நன்றி - நிரோஷா தியாகராசா
போரின் பாதிப்பை படைப்பில் தொடுவதில் பயங்கர சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவதில் இருக்கும் சிக்கலுக்கப்பால் இந்த துறையில் இன்னுமொரு பாரிய பிரச்சினை இருக்கிறது. முச்சக்கர வண்டி முதல் சகல தொழில்துறைக்கும் பிரச்சனை என்று வந்தால் குரல் கொடுக்க பல அமைப்புகள்> சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சினிமாக்காரனுக்கு பிரச்சினை என்றால் அவனது பிரச்சினையை அணுக சட்டரீதியாக ஒரு அமைப்பும் இல்லை. அப்படியிருக்கையில் போரின் தாக்கத்தை படமாக்கும் போது எந்த அரசியல் அமைப்பையும் தாக்காமல் படம் எடுத்தாலும் இங்கு சிக்கல் ஏற்படுகிறது .இவ்வாறான நிலைமைகளில் எங்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லை என்கின்றார் இயக்குநர், நடிகர் ம.தி.சுதா. ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த தில்லையம்பலம் சுதாகரன் என்ற இயற்பெயரை கொண்ட ம.தி.சுதா தனியார் கம்பனியொன்றில் பணியாற்றியவாறே சினிமா> இலக்கியம் என இருவேறு துறைகளிலும் பயணிக்கிறார். மதியோடை என்ற தனது வலைப்பூவில் தொடர்ந்தும் எழுதி வருகிறார். இதுவரையில் பத்து குறும்படங்களை இயக்கி இருக்கும் இவருக்கு நடிகர் என்கின்ற இன்னொரு முகமும் உண்டு. பதினேழு குறும்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு அண்மையில் “போலி| என்ற குறும்படத்தில் பிச்சைகாரனாக நடித்தமைக்காக “அர்ப்பணிப்பான நடிகர்| என கௌரவிக்கப்பட்டுள்ளார். தழும்பு|> துலைக்கோ போறியள்| என்ற இரண்டு குறும்படங்களுக்கும் சிறந்த இயக்குநர் விருதும்> மூன்று தடவை சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த பாடல் இயக்குநராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு> அதே பாடல் பிரான்ஸில் இடம்பெற்ற ஒளிக்கீற்று பாடல் போட்டியில் நடுவர் தெரிவு விருதையும் பெற்றுக்கொண்டது. இனி இவரது நேர்காணலிலிருந்து:-
கேள்வி:- ஈழம் மற்றும் புலம்பெயர் சமூகங்களை பொறுத்தமட்டில் குறும்படங்களின் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கும் அதேநேரம் முழு நீளப்படங்கள் என்னும்போது போதாமையே நிலவுகிறது. இதற்கான காரணம்?
பதில்- இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நம்பி பணம் முதலிடக் கூடிய தயாரிப்பாளர்கள் நம்மிடம் இல்லை. அதற்காக கோடிகள் தான் கொட்ட வேண்டும் என்றில்லை காரணம் ஒரு தயாரிப்பாளர் போடும் பணத்தையாவது நிச்சயம் திருப்பி எடுக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட விருதுக்கு தகுதியான கதைகளங்களை கொண்டுள்ள எம் தேசத்தில் 20 லட்சத்துக்குள் கூட நல்ல சினிமாவை வெளிக் கொணர முடியும்.
அதற்கப்பால் எம்மவரிடையில் முழு நேரத் தொழிலாக சினிமாத்துறை என்பது வளரவில்லை அதற்கான காரணம் வர்த்தக ரீதியாக எம் வளர்ச்சியின் ஆரம்பம் இது தான் என்பதாலேயே அதனடிப்படையில் ஒரு திரைக் குழுவை நீண்டகாலத்துக்கு ஒருங்கிணைத்து வைத்திருந்து வேலை வாங்குவது என்பது சிரமமான ஒன்றாகும். அதனால் குறுகிய காலத்துக்குள் தான் எடுத்து முடிக்க வேண்டியுள்ளது.
அடுத்து நான் குறிப்பிடப் போகும் விடயம் பல அர்ப்பணிப்பான கலைஞர்களை தாக்கிவிடுமோ என்ற பயமிருந்தாலும் கட்டாயம் வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவே பகிர்கிறேன். உள்ளூரில் வழங்கப்படும் விருதுகள் சில கலைஞர்களுக்கு கொம்புகளை வளர வைத்து விடுகிறது. இதுவரை ஒரு முழு நீளப்படம் கூட நடித்திராத ஒரு கலைஞரிடம் நடிக்க அணுகிய போது அவர் கேட்ட சம்பளத் தொகை எனது முழு பட பட்ஜெட்டில் 45 வீதமாக இருந்தது.
இத்தனைக்கும் அப்பால் படப்பிடிப்புக்கான கள அனுமதிகள் தொடர்பாக உள்ளூரில் பெறுவது தொடர்பான சிக்கல் பல இருக்கிறது. அதற்கு அலைந்தும் பெற முடியாத நிலையில் களவாக எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தனிநாட்டுக்கு ஆசைப்படும் எங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் அந்த நாடு கிடைத்தால் நல்ல கலையும் கல்வியும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தவறுகிறார்கள்.
தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தினால் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி| ஐ Audience films ஒரு காட்சிக்கு ஒரு தயாரிப்பாளர் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பணம் மீள அளிக்கப்படும் என்ற சட்ட ரீதியான அணுகு முறையுடனேயே அணுகுகிறேன்.
கேள்வி:- போருக்குப் பின்னரான வன்னிச் சமூகத்தின் மீதான கலாசார ரீதியான பார்வையை சாடும் முகமாக உங்களால் எடுக்கப்பட்ட கொண்டோடி குறும்படம் பலரின் பாராட்டு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உங்களது குறும்படங்கள் மூலம் சமூகத்திற்கு சொல்ல நினைப்பது...
பதில்- சமூகத்தின்பால் எனக்கு உடன்பாடில்லாத விடயங்களையே எழுத்தின் மூலம் என் வலைத்தளத்தில் கிறுக்கி வந்தேன். அதன் இன்னொரு பரிணாமமாகத் தான் என் குறும்படங்களை பயன்படுத்துகிறேன். ஆனால் சமூக விடயங்களை தொடுவது மிகவும் சிக்கலானது. தாக்கமான அல்லது பிடிக்காத விடயம் ஒன்றை சுட்டிக்காட்ட முனைந்தால் யார் யாரோ எல்லாம் ஒட்டுமொத்த குற்றச்சாட்டுக்களுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து நிற்பார்கள்.
உதாரணத்துக்கு சொல்லப் போனால் நீங்கள் கறியில் உப்புக் கூட என்று சொன்னால் சோறு சமைக்க பொறுப்பானவனும் விளக்கம் இல்லாமல் சண்டைக்கு வந்து நிற்பது போன்ற பெரிய பெரிய அசம்பாவிதங்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.
கேள்வி:- திரைத்துறையை பொறுத்தவரையில் பல கோடிகளை கொட்டி பிரமாண்டமாக உருவாக்கப்படுகின்ற படைப்புகள் வர்த்தக ரீதியில் வெற்றிப்பெற்றாலும் உணர்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற யதார்த்த சினிமாக்களே மக்கள் மனதில் நிலையான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றன என்றொரு விமர்சனம் இருக்கிறதே. இது தொடர்பில் உங்கள் கருத்து...
பதில்-நான் இரண்டு வகை சினிமாக்களையும் ரசிக்கும் ஒருவன். இரண்டு வகையான சினிமாக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் யதார்த்த சினிமாக்கள் தான் மனதில் பதியும். மற்றையவை ரசிக்க வைத்து விட்டு எழும்பி வரும் போது கதிரையுடன் இருந்து கொள்ளும். ஏனென்றால் பெரும்பாலான பிரமாண்டப்படைப்புக்கள் எம்மை இன்னொரு உலகத்துக்கு தான் இட்டுச் செல்லும், நாம் எப்படி எல்லாம் ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு உலகத்தை எமக்குக் காட்டும். ஆனால் யதார்த்த சினிமாக்கள் எம்மை பழைய நினைவுகளுக்குள்ளும் வாழ்க்கை நிலைக்குள்ளும் இட்டுச் செல்லும். திரையரங்கை விட்டு வெளியே வரும் போது கற்பனைக்குள் போனதை மறந்து விடுவோம் ஆனால் காணும் காட்சிகள்> எம்மைச் சூழ நடக்கும் சம்பவங்கள் யதார்த்தங்களை மீள் நினைவாக்கிக் கொள்ளும்.
கேள்வி:- உங்களது குறும்படங்களின் பெயர்கள் மிச்சக்காசு| துலைக்கோ போறியள்| கொண்டோடி| என பெரும்பாலும் மண்வாசனையோடு இருக்கிறது. இதற்கான காரணம்....
பதில்-அழிந்து வரும் சில சொற்களை கதைக்கு ஏற்றது போல பிரயோகிக்கின்றேன். இதில் சுயநலமும் இருக்கிறது காரணம் இவை அருகிவரும் சொற் தொடர்களாகும். அப்படியிருக்கையில் இன்னும் கொஞ்ச காலத்தில் இச் சொற்களைக் கேட்டால் முதலில் என் பெயர் தான் நினைவுக்கு வரும். என் ஆசை எமக்கென்றதொரு சினிமா வேண்டுமென்பதேயாகும்.
கேள்வி-போர்க்காலச் சூழலுக்குள் வாழ்ந்தவர் நீங்கள். அந்தவகையில் போருக்குப் பின்னர் திரைப்படத்துறையில் போர்க்கால பதிவுகளை சரியான முறையில் செய்ய தவறிவிட்டது என்ற ஒரு விமர்சனம் இருக்கிறதே. இது குறித்து...
