Featured Articles
All Stories

செவ்வாய், 23 டிசம்பர், 2014

ஞாயிறு தினக்குரலில் (21.12.2014) என்னுடைய செவ்வி ஒன்று


நன்றி - நிரோஷா தியாகராசா

போரின் பாதிப்பை படைப்பில் தொடுவதில் பயங்கர சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு படப்பிடிப்புக்கு  அனுமதி பெறுவதில் இருக்கும் சிக்கலுக்கப்பால் இந்த துறையில் இன்னுமொரு பாரிய பிரச்சினை இருக்கிறது. முச்சக்கர வண்டி முதல் சகல தொழில்துறைக்கும் பிரச்சனை என்று வந்தால் குரல் கொடுக்க பல அமைப்புகள்> சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சினிமாக்காரனுக்கு பிரச்சினை என்றால் அவனது பிரச்சினையை  அணுக சட்டரீதியாக ஒரு அமைப்பும் இல்லை. அப்படியிருக்கையில் போரின்  தாக்கத்தை படமாக்கும் போது எந்த அரசியல் அமைப்பையும் தாக்காமல் படம்  எடுத்தாலும் இங்கு சிக்கல் ஏற்படுகிறது .இவ்வாறான  நிலைமைகளில் எங்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லை என்கின்றார் இயக்குநர், நடிகர் .தி.சுதா. ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த தில்லையம்பலம் சுதாகரன் என்ற இயற்பெயரை கொண்ட .தி.சுதா தனியார் கம்பனியொன்றில் பணியாற்றியவாறே சினிமா> இலக்கியம் என இருவேறு துறைகளிலும் பயணிக்கிறார். மதியோடை என்ற தனது வலைப்பூவில் தொடர்ந்தும்  எழுதி வருகிறார். இதுவரையில் பத்து குறும்படங்களை இயக்கி இருக்கும் இவருக்கு நடிகர் என்கின்ற இன்னொரு முகமும்  உண்டு. பதினேழு  குறும்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு அண்மையில் போலி| என்ற குறும்படத்தில் பிச்சைகாரனாக நடித்தமைக்காக  அர்ப்பணிப்பான நடிகர்| என கௌரவிக்கப்பட்டுள்ளார். தழும்பு|> துலைக்கோ போறியள்| என்ற இரண்டு குறும்படங்களுக்கும் சிறந்த இயக்குநர் விருதும்> மூன்று தடவை சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த பாடல் இயக்குநராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு> அதே பாடல் பிரான்ஸில் இடம்பெற்ற ஒளிக்கீற்று பாடல் போட்டியில் நடுவர் தெரிவு விருதையும் பெற்றுக்கொண்டது. இனி இவரது  நேர்காணலிலிருந்து:-


கேள்வி:- ஈழம் மற்றும் புலம்பெயர் சமூகங்களை பொறுத்தமட்டில் குறும்படங்களின் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கும் அதேநேரம் முழு நீளப்படங்கள் என்னும்போது போதாமையே நிலவுகிறது. இதற்கான காரணம்?

பதில்- இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நம்பி பணம் முதலிடக் கூடிய தயாரிப்பாளர்கள் நம்மிடம் இல்லை. அதற்காக கோடிகள் தான் கொட்ட வேண்டும் என்றில்லை காரணம் ஒரு தயாரிப்பாளர் போடும் பணத்தையாவது நிச்சயம் திருப்பி எடுக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட விருதுக்கு தகுதியான கதைகளங்களை கொண்டுள்ள எம் தேசத்தில் 20 லட்சத்துக்குள் கூட நல்ல சினிமாவை வெளிக் கொணர முடியும்.

அதற்கப்பால் எம்மவரிடையில் முழு நேரத் தொழிலாக சினிமாத்துறை என்பது வளரவில்லை அதற்கான காரணம் வர்த்தக ரீதியாக எம் வளர்ச்சியின் ஆரம்பம் இது தான் என்பதாலேயே அதனடிப்படையில் ஒரு திரைக் குழுவை நீண்டகாலத்துக்கு ஒருங்கிணைத்து வைத்திருந்து வேலை வாங்குவது என்பது சிரமமான ஒன்றாகும். அதனால் குறுகிய காலத்துக்குள் தான் எடுத்து முடிக்க வேண்டியுள்ளது.
அடுத்து நான் குறிப்பிடப் போகும் விடயம் பல அர்ப்பணிப்பான கலைஞர்களை தாக்கிவிடுமோ என்ற பயமிருந்தாலும் கட்டாயம் வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவே பகிர்கிறேன். உள்ளூரில் வழங்கப்படும் விருதுகள் சில கலைஞர்களுக்கு கொம்புகளை வளர வைத்து விடுகிறது. இதுவரை ஒரு முழு நீளப்படம் கூட நடித்திராத ஒரு கலைஞரிடம் நடிக்க அணுகிய போது அவர் கேட்ட சம்பளத் தொகை எனது முழு பட பட்ஜெட்டில் 45 வீதமாக இருந்தது.
இத்தனைக்கும் அப்பால் படப்பிடிப்புக்கான கள அனுமதிகள் தொடர்பாக உள்ளூரில் பெறுவது தொடர்பான சிக்கல் பல இருக்கிறது. அதற்கு அலைந்தும் பெற முடியாத நிலையில் களவாக எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தனிநாட்டுக்கு ஆசைப்படும் எங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் அந்த நாடு கிடைத்தால் நல்ல கலையும் கல்வியும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தவறுகிறார்கள்.

தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தினால் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி| Audience films ஒரு காட்சிக்கு ஒரு தயாரிப்பாளர் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பணம் மீள அளிக்கப்படும் என்ற சட்ட ரீதியான அணுகு முறையுடனேயே   அணுகுகிறேன்.

கேள்வி:-  போருக்குப் பின்னரான வன்னிச்  சமூகத்தின் மீதான கலாசார  ரீதியான பார்வையை சாடும் முகமாக உங்களால் எடுக்கப்பட்ட கொண்டோடி குறும்படம் பலரின் பாராட்டு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உங்களது குறும்படங்கள் மூலம்   சமூகத்திற்கு சொல்ல நினைப்பது...

பதில்- சமூகத்தின்பால் எனக்கு உடன்பாடில்லாத விடயங்களையே எழுத்தின் மூலம் என் வலைத்தளத்தில் கிறுக்கி வந்தேன். அதன் இன்னொரு பரிணாமமாகத் தான் என் குறும்படங்களை பயன்படுத்துகிறேன். ஆனால் சமூக விடயங்களை தொடுவது மிகவும் சிக்கலானது. தாக்கமான அல்லது பிடிக்காத விடயம் ஒன்றை சுட்டிக்காட்ட முனைந்தால் யார் யாரோ எல்லாம் ஒட்டுமொத்த குற்றச்சாட்டுக்களுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து நிற்பார்கள்.
உதாரணத்துக்கு சொல்லப் போனால் நீங்கள் கறியில் உப்புக் கூட என்று சொன்னால் சோறு சமைக்க பொறுப்பானவனும் விளக்கம் இல்லாமல் சண்டைக்கு வந்து நிற்பது போன்ற பெரிய பெரிய அசம்பாவிதங்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.

கேள்வி:-  திரைத்துறையை பொறுத்தவரையில் பல கோடிகளை கொட்டி பிரமாண்டமாக உருவாக்கப்படுகின்ற படைப்புகள் வர்த்தக ரீதியில் வெற்றிப்பெற்றாலும் உணர்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற யதார்த்த சினிமாக்களே மக்கள் மனதில் நிலையான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றன என்றொரு விமர்சனம் இருக்கிறதே. இது தொடர்பில் உங்கள் கருத்து...

பதில்-நான் இரண்டு வகை சினிமாக்களையும் ரசிக்கும் ஒருவன். இரண்டு வகையான சினிமாக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் யதார்த்த சினிமாக்கள் தான் மனதில் பதியும். மற்றையவை ரசிக்க வைத்து விட்டு எழும்பி வரும் போது கதிரையுடன் இருந்து கொள்ளும். ஏனென்றால் பெரும்பாலான பிரமாண்டப்படைப்புக்கள் எம்மை இன்னொரு உலகத்துக்கு தான் இட்டுச் செல்லும், நாம் எப்படி எல்லாம் ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு உலகத்தை எமக்குக் காட்டும். ஆனால் யதார்த்த சினிமாக்கள் எம்மை பழைய நினைவுகளுக்குள்ளும் வாழ்க்கை நிலைக்குள்ளும் இட்டுச் செல்லும். திரையரங்கை விட்டு வெளியே வரும் போது கற்பனைக்குள் போனதை மறந்து விடுவோம் ஆனால் காணும் காட்சிகள்> எம்மைச் சூழ நடக்கும் சம்பவங்கள் யதார்த்தங்களை மீள் நினைவாக்கிக் கொள்ளும்.

கேள்வி:-  உங்களது குறும்படங்களின் பெயர்கள் மிச்சக்காசு| துலைக்கோ போறியள்| கொண்டோடி| என பெரும்பாலும் மண்வாசனையோடு இருக்கிறது. இதற்கான காரணம்....

பதில்-அழிந்து வரும் சில சொற்களை கதைக்கு ஏற்றது போல பிரயோகிக்கின்றேன். இதில் சுயநலமும் இருக்கிறது காரணம் இவை அருகிவரும் சொற் தொடர்களாகும். அப்படியிருக்கையில் இன்னும் கொஞ்ச காலத்தில் இச் சொற்களைக் கேட்டால் முதலில் என் பெயர் தான் நினைவுக்கு வரும். என் ஆசை எமக்கென்றதொரு சினிமா வேண்டுமென்பதேயாகும்.

