Featured Articles
All Stories

செவ்வாய், 17 ஜனவரி, 2012

வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்


வணக்கம் உறவுகளே
      இன்றைய பதிவில் மீண்டும் ஒரு சிறுவனின் கருவியுடன் சந்திக்கிறேன். இவனும் எனது ஊரைச் சேர்ந்தவனாகும்.
     உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 7 ம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அற்புதராசா அட்சரன் என்ற இம் மாணவன் உழுந்து, பயறு போன்றவற்றின் கோதுகைளை பிரிப்பதறகான இக்கருவியை வானொலிக்குப் பயன்படும் சாதாரண மோட்டரைக் கொண்டு செய்திருக்கிறான். இதனுள்ளே இருக்கும் மோட்டரில் உலோகத்தால் ஆனா சிறகு இணைக்கப்பட்டுள்ளது இதன் முலமே அவற்றின் கோதுகள் பரிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும் விபரங்கள் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.
      அத்துடன் இவன் தற்போது ஈக்கு வானம் என்ற வெடியை எய்வதற்கான ஒரு சிறு கருவியை செய்யும் முயற்சியில் இருக்கிறான். அதுபற்றியும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் புத்தாக்கப்பபோட்டிக்காக இவனும் கொழும்பு சென்று merit certificate ஐ பெற்றிருக்கிறான்.

       
சென்ற பதிவில் நான் அறிமுகப்படுத்தியிருந்த இன்னுமொரு கண்டுபிடிப்பாளரை இத்தலைப்பை சொடுக்குவதன் மூலம் அறியுங்கள்
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)

             இப்படியான ஆர்வமுள்ள மாணவரை உற்சாகப்படுத்த வேண்டியது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும். இதில் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இம்மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி உதவுவதற்கு எம் ஊரில் எவரும் முன்னிற்பதில்லை. யாழ்மாவட்டத்தில் இந்த ஊரில் ஏறத்தாழ 25 குடும்பங்களே இருந்தாலும் இந்த ஊரைப்பிறப்பிடமாகக் கொண்ட 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் புலம் பெயர் தேசத்தில் இருக்கிறது.
          அதற்காக எமது ஊர் பின் தங்கிய பிரதேசம் என யாரும் கணக்கிட வேண்டாம். பலர் இங்கிருந்து பல்கலைக்கழக பட்டம் பெற்றுள்ளார்கள். சென்ற மாதம் ஒரு மாணவி விநாடி வினா போட்டியில் யாழ்மாவட்டத்திலேயே முதல் பரிசு பெற்றிருக்கிறார். வருடாவருடம் ஒருவராவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்துகிறார்கள்.
           இவை எல்லாம் இப்படி இருந்தும் 2 வீட்டில் மாத்திரமே இயங்கு நிலையில் உள்ள கணனி இருக்கிறது. இவர்களுக்கு உதவும்படி நேரடியாகக் கேட்ட போதும் எந்த வெளிநாட்டவரும் இது பற்றி செவிசாய்ப்பதே இல்லை. சென்ற வருடம் ஒருவர் தானாக முன்வந்து மாணவருக்காக 100 டொலர்களை அனுப்பியிருந்தார். ஆனால் இம்முறை யாரும் சல்லிக் காசு அனுப்புவதற்கு முன்வரவில்லை.
                இதில் என்னை நெருடிய விடயம் என்னவென்றால் இதே மக்களிடம் ஆலயத்திற்கு என பணம் கேட்ட போது 50 லட்சத்திற்கு மேல் திரட்டிவிட்டார்கள். கடவுளுக்கு பயப்படும் அளவுக்கு ஏன் மனச்சாட்சிக்கு  பயப்படவில்லையோ தெரியவில்லை. கடவுளை கல்லில் பார்க்காதீர்கள் மனிதனுக்குள் தேடுங்கள்.


++++====++++===++++===++++===++++===++++===++++===++++===++++===


      ஒருவாறு மாதத்திற்கு 5,6 பதிவுகள் என்ற விகிதத்தில் 150 வது பதிவை அடைந்து விட்டேன். ஏன்டா நல்ல நாள் அதுவுமா வம்பு பேசுகிறாய் என எண்ணத் தோணுதா என்ன செய்வது மனதில் பட்டதை சொல்வதற்கு எது நல்ல நாள் பெருநாள். எனது 100 வது பதிவை சுமூகமாகக் கடந்தாலும் எனது 50 வது பதிவும் பெரிய அக்கப் போருடன் தான் கடந்தேன் (இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..) அது தான் இப்பதிவிலும் குறைவைக்கவில்லை.
            என் வலைத்தளத்திற்காக தொடரும் 500 followers ற்கும், ஒரு பதிவுக்கு 2043.14 என்ற சராசரி பார்வையை பெற்றுத் தந்த மூன்று லட்சம் பார்வையாளருக்கும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து மோத வேண்டிய இடத்தில் மோதியும் அரவணைக்க வேண்டிய இடத்தில் அரவணைத்தும் கரம் கொடுத்துத் தூக்கும் உறவுகளுக்கு என் கோடான கோடி நன்றிகள்.
               நட்பு என்பது இந்த உலகத்தில் ஒரு விலைமதிப்பற்ற பிணைப்பு அதை பெற்றுத் தந்த என் வலைத்தளத்திற்கும் என் நன்றிகள்..


