அரிய பல கண்டு பிடிப்புக்களைச் செய்த மனிதன் தான் அழியாமல் தப்பும் கருவியையும் கண்டு பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் கடவுள் அவனுக்கு நாக்கைப் படைத்துள்ளார்.
அதற்கு எலும்பில்லை என்ற காரணத்தால் தான் மனிதன் தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறான்.
ஈழத்திற்கு அரிய பொக்கிசங்களாக பல கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் இப்போது எம்மோடு உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இலை மறை காய்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் கலைஞர்கள் என்ற வரையறைக்குள் நாம் வைத்திருக்கும் அவர்களை எந்தளவு நாம் அங்கீகரித்துள்ளோம் என்பதை எம்மாலேயே கூற முடிவதில்லை.
ஈழத்தின் தலைசிறந்த பாடகரான சாந்தனின் கணீர் என்ற குரலை கேட்காத யாருமே இருக்க முடியாது. எந்த உணர்வானாலும் குறிப்பாக பக்தியாகட்டும் அல்லது சோகமாகட்டும் அப்படியே குரலலேயே உணர்வை அள்ளித் தெளிக்கும் அற்புதக் கலைஞன். அவரின் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்“ பாடல் ஒலிக்காத ஈழத்து ஆலயங்களே இருக்க முடியாது.
இக்கலைஞனின் கலைப்பயணம் 1972 ம் ஆண்டு கொழும்பு கதிரேசன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 1977 கிளிநொச்சிக்கு குடிபெயர்ந்த பின்னர் 1981 ல் கண்ணன் கோஸ்டியுடன் (கண்ணன் இசைக்குழு)இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுவானது 1982 ல் கலைக்கப்பட்டதையடுத்து தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் ஆரம்பித்திருந்தார்.
நாடகத்துறையில் சிறந்தவரான இக்கலைஞனை பலர் மறந்திருந்தாலும் அவர் நடித்த அரிச்சந்திர மயானகாண்டத்தை யாருமே மறந்திருக்கமாட்டீர்கள்.
இந்தக் கலைஞனுக்கு என்ன நடந்தது?
சில காலத்திற்கு முன் நானும் சில நண்பர்களும் ஒரு இறுவட்டு விற்கும் கடைக்குச் சென்றோம். அப்போது சாந்தன் இசைக்குழுவின் இறுவட்டு ஒன்று விற்பனைக்கு இருந்தது. அதை எடுத்த நண்பன் ஒருவன் விலையைக் கேட்டான். அதற்கவர் நூறு ரூபாய் என்று கூறினார். அதற்கிவன் “தேசத்துரோகி இவனுக்கெல்லாம் 100 ருபாய் கொடுக்கணுமா?” என்றான். நான் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன்.
“ம….. நீ இந்த நாட்டுக்கு என்னத்தை சிரைச்சனி” என்று உடனேயே கேட்டுவிட்டேன். பொது இடத்தில் கேட்டிருக்கக் கூடாது தான் ஆனால் என்னால் அடக்க முடியவில்லை.
அவனின் கதைக்கு என்ன காரணமென்னறால் அதற்கு சில காலத்திற்கு முன் அமைச்சர் ஒருவர் சாந்தன், சுகுமார் போன்ற கலைஞருக்கு கௌரவித்து விருது கொடுத்திருந்தார். இவர்களும் அவர்கள் கட்சிக்காக பாட்டுப் படியிருந்தார்களாம்.
எது எப்படியிருப்பினும் சங்க காலத்தில் புலவர்கள் பாடும் பொது ஏற்றுக் கொண்ட எம்மவர்களால் என் இவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது இங்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் இதே கருத்துத் தான் நிலவுகிறது என்பதை ஒரு நண்பர் மூலம் அறிய முடிந்தது.
சாந்தனின் தனிப்பட்ட குடும்பம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரது இரு புகதல்வர்கள் ஈழப் போராட்டத்தில் மாவீரர்களாகியிருக்கிறார்கள். இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைக்காகத் தான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருந்தார். அவர் குடும்பம் நடு றோட்டில் நின்றது.
குற்றம் சாட்டும் யாராவது ஒருவர் செப்புக் காசு கொடுத்திருப்பீர்களா?
உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கேளுங்கள் பதில் கிடைக்கும்.