கேள்வி-போர்க்காலச் சூழலுக்குள் வாழ்ந்தவர் நீங்கள். அந்தவகையில் போருக்குப் பின்னர் திரைப்படத்துறையில் போர்க்கால பதிவுகளை சரியான முறையில் செய்ய தவறிவிட்டது என்ற ஒரு விமர்சனம் இருக்கிறதே. இது குறித்து...

பதில்ஈழ சினிமா வரலாறானது ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஒவ்வொரு வகையான வளர்ச்சிப் போக்கைக் காட்டிய வண்ணம் வளர்ந்து வருகிறது. போரின் பின்னரான சினிமா பாதையில் தான் வழமைக்கு மாறான வளர்ச்சி காணப்படுகிறது. அதற்கான காரணம் தொழில் நுட்பக்கருவிகளின் இலகுவாக்கம் காரணமாக இருக்கலாம்.
ஆனால் போரின் பாதிப்பை படைப்பில் தொடுவதில் பயங்கர சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கு படப்பிடிப்புக்கு  அனுமதி பெறுவதில் இருக்கும் சிக்கலுக்கப்பால் இந்த துறையில் இன்னுமொரு பாரிய பிரச்சினை இருக்கிறது. முச்சக்கர வண்டி முதல் சகல தொழில்துறைக்கும் பிரச்சினை என்று வந்தால் குரல் கொடுக்க பல அமைப்புகள்> சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சினிமாக்காரனுக்கு பிரச்சினை என்றால் அவனது பிரச்சினையை  அணுக சட்டரீதியாக ஒரு அமைப்பும் இல்லை. அப்படியிருக்கையில் போரின்  தாக்கத்தை படமாக்கும் போது எந்த அரசியல் அமைப்பையும் தாக்காமல் படம்  எடுத்தாலும் இங்கு சிக்கலே ஏற்படுகிறது.இவ்வாறான  நிலைமைகளில் எங்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லை.

அதே போல அப்படியான படைப்புக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் என்றாலும் கிடைக்கும் மறை விமர்சனங்களும் பாரதூரமாக இருக்கும். இதுவரை போரின் தாக்கம் உரைக்கும் இரண்டு படைப்புக்கள் செய்தேன் தழும்பு (ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் நிலமை) > கொண்டோடி (ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் தப்பாக நோக்கப்படும் பெண்ணின் கதை) இவற்றின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடங்களாகும்.
அதே போல அண்மையில் இயக்குனர் இளங்கோ ராம் மௌன விழித்துளிகள் என்ற குறும்படம் செய்து அமெரிக்காவரை சென்று விருது பெற்றிருந்தார். அதன் கருப் பொருள் இரு உறவுகளுக்கிடையிலான உணர்வுப் போராட்டம் ஆனால் அதற்கு கிடைத்த ஒரு பகுதி விமர்சனங்கள் என்னவென்றால் படத்தில் அரசியல் பரப்பு தொடப்பட்ட ஆழம் காணது அதனால் அது ஒரு முழுமையான படைப்பு அல்ல என்கின்றனர். அப்படைப்பாளியின் நோக்கம் போரின் வலி இதனால்தான் எல்லோராலும் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிறேன். இது இவ்வாறிருக்கையில் ஒரு படைப்பாளியால் எப்படி நடுநிலைமையான படைப்பைக் கொடுக்க முடியும்.

கேள்வி-படைப்புகள் குறித்த விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றதா? ஒரு கலைஞனாக விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்...?

பதில்விமர்சனங்களை எதிர்கொள்ளாத எந்தவொரு படைப்பாளியும் வளர்ந்ததாக வரலாறில்லை. உதாரணத்திற்கு எனது முதல் குறும்படமான ரொக்கட் ராஜா வுக்கு கிடைத்த விமர்சனங்களில் ஒன்று மதிசுதா என்றொரு வலைத்தளப்பதிவர் இயக்குனராகப் போகிறேன் என்று ஈழத்திற்கு ஒரு சாபக்கேடாகக் கிடைத்துள்ளார் .இது ஒரு விமர்சகர் நேரடியாகவும் இணையத்தில் பகிரங்கமாகவும் எனக்கிட்ட விமர்சனமாகும். அந்த வார்த்தை தான் துலைக்கோ போறியள்| என்ற குறும்படத்தை இந்திய அளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் என்னால் கொடுக்க முடிந்தது.

ஆனால் விமர்சகர்களில் எத்தனை பேர் அதற்கு தகுதியான வகையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் மேலே குறிப்பிட்டது கூட விமர்சனமில்லை காரணம் ஒரு விமர்சனம் என்பது படைப்பாளியை வளர்த்து விடுவதற்காகவே தவிர அவனை துறையை விட்டு விரட்டுவதற்காக அல்ல.