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:46 PM - By ம.தி.சுதா 38

38 கருத்துகள்:

புதன், 11 ஜனவரி, 2012

தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)

         ஒரு கண்டுபிடிப்பு என்பது மனிதனின் தேவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது பொது வரை முறை. அதனடிப்படியில் எமது ஊர் மாணவன் ஒருவன் சென்ற வருடம் இடம்பெற்ற புத்தாக்கப் போட்டிக்காக தயாரித்த ஒரு கருவியை தங்களுடன் பகிர நினைக்கிறேன்.
      இந்தக் கருவியானது அம்மாணவனுக்கு merit certificate தர சான்றிதழைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
      யாழ்ப்பாணத்திலுள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த சசிக்குமார் குமணன் என்ற பத்தாம் தர மாணவனே இக்கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரனாவார். இவரது தந்தையார் ஒரு ஆசிரியராவார். நடுத்தர வசதியுள்ள இக்குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவன் வெறும் 150 ரூபாய் செலவுடன் இக்கருவியை செய்து முடித்திருக்கிறான்.
      இதன் செயற்பாடு என்னவென்றால் தோட்டம் போன்ற இடங்களின் வேலிகளுக்கு இதன் ஒரு அந்தத்தை மட்டும் கொடுத்தால் போதும். தோட்டத்தின் தடுப்பு வேலியில் ஒரு அதிர்வு ஏற்படுவதை வைத்துக் கொண்டு இந்தச் சிறிய கருவியை ஒலி எழுப்பச் செய்ய முடியும்.
        மேலும் விளக்கம் காணொளியில் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவனுடனான கலந்துரையாடல் அடுத்த காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.
(மீண்டும் ஒரு பதிவில் எமது ஊர் மாணவன் ஒருவன் தயாரித்துள்ள இன்னுமொரு கருவியுடன் சந்திக்கிறேன்)




11:53 PM - By ம.தி.சுதா 23

23 கருத்துகள்:

சனி, 7 ஜனவரி, 2012

பாழ்பட்டுப் போகும் யாழ் மருத்துவம் (சில நெருடும் உண்மைகள்)



