செவ்வாய், 20 டிசம்பர், 2011

எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

     இப்பதிவானது 100 வீதம் எனது சுயபுராணமே. யாரும் தங்கள் பொன்னான நேரத்தை இதற்குள் வீணாக்க வேண்டாம். இது எனது நிலையை மட்டும் பறைசாற்றும் பதிவல்ல இங்கு நிற்கும் ஒவ்வொரு இளைஞனின் நிலையாகும்.
      இவ்வளவு காலமும் தங்களோடு ஒட்டி உறவாடிய நான் பல விடயங்களை மறைத்தே பழகினேன்.
     ஆனால் அதை பலருக்கு உணர்த்த வேண்டிய கட்டாய நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன். சென்ற மாதம் நான் வன்னியில் செய்த வேலைக்கான அரச கடிதமும் கிடைத்திருந்தது. பழையனவற்றில் இருந்து ஆரம்பித்தால் புள்ளிகள் சிதறி விடும் என்பதால் வன்னி முகாமில் இருந்து வெளி வந்ததில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
     
     வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகளானது எமக்குக் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும் அது முயற்சிகளுக்குக் கிடைக்கும் தோல்வியாக மாறிவிடுகிறது. கடந்த காலப் போரானது ஒவ்வொருவருடம் இருந்தும் ஏதாவது ஒன்றைப் பறித்துச் சென்றாலும் எல்லோர் மனதிலும் தாராளமாக மன உறுதியை விதைத்திருக்கிறது.
     கரவெட்டி விக்னேஸ்வரா பாடசாலையில் தான் எமது பேருந்து வந்து நின்றது. முகாமில் இருந்து வெளியே வருகிறோம் என்ற சந்தோசம் ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கையில் 5000 ஆயிரம் ரூபாய் தந்து வெளியே விட்டார்கள்.
     வெளியே சந்தோசமாய் வந்த போது தான் தெரிந்தது என்னோடு கூடித் திரிந்த யாருமே இல்லை அனைவரும் ஏதோ ஒரு தேசம் போய்விட்டார்கள். மறுநாளே முதல் வேலையாக பொலிஸ் நிலையம் போய் எனது தொலைந்த அடையாள அட்டைக்காக பொலிஸ் முறைப்பாட்டை எடுப்பாதற்காக முறைப்பாடிட்டேன்.
    அடுத்த கட்டமாக ஒரு மருத்துவ நிறுவனத்திடம் நேர்முகத் தேர்வுக்குப் போனேன். அனைத்துப் பரீட்சையிலும் சித்தி பெற்றேன். அதன் பின் ஆவணச் சோதனையில் அடையாள அட்டை கேட்டார்கள். நான் தவறிய விதத்தைச் சொன்னேன்.
“நீங்கள் வன்னியா? ஐசி இருந்தாலும் பரவாயில்லை.. நிறுவனத்துக்கு ஏதாவது பிரச்சனை வரும் தம்பி கொஞ்ச நாளில் பார்ப்போம்” என்றார்.
      ஒரே ஒரு புன்னகையுடன் எழுந்து வந்து நடு றோட்டில் நின்றேன். ஒரு மூத்த மருத்துவரிடம் தொடர்பு கொண்டேன். அவர் கூறினார் ஏதாவது ஒரு நாட்டிற்கு போய் பட்டத்தைப் பெற்று வா இங்கே பிரச்சனையில்லாமல் இணையலாம் என்றார். அதற்கும் ஒரு புன்னகையை இட்டுக் கொண்டேன். அந்தளவு பணத்திற்கு யாரிடம் போவது.
       யோசித்தேன் இது வேலைக்கு ஆகாது போல இருந்தது. பணம் தேவையாக இருந்தது. பணமென்றால் பிணமும் வாய் திறக்கும் போது எனக்கு ஜீன்சையும் சேட்டையும் துறப்பது பெரிய காரியமாக இருக்கவில்லை. அதனால் சத்திரசிகிச்சை செய்து பழகிய கையில் தூரிகையை எடுத்து ஒரு தீந்தை பூசுனராக மாறினேன் (wall painter). சிறுவயதிலேயே கற்றுக் கொண்ட தொழில் அன்று கை கொடுத்தது.
       இனி யாழில் வேலை தேடி பிரயோசனமும் இல்லை. வன்னியில் போய் ஏதாவது வேலை தேடுவோம் என்றால் ஐசி இல்லை. போலிஸ் நிலையமும் வீடும் என ஓடி ஓடிக் களைத்தாகி விட்டது.
      அதே நேரம் தான் பாராளுமன்றத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரவர் ஊருக்கு வந்தார். அவர் சொன்னார் எனக்கு நீ உதவி செய் நான் உனக்கு எடுத்துத் தருகிறேன் என்றார். பகலில் பெயின்டிங், இரவில் சுவரொட்டி ஒட்டுதல், கிழித்தல் போன்ற தேர்தல் வேலைகள் அதன் முடிவை முன்னரே நான் எழுதிய இப்பதிவில் இட்டிருந்தேன்.