அண்மையில் ஒரு கருந்தரங்கில் ஒரு திரை விமர்சகர் வழங்கிய உரை கேட்டேன் அதில் ஈழத்தில் தேறிய படங்கள் என்று 4 படங்களின் பெயரை வைத்து அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அதில் 2 படங்கள் படம் எடுத்தவரே அது தன் படம் என்று சொல்லாத அளவுக்கு இருக்கும் படமாகும். அவர் ஏனைய படங்களை தேடி பார்க்காமல் தன்னை விமர்சகராக அடையாளப்படுத்துவதற்கும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதற்கும் படைப்பாளி என்ன பாவம் செய்தான். இந்த ஆக்கம் இன்னொரு திரைப்பரம்பல் உள்ள இடத்துக்கு செல்லும் போது எம் ஒட்டு மொத்தபடங்களும் கேவலமாகத் தானே பார்க்கப்படும்.
7:30 PM - By ம.தி.சுதா 1

சனி, 6 டிசம்பர், 2014

வன்னி மீண்ட பெண்களின் களங்கம் கலைக்க நாம் படைத்த ஒரு படைப்பு - “கொண்டோடி குறும்படம்”

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


 நாம் வெளியிட்டிருந்த புதிய படைப்பு ஒன்றுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
முழு நீளத் திரைப்படத்துக்கு தயாராகும் நாம் எமது செயற்பாட்டு வேகத்தை அதிகரிப்பதற்காக இக் குறுகிய காலப் படப்பிடிப்பு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டோம். ”கொண்டோடி” என்று தலைப்பிடப்பட்ட இக் குறும்படத்துக்கான படப்பிடிப்பு மற்றும் பின்கள வேலைகளை 12 மணித்தியாலத்திற்குள் முடித்து வெளியிட்டிருந்தோம்.

இக்குறும்படத்தை RTK friends media தயாரித்திருந்தது. எம் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை நாம் கூறியது போல காப்பாற்றியிருந்தது எமக்கு மிகப் பெரிய சந்தோசமான விடயமாகும்.

குறும்படத்துக்கான கதை, திரைக்கதை, இயக்கத்தை நான் பார்த்துக் கொள்ள ஒளிப்பதிவை முதுரனும் சன்சிகனும் செய்தார்கள்.
என்னோடு உதவி இயக்கத்தை ஜனகன் செய்து கொள்ள கதைக்கான உணர்வை
கவிதாயினி, சுஜிதா, சோபி ஆகியோர் செதுக்கி கொடுத்திருந்தார்கள்.

படத்தொகுப்பை மதுரனும் ஒலியமைப்பை சன்சிகனும் மிக வேகமாக செய்து கொடுத்தார்கள்.

எம் பரிட்சார்த்தமாக செய்த இப்படைப்பை தற்போது பகிர்ந்திருந்தாலும் செப்பனிடப்பட்ட படைப்போடு மீண்டும் சந்திக்கலாம்.

தங்களது மேலான கருத்துக்களுக்காக இக்குறும்படம் பகிரப்படுகிறது

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


11:48 AM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 11 நவம்பர், 2014

என்னுடைய பத்திரிகைக் குறுங்கதை - காலம் செய்த கோலம்


குறுங்கதை 
காலம் செய்த கோலம்
(23may2010 மித்திரன்)