         இந்த உலகத்தில் எந்த மனிதனும் கடவுளை நேரே கண்டதற்கான ஆதாரங்கள் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதில்லை. இருந்தாலும் அதிகளவானோர் தமக்கு உயிர் கொடுக்கும் கண்கண்ட தெய்வங்களாக வைத்தியர்களையே மதிக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் வைத்தியர்களோ மக்களை தம் பணம் கொழிக்கும் மரங்களாகவே நினைக்கிறார்கள்.
            அவர்களது தொழில் பக்தி தொலைக்கப்பட்டதாகவே என்னால் உணர முடிகிறது. கடந்த வருடம் மருத்துவமாதான தர்சிகாவின் கொலை வழக்கு அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த நீதி எங்கே ஒழித்தோடிவிட்டது என எவராலும் இனி தேடமுடியாது. அந்த குற்றவாளியான வைத்தியருக்கு பிணை எடுத்துக் கொடுத்ததே ஒரு தமிழ் வழக்கறிஞர் தான் என்பதை பலர் அறிவீர்களோ தெரியாது.
          அதன் பின் சிறிது காலத்தின் பின் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமானது “அருந்ததியுடன் இருந்த வைத்தியர்கள்” என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. அதன் உள் அர்த்தம் கடமை நேரத்தில் சில வைத்தியர்கள் மக்கள் காணக்கூடிய அறையில் இருந்து அருந்ததி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். உண்மையில் அங்கிருந்தவருக்கு கடமை நேரமா? ஓய்வு நேரமா? என உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அதற்கு அடுத்ததாக அவர்கள் செய்த வேலை தான் மிகவும் நகைப்பிற்குரியதாகும். அதாவது அதற்கு விளக்கம் கொடுத்து துண்டுப்பிரசுரம் ஒன்றை அச்சடித்து அனைவருக்கும் வைத்தியர்கள் தங்கள் கையாலேயே விநியோகித்தார்கள்.
          கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வைத்தியர்கள் கடமைக்கு கையொப்பம் இட்டுவிட்டு தமது தனியார் வைத்திய நிறுவனத்துக்குச் சென்று கையும் களவுமாகப் பிடிபட்டதை பலர் அறிந்திருப்பீர்கள். அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பெயரை மையப்படுத்தி இயங்கும் இணையத்தளம் ஒன்று யாழ் வைத்தியசாலை சம்பந்தமான செய்திகளை அடிக்கடி வெளியிடுவது பலரும் அறிந்திருப்பீர்கள். இவையனைத்தும் அங்குள்ள ஒரு வைத்தியர் மூலம் தான் செல்கிறது என்பது பலரது சந்தேகமாகும். காரணம் அத்தகவல்களின் உறுதிப்பாடும் தரவுகளுமாகும்.
              உங்கள் சத்தியப்பிரமாணங்கள் எங்கே போய்விட்டது. ஏன் இந்த பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை.
                 எனது தந்தையார் ஒரு உயர் குருதியமுக்க நோயாளியாவார். இவரது மாதாந்த மருத்துவ அமர்வுகளை மந்திகை (பருத்தித்துறை) வைத்தியசாலையில் தான் மேற்கொள்வார். கடைசியாக அவர் சென்ற நான்கு தடவைகளும் அவருக்கு குருதி அமுக்கம் சோதிக்கப்படவில்லை. ஒரு உயர்குருதி அமுக்க நோயாளியின் அமுக்கம் கட்டுப்படுத்தப்படாவிடில் மூளையில் உள்ள சிறிய குழாய்கள் வெடிப்பதன் மூலம் பாரிசவாதம் ஏற்படும் என்பது ஒரு பாரதூரமான விளைவாகும்.அந்த வைத்தியர் அதே மாத்திரைகளை மீளக் கொடுத்துள்ளார். அவரது கையொப்பத்துடன் (repeat all drug) என்பதைத் தான் எழுதியுள்ளார். ஆனால் நான் வீட்டில் வந்ததும் சோதித்தால் 160/110 என்ற முறையில் தான் பாதரச அளவு காட்டுகிறது. அந்தளவு தொழிலில் பற்று இல்லாமல் அலுப்புத் தட்டினால் ஓய்வு பெற்று வீட்டில் போய் இருக்கலாமே.
               அதை விட முக்கியம் இனிமேல் குறிப்பிடப் போவது தான். இது தான் நான் இப்பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணமாகும். கடந்த (03.01.2012) அன்று எனது மைத்துனி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் மரணமாகியிருந்தார். 51 வயதை உடைய இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாதுடன், சலரோகத்தாலும் பாதிக்கபட்டிருந்தார். அதன் பிற்பாடு அவரது காலில் ஒரு மாறாத காயம் ஏற்பட்டிருந்ததால் மந்திகை வைத்தியசாலையில் அவருக்கு கால் கழட்ட முடிவெடுக்கப்பட்டது (amputation) இருந்தாலும் வைத்தியர்களின் 40 நாட்களின் மிகப் பெரும் போராட்டத்தால் கால் காயம் ஓரளவு குணமாக்கப்பட்டு அதற்கு தோல் பிரதியிடலும் (skin graft) ம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு 5 நாளின் பின் வலிப்பு ஏற்பட்டு (fits) மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மறுநாள் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மரணமானார்.
       வைத்தியர்களின் பதில் என்ன வென்றால் அவரது இதயத்தில் துவாரம் இருந்ததால் தான் மரணமானாராம். அதற்கு அவர்களிடம் அவருக்கு அப்படி எதுவும் இருக்கவில்லையே எனக் கேட்ட போது அது பிறப்பிலேயே இருந்திருக்கலாம் ஆனால் கவனிக்கப்படத் தவற விடப்பட்டிருக்கலாம் என கூறினார்கள். அத்துடன் அவரது கை நடுக்கத்தால் மின் வரையியில் (ecg) ல் தெரியாமல் விட்டிருக்கலாமாம். இது எந்தளவுக்கு சாத்தியம் மின் வரையி என்பது அவர் தன் கையால் வரைவதில்லையே 15 வருடத்திற்கு மேலாக தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்ததுடன் கடைசிக்காலத்தில் icu வில் இருந்தார். அது மட்டுமல்ல இதுவரை ஒரு நாள் கூட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில்லை என்பதை அறிவிர்களா?

       hole in the heart என்பது தொற்று நோயல்லவே மரணத்தின் சில மணி முன்னர் வருவதற்கு.
    என்ன இருந்தாலும் நான் சட்ட நடவடிக்கைக்கு முன் நிற்கவில்லை காரணம் அவ் வைத்தியர்களும் உண்மையில் போராடினார்கள்.
  என் கணிப்பின் படி அவருக்கு கிருமித் தொற்றால் செப்டிக் (septic) வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
   எது எப்படி இருப்பினும் கடவுள்கள் கூட தப்புச் செய்வதுண்டு. இம்முறை பக்தர்கள் நாங்கள் மன்னிக்கிறோம் என்றும் கடவுளாக இருக்க முயற்சியுங்கள்.
       இங்கு குறிப்பிட்டுள்ள தவறுகள் கடமை நேரம் பாராது இப்பணியை சிரமேற்கொண்டு இரவு பகலாக உழைக்கும் அழப்பரிய அர்ப்பணிப்புவாதிகள் மனதை பாதித்தால் என்னை மன்னிக்கவும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:35 PM - By ம.தி.சுதா 28

28 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top