Featured Articles
All Stories

வெள்ளி, 28 டிசம்பர், 2012

நீ தானே என் பொன்வசந்தத்தில் என்னைக் கவர்ந்ததும் கவராததும்

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

தமிழ் சினிமாவின் எல்லை வீச்சங்கள் என்பது அளவுகளற்று நீண்டிருக்கும் வேளையில் ரசனை வட்டங்களும் பலருக்கு பல விதத்தில் பிரிந்து கொள்ள என் போன்ற சிலர் கணிதவியல் தொடையில் வரும் இடைவெட்டுப் போல் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என ஆகும்படி ஆகிவிட்டது.

commercial, entertainment என்று படங்கள் ஆட்சி செய்யும் காலத்தில் என் போல் அழுத்தங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்காக அப்பப்போ சில படங்கள் வந்து போவதுண்டு. ஆனால் அதிலும் ஆர்ப்பாட்மில்லாமல் அடக்கிவாசிக்கப்பட்ட படங்கள் பெற்ற வெற்றியளவுக்கு கொக்கரித்து ஊரைக் கூட்டிக் கொண்டு வந்த படங்கள் சாதிப்பது என்பது மிக அரிது.
விண்ணைத் தாண்டி வருவாயாவையே ரசிக்காத நண்பர்கள் இருக்குமிடத்தில் இப்படியொரு படத்துக்குப் போய் இந்தளவு பில்டப் கொடுத்தது கௌதம்மேனன் விட்ட பெரிய தவறு என்றே நான் சொல்வேன். ஆனால் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதற்கு பல இடத்தில் முத்திரை குத்தியிருக்கிறார்.

வி.தா.வருவாயாவில் சொல்ல மறந்ததைத் தான் இங்கே சொல்லியிருக்கிறார் என நையாண்டி செய்யப்பட்டாலும் இரு காதலர்களுக்கிடையிலான உண்மையான உணர்வுப் பரிமாற்றத்தை அப்படியே படைத்திருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

குழந்தையாய் இருக்கும் போது எதிர்பார்ப்பிகள் குறைந்தநிலையில் தோன்றும் காதல் எப்படியானது
பள்ளிப் பருவத்தில் காம உணர்வுகள் முழுமை பெறாத வயதில் உண்டாகும் காதல் எப்படியானது?
உயர்கல்விக்காலத்தில் காமத்தைக் கடந்த நிலையில் எதிர்காலத் துணை ஒன்று எப்படி இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உண்டாகும் காதல் எப்படியானது?
எல்லாம் கடந்து வேலையானபின் சாகும் வரைக்குமான மனைவி என்ற சொத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படியானது என்பதை வாழ்க்கையின் கட்டங்களை ஆழத்தோடு உணர்த்தியிருந்தாலும் கௌதம் மேனன் எங்கே தவறிழைத்தார் என்பது அவருக்கே தெரியுமோ தெரியாது..

அதனுடன் அவர்களது காதலுக்கான கால ஓட்டத்தை சமந்தா கையில் மாறிக் கொண்டிருந்த கைப்பேசியால் சூசகமாகக் காட்டிக் கொண்டே இருந்தார். அத்துடன் அவர்கள் கடைசியாக பிரியும் போது கதைத்த மொட்டைமாடியில் இறுதிக் காட்சியில் சேரும் போது பார்த்தால் பல டிஷ் அன்ரெனாக்கள் முளைத்திருக்கும் இப்படி அத்தனை காட்சிகளிலும் கவனம் செலுத்தி கவர்ந்த கௌதம் ஒரே ஒரு கேள்வியையும் மனதில் எழ வைத்தார் இருவரும் அலைபாயுதே பார்ப்பது போல ஒரு காட்சி ஆனால் 4 வது வருடத்தில் சுனாமி வந்ததால் சமந்தா நற்பணிக்கு போய்விடுகிறார்....

இசைத் தோல்விக்கான காரணங்கள்
கௌதமின் குரலில் பாடப்பட்ட நீ தானே என் பொன்வசந்தம் பாடல் காட்சியோடு அப்படியே ஒத்துப் போனதால் ஓரளவு ரசிக்க முடிந்தது ஆனால் இளையராஜா இசை பற்றி கௌதமே ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஏதோ சொல்ல வந்து பிடியைக் கொடுத்திருந்தார். இளையராஜாவிடம் இசையமைக்கச் சொல்லி கேட்க போய் தனது மடிக்கணனியில் இருந்த படத்தைப் போட்டுக் காட்டியதும் அவர் பூரண சம்மதம் சொன்னாராம்.
அதன் பிறகு பேட்டியில் சொல்கிறார் ஒரே நாளில் எவ்வளவு மியூசிக் போட்டுத் தள்ளினார். தான் தடுக்காவிடில் ஒரு நாளிலேயே முழு கொம்போசிங்கும் முடித்திருப்பார் என்றார். இதிலிருந்த தெரிவது என்னவென்றால் அவர் போட்ட இசை அனைத்தையும் இவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் இசைத் தேர்வே செய்யவில்லை போலும்.
ஒரு இளமையான காதலுக்கும் காதலர்க்கும் இடையே இசைஞானியின் இந்த பழுத்த குரலில் ஒரு பின்னணிப் பாடல்கள் தேவையா என எண்ணுகிறேன்.
இருந்தாலும் ”காற்றைக் கொஞ்சம் நிக்கச் சொல்லி” பாடல் முணுமுணுக்க வைக்கிறது.
சமந்தா எவ்வளவு தான் அழகாயிருந்தாலும் அவர் குரலில் எந்தவொரு இளமையும் இருப்பதாகவே தெரியவில்லை.
ஜீவா தனது இளமையை ஒவ்வொரு காட்சிக்கும் அதற்கேற்றது போலவே மாற்றியமைத்துக் காட்டியிருக்கிறார்.
சந்தானம் நகைச்சுவை செய்திருந்தாலும் மெதுவாய் நகர்ந்த செல்லும் கதையோட்டத்தின் ஆரம்பத்தில் வந்த நகைச்சுவைகள் மட்டுமே மனதில் நிலைத்திருக்க அதன் பின்னர் ஒரு துணைநாயகனாக மாறிவிடுகிறார்.