இந்தப் பதிவானது நான் எழுதி 7 மாதங்களாகிறது இதை எப்போதோ வாசித்த நாற்று நிருபன் போடும் படி கேட்டும் ஈழம் சம்பந்தமான பதிவுகளை நான் குறைத்திருந்ததால் பதிவிடவில்லை. இன்று அவரது பேட்டி ஒன்றை ஒரு பத்திரிகையில் கண்ட போது தான் இதை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
இப்போது எனது மனச்சாட்சிக்கு அவர் செய்தது தேசத்துரோகமில்லை அப்படி அது தேசத்துரோகம் என்றால் இந்த போரில் தப்பி ஒட்டி இருக்கும் அத்தனை பேரும் தேசத் துரோகிகள் தான்…
29 கருத்துகள்:
அண்ணா.... சாந்தன் பாடிய பாடல்கள் நானும் கேட்டு இருக்கேன்... மிக திறமையான ஆள் . அவரை பற்றிய விமர்சனங்கள் நான் அதிகம் அறியவில்லை. அதற்காக இல்லை என்று சொல்லவில்லை எனக்கும் தெரியவில்லை... மற்றும்படி உங்கள் பதிவின் படி அவரை புரிந்து கொள்ள முடிகிறது.... விமர்சிப்பவர்கள் பற்றி என்ன சொல்ல??? அவர்கள் யாரைத்தான் விட்டு வைத்தார்கள் சாந்தனை விட்டு வைக்க??
சாந்தனை மறக்க முடியுமா? எத்தனை கோவில்களில் அவர் கோஷ்டியை கேட்டிருப்பேன்.
வீடியோவை பார்க்கும் போது கோவிலில் நேரடியாக கோஸ்டி பாடல் கேட்ட நினைவுகள்.. ஒலிப்பதிவு அப்படி
மீள் பகிர்வுக்கு நன்றி
//மனச்சாட்சிக்கு அவர் செய்தது தேசத்துரோகமில்லை அப்படி அது தேசத்துரோகம் என்றால் இந்த போரில் தப்பி ஒட்டி இருக்கும் அத்தனை பேரும் தேசத் துரோகிகள் தான்…//
உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கு
வணக்கம் சுதா! முதலில் இப்பதிவுக்கு சிறப்பு நன்றி!
சாந்தனையும் இதர கலைஞர்களையும் தேசத்துரோகி என்று சொல்லும் முட்டாள்களுக்கு எனது கண்டனங்கள்! “ கலைஞர்கள்” என்றால் யார்? என்று புரியாத மூடர்களே, இப்படியெல்லாம் பேசுவார்கள்! விட்டுத்தள்ளுங்கள்!
மேலும், கலைஞர்களுக்கு கட்சி, இனம், மதம் , மொழி வேறு பாடு எதுவும் இருக்க கூடாது! கலைஞர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்! இது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்!
சாந்தன் அண்ணா அசாத்திய திறமைகள் மிக்க ஒரு அற்புதக் கலைஞன்! அவருக்குத் தொழில் பாடுவது! அவர் பாடட்டும்! அவரை ( பாட ) வாழவிடுங்கள்!
சாந்தன் அண்ணா துரோகி அல்ல!!!
ஆனால் இப்பதிவில் சாந்தன் அண்ணாவுக்குரிய முக்கிய அடையாளத்தையும் அவரின் இன்னொரு பக்கத்தையும் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்! நீங்கள் இருக்கும் இடம் அப்படி! 1972 முதல் 1992 வரை யான சாந்தன் அன்ணாவின் வரலாற்றைக் குறிப்பிட்ட நீங்கள், ” இந்த மண் எங்களின் சொந்தமண்” மூலம் அவர் தொடக்கி வைத்த இன்னொரு முக்கிய பக்கத்தை தவற விட்டுவிட்டீர்கள்!
இன்று அதுபற்றியெல்லாம் சிலாகிப்பது உயிருக்கே உலைவைப்பதாக முடியும் என்பதே யதார்த்தமானது! ஆனால், வரலாறும், மக்களும் எதனையும் மறந்துவிட மாட்டார்கள்!
அன்று சாந்தன் அண்ணா பாடிய ஒரு பாடல்........ வேண்டாம்! இதை இப்படியே விட்டுவிடுவோம்!
