
ஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப் பொருளாகிப் போனதால் புல் பூண்டு கூட அறச்சீற்றத்துடன் தான் இங்கிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் இலங்கை வருகையின் போது எனக்கு 2 வயது தான் ஆனால் அவர்கள் தந்த தாக்கமோ எத்தனை வருடங்களானாலும் எம் மனதை விட்டு அகலாது.
இந்திய ராணுவ வெளியேற்றத்திற்காக போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். தியாகி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில்வல்வெட்டித்துறை சந்தியில் 5 நாட்கள் இருந்த நால்வரில் அவரும் ஒருவர். இது பற்றி பழநெடுமாறன் ஐயா இங்கு வந்தது பற்றி எழுதிய புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியருடே வெளியிட்ட சஞ்சிகையில் அவர் மடியில் இருக்கும் சிறுவன் தான் நான்.
என் தந்தை அடிக்கடி சொல்வார். எம் மீது இந்தளவு கோரம் செய்த சிங்கள ராணுவத்தை விட இந்திய ராணுவத்தின் மேல் தான் எனக்கு கோபம் அதிகம். ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கும் எமக்கும் பகைமைக்கான காரணம் இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவம் அப்படியில்லையே. அதே வல்வெட்டித் துறை சந்தியில் 48 அப்பாவி பொது மக்களை கட்டடம் ஒன்றினுள் வைத்து குண்டு வைத்து கொன்றார்கள். உங்களுக்கு மடல் போட்ட அந்த ராணுவவீரரிடம் இதற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா?

கற்பழிப்பு என்றால் என்னவென்று தெரியாதது போல கேட்கும் அவர்களால் வரலாற்றை ஒரு போதும் மறைக்க முடியாது. ஏனென்றால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றை கேளுங்கள். இது ஒரு படத்திலும் காட்டப்பட்டிருந்தது.
“ஒரு ஏழைப் பெண் வீட்டு முற்றத்தில் இருந்து தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அழும் குழந்தையை ஆற்றுவதற்காக அருகே கிடத்தியிருந்தார். அப்போது இந்திய ராணுவக் காடையர் வந்திருக்கிறார்கள். அவர்களது தப்பான கதையைக் கேட்டு அப் பெண் வீட்டினுள் ஓடிப் போய் கதவை சாத்திவிட்டாள். அப்போது அந்த பிள்ளையை தூக்கி தோசைக்கல்லில் போட்டு விட்டு அந்தப் பெண்ணையும் வன்முறை செய்து விட்டு போய்விட்டார்கள். அப்பெண் அதே வீட்டினுள் தூக்கிட்டு மரணத்தை தேடிக் கொண்டாள். அந்தக் காலத்தில் பல பெண்கள் அகப்பையை எறிந்து விட்டு சுடு குழல் தூக்க காரணமாக அமைந்த சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.”

இதை இந்த ராணுவ வீரர்களால் மறைக்க முடியுமா?

இது மட்டுமல்ல அவர்களின் சபலப் புத்திக்கு இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். திருவெம்பாவை மற்றும் விரத காலங்களில் பெண்கள் அதிகாலையே குளிப்பதற்கு கிணற்றடி போவர்கள். அப்படியான காலத்தில் றோந்து என்னும் சாக்கில் வந்து இரவே இவர்கள் கிடந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் பாதகமான ஒரு விடயம் என்னவென்றால் இவர்களில் ஒருவித நெய் மொச்சை அடிக்குமாம் அதை வைத்து பெண்கள் அறிந்து விடுவார்கள். அதன் பின்னர் என்ன அன்று விரதம் அதோ கதி தான்.

அதே போல இன்னுமொரு கருத்திருக்கிறது. ராணுவத்தில் ஒதுக்குப்புறமான சென்ரிகளில் (அரங்குகளில்) நிற்பவர்கள் உள்ளாடை அணிவதில்லையாம். பெண்களைக் கண்டால் ஜீன்சை கழட்டி விட்டு ஏதோ செய்வார்களாம். இதையெல்லாம் உங்களுக்குக் கடிதம் எழுதிய ராணுவ வீரர்களால் மறுக்க முடியுமா?

இது மட்டுமல்ல இதே காட்டுமிராண்டிகள் தான் யாழ் வைத்தியசாலையில் 50 ற்கு மேற்பட்ட வைத்தியர், தாதியர், ஊழியர் என பலரை சுட்டுக் கொன்று குவித்தார்கள். அதெல்லாம் வரலாறில்லையா? அதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை வரவேற்க தமிழ் நாட்டுக்காரன் போகவில்லை என்று கேட்கும் போது நான் உச்சி குளிர்ந்து சந்தோசப்பட்டேன்.