”கிறீச்…..” என்ற சத்தத்துடன் அந்தப்படலை சற்றுச் சிரமத்துடன் திறந்து கொள்கிறது. அவன் போகும் போது அப்படி இருக்கவில்லை. முற்றத்தில் நின்ற செவ்வந்தி, சீனியாஸ் கன்றுகள் பெண்பிள்ளைகள் உள்ள வீடென்பதைக்காட்டி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவன் வீட்டை விட்டுப் போய் 8 வருடங்கள் தான் ஆகியிருந்தது.
வீட்டின் பின் மூலையில் நாயொன்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தது. அது நன்றாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ‘சலக் சலக்‘ என்ற சங்கிலியின் சத்தம் உரப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
அவன் மீண்டும் இந்த வீட்டுக்கு திரும்பி வருவான் என்று சற்றுக் கூட எதிர்பாக்கவில்லை. அவன் ஆசைகள் கனவுகள் எல்லாம் 10 வருடத்திற்கு முன்னமே எல்லாம் பறந்தொடிவிட்டது. அப்பாவியான அவனை கொலைச்சந்தேக நபர் என்ற பெயரில் விழுங்கிக் கொண்ட சிறை தாடி, மீசை என்பவற்றை பரிசாகக் கொடுத்து கக்கிவிட்டிருந்தது. அந்தக் கஷ்ட காலம் வராவிடில் இவன் இப்போது ஏதோ ஒரு நாட்டில் உழைத்துக் கொண்டு வீடு வந்து போயிருப்பான். அதே போல் வீட்டுக்காரர் கூட இப்படி ஓலைக் கொட்டிலில் இருக்க வேண்டியிருக்காது.
போய் முற்றத்தில் நிற்கிறான். உள்ளே தேங்காய் துருவும் சத்தம் கேட்கிறது. விறாந்தையில் இவன் படத்திற்கு முன்னே ஊதுபத்தி எரிந்து கொண்டிருந்தது.
”பிள்ளை ஆரோ வருகினம் போல ஆரெண்டு பார்”
”பொறணை நாய் கத்திக்கொண்டு நிற்குது அவிட்டுப் போட்டு வாறன்”
அவள் ஒரு முறை அந்தப் புதிய மனிதரை எட்டிப் பார்த்து விட்டுப் போகிறாள். மற்றவழும் தெரியாதவள் போல நித்திய கல்யாணியில் பூ பிடுங்கிக் கொண்டு நின்றாள்.
தலையை நீட்டிப்பார்த்த தாய் ”ஆரப்பு அது ஆளையும் மட்டுப்பிடிக்கேலாமல் கிடக்குது”என்றாள்.
அவன் வாயடைத்துப் போய் நின்றான். அவன் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் அடங்கிப் போனது.
அவள் நாயை அவிட்டு விட்டிருக்க வேண்டும். நாய் சந்தோசத்தில் வீட்டை ஒரு முறை சுற்றி விட்டு இவன் காலை முகர்ந்து பார்த்தது.
”அடிக்…..கலையடி புள்ள. அதுக்கு புது ஆக்களெண்டால் சரிவராது”
முகர்ந்து பார்த்த நாய் இவன் மீது காலைப் போட்டது. அவன் ”பப்பி” என அதன் தலையை வருடி விட்டான். அது இவனை பாய்ந்து பாய்ந்து நக்கியது.
”அம்மா இப்ப கூட உங்கட மகனை தெரியலையா?“
”அப்பு என்ர ராசா இப்பிடி மாறிட்டியே” தாய் கத்திக் கொண்டு ஓடி வந்தார். இப்போது நாய் தன் எஜமானரை காக்கும் பணியில் ஈடுபட்டது. அவர்கள் பக்கம் திரும்பி குரைக்க ஆரம்பித்தது.
10:33 PM - By ம.தி.சுதா 4

புதன், 5 நவம்பர், 2014

புத்துணர்ச்சி பெற்றுள்ள கலைஞரின் நாளைய இயக்குனர்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

நாளுக்கு நாள் திரைத்துறைக் கனவுகளுடன் பல நூறு இளைஞர்கள் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு களம் தர என உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலைஞர் ரீவியின் நாளைய இயக்குனராகும்.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பத் தொடர்களில் சாதித்த ஒரு சிலரே இன்று திரை உலகில் நுழைந்திருக்க அதன் பின்னர் சொல்லும்படியாக எவரும் உள் நுழையவில்லை. என் கணிப்பின் படி அவர்களை உருவாக்கியது இந் நிகழ்ச்சியல்ல அவர்களுக்கு ஒரு அடையாளமாக மட்டுமே இந்நிகழ்ச்சி இருந்திருக்கிறது.

அதற்கு காரணம் நடுவர்களின் மனத் தோற்றப்பாட்டையே கூற வேண்டும். மிக நீண்ட வருடங்களாக இந்நிகழ்ச்சியை பார்த்து வரும் எனக்கு இதில் தோன்றிய நடுவர்களது திணிப்புக்கள் என்றைக்குமே உறுத்தலாகவே இருந்திருக்கிறது.

ஒரு குறும்படம் என்பது முழு சினிமாவின் விதிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சட்டதிட்டங்களை களைந்தெறிந்து உருவாக்கப்படுவதே ஆகும் ஆனால் அதற்கு இவர்கள் பல்வெறு விதமான கருத்துக்களைத் திணிப்பார்கள்.

குறிப்பாக அண்மையா நாட்களில் நடுவர்களாக இருந்த சுந்தர்.சி மற்றும் வசந் ஆகியோர் மிக மோசமாகப் படைப்பாளிகள் மேல் ஒரு வரையறைத் திணிப்பை இட்டு வந்தார்கள். கடவுள் செயலாக தனது சுய தேவைக்காக சுந்தர்.சீ ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்த்திக் சுப்புராஜ் நடுவராக உள்வாங்கப்பட்டள்ளார்.

இவரது வருகையின் பின்னரே நடுவர் பக்கத்தில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டிருக்கிறது என்று கூற வேண்டும். இதுவரை காலமும் நடுவர் ஒருவர் படத்தை பார்த்தாரேன்றால் அவருக்கு அப்படத்தில் இருந்த எது விளங்கியதோ அதனடிப்படையில் தான் அவரது கருத்து மழை கொட்டும்.