மொத்தத்தில் நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படமானது பொன்வசந்தமாக இல்லாவிடினும் காதலர்களும், புதிதாக திருமணம் செய்தவர்களுக்கும் வசந்தமே

குறிப்பு- சில காட்சிகளில் ஜீவாவின் வலது பக்க காதுச் சோணை அறுபட்டிருப்பது தெரிகிறது யாருக்காவது காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
6:40 PM - By ம.தி.சுதா 9

9 கருத்துகள்:

ஞாயிறு, 25 நவம்பர், 2012

அவுஸ்திரேலிய கடல் பயணங்களும் தீராத சந்தேகங்களும்


ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது.

அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்கள்.
ஆனால் அந்த பருவகாலத்திற்குரிய பயணங்களின் ஆரம்பத்தில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிலரே உருண்டு பிரண்டு பணத்தை திரட்டி பயணிக்க அதனோடு அப்போர்வையை போர்த்திக் கொண்டு எம்மவர் வழமையான பயணத்தை ஆரம்பித்தார்கள்.

3, 4 லட்சங்களுடன் ஆரம்பித்த பயணமானது 15 லட்சங்களையும் கடந்து நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பல போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு வாயை மூடி வாழ்பவர்களின் தொகையும் மிக மிக அதிகமாகவே மாறிவருகிறது.
அண்மையில் திருகோணமலை சென்ற போது ஒரு நபர் தனது pulser 180 மோட்டார் சைக்கிளை ஒரு லட்சத்தி முப்பதினாயிரத்திற்கு அவசரமாக விற்றுச் சென்றதாக சொன்னார்கள். நான் நினைத்தேன் பழைய சைக்கிள் என்றபடியால் தான் அவ்வளவு விலை போயிருக்கிறது என்று. ஆனால் இரண்டு லட்சத்து அறுபதாயிரத்துக்கு எடுத்து 7 மாதமே ஆனா சைக்கிளை அவ்விலைக்கு விற்று விட்டு ஒருவர் போகிறாரென்றால் அவர் துணிவை என்னவென்று சொல்வது.
இதே போன்று முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலும் மலிவாக வாகனங்கள் கிடைக்கிறது மட்டுமல்லாமல் மிக மலிவாக மிகத் தரமான போன்களையும் பெறக் கூடியதாக உள்ளது.

இதனிடையே அகதி அந்தஸ்து கோரி பயணிப்பவர்களில் பல சிங்களவர்களும் பயணிப்பது தான் அவுஸ்திரேலியாவின் சட்டங்களில் இவ்வளவு ஓட்டை உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனென்றால் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்படி யாரும் வந்ததாகவே தெரியவில்லை.
ஆனால் சில வாரங்களாக விருப்பின் பேரில் நாடு திரும்புகிறார்கள் என்ற பேரில் பலர் திரும்பி வருகிறார்கள். அப்போது என்னிடம் இருந்த பெரும் கேள்வி என்னவென்றால் இத்தனை லட்சங்களைக் கட்டியதுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்து அங்கே 3 நேரச் சாப்பாட்டுடன் ஒரு மணித்தியால கணனியையும் விட்டு விட்டு ஏன் இவர்கள் விரும்பித் திரும்ப வேண்டும்.

ஒன்றில் அவர்கள் அங்கே அகதி அந்தஸ்து மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூலிகளா? அல்லது பணத்துக்காக படகுகளை ஓட்டிச் சென்றவர்களா? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் பல ஓட்டைகள் இருக்கின்றது என்பது பயணிக்க காத்திருப்பவருக்கு ஒரு தென்பைக் கொடுக்கின்றதே தவிர அந்த ஓட்டைகள் மூடப்படுமா அல்லது திறந்தே இருக்குமா என்பது எக்கணத்திலும் தீர்மானிக்க முடியாத ஒன்றாரும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:57 PM - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