சாந்தனின் குரலை இரசித்தவர்களில் நானும் ஒருவன். பகிர்ந்ததற்கு நன்றி.
வணக்கம் தம்பி..
சாந்தனை பற்றி பதிவில் நீங்கள் இன்னும் சிலவற்றை குறிப்பிட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. என்றாலும் உங்கள் நிலையில் இருந்து நான் அதிகம் எதிர் பார்க்க முடியாது..!!!
அவரின் அதிக பாடலை கேட்டவன் என்றாலும் அவரின் பக்தி பாடல்களை நான் அதிகம் அறிந்திருக்கவில்லை.. என்னை பொறுத்தவரை அவரும் ஒரு நடமாடும் ஈழத்து பொக்கிஷம்....
இப்போ கொஞ்சக்காலமாக "துரோகி" என்ற பட்டத்தை அவர்களை வைத்தே பிழைத்தவர்கள் பிழைத்து கொண்டிருப்பவர்கள் சுலபமாக தூக்கி தருகிறார்கள்..
தமிழ் செல்வனின் மனைவிக்கும் இந்த பட்டத்தை தந்தவர்கள் என்ன செய்யலாம்..? அவர்களும் இவர்களைப்போல் இராணுவ அடக்குமுறைகளை அனுபவித்திருந்தால் தெரியும்...
இப்போது "துரோகம்" "காட்டி கொடுத்தல்" என்ற வார்த்தைகளின் அர்த்தம் நம்மவர்கள் "சிலரால்" கேவலமாக பந்தாடப்படுகின்றது என்பதே உண்மை..!!
ஒன்றையும் யோசிக்காமல் சொல்பவர்களை என்ன செய்வது....
மிக சிறந்த ஈழத்து கலைஞ்சன்...
வணக்கம் மச்சி,
மற்றும் இதர நண்பர்கள்,
காலத்துள் என்றும் நிலைத்து வாழும் அசாத்திய திறமை கொண்ட கலைஞனைப் பற்றிய உங்கள் பதிவிற்கு முதலில் சல்யூட் மச்சி!
சாந்தன் அண்ணாவைத் துரோகி என்போர் அவரின் இன்றைய நிலைக்கான காரணத்தினை உணராதிருப்பது தான் கவலையளிக்கிறது.
இதில் இன்னோர் விடயம் சில புலம் பெயர் இணையத் தளங்கள் (அதிர்வு, நெருடல், ) மற்றும் ஏனைய தளங்கள் சாந்தன் அண்ணா ஓர் அமைச்சர் கையால் மேடையில் பரிசில் வாங்கும் படத்தைப் போட்டு துரோகிகள் எனும் மொழி நடையோடு கூடிய செய்தியினைப் பிரசுரித்திருந்தன.
அப்படியானால் வன்னி மக்கள் எல்லோரும் துரோகிகள் தானே?
அவர்கள் தினம் தினம் தம் தளங்களில் பிரசுரிக்கும் வன்னி மக்களின் ஈழக் கனவிற்கான செய்திகள் எல்லாம் என்ன நோக்கில் அமைந்தவை?
ஜெயசிக்குறுச் சமர் காலத்தில் மூன்று முறிப்பு பகுதில் பாம்பினால் கடியுண்டு சாந்தன் அண்ணரின் மூத்த மகன் இரண்டாம் லெப்டினன் கானகன் அவர்கள் வீரச்சாவினைத் தழுவினார்.
பிற் காலத்தில் 2000ம் ஆண்டு என நினைக்கின்றேன்.
போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட, மேஜர் இசையரசன் அவர்கள் கடற் கரும்புலியாகி 10.02.2009 அன்று வீரச்சாவடைந்திருந்தார்.
ஈழப் போராட்ட வரலாற்றில் செயல்வீரன், இசைப்பிரியன் ஆகிய இருவரோடும் இணைந்து பண்டைய வாத்தியங்கள் மூலம் அணியிசை செய்யப்பட்டு வந்த தமிழீழப் பாடல்களை
டிஜிட்டல் மியூசிக்கில் ஒலிப்பதிவு செய்யும் முயற்சிகளில் தோளோடு தோள் கொடுத்து உழைத்த கலைஞராக சாந்தன் அண்ணாவின் இரண்டாவது புதல்வன் இசையரசன் விளங்குகின்றார்.