பதில்- ஈழ சினிமா வரலாறானது ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஒவ்வொரு வகையான வளர்ச்சிப் போக்கைக் காட்டிய வண்ணம் வளர்ந்து வருகிறது. போரின் பின்னரான சினிமா பாதையில் தான் வழமைக்கு மாறான வளர்ச்சி காணப்படுகிறது. அதற்கான காரணம் தொழில் நுட்பக்கருவிகளின் இலகுவாக்கம் காரணமாக இருக்கலாம்.
ஆனால் போரின் பாதிப்பை படைப்பில் தொடுவதில் பயங்கர சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
இங்கு படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவதில் இருக்கும் சிக்கலுக்கப்பால் இந்த துறையில் இன்னுமொரு பாரிய பிரச்சினை இருக்கிறது. முச்சக்கர வண்டி முதல் சகல தொழில்துறைக்கும் பிரச்சினை என்று வந்தால் குரல் கொடுக்க பல அமைப்புகள்> சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சினிமாக்காரனுக்கு பிரச்சினை என்றால் அவனது பிரச்சினையை அணுக சட்டரீதியாக ஒரு அமைப்பும் இல்லை. அப்படியிருக்கையில் போரின் தாக்கத்தை படமாக்கும் போது எந்த அரசியல் அமைப்பையும் தாக்காமல் படம் எடுத்தாலும் இங்கு சிக்கலே ஏற்படுகிறது.இவ்வாறான நிலைமைகளில் எங்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லை.
அதே போல அப்படியான படைப்புக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் என்றாலும் கிடைக்கும் மறை விமர்சனங்களும் பாரதூரமாக இருக்கும். இதுவரை போரின் தாக்கம் உரைக்கும் இரண்டு படைப்புக்கள் செய்தேன் தழும்பு (ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் நிலமை) > கொண்டோடி (ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் தப்பாக நோக்கப்படும் பெண்ணின் கதை) இவற்றின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடங்களாகும்.
அதே போல அண்மையில் இயக்குனர் இளங்கோ ராம் மௌன விழித்துளிகள் என்ற குறும்படம் செய்து அமெரிக்காவரை சென்று விருது பெற்றிருந்தார். அதன் கருப் பொருள் இரு உறவுகளுக்கிடையிலான உணர்வுப் போராட்டம் ஆனால் அதற்கு கிடைத்த ஒரு பகுதி விமர்சனங்கள் என்னவென்றால் படத்தில் அரசியல் பரப்பு தொடப்பட்ட ஆழம் காணது அதனால் அது ஒரு முழுமையான படைப்பு அல்ல என்கின்றனர். அப்படைப்பாளியின் நோக்கம் போரின் வலி இதனால்தான் எல்லோராலும் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிறேன். இது இவ்வாறிருக்கையில் ஒரு படைப்பாளியால் எப்படி நடுநிலைமையான படைப்பைக் கொடுக்க முடியும்.
கேள்வி-படைப்புகள் குறித்த விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றதா? ஒரு கலைஞனாக விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்...?
பதில்- விமர்சனங்களை எதிர்கொள்ளாத எந்தவொரு படைப்பாளியும் வளர்ந்ததாக வரலாறில்லை. உதாரணத்திற்கு எனது முதல் குறும்படமான ரொக்கட் ராஜா வுக்கு கிடைத்த விமர்சனங்களில் ஒன்று மதிசுதா என்றொரு வலைத்தளப்பதிவர் இயக்குனராகப் போகிறேன் என்று ஈழத்திற்கு ஒரு சாபக்கேடாகக் கிடைத்துள்ளார் .இது ஒரு விமர்சகர் நேரடியாகவும் இணையத்தில் பகிரங்கமாகவும் எனக்கிட்ட விமர்சனமாகும். அந்த வார்த்தை தான் துலைக்கோ போறியள்| என்ற குறும்படத்தை இந்திய அளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் என்னால் கொடுக்க முடிந்தது.
ஆனால் விமர்சகர்களில் எத்தனை பேர் அதற்கு தகுதியான வகையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் மேலே குறிப்பிட்டது கூட விமர்சனமில்லை காரணம் ஒரு விமர்சனம் என்பது படைப்பாளியை வளர்த்து விடுவதற்காகவே தவிர அவனை துறையை விட்டு விரட்டுவதற்காக அல்ல.
அண்மையில் ஒரு கருந்தரங்கில் ஒரு திரை விமர்சகர் வழங்கிய உரை கேட்டேன் அதில் ஈழத்தில் தேறிய படங்கள் என்று 4 படங்களின் பெயரை வைத்து அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அதில் 2 படங்கள் படம் எடுத்தவரே அது தன் படம் என்று சொல்லாத அளவுக்கு இருக்கும் படமாகும். அவர் ஏனைய படங்களை தேடி பார்க்காமல் தன்னை விமர்சகராக அடையாளப்படுத்துவதற்கும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதற்கும் படைப்பாளி என்ன பாவம் செய்தான். இந்த ஆக்கம் இன்னொரு திரைப்பரம்பல் உள்ள இடத்துக்கு செல்லும் போது எம் ஒட்டு மொத்தபடங்களும் கேவலமாகத் தானே பார்க்கப்படும்.
1 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
கருத்துரையிடுக