உதாரணத்திற்கு இந்திராகாந்தி செத்த போது யாழ்ப்பாணமெங்கும் 3 நாள் கடையடைப்புச் செய்து வாழை மரம் நாட்டி ஒட்டு மொத்த தமிழனும் துக்கதினம் அனுஸ்டித்தான். ஆனால் அதே தாயின் மகன் இறந்த போது கற்கண்டு, ரொபி கொடுத்து கொண்டாடினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு புலிகளின் பிரச்சாரமோ அல்லது ஊடகங்களின் பிரச்சாரமோ அவர்களை மாற்றவில்லை. ராஜீவின் மேல் இருந்த அந்தளவு வெறுப்பும் தான் காரணம்.
நான் அவசரமாக எழுதுவதால் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. கற்பழிப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய பத்திரிகைக் கோவைகள் சேகரித்துத் தருவதா இருந்தால் சொல்லுங்கள் தேடி எடுத்துத் தருகிறேன். நீங்கள் ஒரு பக்கச்சார்பற்ற நடுநிலையான எழுத்தாளர் என நிருபிக்க நினைத்தால் கடிதம் வரைந்த அதே நபர்களிடம் இதற்கு விளக்கம் பெற முயற்சியுங்கள். ஏனென்றால் இவை வடுக்கள் என்றும் அழியாதவை.

நன்றியுடன்
அன்புச் சகோதரன்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

     இப்பதிவானது 100 வீதம் எனது சுயபுராணமே. யாரும் தங்கள் பொன்னான நேரத்தை இதற்குள் வீணாக்க வேண்டாம். இது எனது நிலையை மட்டும் பறைசாற்றும் பதிவல்ல இங்கு நிற்கும் ஒவ்வொரு இளைஞனின் நிலையாகும்.
      இவ்வளவு காலமும் தங்களோடு ஒட்டி உறவாடிய நான் பல விடயங்களை மறைத்தே பழகினேன்.

திங்கள், 19 டிசம்பர், 2011

புலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன?

குறிப்பு - தயவு செய்து பதிவுக்கு மட்டும் கருத்திடுங்கள்.. கருத்துகளைப் பார்த்துக் கருத்திடுவதால் மீண்டும் பிரச்சனை திசை திரும்புகிறது...

சத்தியமாய் இது நான் தான் நம்பாவிடில் பதிவை படித்து முடியுங்கள்
        ஓயாது சுற்றும் இப்புவியில் மானுடனாய் அவதரித்த ஒவ்வொருத்தரும் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறோம்.
     கடந்த சில நாட்களாக ஆரம்பித்த கருத்துப் போரானது எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறது. இது யாரால் திசை திருப்பப்பட்டது ஏன் திசை திரும்பியது என்பதை மறப்போம்.
      ஆனால் அதன் உச்சக்கட்டம் பல நல்ல தமிழின உணர்வாளர்களைப் பாதித்து விட்டது. அதற்கு நான் எழுதிய வரிகளும் காரணமாக அமைந்திருக்கலாம். எமக்குள் இருந்த சிறு சிறு கருத்து வேற்றுமைகள் வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவனுக்கு அவலைக் கொடுத்தது போலாகி விட்டது.
      இது ஒரு திடீர்ப் பதிவு தான் காரணம் இன்று இணைய உலகில் சஞ்சரிப்போம் என்று நுழைந்து பார்த்ததும் தான் இவற்றைக் கண்ணுற்றேன்.
சென்ற பதிவில் நான் சில கேள்விகளை கேட்டிருந்தது உண்மை தான் ஆனால் அக்கேள்வியே அவர்கள் மீதான தப்பான பார்வையாக மாற்றப்பட்டிருக்கிறது எனும் போது அக் களங்கத்தையும் கட்டாயம நான் தானே களைந்தாக வேண்டும். துசியந்தன், கந்தசாமி, ஐடியாமணி (A) ரஜீவன், நிருபன், நேசன் இத்தனை பேருக்குமிடையில் தான் இந்த உச்சக்கட்ட கருத்து மோதல் இடம்பெற்றது.
      ஆனால் கருத்தால் மோதிக்கொண்ட நானே ஏற்றுக் கொள்கிறேன் இவர்கள் அனைவரும் ஈழ உணர்வாளர்களே.. ஈழமக்களின் முன்னேற்றத்திற்காக ஏதோ ஒரு வகையில் உழைத்து வருகிறார்கள்.
  இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில பதிவர்களும் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அதில் ஒருவர் என் ஊடாகத் தான் இங்குள்ள ஒருவருக்கு பண உதவி செய்தார். அவர் தன் பெயர் வெளிவரக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொன்னதால் தான் நான் வாய் திறக்கவில்லை. அதே போல் இன்னொரு பதிவர் (அச்சுவேலியை சேர்ந்தவர்) உதவ முன்வந்திருந்தார்.
   இதை புதிதாய் பார்ப்பவர்கள் கேட்கலாம் அப்புறம் ஏன்ரா அடிபட்டுக் குத்துப்படுகிறீர்கள் என்று?
யோவ் இது எங்கள் வீட்டில் புதிதாய் நடக்கும் ஒன்றல்ல இன்றைக்கு அடிபடுவோம் நாளைக்கு கட்டிப்பிடித்துக் கொண்டு படுப்போம்.
    இன்னும் இந்தப் போர் தொடர்ந்திருக்கும் ஆனால் அது எங்கேயோ போய் அவர்களை தேசத் துரோகி ரேஞ்சுக்கு கொண்டு வந்து அவர்களும் ஏதோ போர் ஆதரவாக குரல் கொடுப்பவர் என்ற கணக்கிற்குக் கொண்டு வந்து விட்டது.      
    இதன் பிறகும் விட்டால் எனக்கு ஒரு சிலரால் கொடுக்கப்பட்டுள்ள பட்டம் தான் அவர்களுக்கும் கிடைத்து விடும்.
      
