Featured Articles
All Stories

செவ்வாய், 27 டிசம்பர், 2016

என்னுடைய முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு

வணக்கம் உறவுகளே...

தொழில்நுட்ப வளங்களை முழுமையாக அடையாத என் மண்ணில் இருந்து தயாரிப்பாளரும் கிடைக்காத நிலையில் என்னிடம் இருந்த வளம் சினிமா அறிவு என்பவற்றை வைத்து “உம்மாண்டி“ என்ற இந்த முழு நீளத் திரைப்படத்தை முடித்து அதன் முன்னோட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இதை கிளிக் செய்து உங்கள் பேஸ்புக்கிலும் பகிர்ந்து மற்றைய நண்பர்களையும் சென்றடைய உதவுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


8:44 PM - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

செவ்வாய், 15 நவம்பர், 2016

இதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்....

ஜேர்மனிய இயக்குனர் அலெக்சான்டர் ரைடர் ஆல் MRTC யில் நடாத்தப்பெற்ற ஆவணப்பட செயலமர்வு ஒன்றில் பங்கு பற்றும் சந்தர்ப்பம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது.
தெரிந்தோர் தெரியாதோர் என பலர் கலந்து கொண்டார்கள். அதில் பேஸ்புக்கில் சில மாதங்களாக நண்பியாக இருந்த அவளையும் கண்டேன்.
கண்டதும் ஒரு புன்னகை மட்டும் தான் இருவருக்குள்ளும் கடந்து கொண்டது. முதல் நாளின் மதியமும் கடந்த நிலையில் பேசிக் கொள்ளவில்லை.
நான் திரும்பும் நேரம் எல்லாம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ட கடனுக்காக ஒரு புன்னகை மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் திரையிடப்பட்ட திரைப்படத்துக்குள் புகுந்து கொண்டேன்.
முதல் நாள் வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். என்னோடு சேர்ந்து வந்திருந்த ஜனகன், மதீசனுடன் பேசிக் கொண்டிருக்கையில் தான் கவனித்தேன் என் அண்மையில் அவள் நின்றாள்.
எனக்காகவே காத்திருப்பது போல இருந்தது.
நேருக்கு நேர் பார்த்தேன்..
”உங்களோட ஒருக்கா கதைக்கோணும்”
”என்ன சொல்லுங்கோ” சற்று விலத்தி ஒதுங்கிக் கொண்டோம்.
பேஸ்புக்கில் இருந்தாலும் இன்பொக்ஸ் இல் கூட பேசியதாக நினைவில்லை. அப்படி என்ன பேசப் போகிறாள் வியப்போடு நின்றேன்.
அவள் மௌனம் நேரத்தோடு பேசிக் கொண்டிருந்தது. நானே தொடங்கினேன்.
”என்ன சொல்லுங்கோ”
தட்டுத் தடங்கித் தொடங்கினாள்.
”உங்களை மாதிரி எனக்கொரு அண்ணா இருந்தவர், உங்களை அண்ணா என்று கூப்பிடலாமா”
அவள் கலங்கிய கண்களும் வார்த்தைகளைத் துப்பத் தெரியாத உதடுகளும் என்னை உறுத்தியது.
வழமை போல் அதே புன்னகையால் சமாளித்துக் கொண்டு அது யாரெனக் கேட்டால் அதுவும் அதிர்ச்சியாகவே இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். மழைகால நேரம் குஞ்சர் கடைப் பகுதியில் ஏற்பட்ட பிக் அப் வாகன விபத்து ஒன்றில் தவறியிருந்தார். அதை நான் நேரில் சென்று பார்த்தும் இருந்தேன்.
அன்று ஆரம்பித்த அந்த உறவு என் திரைக்குழுவுக்கும் வந்து அவள் இயக்கத்தில் நானும் ஜனகனும் நடித்தது மட்டுமல்லாமல் ”நிழல் பொம்மை” என்ற அக் குறும்படத்தின் மூலம் திறந்த வசனகர்த்தா விருதும் பெற்றுக் கொண்டாள்.
அண்டைக்கு பிடிச்ச சனியன் இண்டை வரைக்கும் கழருதே இல்லை பார்ப்போம் அடுத்த புரட்டாதிச் சனிக்காவது ஏதாவது மாறுதா என்று (எடியேய் உன் கலியாணத்தைச் சொன்னன்ரி தங்கா (மதுசா) <3 span=""> )

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
9:03 PM - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அவளைப் பிரசவித்தேன் - என் பத்திரிகைக் குறுங்கதை

அவளைப் பிரசவித்தேன்
நன்றி - தினக்குரல்

அவளைப் பிரசவித்தேன்….