         இதே காலப்பகுதியில் தான் டெங்கு நோயிற்கு ஆளானேன். அதிலிருந்து மீள நீண்ட காலம் பிடித்தது. அதற்குள் நான் தயாராக இருந்த பரீட்சையும் கடந்து போய் விட்டது.
   மீள வந்து ஓய்வில் இருந்த போது தான் எனது நீண்ட நாள் கனவான வலைப்பூவை வலைப்பதிவர் தினம் அன்று ஆரம்பித்தேன். அப்போது தான் எனது லோனில் பெற்ற கணணியை சரியாகப் பாவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
      அதன் பின்னர் தான் பதிவர்களான ஜனா ஆண்ணா, ஜீவதர்சன் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் தொடராக சுபாங்கன், கிருத்திகன், வரோ போன்றோரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜனா அண்ணா அடிக்கடி சொல்வார் சுதா உந்த தொழிலை எல்லாம் குறைத்து விட்டு படிப்பைத் தொடருங்கள் என்பார். அப்போதும் ஒரு புன்னகை தான்.
     அதன் பின் ஒரு சமாதான நீதவான் வேற்று மொழி நபருடன் சேர்ந்து வங்கியில் வேலை பெற்றுக் கொடுப்பதாக அறிந்தேன். அவர் சிலருக்கு வேலை பெற்றுக் கொடுத்ததையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஒன்றரை லட்ச ரூபாய் கேட்டார். அதை வட்டிக்கு எடுத்துக் கொடுத்தேன். அதனால் மீண்டும் என் பணத் தேவை அதிகரித்தது.
       அதே நேரம் தெய்வாதீனமாக அரச சர்பற்ற நிறுவனம் ஒன்றில் மருத்துவம் சார்ந்த வேலை கிடைத்தது. வேலை மிக ஆபத்தானதாக இருந்தாலும் பகுதிநேரமாய்க் கிடைத்த வேலையை செய்தேன். எஞ்சிய நேரத்தில் தொழில் துறையையும் மாற்றிக் கொண்டேன். பெயின்டிங்குடன், கட்டிட நிர்மானம் மட்டுமல்ல கல்லுடைக்கவும் போனேன்.