செவ்வாய், 13 நவம்பர், 2012

எனது பார்வையில் துப்பாக்கி- விமர்சனம்

தீபாவளி என்றால் எந்த சூழ்நிலையிலும் ரசிகர்களுக்கு வஞ்சகம் செய்யாதவர் நடிகர் விஜய். அதற்கு சரியான எடுத்துக்காட்டுத் தான் சந்திரமுகியுடன் போட்டியிட்ட சச்சின் திரைப்படமாகும். அதே வகையில் இம்முறையும் துப்பாக்கியால் சரமாரியான வேட்டுக்களைத் தீர்த்துத் தள்ளியிருக்கிறார் நம்ம விஜய்.
முருகதாசின் இயக்கத்தில் கஜால், ஜெயராம் மற்றும் சத்தியன் கூட்டணியில் கலக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹரிஸ்ஜெயராஜ் இசையமைக்க தாணு தயாரித்திருக்கிறார்.
ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் படம் எடுப்பது எவ்வளவு சவாலானது என்பதை சாதித்துக் காட்டியிருக்கும் முருகதாசை புகழாமல் இவ்விடத்தில் நகர முடியவில்லை. ஒரு விறு விறுப்புக்கான திரைப்படத்தில் ஆரம்பம் முதலே விறு விறுப்பை புகுத்துவது தான் சாலச்சிறந்தது. ஆனால் விஜய், ரஜனி போன்றோரின் படத்தில் இவை சாத்தியமற்ற ஒன்று காரணம் முதல் அரை மணித்தியாலங்களை ரசிகர்கள் தம் கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கொள்வதால் பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படுத்தி படத்துக்கான முதல் விமர்சனமே எதிர்மறையானதாக அமைய வாய்ப்பிருக்கிறது.
அதைத் தீர்க்கும் வகையில் முதலில் ஒரு சண்டை, அதன் பின் ஒரு பாடல் அடுத்த 10 நிமிடத்துக்குள் கஜால் அகர்வாலின் அறிமுகம் என ரசிகர்கள் அனைவரையும் கத்தி களைக்க வைத்து விட்டு தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
நடிகர் விஜயின் வழமையான நையாண்டி நகைச்சுவைகள் இருந்தாலும் இம்முறை சற்று முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டே கூறுவதால் படத்தின் சீரியஸ் தன்மையை ஆரம்பத்திலேயே உணர முடிகிறது. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே விஜயிற்கான பெண் பார்க்கும் படலத்துக்கு செல்லும் போது விஜய் கூறுவார். “வந்த ரயட்டுக்கு ஒரு குளியல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டுப் போகலாமே” அதற்கு தாயார் யதார்த்தமாக இம்முறையும் முடியாது உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகிறது என்பார். அதற்கிவர் ஒரு நாளைக்குள்ள வயசு ஏறிடாதும்மா என தனது வழமையான பாணியில் முறாய்ப்பாக சொல்லி எம்மை நகைக்க வைத்து விடுகிறார்.
கதைச் சுருக்கத்தில் ராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை. ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது. ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செய்யத் தூண்டுகிறது.
கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
கஜால் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
ஒரு திரில் படத்துக்கு பின்பகுதியில் பாடல்களை நுழைப்பது எவ்வளவு தொய்வை ஏற்படுத்தும் என்பதை முருகதாஸ் உணரத் தவறிவிட்டார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார். துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் fox, axn ல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 hours ஐயும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது. அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் misson imposible ஐ நினைவூட்டுவது போல உள்ளது.
சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.
மொத்தத்தில் துப்பாக்கியானது விஜயின் இன்னொரு பரிமானத்தைக் காட்டிய திரைப்படமாகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதி்சுதா
குறிப்பு - யாழின் செல்லா திரையரங்கில் முதல் காடச்சியை பார்த்தைப் பற்றியெ ஒரு பதிவு எழுதலாம் என்றாலும் கொழும்புப் பயணத்தால் தொலைத்த 2 நாள் நித்திரையுடன் சேர்த்து 3 வது நாளாக இன்றைய நாள் நித்திரையையும் தொலைத்து பார்க்க வேண்டும் என்ற வெறியில் இப்படத்தை பார்த்தாச்சு பதிவும் போட்டாச்சு இனி என்ன படுக்க வேண்டியது தான் மிச்சம்.

12 கருத்துகள்:

வியாழன், 8 நவம்பர், 2012

ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
ஒரு சில வாரத்துக்கு பின்னர் எழுத வேண்டும் என்ற ஒரு அறச் சீற்றத்தால் வலையுலகத்துக்குள் வந்து போகிறேன்.


