வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற் குறிப்பு- இச்சம்பவம் ஆனது கடந்த சில நாட்களின் முன்னர் இடம்பெற்ற இயற்கைக் குழப்பத்தின் போது நடந்தது. அதன் வீடியோவை உடனே ஏற்ற முடிந்தாலும் பதிவெழுத நேரமின்மையால் காலதாமதமாகிவிட்டது.
யாழில் அமைந்துள்ள முக்கிய பெருந்தெருக்களில் யாழ் பருத்தித்துறை வீதிமுக்கியமானதும் அதிக வருவாய் தரும் விதியுமாகும் (பிரயாணிகள் மூலம்)
இதன் சீர் திருத்தப்பணிகள் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற போதும் இன்னும் முடிவதாகத் தெரியவில்லை.
இதே பாணியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த யாழ் பலாலி வீதியானது ஜனாதிபதியின் வருகையை அடுத்து ஒரே இரவில் முழுமையடையச் செய்யப்பட்டது பலர் அறிந்ததே. ஆனால் இதே வீதியில் பல குன்றும் குழிகளும் மாதக்கணக்காக இருப்பது மட்டுமல்லாமல் வீதி புனரமைப்பாளரால் பல மாதக்கணக்காக பாரிய குழிகள் தோண்டி விடப்பட்டுள்ளது.
இதில் பலவற்றுக்கு எச்சரிக்கை சமிஞ்ஞை கூட இல்லாத நிலையில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக காணப்படுவது வல்லைப் பாலத்திற்கு இருமருங்கிலும் இருக்கும் பாரிய பள்ளமாகும். இதன் ஒரு பகுதி சாதாரண பள்ளமாக இருந்தாலும் மறுபகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த 4 மாதங்களாக இருக்கும் இக் குழி ஏன் இருக்கின்றது என யாருக்குமே தெரியாது.
அதுமட்டுமல்லாமல் இதனூடாக நிச்சயம் யாழின் அனைத்து உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளும் ஏசி வாகனத்தில் ஊர்ந்து கடந்து சென்ற அனுபவம் இருக்கும் என்பது மிக மிக உறுதியான விடயமாகும்.
மேலும் இங்கு கடந்த சில தினங்களாக தலைகீழாக ஒரு எச்சரிக்கை பதாதை தொங்க விடப்பட்டிருந்தது ஆனால் இப்பதாதையானது யாழ் நோக்கிச் செல்வோருக்கு மட்டுமே தெரியும் யாழிலிருந்து பருத்துறை நோக்கி வருபவருக்கு இப்படி ஒரு கிடங்கிருப்பது தெரியாது. அதுமட்டுமல்லாமல் இப்போது அந்த பதாதையும் அங்கே இல்லை.
இப்போது பலத்த காற்று வீச ஆரம்பித்துள்ள நேரத்தில் சாதாரணமாகவே அவ் வெளியில் பல உந்துருளிப் பிரயாணிகள் கடலுக்குள் விழுந்த சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளது.
விபத்துக்கான காரணங்களை எங்கள் வசம் வைத்துக் கொண்டு விபத்து சம்பந்தமான போதனைகளைப் போதித்து என்ன ஆகப் போகிறது.
சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்களா?
சரி தலைப்பிற்கு வருவோம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் அப்பாலத்தில் நடந்த சம்பவம் இது.
நான் உடுப்பிட்டியில் இருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் அக்கிடங்கை கடந்து ஏறுகையில் எதிரே ஒரு ஆட்டோவும் பிக்அப் ரக வாகனமும் வேகமாக வந்து கொண்டிருந்தன.
சடுதியாகக் கிடங்கைக் கண்ட ஆட்டோக்காரர் பிறேக்கை (வேக நிறுத்தியை) பிடித்தார் அவர் பின்னால் வந்த பிக்கப் வேகமாக வந்ததால் அதன் ஓட்டுனரும் பிறேக்கைப் பிடித்தார். இரும்புப் பாலமாகையால் பிடிமானமில்லாத ரயர்கள் சறுக்க பிக்கப் திரும்பிக் குறுக்காக நின்றது.
என்னுடைய உந்துருளியாகையால் என்னால் பிறேக் பிடிக்க முடியாது பிடித்தால் சறுக்கி விழுத்தி விடும் அளவுக்கு மழை.
நான் சுதாகரிப்பதற்கு முன்னரே பிக் அப்பிற்கும் பாலத்திற்கும் இடைப்பட்டிருந்த 3 அடி (கிட்டத்தட்ட) இடைவெளிக்குள்ளால் புகுந்த உந்துருளி மறுபக்கம் கடந்து விட்டது. மறு நாள் போய் தான் இந்த வீடியோவை எடுத்ததுடன் மேலே குறிப்பிட்டிருந்த ஆக்கத்தையும் (சுய புராணத்திற்கு மேல் உள்ளது) ஒரு யாழ்ப்பாணத்து தினசரிப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை கண்டு கொண்டதாகத் தெரியாததால் பத்திரிகைக்கும் எனக்கும் உள்ள விதிமுறையை மீறி முதலே பதிவிட்டுக் கொள்கிறேன்
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
5 கருத்துகள்:
நானும் எனது நண்பனுடன் கடந்த முதலாந்திகதி வண. தாவீது அடிகளாரின் நினைவுக்கு தும்பளைக்குப் போவதற்கு இப்பாதையால் Motor Cycleல் வந்தேன். ஆபத்தான அந்தப் பகுதியை ஏன் உரியவர்கள் பூரணப்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.
அது தான் தெரியவில்லை அண்ணா...
கருத்துக்கு மிக்க நன்றிகள்
யாழ்ப்பாணம் எல்லே அப்பா எவனும் கண்டுக்க மாட்டான்.எல்லாம் தலைவிதி நாம தான் இப்படி செய்தி போட்டு சனங்களுக்கு அறிவிக்கனும்.பேப்பர் காரன் செத்த வீட்டு செய்தி போடவும் தங்கட அரசியல் போடவும் தான் பேப்பர் போடுறான் போல
நல்ல வேளை எந்த பாதிப்பும் இல்லாமல் போயிற்றே.
இல்லா விடில் போட்டு நிரவி (குழியை அல்ல!) விடுவார்கள்!
கருத்துரையிடுக