இது தான் வல்வெட்டியில் அமைந்துள்ள திரு ஐங்கயன் ராமநாதனுடைய தற்போதைய  சுதந்திரக் கட்சி அலுவலகம்  
அங்கு வேலை செய்யும் இடத்திற்கு எதேச்சையாக வந்த வல்வெட்டித்துறை பொலிஸ் S.P யுடன் நடந்த எதிர்பாராத ஒரு சந்திப்பு மறு நாளே எனக்கான பொலிஸ் முறைப்பாட்டைப் பெற்றுத் தந்தது (சந்தர்ப்பம் வருகையில் வேறொரு பதிவில் தருகிறேன்)
      ஆனால் இத்தனைக்குள்ளும் ஏதோ ஒரு ரிதத்தில் பதிவிட்டுக் கொண்டு தான் இருந்தேன். கருத்திட்டோர் இடாதோருக்கெல்லாம் அந்த நேரத்தில் கருத்திட்டிருக்கிறேன்.
இதில் முதலாவதாக இருக்கும் புகை போக்கியின் மேலிருந்து தான் சறுக்கி முன் இருக்கும் மதிலுடன் விழுந்தேன். ஆனால் மீண்டும் தேறியதும் அதன் கூரையை நான் தான் பூட்டினேன்.
      ஏதோ பாட்டுக்கு போய்க் கொண்டிருந்த என்னை மீண்டு் ஒரு விபத்தி கடுமையாகத் தாக்கியது. வேலை செய்யும் இடத்தில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து விட்டேன். காலில் சிறு என்பு வெடிப்பு, தோள் மூட்டு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த அடி மீண்டும் ஓய்வு அந்த ஓய்வுக்காலத்தில் தான் பதிவுலகத்தில் ஒரு பெண்பதிவருடனான அந்த துர் சம்பவம் இடம்பெற்றது.
      மீண்டும் எழுந்ததும் பழைய வேலைக்கு போக வீட்டார் மறுத்து விட்டார்கள். மீண்டும் ஒரு கல்வி சார் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் வேலை. அங்கே தான் பதிவர் மதுரனுடன் சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் அரசியலை வெறுத்த ஒரே காரணத்துக்காக கடந்த மாகாண சபைத் தேர்தல் என் வேலையை சூறையாடியது. (இதுவும் வேறோரு தனிப்பதிவில் இடுகிறேன்)
        மீண்டும் வட்டத்தின் ஆரம்பத்திற்கு வந்தேன். வேலை , கல்வி என எனது போராட்டத்தைத் துரிதப்படுத்தினேன். கை கடித்தது. சமாதான நீதவனிடம் போனேன் தெளிவான பதில் இல்லை. பணம் கொடுத்த ஏனையவரிடம் போனேன் அவரிடம் பணம் மீளப் பெற பயந்தார்கள். மிரட்டினேன் 75 வீதமான பணத்தை மீளத் தந்து விட்டார் இன்னும் ஒரு சில நாளில் மிகுதியும் பெற்றுவிடுவேன்.
 எல்லோரும் 8 ம் நம்பர் என்றாலே இப்படித் தான் என்றார்கள். உண்மையா பொய்யா? உண்மையாவே எனக்குத் தெரியாது.
       ஆனால் இந்த அலை மீண்டும் ஒரு சில மாதத்தில் கல்வியில் மீண்டும் விஸ்வரூபமாய் எழும் அதுவரை என் உழைக்கும் கரங்கள் ஓயாது.
        இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் வேறு ஏதாவது பற்றி எந்த இளைஞராலும் சிந்திக்க முடியுமா? இதுவும் போராட்டம் தான் வாழ்க்கைப் போராட்டம். இதில் பிழைப்போமா தோற்பாமா என்றிருக்கும் நிலையில் எதையும் சிந்திக்கும் நிலை இல்லை.
         வன்னியின் வீதிகளில் நிற்கும் ஒவ்வொருத்தனும் பதிவெழுத வந்தால் இப்படித் தான் எழுதுவான்.

(இங்கே சிலபல காரணங்களால் சில இடங்களின் பெயரையும், நிறுவனங்களின் பெயரையும், சம்பவங்களையும் தவிர்த்துள்ளேன்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

52 கருத்துகள்:

வாழ்க்கை போராட்டம் கடுமையா இருக்கேய்யா, உழைத்தால் முடியாதது ஒன்றுமில்லை மக்கா...!!!

கவி அழகன் சொன்னது…

ஸலூட்

Unknown சொன்னது…

சோதனை மேல் சோதனை, வாழ்க்கையில் தமிழனாய் பிறந்தது வேதனையிலும் சோதனை,
வெற்றி கிடைக்கும் சோதரா கலங்காதே!

Radhakrishnan சொன்னது…

தன் சுடு சோறு சாப்பிட்டு வரட்டுமா என மறுமொழி இட்ட சுதாவின் எழுத்துகளில் வலி தெரிகிறது. தொடருங்கள். ஆம் போர் அவசியமற்ற ஒன்று.

joker சொன்னது…

வன்னியில் இருந்து வந்த பலருடன் பழகியுள்ளேன். அவர்கள் இந்தளவுக்கு கஸ்ரபடவில்லை...

உங்களுக்கு புலம்பெயர் தேசத்தில் உறவுகள் இல்லை ஏன நினைக்கிறேன்...

Unknown சொன்னது…

எவ்வளவு கொடுமை...மதி..கடவுளே...

Unknown சொன்னது…

எவ்வளவு கொடுமை...மதி..கடவுளே...

***லட்சியங்கள் உன் தோளோடு
போராடு வாழ்வோடு
முன்னேறும் நேரத்தில் முள் கூட வழி காட்டும்
எல்லாமே கடந்து வா
ஏமாற்றம் காண்கையில் ஊர் தூற்றும்
பொறுமை கொண்டு போராடு
நாளை உலகம் உன் கையில்***

என்றும் அன்புடன்,
உன் அன்புத் தங்கச்சி.