விளம்பரம் என்பது எந்த ஒரு துறைக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதை விரும்பாதா எந்தவொரு மனிதனும் இருக்கமாட்டான். அதற்காக பார்ப்பவரை ஏமாளி என்று நினைத்து கொண்டு நடப்பவர்களை சொல்வதற்காக சில வார்த்தைகளை பிரயோகிக்க முடிவதில்லை.
வழமையாக பிரபலத்திற்காக இணையத்தளங்களே சில அபத்தமான ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும். அத்துடன் பரபரப்பிற்காக ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு தமக்கான வருகையாளர் தொகை கிடைத்ததும் அச்செய்தியை திருத்தியோ அல்லது அழித்தோ விடுவார்கள்.
ஆனால் அச்சு ஊடாகமான விகடனின் இச்செயல் ஆனாது ஒரு பொறுப்புள்ள பிரபலமான ஊடகத்தின் மேல் பல கேள்விகளை எழ வைத்துள்ளது.
1. அவ் ஊடகம் பரபரப்பிற்காகவும் விளம்பரத்துக்காகவும் இதைச் செய்திருக்கலாம். அல்லது.
2. யாரோ குதிரையோடி சித்தி பெற்ற ஊடகவியலாளரை யாழ்ப்பாண நிருபராக வைத்திருக்கலாம்.

இவ்வாக்கத்தை நான் இவ்வளவு உறுதியாக எடுத்துரைக்க காரணம் நானும் இறுதிக்காலம் வரை இறுதிப் போர்ச் சூழலில் வாழ்ந்தவன் என்பதுடன் அரவணைப்போம் என்ற ஒரு சிறு முயற்சியால் என்னால் ஆனா உதவிகளை செய்தும் வருகின்றேன் என்பதனாலுமேயாகும். மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இவ்வாக்கமானது எந்தவொரு அரசியல் அமைப்பு சார்பாகவும் எழுதப்படவில்லை. பல ஈழ பெண்களை கேள்விக் குறியாக்கிய விகடனின் கேவலமான செயலுக்காகவே எழுதப்படுகிறது.

சரி விடயத்தை ஆராய்வோம் வாருங்கள்.

1. இவ்வளவு விலாவாரியாக ஒரு விபச்சாரியை பேட்டி கண்ட ஒரு அறிவு ஜீவி அவர் தடுப்புக்கு சென்ற போது அவரது குழந்தை வயதைக் கேட்கவில்லை.
(கேட்டிருந்தால் பல விடயங்கள் இவ்விடத்திலேயே பொய்யக்கப்பட்டிருக்கும்)

2. இறுதிப் போர் வரலாற்றில் 2 குழந்தைகளின் தாய் ஆயுதம் ஏந்தினார் என்பது பற்றி இது தான் முதலாவது செய்தியாகும்.

3. அப்பெண்ணுக்கு நலன்புரி முகாமில் குழந்தை பிறக்கவில்லை. அப்படியானால் மே மாத்திற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் உச்ச போர்ச் சூழலில் அவர் நிறைமாதக் கர்ப்பிணியாக அல்லவா இருந்திருப்பார். அந் நிலையில் அவர் ஆயுதம் ஏந்திப் போராடினார் என்பதை எப்படி நம்புவது?

4. ஒரு தளபதியை இவ்வளவு குறுகிய காலத்தில் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்து விட்டது என்பதை எந்த மடையனுமே நம்பப் போவதில்லை.

5. அவர் உடலை விற்றதற்கான காரணம் அழுத பிள்ளைக்கு முலையில் பால்வரவில்லையாம். இதற்கு ஒரு சாதாரண அடிப்படை மருத்துவ அறிவே போதுமானதாகும்.
சாதாரணமாக 4 அல்லது 5 நாட்கள் பால் கொடுக்காவிடிலே தாயிற்கு அதன் பின்னர் ஒழுங்கான முலைச் சுரப்பிருக்காது. அப்படியிருக்கையில் பல மாதங்கள் இருந்து விட்டு வந்தவருக்கு எப்படி பால் வரும்.
அதுமட்டுமல்லாமல் 6 மாத்திற்கு பின்னர் ஒரு குழந்தைக்கு தாகத்தைக் கூட தாய்ப்பால் தீர்க்காது என்பது அடுத்த தகவலாக இருக்கையில் இந்த பேட்டி நாடகத்தை எந்தப் பட்டியலில் சேர்ப்பது.

6. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள யாழ் புகையிரதநிலைய விபச்சாரத் தகவலானது சென்ற வருடக் கடைசியில் ரிஷி என்பவரால் இயக்கப்பட்டு வந்த வணக்கம் இணையத்தளம் என்ற தளத்தில் படங்களுடன் வெளியான செய்தியாகும் (இவர் தான் ஈழத்தை சாக்காக வைத்து இங்கிலாந்தில் பண மோசடி செய்து தலைமறைவானவர்). அதில் குறிப்பிடப்பட்ட பெண்கள் வன்னியைச் சேர்ந்த பெண்களல்ல. உண்மையில் அப்பெண்கள் அடையாளம் காணப்பட்டு நன்னடத்தைக்குட்படுத்தப்பட்டார்கள். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அங்கு புகையிரத வீதிப் பணியாளர்கள் தங்க ஆரம்பித்து விட்டார்கள்.
இது அச்சம்பவத்தை ஆதாரத்திற்காக புகுத்தி புனையப்பட்டதாகும்.