காரை நான் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியா வின் வலி வெளிப்பாடுகை சற்று அதிகமாகிக் கொண்டிருந்தது.
”தம்பி இன்னும் கொஞ்சம் வேகமா போறிங்களா” சொன்னது மாமி.
பின் இருக்கையில் பற்களை இறுக்கிக் கடித்தபடி மாமியின் கைகளை இறுகிப் பற்றிக் கொண்டு நித்தியா கத்திக் கொண்டிருந்தாள்.
“வருண் ப்ளீஸ் வேளைக்கு போடா”
வேகமாகவே போய்க் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியாது தான் வழமையை விட சற்று வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியாவுக்கான படபடப்பு ஒரு பக்கம், பாதைக் கவனிப்பிலான படபடப்பு ஒரு பக்கம் என என் மூளை உச்ச வேலையில் இயங்கிக் கொண்டிருந்தது.
முதலாவது குத்து எழும்பும் போது தான் மாமி எனக்கு போன் பண்ணியிருந்தார். நித்தியாவின் பெரு மூச்சொன்று பின்னுக்கிருந்து கேட்டது. இரண்டாவது குத்தும் கடந்து விட்டாள் என்பதை ஊகித்துக் கொண்டேன்.
இருவரும் அவசரப்படுத்துகிறார்கள் என்பதற்காக என் நிதானத்தில் இருந்து நான் தவறத் தயாரில்லை.
வாசலுக்குள் காரை நுழைக்கிறேன் தள்ளு வண்டிலுடன் ஊழியர் தயாராகிக் கொள்கின்றான்.
“மாமி நீங்கள் சேர்ந்து போங்கோ நான் bag எடுத்திட்டு வாறன்”
அடுத்த குத்துக்கு முதல் போக வேண்டும் என்ற அறிவுறுத்தல் நித்யாவுக்கு தெரியும் ஆனால் நான் பையுடன் வர பிந்தி விடுமோ என்ற ஒரு ஏக்கப்பார்வை ஒன்றுடன் நகரும் கதிரையில் போய்க் கொண்டு இருந்தாள். மணிரத்தினம் படத்தில் ரயில்களுக்கூடாகக் கடக்கும் நகரும் கமரா போல அவள் பார்வை என்னையே சுற்றிக் கொண்டிருந்தது.
ஆசுவாசமாய் கண்களாலேயே நான் வருகிறேன் என சின்ன சைகை கொடுத்தேன். சின்னதாய் ஒரு புன்னகை அவள் உதடுகளில் வெளிப்பட்டது. அடிக்கடி பார்த்தலுத்தது தான் ஆனாலும் அந்த புன்னகையில் இருக்கும் காந்த ஈர்ப்பு ஒன்று இழுத்தே தீரும்.
நான் பையைக் கொடுத்து விட்டு அறையின் வாசலில் காத்து நிற்கிறேன். உள் பதிவு வேலைகள் முடித்துக் கொண்டு அதே கதிரையில் அவளை இருத்தி லேபர் அறைக்கு அழைத்து போக வெளியே வந்தார்கள். அருகே வந்து கதிரையை நிறுத்திய மருத்துவமாது file எடுக்க என நினைக்கிறேன் உள்ளே போனார்.
“வருண் பிரச்சனை ஒன்றும் வராது தானே”
”ச்சே என்ன பழக்கம் குழந்தை மாதிரி” நித்தியாவை தேற்ற நான் சொல்லிக் கொண்டாலும் அவளின் விடயத்தில் நான் தான் அதிகம் பயந்தவன்.
”சீசர் அப்படி எதுவும் செய்வாங்களா”
”இல்லடி உனக்கு குழந்தை சரியா தானே இருக்கு பயப்பிடாதை”
”இல்லை ஏதோ ஒரு பயம் இருக்கு, pray பண்ணுறியா ”
தலையசைத்துக் கொண்டேன். என்னிடம் அவள் ஒன்றை உரிமையுடன் கேட்கிறாள் என்றால் ஒன்றில் என் குழந்தையாகக் கேட்பாள் இல்லை கண்டிப்புடனான என் தாயாகக் கேட்பாள்.
அவள் கதிரையின் கை பிடியை விரல்களால் சுரண்டிக் கொண்டாள். அவளுக்கு என்னில் எவ்வளவு தான் உரிமை இருந்தாலும் என் அன்பையோ ஸ்பரிசத்தையோ கேட்டுப் பெற்றுக் கொண்டதில்லை. கதிரைப் பிடியுடன் அவள் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.
தலைமுடி இழுத்து ஒரு துணியால் கட்டப்பட்டிருந்தது. அவள் வழமைக்கு இது எடுப்பில்லைத் தான் ஆனாலும் அவளது அழகிய நெற்றி எல்லாக் குறையையும் ஈடு செய்திருந்தது.
மறு கையால் தலையை மெதுவாய் வருடி விட்டுக் கொண்டேன்.
என் கண்கள் எதை? எப்போது? எப்படி? பார்க்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த சூட்சும ரகசியமாகும். விளங்கிக் கொண்டவள் மீண்டும் ஒரு புன்னகை உதிர்த்தாள். அவளுக்கும் தெளிவாகவே தெரிந்தது தான் அவள் எப்போது எந் நிலையில் இருந்தாலும் அதில் ஒன்றையாவது அழகாய் நான் ரசிப்பேன்.
அறைக்குள் கதிரை செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன். மாமியும் பட படப்புடன் என்னுடனேயே நின்று கொண்டார்.