ARV Loshan சொன்னது…

ம்ம்ம்ம்
இத்தனை சோதனைகளை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முழுதாய் அறியவில்லை.
உங்கள் கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் ஒரு மரியாதை கலந்த வணக்கம்

ARV Loshan சொன்னது…

ம்ம்ம்ம்
இத்தனை சோதனைகளை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முழுதாய் அறியவில்லை.
உங்கள் கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் ஒரு மரியாதை கலந்த வணக்கம்

நிரூபன் சொன்னது…

மதி!
என்ன சொல்ல!
இப்படிப் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருப்போர் கொஞ்சப் பேரா?
ஆனாலும் சிலர் காதில் இவையாவும் ஏறாதிருப்பது தான் வேதனை!

வாழ்க தமிழ்! வெல்க தமிழீழம் என்பது மாத்திரம் தான் அவர்களுக்குத் தெரிந்த ஒன்று.

suharman சொன்னது…

I never expected you face this much of problems. Best wishes for your every steps.

sinmajan சொன்னது…

நான் சந்தித்த அந்த மதிக்குள் இவ்வளவு சோதனைகளும் போராட்டங்களும் இருக்கிறது என்பதை இப்போது தான் அறிகிறேன்..உங்கள் மனோதிடத்திற்கும் உழைப்பிற்கும் நிச்சயமாகச் சாதிப்பீர்கள்.

ஆகுலன் சொன்னது…

அண்ணா நீங்க ஒரு உதாரணம்..

உங்களால் இவளவு செய்யமுடியும் எண்டால் நாம் இருக்கும் சூழலில் எவளவு செய்ய வேண்டும்....
அண்ணா மனதில் ஒரு உந்துசக்தியை கொடுத்து இருக்குறீர்கள்....

உங்கள் முயற்ச்சி என்றுமே தோற்காது...

Yoga.S. சொன்னது…

இரவு வணக்கம்,மதி.சுதா! நீ...........ண்ட பெருமூச்சொன்றை விட்டேன்.

தனிமரம் சொன்னது…

துயரம் நிறைந்த உங்கள் வாழ்வில் இனிய வசந்தம்  இனி வரும் காலம் வரவேண்டும் என்பதைப் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேற வார்த்தை இல்லை என்னிடம் அன்புச் சகோதரா!

சுதா SJ சொன்னது…

:( என்ன சொல்வது என்று தெரியவில்லை.... உங்கள் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யுட்

சுதா SJ சொன்னது…

அது என்னவோ தெரியவில்லை... எல்லோருக்கும் கஸ்ரம்வந்தால் ஒன்றின் பின்னாக தொடர்ந்து வருகிறது :(

உங்கள் பதிவு மனசை ரெம்ப பாரமாக்கி விட்டது அண்ணா :(((((

Bavan சொன்னது…

//வன்னியின் வீதிகளில் நிற்கும் ஒவ்வொருத்தனும் பதிவெழுத வந்தால் இப்படித் தான் எழுதுவான்.//

ம்ம்ம்ம்ம்..

ஆகுலன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...
***லட்சியங்கள் உன் தோளோடு
போராடு வாழ்வோடு
முன்னேறும் நேரத்தில் முள் கூட வழி காட்டும்
எல்லாமே கடந்து வா
ஏமாற்றம் காண்கையில் ஊர் தூற்றும்
பொறுமை கொண்டு போராடு
நாளை உலகம் உன் கையில்***

அக்கா நான் நினைத்ததை அழகான கவியில் சொல்லி விட்டீர்கள்....

K.s.s.Rajh சொன்னது…

தற்போது வன்னியில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலரின் நிலை இதுதான் பாஸ் நீங்க ஓப்பினா சொல்லிட்டிங்க நான் சொல்லவில்லை அவ்வளவுதான் உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம்

மனதை தளரவிடாதீங்க அண்ணா எங்கள் வாழ்க்கைப்போராட்டத்துக்கு விடிவு கிடைக்காமலா போகும் தன்நம்பிக்கையுடன் வாழ்க்கையுடன் போராடுவோம் என்றோ ஒரு நாள் எங்களுக்கும் ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையில்

Unknown சொன்னது…

உன் பதிவிலிருந்து படிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. உன் வெற்றியின் பின்னர் இவை தொகுக்க பட வேண்டியவை. எங்களுக்குள் பதிவுலகம் ரகசிய வலைபின்னியிருக்கிறது.

test சொன்னது…

என்ன சொல்வதென்றே தெரியவில்லை! உங்கள் நம்பிக்கை வீண்போகாது! வெல்லலாம்!