என்னடா இவங்களுக்குள் நடந்தது என்று விழித்து விழித்துப் பார்ப்போருக்காக
   முன்கதைச் சுருக்கம் (மன்னிக்கணும் பிரச்சனைச் சுருக்கம்) -

reel - 1 நான் இந்திய சினிமாக்காரர் ஈழம் என்ற பெயரை வியாபார பொருளாகப் பாவிப்பதாகவும் அதை யாரும் சமூகத் தளங்களில் பிரபலப்படுத்த வேண்டாம் என்றும் சில கவிஞர்கள் போர் உணர்வைத் தூண்டுவதாகவும் பதிவிட்டேன். அதில் பலருக்கு உடன்பாடிருக்கவில்லை.

reel - 2 ரஜீவன் அவர்கள் ஒரு பதிவிட்டார் அதில் அவர் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் நல்ல படைப்புகள் வந்தால் நாங்கள் ஏன் இந்தியப்படைப்பை நாடுகிறோம் என்றார். நான் பதிலிட்டேன் தங்களுக்கு விரைவில் செயலில் காட்டுகின்றேன் என்றேன். உண்மையில் நான் குறிப்பிட்டது நான் எடுக்கப் போகும் குறும்படம் பற்றித் தான் அதன் பிறகு என் கீழே கருத்திட்டவர் அனைவரும் அதையே கருப்பொருளாக எடுத்து விட்டார்கள்.
reel - 3 மேலும் தேவைப்பட்டால் கருத்துப் பெட்டியில் பகிரப்படும்.

சரி தலைப்பிற்கு வருவோம்
    மேலேயே சில விடயங்கள் சொல்லப்பட்டாலும். இதே போலத் தான் சில காலத்திற்கு முன்னர் வெளிநாட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தேவையற்ற புரிந்தணர்வு ஒன்றால் பிரிந்து போனார்.
     ஆனால் அவர் தனது பிள்ளையின் பிறந்த நாள் பணத்தைக் கூட நான் இருந்த அகதி முகாமிற்கு அனுப்பியவர் அதுமட்டுமல்ல சிறிய தூரம் பிரயாணம் செய்வதென்றால் நடந்து சென்று விட்டு அப்பணத்தை இங்கே அனுப்பும் ஒருவர்.
அப்படியானால் ஏன் மோதிக் கொண்டீர்கள்?
   ஒரு இணையத்தளம் ஒன்று ஒரு பொது விடயத்திற்காகப் பணம் சேர்த்தது. ஆனால் அப்பணம் சுருட்டப்படப் போகிறது என்பதால் நான் எதிர்த்துப் பதிவிட்டேன் அதை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு நான் என்ன செய்வது.
  அத்துடன் எனது உறவினர் ஒருவர் கனடாவில் இருக்கிறார். இளைஞரான அவர் தனது இளைஞர் குழுவுடன் இணைந்து நட்டாங்கண்டல் கிராமத்திலுள்ள பலருக்கு வாழ்வாதாரம் அளித்துள்ளார். அவர் மீண்டு செய்வதற்காக நான் ஆரம்பித்திருந்த அரவணைப்போம் திட்டத்தைக் கேட்டுள்ளார்.
    இப்படிப் பலர் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் தொகுத்து தனிப்பதிவில் இடுகிறேன்.
  இவன் ஏன் இதைப் புலம்புகிறான் என கேட்கிறீர்களா?
  நானும் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் ஊழல்களை மட்டுமே அதிகமாகக் கதைப்பதால் ஈ-ழ-ம் ச-ம்-ப-ந்-த-ப்-ப-டா-த-வ-ர்-க-ள் புலம்பெயர்ந்தவர் அனைவரும் அப்படித் தானாக்கும் என நினைத்து விட்டார்கள். அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன் என்று சொல்லும் போது வெட்கமடைகிறேன்.
          
   இந்தப் பதிவை திடீரென நான் எழுதக் காரணமானவர்களில் இன்னும் ஒருவர் இருக்கிறார்.
    ஒருத்தி என்னைக் கேட்டிருக்கும் கேள்வியின் தாக்கம் தான். இவ்வளவும் என் தங்கையாக பழகிய உரிமையில் தான் கேட்கிறாள் என்றாலும் அது என்னை உறுத்தியது. சுலக்சி என்ற அந்த ராட்சசியின் மடல் இது தான்.. தனிமடலை பகிரக் கூடாது என்ற விதிகளால் அழித்து விட்டே இட்டிருக்கிறேன்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top