சில நிமிடங்கள் கடந்திருந்தது.
ஆழமாய் ஒரு வலிக்குரல் கேட்க ஆரம்பித்தது.
ம்ம்.. நித்யா தான். என்னால் கேட்க முடியவில்லை. மாமிக்கு அனுபம் என்பதால் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு இப்போது எந்தக் கடவுளை கேட்பது என்று தெரியவில்லை. கல்யாணத்துக்கு முதல் வரை தேவையானதை கடவுளிடமே கேட்டேன். நித்தியா வந்த பிறகு அவளிடம் மட்டும் தானே கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அவளுக்காக கேட்க சொன்ன போதும் அவள் தான் நினைவுக்குள் நின்றாள்.
கைகள் எல்லாம் பட படக்க ஆரம்பித்திருந்தது. காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. கல்யாணத்துக்கு பிறகு கூட நித்தியா என்னிடம் அழுதிருக்கிறாள் தான் ஆனால் இப்படி அழுவதை முதன் முதல் என்னால் கேட்க முடியவில்லை.
”தம்பி கொஞ்சத்துக்கு வெளிய போய் நிண்டுட்டு வாங்கோ”
மாமிக்கும் என்னைப் பற்றி வடிவாகத் தெரியும். உறவு முறையில் தான் மாமியாக இருந்தாலும் நித்தியாவுக்கு இருந்த அதே உறவு தான் என்னிலும் அவருக்கு இருந்தது.
திருப்பி எதுவும் பேசவில்லை விறு விறேன்று படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கண்களில் முட்டிப் போய் இருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு திரும்பிப் பார்த்தேன் அவரது பார்வை மட்டத்துக்கு கீழ் இறங்கியிருந்தேன்.
இருக்க மனமில்லை ஒரு வட்டமடித்துக் கொண்டிருக்கையில் பல நிமிடங்கள் கடந்திருந்தது. நெஞ்சின் பட படப்பு குறையவே இல்லை.
பொக்கெட்டில் இருந்த போன் சிணுங்க ஆரம்பிக்கவே கையில் எடுத்தால் மறுமுனையில் மாமி…
”வாங்கோ தம்பி அறைக்கு கொண்டு வந்திட்டினம்”
”நித்தியா…… ”
அவர் சின்ன நக்கல் சிரிப்புடன்.
”அப்பாவானவர் பிள்ளை என்ணெ்டு கேப்பமெண்டில்லை சரி வாங்கோ வாங்கோ உங்களைத் தான் தேடுறாள்”
அவர் இதைச் சொல்லி போன் நிறுத்தும் போதே நான் வாசலுக்குள் நுழைந்திருந்தேன்.
நித்தியா களைத்து முகம் எல்லாம் வாடிப் போய் படுத்திருந்தாள். தூரத்தில் பார்க்கும் போதே போகும் போது தலைக்கு கட்டப்பட்டிருந்த துணி இல்லை என்பதைக் கண்டு கொண்டேன். குடும்பி முடியப்பட்டிருந்தது. அதே அவள் பட்ட வேதனைக்கு எனக்கு சாட்சியமாக்க போதுமானதாக இருந்தது.
ஓடிப் போய் அவள் கன்னங்களில் தான் கையை வைத்துக் கொண்டேன். தன் கையால் கன்னத்தோடு சேர்த்து அழுத்தி அணைத்துக் கொண்டு மறு கையால் என் கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை குழந்தை பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் நான் அப்பாவாகியிருக்கிறேன் என்ற நினைவே எனக்கு வந்தது. அந்த பிஞ்சு விரல்களுக்கு அருகே என் விரல்களைக் கொண்டு போனேன். இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாயை சுளித்துக் கொண்டிருந்தது அந்த அழகுப் பதுமை.
”பார் அவளை இந்தப் பாடு படுத்திப் போட்டு அப்பரைக் கண்டதும் அவற்ற கையை பிடிச்சிட்டான்”
அட எனக்கு பொடியன் பிறந்திருக்கிறானா? என் படப்படப்பில் இதெல்லாம் சிந்திக்க நித்தியா விடவில்லையே… சொன்ன மாமியை நிமிர்ந்து பார்த்தேன் அவரது கண்ணும் கலங்கியிருந்தது. என்னிடம் மகளைக் கொடுக்க தயங்கியதை நினைத்தாரோ தெரியவில்லை.
அறையை விட்டு மெதுவாக வெளியேறிக் கொண்டார். எம் சுதந்திரத்தைக் கெடுக்க கூடாது என்று தான் போகிறரோ அல்லது வெளியே போய்த் தான் அழப் போகிறாரோ எனத் தெரியாது ஆனால் போனார்…
”டேய் உன்னை ஏமாத்திட்டனா?”
”இல்லை”
”ஏன் உனக்கு பொம்பிளைப்பிள்ளை தானே வேணும் என்று என்னோட சண்டை பிடிப்பாய்”
”எனக்கு இரண்டாவது பிள்ளை பொடியன் தான் வேணும் என்றும் சொல்லுறனான் மறந்திட்டியா”
அவள் கேள்விக்கு முரண் பதிலால் ஒரு பார்வை பார்த்தாள். குனிந்து அவள் அழகிய நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டேன்.