7. அப்பெண் சிறிது காலத்தில் தன்னை விடுதலை செய்து விட்டார்கள் எனக் கூறினார். ஒரு போதும் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை அதுவும் ஒரு தளபதியானால் அவரை நீதிமன்றின் முன் தான் விடுதலை செய்திருப்பார்கள். காரணம் அவர் மீது குறைந்தது 20 குற்றங்களாவது சுமத்தப்பட்டிருக்கும்.
8. தன்னை முக்கிய மந்திரிகள் வன்முறைக்குள்ளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தில் அவர்கள் சுட்டிக்காட்ட நினைத்தது யாரை என்பது மறைமுகமாகவே பலருக்கு விளங்கியிருக்கும். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரு விடயம் என்னவென்றால் கையை கழுவி விட்டே தொட வேண்டிய அழகிகள் இருக்கையில் சவர்க்காரத்துக்கே வழியற்றிருக்கும் இவரை ஏன் ஒரு அமைச்சர் தேடி வந்து உறவு கொண்டு நோயால் உழல வேண்டும்.

மொத்தத்தில் விகடனும் அதன் நிருபரும் இப்பேட்டியில் மறைமுகமாக தமிழ்க் கூட்டமைப்பினர் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் கையாலாகதவர்கள் என்பதையும். யாழ்ப்பாணத்தில் யார் யார் விபச்சாரிகளை நாடிச் செல்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி தமது நோக்கத்தை அடைய முற்பட்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலம் இப்போதும் தடுப்பில் இருந்து வந்து சுய தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் பல பெண்களை சமூகத்தில் ஒரு தப்பான கண்ணோட்டத்திற்கு விகடன் தள்ளி விட்டது. நான் அறிய வீதி திருத்த வேலைக்கு போய் கல் அள்ளி வாழக்கையை ஓட்டுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இடியப்பம் அவித்து விற்கும் ஒரு பெண் எம் அருகிலேயே இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பல புலம்பெயர்ந்த உறவுகள் தனித்து நின்றே அவர்கள் முயற்சிக்கு உதவுகிறார்கள். ஒரு முறை சுவிற்சர்லாந்தில் அறிவிப்பாளராக இருக்கும் இணுவையூர் மயூரன் என்ற உறவு தனது குழந்தையின் முதல் பிறந்த நாளை நிறுத்தி அப்பணத்தை அப்படியே முகாமிற்கு கொடுத்தார்.
அதே போல் கனடாவில் உள்ள றஜி என்ற உறவு ஒரு இளைஞர் குழுவைத் திரட்டி வவுனிக்குளக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தொழில் முதலீட்டு உதவியை வழங்கி வருகிறார்கள். அதே போல் நான் அரவணைப்போம் என்ற பெயரில் நடாத்தி வரும் என்னால் முடிந்த சேவைக்கு பல புலம் பெயர் உறவுகள் உதவி செய்கிறார்கள். (சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாகவே) இறுதியாகக் கூட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சகோதரி ஒரு வன்னி மாணவனை அப்படியே பொறுப்பேற்று கல்வி கற்பித்து வருகிறார்.
இப்படி தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அருள் இனியன் என்ற ஒரு நிருபரை வைத்து விகடன் ஆடியுளள இந் நாடகமானது ஒரு அப்பட்டமான பொய் என்பதை எந்தவொரு ஈழ மகனும் ஊகிக்க வெகு நேரமாகாது.
ஈழப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இக் களங்கங்களை களைய இவ் வாதாரங்களை பலருக்கும் காட்டுங்கள்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

update- உறவுகளே விகடனின் இந்த நடத்தையை எப்படிச் சொல்வது. இந்தப் படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள். தயவு செய்து அவர் தொடர்பை ஏற்படுத்தித் தாருங்கள் நிச்சயம் உடனேயே ஏதாவது தொழில்வாய்ப்பளிக்க உடனே ஏற்பாடு செய்து தருகிறேன்.
இப்படி ஒரு பெண் உணமையாகவே இருந்திருந்தாலும் கூட அதை ஆராயாமல் வெளியிட்ட அந்த நிருபர் மிகவும் கண்டிக்கபபடவேண்டியவரே. காரணம் ஒரு மானமுள்ள பெண் வாழ எத்தனையோ வழியிருக்கையில் உடலை விற்றுப் பிழைக்கும் தேவை என்பது எவருக்குமே வராது. (முக்கியமாக இந்த இடத்தில் அவர் போரால் வேறு எந்த உடல் தாககத்திற்கும் ஆழாகவில்லை என்பது பற்றி குறிப்பிடப்படவே இல்லை. இதன் முலம் அவர் தேக ஆரோக்கியம் உள்ளவர் தான் என்பது புலனாகிறது)
.


7:17 AM - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

புதன், 3 அக்டோபர், 2012

ஒரு மூத்த பதிவரை இழந்து நிற்கும் இலங்கைப் பதிவுலகம்

மனித பயணங்களில் எத்தனையோ மனிதரை கடக்க வேண்டியிருக்கும். அதில் சிலருடனேயே தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். சிலரை நடுவழியில் பிரிய வேண்டி நேரிடும்.