//வன்னியின் வீதிகளில் நிற்கும் ஒவ்வொருத்தனும் பதிவெழுத வந்தால் இப்படித் தான் எழுதுவான்.//
நான் சந்தித்த சிலரும் அப்படியே!

உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யுட்!!

அம்பலத்தார் சொன்னது…

மதி, உங்கள் பதிவுகளினால் உங்கள்மீது ஏற்பட்டிருந்த ஈர்ப்பும் மரியாதையும் இன்று இந்தப்பதிவையை படித்ததும் உங்களது மறுபக்கத்தை அறிந்துகொண்டதும் அதிகமாகிவிட்டது. மனம் தளரவேண்டம் வாழ்வே போராட்டம்தான் ஆனாலும் எதுவும் நிரந்தரமல்ல இந்த சோகங்களும் வலிகளும் கடந்து மறைந்துபோகும். தமிழர் சிங்களவர் முஸ்லீம் பரங்கியர் என்ற வேறுபாடின்றி 3 மொழிகளிலும் சரளமாக பேசிக்கொண்டு தமிழ் நண்பர்களுக்கு சமமாக ஏனைய இன நண்பர்களுடனும் கொழும்பில் ஜாலியாக பழகிக்கொண்டு றோயல் கல்லூரியில் உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எனது வாழ்வில் 77 ஆண்டுக்கலவரமும் அதனை தொடர்ந்து எமது போராட்டமும் தந்த அனுபவங்கள் ஏராளம். எனது வாழ்விலும்கூட எத்தனையோ சோகங்களும் உச்சங்களும் இருக்கின்றன. உடம்பு பூராவும் சிகரட்டினால் சுட்டு சித்திரவதை செய்து ஆட்டோவில் கொண்டுவந்து வீட்டுவாசலில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றார்கள். சிலகாலங்களின் பின் அவர்களே என்னை நாடிவந்து நட்புக்கொண்டார்கள். R.M. வீரப்பன் பண்டுரிட்டி ராமச்சந்திரன் S.T.S.சோமசுந்தரம்போன்ற போன்றவர்கள் M.G.R. அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தபோது அவர்கள் வீடுகளிலும் ஆபீசுகளிலும் செல்லப்பிள்ளையாக பாதுகாப்பிற்கு கூடவே 2 பேரென வலம் வந்தன். பின்பு எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு வெளியே வந்தபோது கஸ்டத்தில் ஆனந்தவிகடன், குமுதம்போன்ற சஞ்சிகைகள் வீடுகளிற்கு கொண்டுசென்றுகொடுக்கும் வேலை செய்தேன். ஒருமாதம்பூரா ஒரு வீட்டிற்கு புத்தகம் போட்டால் 10 இந்திய ரூபாய் கிடைக்கும் இப்படி எத்தனையோ சம்பவங்கள்.... மதி கவலையைவிட்டு உங்க குறிக்கோளில் கவனமாகவும் தீவிரமாகவும் இருங்கோ உங்களுக்கும் ஒரு காலம் வரும்.

காட்டான் சொன்னது…

வணக்கம் தம்பி..
உங்களை பற்றி முன்னரே ஓரளவு அறிந்து வைத்திருந்தேன்.. ஆனால் நான் நினைக்கவில்லை இவ்வளவு சோகங்கள் உங்கள் வாழ்வில் என்று.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை... :-(

Admin சொன்னது…

தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும்..உங்களிடத்தில் இருந்து வரும் இந்தப் பதிவை எதிர்பார்த்திருந்தேன்..ஆனால் இவ்வளவு சோகங்களைத் தாங்கி வரும் என்று எதிர்பார்க்கவில்ல..மனதிற்கு வேதனையாய் இருக்கிறது..

Admin சொன்னது…

விழுந்துவிட்டோம் என்று
கவலை வேண்டாம்
விழுந்தால்தான்
எழுந்து நிற்க முடியும்..

jagadeesh சொன்னது…

சரியா சொன்னீங்க மதிசுதா. விடுதலைப் புலிகளின் தவறான கொள்கைகளே அனைத்திற்கும் காரணம்.

நகரம் சொன்னது…

ம் ம் வித்தியாசமானதுதான்.....