இப்போது விளங்கியிருக்க வேண்டும் என் பிடரி முடியைக் கோதி தன் நெற்றியால் ஒரு தடவை முட்டி விட்டுக் கொண்டாள்.

12:19 PM - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நா.முத்துக்குமாரின் பாடல் உருவான கதை - 2

வணக்கம் உறவுகளே?


சில பதிவுகளை பதிய எண்ணிப் பதியாமல் போனாலும் பதிய எண்ணும் காலம் அவர்கள் கொடுத்த அழுத்தமான காலமாகவே இருக்கிறது.

இப்பாடல் உருவான கதை என எப்போதோ எழுத என நினைத்து விட்டு எழுத தவற விட்டிருந்த என்னை அக்கவிஞரின் மரணமே எழுத நினைவூட்டியுள்ளது.

தமிழ் கவிஞன் என்றால் எம் மனக்கண் முன் நிற்கும் முன்னணி கவிஞரில் ஒருவராகவும் முத்து அண்ணா என உரிமையோடு எல்லோராலும் அழைக்கக் கூடியதுமாக இருந்த நா. முத்துக்குமார் அண்ணன் தன் தமிழுக்கு உயிர் கொடுத்து விட்டு தன்னுயிரை முடித்துக் கொண்டு விட்டார்.

அவரது அத்தனை பாடல்களும் மனதுக்குள் நிற்பவை தான் அதில் அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரால் எழுதப்பட்ட அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை எப்படி உருவாக்கினார் என நான் அறிந்ததை சுருக்கமாகவே தருகிறேன்.

ஒரு ஆணின் மேல் பெண்ணுக்கோ பெண்ணின் மேல் ஆணுக்கு காதல் வயப்பட்டால் எதிர்ப் பாலினத்தவர்களது நல்லது கெட்டதை ஒரு தராசில் போட்டு நிறை பார்த்துக் கொள்வார்கள். அதில் நல்ல பக்கம் தாழ்ந்திருந்தாலே காதல் என்பது உணர்வுபூர்வமாய் பரிணமிக்கும்.
இத்திரைப்படத்தில் நாயகனானவன் நாயகியின் அழகை ஒரு தராசில் போடுகிறான் அதை அழகாக வரியாக்கி இசைக்குள் நுழைத்து அத்தனை பேர் மனதையும் வருட வைத்ததில் பெரு வெற்றி கண்டவர் அமரர் நா. முத்துக்குமார் அவர்களாவார்.

சரி வரியை எப்படிக் கோர்த்தார் என்றால் அது கற்பனை வரியல்ல என அவரே ஒரு செவ்வியில் கூறியிருந்தார் எப்படியென்றால் தனது திருமண அழைப்பிதழில் தன் வாழக்கைத் துணை பற்றி வரைந்து வைத்திருந்த வரிகளைத் தான் அங்கடித் தெருவில் இசையால் உயிர் கொடுக்க வைத்து எம்மையும் உணர்வூட்டியிருக்கிறார் பாடலாசிரியர்.

அவ் வரிகள்.......

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் எப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன். முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை
இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

அவள் அப்படி…

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுப்பதில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்குவதில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
அவள் கைபிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தமன்றி வேறு எதுவும் இல்லை
வேறு எதுவும் இல்லை

அவள் அப்படி…

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவர் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் அன்றி வேறு எதுவும் இல்லை
சொந்தம் அன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி…

எமக்கு தமிழால் உணர்வளித்த அச் செம்மல் எம் மனதில் உயிராய் என்று வாழ அவர் வரிகளே போதும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
8:34 PM - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

வியாழன், 30 ஜூன், 2016

krishan ன் copy paste பாடலை எதிர் கொண்ட விமர்சன உலகம்

வணக்கம் உறவுகளே நலம் எப்படி?

முற்குறிப்பு - இப்போதெல்லாம் எழுதுவதென்பது மறந்து போன விடயமாகிவிட்டது. இப்பாடலுக்கு எழுத வேண்டும் என ஆரம்பித்த பதிவு நீண்ட நாளாக கிடப்பிலேயே கைவிடப்பட்டு விட்டது.