அந்த வகையில் கடந்த 30.9.2012 அன்று இலங்கையின் ஆரம்ப கால பதிவர்களில் ஒருவரான புவனேந்திரம்-ஈழநாதன் இழந்திருக்கிறோம் என்று சொல்லும் போது மனது கனத்தாலும் அவ்வார்த்தையை கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

2004 அளவில் பதிவுலக வாழ்க்கையை சிங்கப்பூரில் ஆரம்பித்த இளங்கோ அண்ணா தனக்கு கிடைத்த நேரங்களில் தமிழுக்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் உழைத்தவர். ஆனால் தனது சொந்த பெயர்களை பல இடங்களில் பாவிக்காமல் ஈழவன், ஈழநாதன் போன்ற புனை பெயர்களில் பல படைப்புக்களை வழங்கியிருந்தார்.

யாழ் கருத்துக்களத்தில் தீவிர பங்காற்றியவர்களில் இவரும் ஒருவர். அதிலும் ஈழத்து நூல்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட www.noolaham.net  தளத்தில்  இவரது உழைப்பு மிகப் பெரியதாக இன்றும் கருதப்படுகிறது. அத்தளத்தின் வளர்ச்சிக்காக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு வெற்றியும் கண்டார்.

இவையனைத்திலும் எனக்குள் ஆயிரம் வலிகளை விதைக்க இவர் செய்த இச்செயல் காரணமாகிவிட்டது. உண்மையில் இத்தனை விடயங்களை துருவி ஆராய வெளிக்கிடும் எனக்கு அவர் செய்த செயல் வெட்கித் தலைகுனிய வைத்து விட்டது.

ஆரம்ப நாட்களில் நான் வன்னி சம்பந்தமான பதிவுகளை எழுதும் போது பல அழுத்தங்கள் கிடைத்தது. நீ பொய் பேசுகிறாய், வன்னி அவலம் என்று கதை விடுகிறாய், புலம்பெயர்ந்தவரை கேவலப்படுத்துகிறாய் என பகிரங்கமாகவும், தனிமடல்களிலும் பலர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரம் ஈழநாதன் என்ற ஒரு பதிவர் பகிரங்கமாகவே வந்து என்னை உற்சாகப்படுத்தி கருத்திட்டுச் செல்வார்.

ஏதாவது அப்படியான பதிவு போட்டால் உடனே மின்னஞ்சல் ஒன்று போடுவார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். சில தேவைகளுக்காக உங்களை அடக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் எழுதுங்கள் என்று போடுவார். அடிக்கடி எமக்குள் தொடர்பிருந்தாலும் அவரது இளங்கோ என்ற கணக்கில் இருந்து எந்த தொடர்பும் என்னுடன் இல்லாததால் இவர் தான் அவர் என சந்தேகிக்க முடியாமலே போய் விட்டது.

இத்தனைக்கும் எனக்கு அவர் உறவு வழியில் உடன் பிறவாத அண்ணனாக இருந்தாலும் ஒரு தடவை கூட ஈழநாதன் தான் இளங்கோ என்பதை அறிமுகப்படுத்தவே இல்லை.

அவருடனான சிறு வயது நெருக்கம் என்பது மிகவும் ஆழமானது. இருவருக்கும் 4 வயது இடைவெளி தான். அவரது தம்பிக்கும் எனக்கும் ஒரே வயது. மூவரும் பிள்ளையார் கதை என்றால் எமது ஆலயத்துக்கு பாடல்கள் படிக்கச் செல்வோம். இளங்கோ அண்ணா தீட்சை கேட்டவரென்பதால் அவர் பிள்ளையார் கதை படிப்பார். அவர் தம்பி இளம்பரிதியும் நானும் அப்போ தீட்சை பெறாததால் ஆலய விதிமுறைப்படி பிள்ளையார் கதையின் பின்னர் வரும் துதிப் பாடல்களைப் படிப்போம்.
எம்மை இச்செயற்பாட்டுக்கு அனுமதி தந்து மன உறுதி தந்து உற்சாகப்படுத்தி விட்டவர் இப்போதும் எமது ஆலயத்துக்கு தலைவராக அருக்கும் மகேந்திரம் ஐயா தான். அவர் தந்த உறுதிக்கும் அனுமதிக்கும் என்றும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அப்போது இளங்கோ அண்ணாவிடம் மட்டும் தான் தேவாரப் புத்தகம் இருந்தது. தான் படித்து முடிய தனது புத்தகத்தை் தான் எமக்கு படிக்கத் தருவார். அதில் வரும் ஒரு வரி எப்போதும் என் நாவோடு சண்டைபிடிக்கும். அந்த வரிக்கும் என் நாவுக்கும் சமாதான ஒப்பந்தம் போட்டவர் இளங்கோ அண்ணா தான்.

இனி நான் கூறப் போவது அவர் வீட்டாருக்கே தெரியுமோ தெரியாது. ஆனால் இந்த இடத்தில் கட்டாயம் கூறவேண்டும். இனியும் அவது வீட்டாருக்கு இதை மறைப்பதில் எதுவும் இல்லை.
இளங்கோ அண்ணா தமிழுக்காக மட்டும் உழைக்கவில்லை. ஈழத்திற்காகவும் பாடுபட்டவர். வன்னியில் சில மாணவர்களுக்கு கணனி தொடர்பான கற்கையை தான் இங்கு வரும் காலங்களில் கற்பித்துச் சென்றிருக்கிறார். 2003-2004 கொலப்பகுதியில் இங்கு வரும் போது நான் உடுப்பிட்டியில் இருந்து தான் உயர்தரம் கற்றுக் காண்டிருந்தேன். அப்போது அவருக்கு கிளிநோச்சியில் இடங்கள் தெரியாததால் என்னைத் தான் இடம் காட்டி அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி விடும்படி கேட்டுக் கொண்டார். 