ஆனால் கார்த்திக் சுப்ராஜ் வந்ததன் பிற்பாடு ஒரு சின்ன மாற்றம். படைப்பாளியின் கருத்தும் ஒன்று உள்வாங்கப்படும். அவர் படத்தை விளக்கச் சொல்லி ஒரு சொல் கேட்பார். இதில் படைப்பாளிக்கு நல்லதொரு வாய்ப்புக்கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படியானதொரு பெரிய போட்டிக்கு சிறந்த கதை ஒன்றைத் தான் எடுப்பார்கள். ஆனால் பார்க்கும் எமக்கு அது சொதப்பலாகத் தெரியும். அப்படியானால் எங்கோ ஓரு இடத்தில் தப்பு நடந்திருக்கும். இவரது இச்செயற்பாட்டால் இலகுவாக அதை அடையாளம் காணக் கூடியதாக இருக்கின்றது. இது படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பயனைக் கொடுக்கிறது.

அரையிறுதிச் சுற்று நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த தொடருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இருப்பாராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். ஆனால் அவரிடமும் ஒரு குறை இருக்கின்றது. அதாவது ஒன்றில் தனி ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது தனி தமிழில் பேசலாம் இரண்டையும் கலந்து கோர்த்து கதைப்பாதால் அவர் பேச்சை விளங்கிக் கொள்வது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.

எப்படியென்றாலும் கடந்த ஒரு சிலவாரங்களாக போட்டியை மிகவும் ரசிக்கக் கூடிய மாதிரி இருக்கின்றது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
6:49 PM - By ம.தி.சுதா 3

புதன், 29 அக்டோபர், 2014

உலகின் சிறந்த ஆவணப்படங்களை இலவசமாக அள்ளி எடுப்போமா?

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


இன்று நண்பர் ஒருவரின் திரைப்படம் ஒன்றுக்காக விஞ்ஞானத் தகவல்கள் சேகரிக்க தேடும் போது கண்ணில் இத்தளம் தட்டுப்பட்டது.

உள்ளே நுழைந்து பார்த்தால் அப்பாடி எவ்வளவு தகவல்களை அடக்கிய ஆவணப்படங்கள். அதுவும் விருதுகள் வென்றதுடன் பரவலாகப் பெசப்பட்ட உலகின் முக்கிய ஆவணப்படங்கள் பெரும் தொகையாக காணப்படுகிறது.

அதுவும் தரப்படுத்தப்பட்டு வகைப்பிடிக்கப்படடம் எமது தேடலுக்கு இலகுவானதாகக் காணப்படுகிறது.


  • 9/11 (48)
  • Art and Artists (40)
  • Biography (58)
  • Comedy (14)
  • Conspiracy (134)
  • Crime (138)
  • Drugs (92)
  • Economics (105)
  • Environment (141)
  • Health (115)
  • History (234)
  • Media (24)
  • Military and War (125)
  • Mystery (138)
  • Nature (170)
  • Performing Arts (71)
  • Philosophy (18)
  • Politics (138)
  • Psychology (51)
  • Religion (143)
  • Science (381)
  • Sexuality (47)
  • Society (427)
  • Sports (59)
  • Technology (114)













மேலே உள்ள வகைப்பிரிப்பில் அடைப்பில் உள்ள தொகை அடிப்படையில் ஆவணப்படங்கள் காணப்படுகிறது.

அத்தளத்திற்கு செல்ல இந்தத் தொடுப்பில் செல்லுங்கள். http://topdocumentaryfilms.com/

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

6:12 PM - By ம.தி.சுதா 6

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

ரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

என்னோட அம்மா
ரொம்பவே பாவம்
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

தேயிலை போட்டதால் தான்
தேநீர் என உணர்ந்தும்
மனதால் மட்டும் சீனி போடுகிறார்

இரு முறை உப்பிட்ட குழம்பில்
கொஞ்சம் தந்து கேட்கிறார்
உப்பிட்டேனா என பார்த்து சொல் என்று

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

ஆசையாய் வைத்த கறியில்
ஒரு கறியேனும் போட மறந்து போய்
இரண்டாம் தடவை உண்ணென
குழந்தையாய் கெஞ்சுகிறார்

மணிக்கூட்டு அலாரத்துக்கு கூட
மணிக்கொரு சாத்திரம் வைத்து
தன் மனசை தேற்றுகிறார்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

பெற்றெடுக்கா பிள்ளைகளான
பல்லிகளுக்கு உணவளிக்க
தனியாய் ஒரு மின்குமிழ்
ஒதுக்கி வைத்திருக்கிறார்

பல்லி மிச்சம் வைத்த
ஒற்றை பூச்சியேனும்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்
ஏதாவது ஒரு உணவுக்குள்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

இத்தனைக்குள்ளும்
அறுசுவை உணவே உண்கிறேன்
அத்தனை குறையையும்
தான் சந்தோசமாயிருப்பதாய்
நடித்து அளிக்கும்
பாசம் என்ற சுவையூட்டியால்
அறு சுவை உணவே உண்கிறேன்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:39 PM - By ம.தி.சுதா 5

வெள்ளி, 10 அக்டோபர், 2014

ஓட ஓட கலைத்த என்னுடைய நவராத்திரி நகைச்சுவை நாடகம் - 2014

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன்.
முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா?

நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள்.

என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவனியுங்கள் எப்படி அவர்கள் நினைவூட்டுகிறார்கள் என்பது தெரியும்.

எப்படி இருப்பினும் இணையத்தில் இருந்து உருவி எடுத்த நகைச்சுவைகளை வைத்து script கூட தயாரிக்கவில்லை என் கையில் இருக்கு காகிதம் தான் ஸ்கிரிபட் ஆகும்.
ஏதோ சிரிப்புக்கு நான் உத்தரவாதம் .

அத்துடன் இரண்டாவது வீடியோவாக சென்ற வருட நாடகத்தை பகிர்ந்திருக்கிறேன் அதற்கும் இதே பெயர் தான் ஆனால் நகைச்சுவை வேறு. அத்துடன் ஒலிச்சேர்க்கையில் சில குறைகள் காணப்படுகின்றன என்பதை முற்கூட்டியே அறியத்தருகிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


2013 ல் இடம்பெற்ற செவிட்டு வாத்தியார் நாடகம்.

7:08 PM - By ம.தி.சுதா 1

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஆரண்ய காண்டம் படத்தில் நான் ரசித்தவை

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் தமிழ் சினிமா ரசிகர்களின் குணத்துக்கு விதிவிலக்காக அமையாமல் போன படங்களில் ஒன்று தான் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ”ஆரண்ய காண்டம்” திரைப்படமாகும்.

படத்தில் ஆபாச வசனங்கள் சற்று தூக்கலாக இருந்தாலும் ஜதார்த்தத்தில் இருந்து ஒரு முடி அளவு கூட விலத்தாமல் கதையோடு நகர்ந்து செல்வதே அதன் தனிச்சிறப்பாகும்.


திரை உருவாக்கம் பற்றி அறிய நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகும். காரணம் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்ட திரைக்கதைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரச் செதுக்கல்கல்கள் ஆகும். எந்த ஒரு பாத்திரத்தில் கூட ஜதார்த்த விலகலைக் காட்ட முடியாது.

அதிலும் குறிப்பாக மிக மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்த பாத்திரமாக குடிகார ஜமிந்தாரையே குறிப்பிட்டு ஆக வேண்டும். 7ஜி ரெயின் போ காலணியில் வந்து போன ரவிகிருஸ்ணாவை சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்தியிருப்பார்கள். அந்த சப்பை பாத்திரத்துக்காக வாழ்தலில் சரியாக வாழ்ந்து முடித்துச் சென்றிருக்கிறார் ரவி கிருஸ்ணா.
அதற்கப்பால் மிக முக்கியமாக பேசப்பட வேண்டியவர்கள் 
1. சம்பத் - சாதாரணமாகவே அவரது எந்த நடிப்பானலும் எனக்கு மிக மிகப் பிடிக்கும் அதிலும் கோவா படத்தை ரசித்ததே அவருக்காகத் தான்.
2. ஜாக்கி செராப் (வில்லன் பாத்திரம்) - எங்கே தேடிப்பிடித்தார்களோ தெரியவில்லை அப்படி ஒரு தத்ரூபமான தெரிவாகும். அவர் தொடர்பாக தேட முனைந்த பொது தான் தெரிந்தது அவர் 150 படங்களுக்கு மேலாக நடித்த ஒரு குஜராத்தியர் என்பது.
3. மாஸ்டர் வசந் - அத்தனை பெரிய நடிகர்களுக்கும் ஈடாக அவரது நடிப்பிருக்கும். தந்தையை காப்பாற்றியவுடன் சம்பத் கேட்ட கேள்விக்கு அநாயசமாக ஒரு பதில் சொல்லுவான் பாருங்கள் அந்த இடம் அவன் நடிப்புக்கு பெரிய சான்றாகும்.

அதற்கப்பால் நடிகை, ஜாக்கி செராப் ன் வலது கையாக வரும் நடிகர் என ஒவ்வொரு பாத்திரங்களும் கதையோடு இயைபாக்கப்பட்டு நகர்கிறது.


படத்தில் பேச வேண்டியவற்றில் ஒன்று வசனமாகும். ”எது தேவையோ அது தான் தர்மம்” என்று படம் ஆரம்பிக்கும் இடத்தில் பிள்ளையார் சுழி ஓடு ஆரம்பித்து அத்தனை கேவலமான பாத்திரங்களையும் அந்த ஒரு வசனத்தாலேயே நியாயப்படுத்தி கோபம் வராமல் எம்மையும் ஒத்திசைய வைப்பதில் இயக்குனர் பெரு வெற்றி கண்டிருக்கிறார்.


இக்கதையை நம்பி 5 கோடி ரூபாயை போட்ட எஸ்பிபி சரணை பாராட்டத் தான் வேண்டும். அதே இடத்தில் அவ்வளவு காசையும் கொட்டியவர் அப்படத்தை சந்தைப்படுத்திய விதத்துக்கு திட்டித் தீர்த்தே ஆக வேண்டும். அந்தக் கடனை அடைக்க தந்தையாரான எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது ஸ்ரூடியோவை விற்ற கதை எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.