சரி பதிவுக்கு வருகிறேன்



இணைய உலகம் என்பது எதையும் எவராலும் வெளிப்படையாக தம் மனதில் பட்டதை பதிய வைக்கும் ஒரு திறந்த ஊடகமாக அமைந்து நல்லதொரு திறந்த வெளிக்களத்தைக் கொடுத்துள்ளது.
இதற்குள் தம்மை அடையாளப்படுத்த பலர் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் தான் மாற்றுக் கருத்து அதற்குள் அடிக்கடி சிக்குப்படுவது படைப்புக்கள் தான்.
ஆனால் ஒருவன் தனது மனதில் படும் கருத்தை வெளிப்படுத்துகிறான் என்பது தவறான ஒரு விடயமல்ல ஆனால் அவன் ஏன் அதை முன் வைக்கிறான் என்பதையும் கவனத்தில் எடுத்தால் அதற்குள்ளும் பல காரணங்கள் இருக்கும்.
ஒரு படைப்பை திருடப்பட்டதாகக் கூறி கருத்தை வைத்தால் தாம் பல விடயங்கள் தெரிந்த நபர்களாகக் காட்டப்படுவோம் என்பது தான் பல கருத்தாளர்களது எண்ணமாக இருந்தாலும் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரம் வைக்க முடிவதில்லை.

அதிலும் இப்படியான கருத்தாளர்களை பார்க்கும் போது எப்படி இத்தோற்றப்பாட்டை உருவாக்குவார்கள் என்றால் X என்ற பாடலைப் பார்க்கும் போது Y என்ற பாடலின் அதே உணர்வைக் கொடுத்தது அதனால் இந்தப் பாடல் அங்கிருந்து தான் திருடப்பட்டது.

சாதாரணமாக ஒரு குற்றச்சாட்டை வைத்து விட்டுக் கடந்து விடுவார்கள். உங்களுக்கு ஒரு படைப்பு இன்னொரு படைப்பின் உணர்வைக் கொடுத்தால் அது அங்கிருந்து திருடப்பட்டது என்ற முடிவுக்கு வர முடிகிறது என்றால் உங்களது ரசனையாற்றலில் தான் சந்தேகம் உருவாக்கப்படுகிறதே தவிர படைப்பில் அல்ல... 

அப்படி ஒரு எண்ணப்பட்டுக்குள் அண்மையில் பல படைப்புக்கள் சிக்கிக் கொண்டாலும் உதாரணத்துக்கு கிரிசன் மகேசனின் OPK பாடலை எடுத்துக் கொள்வோம்.

அந்தப் பாடலின் காட்சி கணிதன் படத்தின் ”யப்பா சப்பா” பாடலின் தழுவல் என்று திரைத்துறையில் இருக்கும் சிலரே குற்றம் முன் வைத்தார்கள். இரு பாடலையும் பாருங்கள் தெரியும்.
இந்த இடத்தில் பாவப்பட்டது OPK பாடலின் நடன அமைப்பாளர் தான். காரணம் அந்த குற்றச்சாட்டுக்கு சற்று ஒத்திசைவாகப் போனது படத் தொகுப்புத் தான். எடிட்டர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை வெட்டி ஒட்டலுக்குள் முழுதாக புகுத்தியிருப்பார் . ஒரு காட்சியையோ, நடன அசைவையோ உங்களால் பூரணமாகப் பார்த்திருக்க முடியாது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் இயக்குனரே காரணம் அவர் தான் திட்டமிட்டிருப்பார்.
இந்த ஒரு வேகமான கத்தரிப்புக் காட்சிகளை வைத்து கிடைத்த உணர்வை வைத்து எம் விமர்சகர்கள் அம் முடிவுக்கு வந்திருந்தார்கள்.


ஆடுத்ததாக பாடலின் ஒலித் திருட்டு. இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால் பாடலின் இசை போட்ட இராஜ் எத்தனையோ வருடத்துக்கு முதல் சிங்களத்தில் போட்ட பாடலைத் தான் தமிழுக்கு மாற்றிக் கொடுத்திருந்தார். எமது தேடல் விமர்சகர்கள் ஏன் அதை ஒத்த பாடலை இந்திய சினிமாவில் பயன்படுத்தி விட்டார்கள் என விமர்சிக்கவில்லை என்பதும் ஒரு பெரிய கேள்வி தான்.

ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்போது இங்கு முன் வைக்கப்படும் விமர்சனங்கள் என்பது மாற்றுக் கருத்து மூலம் தம்மைத் தனித்துவப்படுத்தி வெளிப்படுத்தலுக்காகவேயன்றி வேறெதுவுமல்ல..


நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்
மதிசுதா

பிற்குறிப்பு - இங்கே கிரிசன் மகேசனின் பாடலை இணைத்துள்ளேன் பாடல் உருவாக்கத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


king South Krishan feat Gana Bala
Lyrics - Satheeskanth Rap Lyrics - KingSouth Krishan
Music - IRAJ 
Mixed by - Ranga Dassanayake at Hit Factory
Mastered by - Andy USA 
Visual concept: Varun Thushyanthan & Kathiresan Karthik 
Directed by: Kathiresan Karthik
Asst. Directors: Devaprasath Muthusamy ​Thanush Chelvanathan ​ Prashanth.K
Choreography - Sankaralingam Krishnakanthan (Wave Dance Studio)
Asst.Choregrapher: J.Muhunthan
Cinematography - Chinthakka Soma Keerthi
Final Editing, VFX and Color grading - Vino Dhomi
Edited at - M3 productions (Mathavan Maheswaran) Colombo 
Rushes edit - Surenth
Tittle designing - Surenth and Aathan (Jaffna)
Make-up Artist: D.M.D.Dissanayaka
Production Designer: Kathiresan Karthik and Thanush
Production Manager: Krishantha
Photography - Sai Photography (Jaffna)

Casting​​: Jerad Noel ​​ :Mithunika Fernando

Main Dancer Female: Noyal Christina
(Wave Dance Studio) S.Vithya Chagar
Dancers: (Wave Dance Studio) S.Elamaran P.Vivek J.Sasi A.Karikalan K.Rapinsan S.Anushanth (CMB Dancers) N.Naresh Jegan Pratheep Jerad Evan Babuka Prashanth

Female Dancer: Nithya Selvaraja
Recorded at - Paramount360 Colombo / Dharan studios Chennai / Iraj productions Pvt Ltd 



9:29 AM - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

புதன், 11 மே, 2016

மன மறைவில் ..... - குறுங்கதை

”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே”
கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான்.
”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு”
சற்றே தயங்கியவனாக..
”திருமகள் வீரச்சாவாமடா”

அரைவாசியை விழுங்கிக் கொண்டே சொன்னான். நான் அழுவேன் ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். நானும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் கத்தி அழ வேண்டும் போல் இருந்தாலும் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கொஞ்ச எச்சிலையும் விழுங்கிக் கொண்டேன்.
மனதுக்குள் திருப்ப திருப்ப சொல்லிக் கொண்டேன்

”காட்டிக் கொள்ளாதே நீ ஒரு வைத்தியர் உன்னை நம்பி பல காயக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்”
கேசவன் என்னை முழுதாகப் புரிந்தவன். அருகே வந்து கைகளைப் பற்றிக் கொண்டு

”உன்ர வோட் ஐ நானே பார்க்கிறன் போயிட்டு வா பின்னேரம் தான் விதைக்க போகினமாம்”
”எங்க நடந்தது”
”கல்லாறு”

ஒரு தடவை வியந்து போய் திருப்பியும் கேட்டான். ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்னர் தான் அங்கு முன்னரங்குக்கு ஒரு மருத்துவ முகாமிற்குச் சென்றிருந்தான். அங்கு ஏதோ தாக்குதல் ஆரம்பிக்கப் போகிறது என்பதை முதலே ஊகித்திருந்தான் ஏனென்றால் நான்கைந்து சினேப்பர் பிள்ளையள் முகம் முழுக்க கரிபூசி உருமறைப்புடன் நிற்க அவர்கள் செக்சன் லீடர் ஏதோ அறிவுறுத்திக் கொண்டு நிண்டார். வந்த களைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை அவரது போத்தலை வாங்கித் தான் குடித்தேன்.
”என்னத்தில காயம்”
”வயித்து காயம் சினேப் பண்ணியிருக்கிறாங்கள்”

ஏதோ அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இழுத்தது ஏனென்டால் அவள் முகத்தைக் கண்டு 2 வருடம் இருக்கும். படிக்கிற காலத்திலேயே முளை விட்ட காதல் அது. இருவருக்கும் மனசுக்குள் சின்ன பயம் இருந்தாலும் எப்படியோ வீட்டுக்கு கதை போய் விட்டது. ஆனால் நாம் பயந்தளவுக்கு இருக்கவில்லை
”படிச்சு முடியட்டும் செய்து வைக்கிறம் ஆனால் அதுவரைக்கும் எங்கட பேர் கெடக் கூடாது” அழுத்தமான நிபந்தனையால் காணும் போது சிரிப்பது மட்டுமே எம் உச்ச பட்ச காதல் தொடர்பாகிப் போனது. அப்பப்போ கடிதங்கள் மட்டும் புத்தகங்களால் காவப்படுவதுடன் சரி. அதன் பின்னர் வீட்டுக்கொருவர் போராட போக வேண்டும் என்றதன் பிறகு இருவர் வீட்டிலும் நாமே முன் வந்து போய்க் கொண்டோம்.