இருவரும் ஒரு காலைப் பொழுதில் வெளிக்கிட்டு ஒன்றாகவே பயணித்தோம். அதன் பின்னர் இரு வீட்டாருக்கும் சந்தேகம் வராத வகையில் நான் அவரை கிளிநொச்சியில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு மல்லாவியில் இருந்த எனது அக்கா வீட்டுக்குச் சென்று விட்டேன். இது அப்போது என்னோடு ஒன்றாக கல்வி கற்கவரும் அவர் தம்பிக்குக் கூட நான் சொல்லவில்லை.

அவர் வன்னி தொடர்பாக தனிமடலில் கதைக்கும் போது கூட இவர் தான் இளங்கோ அண்ணா என்ற சந்தேகம் எனக்கு துளி அளவு கூட வராமல் போனதை இட்டு என்றும் வெட்கப்பட்டாலும். அவரது அணுகுமுறை வாழ்க்கை முறை என்பன அவர் ஒரு மாமரமாகவே வாழ்ந்து போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்நேரம் அவர் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கும் தாய், தந்தை, சகோதரர்கள், மைத்துனர்களுக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. ஆனால் அவர் இந்த மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பங்கிற்காக அவரது ஆத்மா எம் வேண்டுதல் இல்லாமலே சாந்தியடையும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
இளங்கோ அண்ணா நீங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்பதே என் ஆசை.

குறிப்பு- நான் தற்போது வெளியிடம் ஒன்றில் தங்கி நிற்பதால் அவருடனான தொடர்புகள் அவர் பதிவுகள் சம்பந்தமாக விரிவாக குறிப்பிட கால அவகாசம் போதவில்லை. விரைவில் அவரது சுவட்டை பதிவு செய்வேன்.

நன்றியுடன்
அன்புத் தம்பி
கரன் (ம.தி.சுதா)

18 கருத்துகள்:

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இளையராஜாவைக் குறி வைத்திருக்கும் கனெடிய விடுதலைப்புலிகள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சம்பவம்
இசைத்துறையில் இன மொழி பேறுபாடின்றி அனைவராலும் ரசிக்கப்படுபவர்களில் இளையராஜாவும் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட இசைஞானியை கனடிய தேசத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் TRINITY என்ற பொறியியல் நிறுவனம் கனடாவின் மிகப்பெரும் அரங்கங்களில் ஒன்றான rogers centre ல் பெரிய செலவீட்டுடனும் மிகப் பெரும் பண வசூலுடனும் நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றது. இவரோடு திரையுலகின் மிகப் பெரும் பாடகர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
மேலே இடைவெளியில் உள்ள பாடகர் யாரென்று கணிக்க முடிகிறதா? முடியாவிடில்  எனது தனிமடலுக்கு வாருங்கள்.
வழமையாக இப்படியான நிகழ்ச்சிகள் நடக்கும் போது சிலர் தாமாகவே ஈழப் போராட்டத்துக்காகவும் கொஞ்ச நிதியை ஒதுக்குவார்கள். அல்லாவிடில் குறிப்பிட்ட குழுவொன்றால் இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் 2009 ற்குப் பிறகு இந்த நிலமை தலைகீழக மாறியதுடன் பலர் சுயலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளை நடாத்த ஆரம்பித்தனர். ஆனால் இப்போதும் சிலர் இதிலிருந்து ஒரு பகுதியை ஈழ மக்களின் மேம்பாட்டிற்காக ஏதாவது அமைப்பூடாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஒரு தொகைப் பணத்தை வழங்கி வந்திருக்கின்றனர்.
இச் செயற்பாட்டினால் ஈழத்தை சாக்காக வைத்து பண வசூலிப்பில் ஈடுபட்டு வந்தவர்களின் பிழைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே ஆதிக்கம் தான் இந்நிகழ்வில் மூக்கை நுழைத்திருக்கின்றது.
ஆனால் நேற்றைய தினம் நான் முகநூலில் பகிர்ந்திருந்த மடலானது ஒரு பெரியவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அம்மடலை சில விசமிகளே மின்னஞ்சல் ஊடாக விநியோகித்து வருவது மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சிக்கெதிராக பல வழிகளில் சதி வலைகளைப் பின்னியும் வருகிறார்கள்.
அந்நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பிரமுகருடன் தொடர்பை ஏற்படுத்திய போது அறிய முடிந்த விடயங்கள் இவை தான்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி வரும் கனெடியக் குழு ஒன்று இவர்களிடம் பண வசூலிப்பிற்காக அணுகியிருக்கின்றது. ஆனால் இந்நேரம் உங்கள் அமைப்பிற்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. என உறுதியாக கூறிய பின்னர் பல வழிகளில் முயன்றும் முடியாத நிலையில் பல்வேறு வகையில் கனடிய மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இறுதியாக இவர்கள் எடுத்துள்ள ஆயுதம் என்னவென்றால் நிகழ்வு நடைபெறும் கார்த்திகை மாதமானது மாவீரர் நாள் அனுஷ்டிக்கும் மாதம் என்பதால் இம்மாதம நிகழ்த்தக் கூடாது என நேரடியான அழுத்தத்தையும் பிரச்சாரத்தையும் வழங்கி வருகிறார்கள்.
முன்னணி வரிசைக்கான ரிக்கட்டுக்கள் அனைத்தும் விற்கப்பட்டதன் பின்னர் இந்தப் பரப்புரை எடுபடுமா என்ற கேள்விகளுக்கு அந்நாட்டு ரசிகர்களே முடிவெடுக்க வேண்டும்.
பிற்சேர்க்கை
ஒரு முதியவர் எழுதிய மடல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் உணர்வையும் ஈழமக்களுக்கான ஆர்வத்தையும் வரவேற்கிறேன். இருந்தாலும் ஐயா இளையராஜாவிடம் நாம் எமக்கு உதவி செய் என்று கேட்பதில் எந்த வகையில் நியாயம். எத்தனை ஈழத்தவரே தம் மக்களை மறந்து போய் வாழ்கையில் நல்ல வசதியாக வாழ்கையில் அவரிடம் இரப்பது எமக்கான தன்மானக்கேடாகவே என்னால் உணர முடிகிறது என்பதை இச்சிறியவன் தன் உணர்வுக்கெட்டிய வகையில் கூறிக் கொள்கிறேன்.