அத்துடன் பாடல்களே இல்லாத இப்படத்தில் யுவன் இசையால் ஒரு புது உலகுக்கு அழைத்துச் சென்றிருப்பார். காட்சிக்கு முன்னரே கதைக்களத்துக்கான உணர்வைக் கொடுத்து எம்மை தயார்ப்படுத்துவதில் இசை முழு வெற்றி கண்டிருக்கிறது.

இத்திரைப்படமானது சிறந்த படத் தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

52 காட்சிகள் நீக்கப்பட்டே வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த இப்படத்தில் விஜய் தொலைக்காட்சி தானும் தன் பாட்டுக்கு வெட்டி எறிந்திருந்தாலும் அதன் யூரியுப் பக்கத்தில் தணிக்கைக்கு உட்படுத்தாத படத்தை பகிர்ந்துள்ளது இப்பதிவின் கீழ் தணிக்கை செய்யப்படத அப்படத்தை இணைத்துள்ளேன்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
6:02 PM - By ம.தி.சுதா 2

வியாழன், 2 அக்டோபர், 2014

ஈழத்தவர் புலம்பெயர் வாழ்வியல் காட்டும் ”இருளின் நிழல்”

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் சினிமா வளரவில்லை வளரவில்லை என்று கூறிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் பிட்டத்தை ஓட்டி விட்டு எழும்பத் தெரியாமல் இருக்கும் பலருக்கு அடிக்கடி எம் சில சினிமாக்களை வலிந்து திணித்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

2013 ல் உருவாக்கப்பட்ட கடந்த வாரம் பிரான்சில் இருந்து வெளியிடப்பட்டிருந்த பிரசண்ணாவின் ”இருளின் நிழல்” குறும்படத்தை பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும். முதலில் அவரது படத் தலைப்புத் தெரிவுக்கு என் முதல் வாழ்த்துக்கள்.
காரணம் எப்போதும் படத் தலைப்பு என்பது படத்தின் பிரதிபலிப்பாகவும் ஒரு இயக்குனரின் அடையாளமாகவும் காணப்படும். ஆழமான அந்த அர்த்தத்தை பொதிந்திருந்த தலைப்பே படத்துக்கான ஒரு ஆர்வத்தை அள்ளி விதைத்திருந்தது.

சுய பூமியில் வாழ்வியலைத் தொலைத்து விட்டு புலத்தில் போயிருந்து வாழக்கைப் போராட்டம் நடத்தும் பல இளைஞர்களின் பிரதிபலிப்பாக படம் அமைந்திருந்தது. அந்த இளைஞனாக வந்த ரஜிந் இன் பாத்திரம் இப்பவும் மனசில் அப்படியே ஒட்டி நிற்கிறது.



ஒவ்வொரு பாத்திரத் தெரிவுகளிலும் சரியாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. படத்தை தூக்கி வைத்திருக்கும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் மிக மிகச் சரியான தெரிவாக அமைந்திருந்தது. அதிலும் குணபாலன் அண்ணாவின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை படம் பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்.
வசனங்கள் சில இடத்தில் பேச்சுத் தமிழில் இருந்து விலத்தியிருந்தாலும் மிக அழுத்தமான வசனங்களாகும்.
“ மக்களுக்காக திறந்திருந்த கடைகள் மட்டும் கடைப்பிடிச்சவையே”
”விசா கிடைச்சோண்ணை என்னைப்பாரு என்ரை குண்டியை பாரு எண்டு திரிவியள்”

இயக்குனர் திரைக்கதை அமைத்த விதமும் சகலருக்கும் சொல்ல வந்த விடயத்தை தெளிவாகக் காட்டியிருக்கிறது. காரணம் எந்த ஒரு இடத்தில் கூட குணபாலன் அண்ணாவின் மறைத் தோற்றம் அவர் பாவனையில் (காட்சியில் இருந்தல்ல) இருந்து வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் பிரசண்ணாவே தோன்றும் இறுதிக் காட்சியில் அந்த முடிச்சை முற்று முழுதாக பார்வையாளருக்கு அவிட்டுக் காட்டுகிறார்.
இக்குறும்படமானது 

london internaional tamil film festivel 2014 ல் 3 ம் இடத்தையும் சிறந்த writter க்கான விருதையும்

navalar short film festivel 2013 ல் 3 ம் இடத்தையும்

norway tamil film festivel ல் official selection ஆகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இக்குறும்படத்தை படைத்த அவதாரம் மற்றும் அதற்காக உழைத்த குழு அனைவருக்கும் நல்ல ஈழப்படம் ஒன்றைத் தந்ததற்காக என்னுடைய நன்றிகள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


10:51 AM - By ம.தி.சுதா 3

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top