”பெட்டி சீல் பண்ணியிருக்கா”
வெளிவராத குரலை இழுத்து குரல் நாணில் பூட்டிக் கேட்டேன்.

”இல்ல துணைக்கு ஆரையும் கூட்டிக் கொண்டு போ”
கூறிக் கொண்டே என் வோட்டை பொறுப்பெடுப்பதற்கான ஆயத்தமாக ரிக்கேட்டுக்களை எடுத்து அடுத்த ஊசி போட வேண்டியவருக்குரிய ஒழுங்கில் அடுக்க ஆரம்பித்தான்.

வழமையாக அடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் இன்றைக்கு என் நிலமை புரிந்தோ தெரியவில்லை ஒரே தடவையில் பற்றிக் கொண்டது. இன்னொரு மனித வலுவை வீணாக்க விரும்பாமையால் தனியாகவே புறப்பட ஆயத்தமானேன்.
ஆனால் மனதுக்குள் ஏதோ உறுத்தியது. உயிரோடில்லாத அந்த முகத்தை நான் பார்க்கத் தான் வேண்டுமா?
அவளில் அடிக்கடி நான் ரசித்து இன்று வரை என் நினைவில் எஞ்சி நிற்பது அந்த குழி விழுந்த கன்னமும் பல் தெரியாத சிரிப்பும் தான் ஏன் அந்த முக விம்பத்தை நானே அழிப்பான்.
மோட்டார் சைக்கிளை நிறுத்திக் கொண்டேன்.
வோட்டுக்குள் நுழைந்தேன் கேசா ஊசி போட வேண்டியவருக்கு போட்டு முடித்திருந்தான். இன்று தியெட்டரில் எனக்கு 8 கேஸ் சேர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. புதிதாக வருவதைத் தவிர்த்து.

”நீ போ நான் தியெட்டருக்கு போறன்” என்றான் கேசா,
”வேண்டாம் நான் போகேல்லை நீ போய் படு இரவு மாற ஆள் வேணும்”
அவன் பதில் எதுவும் பேசவில்லை என் முடிவுகள் எப்போதும் மாற்றத்திற்குரியவையல்ல என்பது அவனுக்கு தெரியும்.
”சேரா….. திருமகளின்ர செக்சன் லீடர் காலமை காயப்பட்டு இப்ப தான் வந்திருக்கிறா”
”கதைச்சியா”
”இல்ல மயக்கம் தெளியேல்லை”

காதல் முடிந்து விட்டது கடமையாவது ஒழுங்காகச் செய்வோம் என்று மனது தானாகவே சொல்லிக் கொண்டிருந்தது.

”ம்.... நான் தியெட்டர் போறன் நீ ஓய்வெடுத்திட்டு வா”
கூறிக் கொண்டே ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

கையை ஸ்க்ரப் பண்ணி விட்டு வரவும், அல்லி அக்கா மயக்க மருந்து கொடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார். கையுறையை அணிந்து கொண்டு வரவும் உதவியாளர்கள் அனைத்தும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். Wound toilet செய்ய வேண்டிய காயம். இது தான் கடைசியாக செய்ய வேண்டிய wound toilet என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் காயத்தை சரியாக பராமரித்தால் அடுத்த வாரம் தையல் போடலாம்.
ஏனோ தெரியவில்லை கத்தியை கையில் எடுத்ததும் என்னைச் சுழ இருப்பதே எனக்கு மறந்து விடும் அதற்குள் திருமகளும் இன்று மாட்டுப்பட்டு விட்டாள். வேகமாகவே செய்து முடித்தேன். இரண்டாம் தரம் ketamine கொடுக்க வேண்டிய தேவை அல்லி அக்காவுக்கு ஏற்படவில்லை.
சாதுவாக தலையிடிப்பது போல இருந்தது.

”அக்கா அடுத்தாளை ஏற்றுங்கோ ரீ ஏதாவது குடிச்சிட்டு வாறன்”
அவர் தலையசைத்ததைக் கூடப் பார்க்காமல் கவுணைக் கழட்டிக் கொழுவி விட்டு வெளியே வந்தேன் மேசையில் சுடுதண்ணீர்ப் போத்தலில் தேநீர் ஆயத்தமாகவே இருந்தது.

ஒரு தடவை தான் வாயில் வைத்திருப்பேன் கேசவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வந்து ஜீன்ஸ் பொக்கட்டில் கையை விட்டபடி…
”சேரா… அவா எழும்பீட்டா திருமகள் உனக்கனுப்பச் சொல்லி குடுத்ததா ஒரு கடிதம் தந்தவா”
அவன் நீட்ட முதலே இழுத்துப் பறித்துக் கொண்டேன்.

என்றும் என் அன்பிற்குரியவனுக்கு…
நலம் சுகம் எல்லாம் விசாரித்தெழுதி உன் கடமை நேரத்தையும் என் கடமை நேரத்தையும் வீணாக்க முடியாது. அதோட எனக்கடுத்ததா கடிதம் எழுத இன்னும் 3 பேர் பேனைக்கு காவல் நிக்கினம்..