காலத்தின் பாதையில் குடா நாட்டுச் சூழலுக்கும், இலங்கையின் தற்போதைய இறையாண்மைச் சூழலுக்கும் அமைவாக தம் வாழ்க்கையினை வளப்படுத்த வேண்டுமானால், நாட்டில் உயிரோடு உலவ வேண்டுமானாம் சாந்தன் அண்ணர் போன்றோர் இவ்வாறு செய்து தானே ஆக வேண்டும்! இது பற்றித் தான் தோன்றித் தனமாக செய்தி எழுத எந்த நாதாரி இணையத் தளங்களுக்கும் உரிமையில்லை!
குற்றம் சாட்டும் யாராவது ஒருவர் செப்புக் காசு கொடுத்திருப்பீர்களா?////உண்மை தான்!ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை.அத்தோடு, நெருக்குதல்கள் எந்த வழியிலெல்லாம் கொடுக்கப்பட்டு கின்றன என்பதற்கு இன அழிப்பு முடிவடைந்தபின் சுட்டிக்காட்ட ஆயிரம் உண்டு!புரிந்து கொள்ளலே இப்போதைய தேவை,கூடவே ஒன்றுபடுதலும்.
கலைஞனைக் கலைஞனாகப் பார்க்கவேண்டும்.
தாயகம் சென்று பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து வந்தவர்களுக்கு புரியும் இன்றும் அங்குள்ள நம் உறவுகள் எவ்வளவு உளவியல்ரீதியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள் என்பது
Unmaiyana mana unarvu
கலைஞனை கலைஞனாக பார்கவேண்டும் அவ்வளவுதான் வேறு ஒன்றும் சொல்வதுக்கு இல்லை பாஸ்
அன்று சக உறவுகளையெல்லாம் துரோகி என்று கொன்றவர்கெல்லாம் இன்று உண்மையான துரோகியாகி விட்டார்கள்.
யார் துரோகி என்றால் என்ன தப்பி ஒரு புகழ் பெற்ற கலைஞனை யாராலும் இலகுவில் மக்கள் மனம்களிளிருந்து அழிக்க முடியாது.
மீள் பகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள்...
நல்ல ஆழமான உணர்வுள்ள பதிர்வு..
நீங்கள் சொன்ன கருத்து தவறானது! போரில் இடம் பெயர்ந்தவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்வது முற்றிலும் தவறு அதே நேரம் சாந்தன் குறித்து மற்றவர்களும் தவறான அப்பிராயம் கொள்ளத்தேவையில்லை. ஒருத்தரை ஒருத்தர் தாக்கி கொள்வதும் தனிமனிதனை பலவீனங்களை விமர்சிப்பதும் கூடாத காரியம். அதை விட்டு விட்டு ஒற்றுமையை பற்றி பேசுவதே சிறப்பு.
ஒரே வார்த்தை.......
கலிகாலம்....
தம்பி...இசைக் கலைஞர் சாந்தன் பற்றிய பதிவைக் கண்டு மகிழ்ந்தேன்..என்னைப் பொறுத்த வரையில் எமது மக்களின் நிலையை சரியாக உணர்ந்தவர்கள் யாரும் யாரையும் துரோகிகள் என்று கூற மாட்டார்கள். அதிலும் கலைஞர்கள் என்ன செய்ய முடியும்... எங்கள் கனவுகள் தான் கலைந்து போச்சு.. அவர்கள் கலைகளாவது வாழட்டுமே... நாக்கு வளைத்து விமர்சிப்பவர்களே.. மென்மையான மனம் படைத்த கலைஞர்களையாவது வாழ விடுங்களேன்...
ஆம், இலகுவானது துரோகிப் பட்டம்தான்.
ஈழத்தில் வெளியான பக்திப்பாடல்களில் இந்தியப்பாடல்களின் தரத்திற்கு இருக்கும் பாடல் சாந்தனின் பாடல். நெஞ்சையுருக்கும் குரல்.
'குற்றம் சாட்டும் யாராவது ஒருவர் செப்புக் காசு கொடுத்திருப்பீர்களா?' நல்ல சவுக்கடி.
Good article. But the heading is wrong. Please remove the word " eela makkal". There may be one or two who are insulting. Nobody could ignore or hide his marvellous contribution. * sorry to text in english
கருத்துரையிடுக