கடந்த 15.6.2013 அன்று வீரகேசரியில் வெளியாகிய எனது ஆக்கம்.....
வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குறும்படப் போட்டி 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை
தொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு ஏதுவாக அத்துறையை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 31.5.2013 அன்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வடமாகாணத்திற்குற்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
முதற்கட்டத் தெரிவுப் போட்கள் வவுனியாவில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் நடுவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.
அப்படங்கள் தொடர்பான ஒரு சுருக்கப் பார்வை இதோ….
1. பாடங்கள்
வாழ்க்கையில் தலை முறை கடக்கவேண்டிய சில பாடங்களை படங்களாகக் கொண்டிருந்த ஒரு குறும்படமாக இருந்தாலும் ஆவணப்படம் ஒன்றின் சாயலை பிரதிபலித்ததால் மற்ற குறும்படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகத் தோற்றமளித்தது.
2. சலனங்கள்
முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை நிலையைத் திசை திருப்ப வைக்கும் கதைச் சுருக்கத்தைக் கொண்டு அமைந்திருந்தது. அத்தனை காட்சிகளும் இரவில் படமாக்கப்பட்டது இயக்குனரின் தற் துணிவைக் காட்டியிருந்தாலும் பல இடங்களில் பாத்திரங்களது முகபாவனை இருளால் மறைக்கப்படடிருந்தது.
3. அப்பு
வன்னியின் முழங்காவிலில் இருந்து தேர்வாகியிருந்த இக்குறும்படமானது ஈழத்தின் முக்கிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படமானது முதுமையின் இடர்பாடுகளைக் கொண்ட கதைக்கருவையும் கை தேர்ந்த பாத்திரத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் பிறழ்வடையாத நாடகச் சாயலானது குறும்படம் என்ற எல்லைக்குள் உள் இழுக்கத் தவறி விட்டது.
4. தண்ணீர்
5 ரூபாய் தபால் முத்திரையில் எழுதிவிடக் கூடிய ஒரு அழுத்தமான கதையை மட்டும் கொண்டு காட்சிகளையும், யதார்த்தமான பாத்திரம் மற்றும் உணர்வைப் பிரதிபலிக்கும் இசை இவை மட்டும் கொண்டு தத்ரூபமாக வார்த்தெடுக்கப்பட்ட படமாகும்.
5. வேகம்
இளமையின் வேகம் எந்தளவு பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை உணர வைக்கும் குறும்படமாகும். இதில் கதை மற்றும் பாத்திரங்களின் வேகத்தை விட ஒளிப்பதிவாளரின் வேகம் தான் அதிகம் ரசிக்க வைத்தது.
6. வல்லூறு
போதை தரும் உறவுப் பிரிகையும் சிறுவர்களிடையேயான உணர்வுர்ச் சேர்கையையும் தத்ரூபமாக கூறிய படம். இக்குறும்படத்தின் வெற்றிக்கு இயற்கைச் சூழலும் அத்துடன் ஒளிப்பதிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இயற்கை ஒலிகளும் சாதகமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகம் சற்று ரசனையையும் தாமதப்படுத்தியிருந்தது.
7. தோள் கொடு
நியமாகவே வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறணாளியைக் கொண்டு அவன் மனநிலையையும் மனித நேயத்தையும் பொறுப்பற்ற மனிதருக்கு உணர்த்தும்படமாகும். சாதாரண கமரா மற்றும் ஒளித்தொகுப்பு தொழில்நுட்பத்துடன் உருவான நல்ல படங்களில் ஒன்றாகும்.
8. சாம்பல்
நாம் பயன்படுத்தும் பெறுமதி குறைந்த ஒரு அற்ப பொருளுக்குப் பின்னும் எத்தனை ஏழைகளின் உதிரம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கூறியுள்ள படம் சாம்பலாகும். சிறந்த ஒளிப்பதிவோடும் இசையோடும் மட்டும் பயணித்திருக்கும் இப்படத்திற்கு வசனங்களும் இணைந்திருந்தால் உணர்வுகள் மேலோங்கியிருக்கும்.
9. மரண அறிவித்தல்
பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க எண்ணி புலம்பெயர் தேசமனுப்பும் பெற்றோரின் வாழ்வு எவ்வளவு இருள்மயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த படமாகும். நிறப்பிரிகையோ காட்சி மாற்றமோ சரியாக அமையாத flash back காட்சிகள் இப்படம் தொடர்பான சிறு குழப்பத்தை ஏற்றுடுத்தியது.