நிலாமதி சொன்னது…

உனக்குள்ளும் இத்தனை சோகங்களா ..? வாழ்க்கைக்கு இன்னொருபக்கம் இருக்கிறது .......வரும் வருடம் உனக்கு சகல செல்வங்களும் தருவதாக இருக்கட்டும். நம்பிக்கை தான் வாழ்க்கை .................

ஹேமா சொன்னது…

மதி...அழுதேவிட்டேன்.
என்ன சொல்ல !

sarujan சொன்னது…

முற்றிலும் உண்மை உங்கது கடின பக்கத்தை அறிந்து கொண்டேன்.

எமது அரசியல் வாதிகள் எரிகின்ற வீட்டில் பிடுங்குகிறவர்கள்.எனது வாழ்விலும் எத்தனையோ சோகங்கள் இருக்கின்றன. நம்பிக்கை முக்கியம்

FARHAN சொன்னது…

நேரமின்மையால் கடந்த ஒரு மாத காலமாக எந்த பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட முடியவில்லை
ஆனாலும் உங்கள் பதிவுக்கு
"ஒரு ராயல் சல்யூட்"

துரைடேனியல் சொன்னது…

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க சகோ.
நெகிழ்ச்சியான பதிவு.

தஓ 16.

நெல்லை கபே சொன்னது…

என்ன சொல்ல...மனக் கனக்கிறது. இந்த அவலம் இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு புரிவது கடினம் அல்ல. ஆனால் என்னால் இங்கே தமிழ்நாட்டில் இருந்து கொண்டு 'தமிழ் ஈழத்துக்கு போராடு' விடாதபிடி ' என்று விசில் அடிக்கமுடியாது. உங்கள் நிலைமை எனக்கு திகைப்பை ஊட்டுகிறது. இங்கே முகாமுக்கு சென்று பார்த்திருக்கிறேன். even this will pass....இதைத்தான் சொல்ல முடியும். இதற்கு மேலும் 'கமான் தமிழ் ஈழம்' என்று சொல்கிறவர்களை ஒன்று மிகுந்த கோபத்துடன் எதிர்கொள்ள முடியும் அல்லது ஒன்றுமே பேசாம கடந்துவிடத்தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

எல்லாருடைய வாழ்கையிலும் ஆயிரம் கஷ்டங்கள் இருகின்றன. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி. அரசியலளவில் எந்த பிரச்னை இல்லாத இங்கயே வாழ்கையில் ஜெயிக்க போராட வேண்டியுள்ளது.. ஆனால் அங்கு போராட்டம் பல மடங்காகத்தான் இருக்கும். வாழ்கையில் போராடுங்கள், நாம் நல்ல நிலைக்கு வர முடியாவிட்டாலும் நம் பிள்ளைகளாவது கஷ்டப் படாமல் இருக்க வேண்டும்.

Muruganandan M.K. சொன்னது…

எவ்வளவு துன்பங்களை எதிர் கொண்டபோதும் சோராது எழுந்து நின்ற உங்கள் தளராத முயற்சிகள் அசர வைக்கின்றன.

Unknown சொன்னது…

மாப்ள உழைப்பு உன்னிடம் உள்ளது நீ நல்லா வருவே!

மன்மதகுஞ்சு சொன்னது…

மதி ஈழத்தமிழர்கள் அனைவரினதும் வாழ்வில் கஸ்டங்களும் வேதனைகளூம் அடங்கியவைதான்,ஆனல் ஒரு சிலர் சொல்லொணா துன்பங்களை சந்தித்துள்ளார்கள் ,அவை வெளிவருகின்றன.உங்கள் நிலையும் அதுதான்.. நிகழந்தவற்றை பற்றீ நினைத்து வருந்தாமல் வெளியில் வந்து வாழ்வில் மென்மேலும் வளருங்கள் அதுவே என் அவா.. சோகங்களையெல்லாம் படிகட்டுக்களாக்கி கொள்ளுங்கள்

suharman சொன்னது…

எமது உறவுகள் எவ்வாறு கஷ்டத்துடன் போராடி வெற்றி பெற்றார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு சாட்சி.உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Gobinath சொன்னது…

அண்ணா உங்கள் உழைப்புக்கான பலன் கட்டாயம் பலமடங்காக உங்களைத்தேடி வரும். நீங்கள் பட்ட பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்கள் விரைவில் விலக பிரார்த்திக்கிறேன்.