நாம் ஒன்றாய் வாழும் காலம் மிகவிரைவில் கை கூடும்
முக்கியமா ஒண்டு சொல்லோணுமடா, இப்ப நீ அக்காவிட்டை தண்ணி வாங்கிக் குடிக்கும் போது உருமறைப்போட வரிசையில் நிண்டது நான் தான். ஓடி வந்து கையை பிடித்து பேசோணும் போல இருந்தது. 2 வருசத்துக்கு பிறகு பார்க்கிறன் உன்ர அழகும் மிடுக்கும் கண்டு மிரண்டு போனன். எல்லாரும் டொக்ரர் டொக்ரர் எண்டும் போது பெருமையா இருந்தது. நான் காயப்பட்டு வந்தால் நோகாமல் மருந்து கட்டுவியா.
கூப்பிடவில்லை எண்டு கோபிக்காதை அணியில் நிற்கும் போது பேசவே கூடாது என்பது நான் சொல்லித் தான் உனக்கு தெரியோணும் எண்டில்லை.

காகிதத்தின் அரைவாசி கண்ணீரால் நிரம்பியிருந்தது. கேசவன் எதுவுமே பேச முடியாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.
”நீ போ போய் படு நீ வந்தால் தான் நான் போய் படுக்கலாம்”
தன்னை விரட்டுகிறான் எனப் புரிந்திருக்க வேண்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

அல்லி அக்கா அடுத்த காயத்தை ஆயத்தப்படுத்தியிருப்பார். கடிதத்தை மடித்து ஜீன்ஸ் பையில் வைத்துக் கொண்டேன்.

கட்டிலில் கிடந்தவனின் காய வேதனைக் கதறல் சற்று அதிகமாகவே இருந்தது. மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க ஆரம்பிக்க அவன் கத்தல் முனகலாக மாறிக் கொண்டிருந்தது. திருமகளின் வலியை மற்றைய ஜீன்ஸ் பையில் மடித்து வைத்துவிட்டு கையுறையை போட்டு கத்தியை கையில் எடுத்துக் கொண்டேன்.
6:32 PM - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல”

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

எந்த ஒரு படைப்பாளி செய்யும் படைப்புக்களும் முற்று முழுதான நிறைவானதாக இருப்பதில்லை ஆனால் குறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை எனக் கடக்க வைக்கும் படைப்பாக இருந்தாலே அது வெற்றி பெற்ற படைப்புத் தான்.
அந்த வகையில் அண்மையில் வெளியாகி என் மனதைக் கவர்ந்த படைப்பாக நான் காண்பது அஜினோவின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ”அஞ்சல” பாடலைக் குறிப்பிடுவேன்.
ராகம் இசைக்குழு வின் பாடலிசைக்கு குமணனின் வரிகளல் அருள் தர்சன் , நிக்சன் குரல்களில்  உறுதியான அத்திவாரமிட்டு பாடலை காதுகளால் ரசிக்க வைக்க கண்களுக்கு வஞ்சகம் செய்யாமல் நிசாந்தன் கமராவால் புகுந்து விளையாடியிருக்கிறார்.
ஜேய் இன் கத்தரிக்கோல் காட்சிகளை அழகாகவே அடுக்கியிருக்கிறது. காட்சி அசைவுக்கு றெக்சன் முற்று முழுதாக ஆக்கிரமித்து முத்திரை பதித்துள்ளார்.
பாடலின் இடையிடையே எட்டிப் பார்க்கும் சிறுவர்கள், பின்னுக்கிருந்து பார்க்கும் சிறுவர்கள், சந்தை நடத்தை என காட்சி விபரிப்புக்கள் பார்வைக்கு சலிப்பில்லாமலே கொண்டு செல்கிறது.
பாடலில் எனக்கு உறுத்தியவை இரு விடயங்களே, கிரேன் ல் அமைத்த காட்சிக்காக ஆசைப்பட்டு பாடலில் அருமையாக இருந்த மற்றைய காட்சிகளின் தரத்தை smooth இல்லாத இக்காட்சி கெடுத்து விடுகிறது.
றெக்சன் அருமையாக ஆடியிருந்தாலும் சில இடங்களில் குழுவுடனோ பாடலுடனோ ஒட்டாமல் ஆடி விட்டிருப்பது பயிற்சி போதாமையோ அல்லது படப்பிடிப்பு அவசரமோ என சிந்திக்க வைத்தாலும் என்னைப் பொறுத்தவரை அஞ்சல என்ற பாடல் கண்கவர் பாடலே
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
(என் பதிவுகளுடன் இணைந்திருக்கு... இப்பதிவின் கீழ் வரும் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்)
8:39 PM - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top