10. விட்டில்கள்
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய தலைமுறையின் வாழ்வை எப்படி சீரழிக்கிறது என்பதை மட்டக்களப்பு கொலைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கூறும் படமாகும். சிறந்த படத் தொகுப்பும் ஒளி நிறக்கலவையும் படத்தின் தரத்தை மற்றைய படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் பின்னணி குரல் முயற்சியிலும் மற்றைய படங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. கதையின் கனதியற்ற தன்மையும் நாயகியின் நடிப்போடு ஒட்டாத தன்மையும் படத்திற்கு மறையாக அமைந்திருந்தது.
11. நோ
பல குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும் பெண்களின் வேதனையை கமராவுக்குள் கொண்டு வந்த குறும்படமாகும். ஆனால் அளவுக்கதிகமான வன்முறை சார்ந்த ஒரே காட்சிகள் மீள மீள வந்து போனது உறுத்தலாகிப் போனது.
12. எழுத்துப்பிழை
ஒரு விலைமாதுவுக்கும் அவள் குழந்தைக்குமிடையேயான பாசப் பிணைப்பையும் உணர்வுகளையும் உணர்வு பூர்வாமாகக் கூறிய குறும்படமாகும். கதையில் வந்து போன அத்தனை பாத்திரங்களும் கதையோடு ஒன்றித்துப் போனது படத்தின் சிறப்பை மென்மேலும் அதிகரித்திருந்தது.
13. பாதினியம்
இன்றைய சூழலில் சமூகத்தில் இடம்பெறும் இளைஞர் தொடர்பான பிரச்சனைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமாகும். ஆனால் படத்தில் கவனிக்கத் தவறிய எழுத்துப்பிழைகளும் முன்னுக்குப் பின் முரணான திரைக்கதையும் படத்தின் கனதியைக் குறைத்திருந்தது.
14. ஏ கோல் (a call)
இக்குறும்படப் போட்டியில் ஒரு முற்போக்கான திரைக்கதையுடன் களமிறங்கிய ஒரே ஒரு படம் இது தான். 12பி திரைப்படத்தின் அடிப்படைக் கதை அமைப்பைக் கருவாகக் கொண்டு உருவான வித்தியாசமான படமாகும். ஆனால் மொழி ஆளுகை இழந்த தலைப்பு உறுத்தலாக இருந்ததுடன் இறுதிக் காட்சி ஏதோ ஒரு ஹெலிவுட் படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது.
15. விழித்திடு
இன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ள ஒரு படமாக அமைந்திருந்தது. ஆனால் எதற்கெதிராக ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறதோ அதையே அளவுக்கதிகமாகக் காட்டக் கூடாது கோட்பாட்டை கவனிக்கத் தவறியது படத்தின் மீதான பார்வையை வேறு திசைகளுக்கு மாற்றியிருந்தது.
சிறப்பாக திரையிடப்பட்டிருந்த குறும்படங்களானது ஈழத்தின் குறும்பட வளர்ச்சியை தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியிருந்தது. சில படங்கள் குறும்படங்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படாதவை என்ற ஒரு விமர்சன நோக்கெழுந்தாலும் இவை ஆரம்ப கட்ட வளர்ச்சிப்பாதை என்பதால் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் பெரும் மாற்றத்துடனான குறும்பட வளர்ச்சிப் போக்கு உருவாகும் என்பது அனைவரதும் திடமான நம்பிக்கையாகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா
3 கருத்துகள்:
வாழ்த்துக்கள்,ம.தி.சுதா!ஒரு தேர்ந்த விமர்சகர் ஆகி விட்டீர்கள்,நன்று!!!
அருமையான பகிர்வு சுதா. ஈழத்துக் குறும்பட வளர்ச்சி எமக்கெல்லாம் பெருமையே...
வாழ்த்துக்கள் சுதா அண்ணா!!!!உங்கள் முயற்சிகள் சிகரம் தொட வாழ்த்துக்கள்.தங்கள் பதிவுகலகப்பயணத்தின் சாதனைக்கு என்வாழ்த்துக்கள்.3 வருடங்கள் பதிவராக இருப்து என்பது சாதாரண விடயமல்ல.அன்றையதினத்தில் வாழ்த்த முடியவில்லை..!மன்னிக்கவும்.
கருத்துரையிடுக