Unknown சொன்னது…

தம்பி நான் எப்போதும் தாமதமாகத்தான் வருவேன் காரணமும் உங்களுக்கு தெரியும்.

***
உன்னால் முடியும்
மீண்டும் எழுந்து வாடா....
***

உரிமையுமுடன்
அன்புச் சகோதரன்

ananthu சொன்னது…

வாழ்க்கையே போர்க்களம் , வாழ்ந்து தான் பார்க்கணும் ...! வலியில்லாமல் வழியில்லை ...! நல்ல அனுபவ பதிவு .

N.H. Narasimma Prasad சொன்னது…

வாழ்க்கையே போர்க்களம். வாழ்ந்து தான் பார்க்கணும். போர்க்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா?

Unknown சொன்னது…

மதி நீங்களும்...ஒரு ஓவியர் என்பது எனக்கு பெருமைதான்...துன்பங்கள் அனைத்தும் களைந்து...நல்ல வேலையில் அமர்ந்து வாழ்வு சிறக்க..நான் இறைவனை வேண்டுகிறேன் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

இதுவும் போராட்டம் தான் வாழ்க்கைப் போராட்டம். இதில் பிழைப்போமா தோற்பாமா என்றிருக்கும் நிலையில் எதையும் சிந்திக்கும் நிலை இல்லை.

ஒளிபிறந்த கிறிஸ்துபிறந்த நாளில்
ஒளி பிறக்கட்டும்..
போராட்டங்கள் ஓயட்டும்..

பிரார்த்திக்கிறோம்..

ad சொன்னது…

வணக்கம் அண்ணா.
உண்மையில் நீங்கள் சொன்னதுபோல இந்த யுத்தம் அனைத்தையும் பறித்துச் சென்றாலும் ஒன்றைக்கொடுத்துவிட்டுதான் சென்றுள்ளது.அதுதான் நெஞ்சுறுதி. அனுபவிக்கக்கூடாதவற்றையெல்லாம் நிர்ப்பந்தத்தின் வழி அனுபவித்து,எது நடந்தாலும் எதிர்த்து முன்னேறும் மனவுறுதி.
அங்கிருந்த அனைத்து இளைஞனும் இதே நிலையில்தான் நிற்கிறான் என்றீர்கள்.உண்மை.
ஆனாலும்,.. மதுமதி அவர்கள் கூறியது போல.. விழுந்தாற்தான் எழுவது எப்படியெனப்புரிந்துகொள்ளலாம். உறுதியுடன் காலெடுத்து வையுங்கள்.
துன்பமொழிய வாழ்த்துக்கள்.

எஸ் சக்திவேல் சொன்னது…

சோராத உங்கள் போராட்டம் உங்கள் மீதுள்ள மரியாதையை அதிகரிக்கிறது. படியுங்கள். தேவையில்லத ரிஸ்க்குகளை எடாதீர்கள். (உ+ம் அந்தக் கட்டட வேலையில் தவறி விழுந்தது)

மாலதி சொன்னது…

உழைப்பவரே உயர்ந்தவர் சிறந்த ஆக்கம் தொடர்க ...

ராஜ் சொன்னது…

பாஸ்,
கண்டிப்பா நீங்க வாழ்க்கையில் இப்போ இருப்பதை விட மிக உயர்ந்த நிலைமைக்கு வருவீர்கள்....அதற்கு என் நல்வாழ்த்துகள்.....

Unknown சொன்னது…

காலம் மாறும் பாஸ்...

//// எல்லோரும் 8 ம் நம்பர் என்றாலே இப்படித் தான் என்றார்கள். உண்மையா பொய்யா? ////
இது என்ன 8 ம் நம்பர் பிறந்த தேதிய!!!!! அப்படி நினைத்தால் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது boss.

சத்ரியன் சொன்னது…

மதி,

யாருடைய அனுதாபத்தையும் எதிர்ப்பார்த்து எழுதியதல்ல இப்பதிவு என்பது நன்றாக புரிகிறது. சின்னஞ்சிறு தோல்விகளுக்கே துவண்டு விடும் சம கால நண்பர்களுக்கு, உங்கள் ‘வாழ்க்கை போராட்டம்’ நெஞ்சுரம் தரும்.

உங்கள் கடந்தக்கால, நிகழ்கால செயல்களே உங்களின் நெஞ்சுரத்தை பறை சாற்றுகிறது.

வெல்வீர்கள்! வாழ்த்துக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top