நன்றியுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
(இப்பதிவை இணையத்தளங்கள் பயன்படுத்த விரும்பின் பயன்படுத்தலாம். ஆனால் சின்ன வேண்டுகொள் mathisutha56@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் பதிவுத் தொடுப்பைத் தெரியப்படுத்தி உதவவும்)
12:01 AM - By ம.தி.சுதா 6

6 கருத்துகள்:

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

யாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
நேரடியாக தலைப்பிற்குள்ளேயே நுழைவோமா ?
இன்று இணைய உலகில் வருமான நோக்கத்துடனும், பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கப்படும் இணையத்தளங்களிலிருந்து போலி முகநூல் கணக்கு வரை பெரும்பாலானவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்படுகின்றன என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உண்மையாகும். இது பற்றி நண்பர் ஒருவர் அண்மையில் விபரமாகவே ஒரு பதிவு போட்டிருந்தார்.
இப்படி மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதில் ஒரே ஒரு இணையத்தளம் தான் பலராலும் மிக மிக கேவலமாக நோக்கப்படுவது இணைய உலகமே அறிந்த உண்மையாகும்.
அண்மையில் இத்தளத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கழகம் ஒன்றின் நடன நிகழ்வில் இடம்பெற்ற காட்சி ஒன்றை காணொளியாகப் பிரசுரித்ததுமில்லாமல் யாழின் காலாச்சாரச் சீரழிவாக விபரணப்படுத்தியும் இருந்தார்கள். இப்படியான செய்திகள் பற்றி அந்த new Jaffna தள நிர்வாகியான சந்திரதேவன் பிரசாத்திடம் முன்னரும் கதைத்த போது அவர் சொன்னது தன் நண்பர்கள் தான் இப்படியான செய்திகளைப் போட்டார்கள் என்கிறார்.
யார் அவர்கள் என விசாரித்துக் கொண்டு போனால் பலர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தான் மிக மிக கசப்பாக இருந்தது. தாம் குடித்து விட்டு அடிக்கும் கும்மாளங்களை இது வரை எந்தவொரு பல்கலைக்கழக மாணவனாவது வெளியே சொல்லியிருப்பானா? என்ற கேள்விக்கு நான் இணையத் தேடலில் பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அவரை பற்றிய பேச்சு ஒரு புறம் இருக்கட்டும் அந்த காணோளி பற்றிய விடயத்திற்குள் வருவோம்.
அதில் ஜீன்ஸ்- ரீ சேர்ட் அணிந்த ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் மேற்கத்தைய நடனத்தை ஆடுகிறார்கள். நடனம் கூட ஆபாச அசைவுகளைக் கொண்டிருக்கவில்லை. சரி உடலை பார்த்தோமானால் அப்பெண்ணின் இடுப்பில் ஒரு நூல் கூட வெளியே தெரியவில்லை.
இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது, சரி கலாச்சாரம் சீரழிகிறது என்ற ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். சரி அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் குற்றச்சாட்டை வைக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜட்டிகளை கழைந்து எறிந்து விட்டு கோவணத்துடன் வந்து நின்று சொல்லுங்கள் அதன் பின்னர் தான் உங்களுக்கு கலாச்சாரம் பற்றிக் கதைக்க தகுதியிருக்கிறது என்று ஏற்றுக் கொள்வேன்.
இதை ஆபாசமென்றால் 1980 ம் ஆண்டு காலப்பகுதிவரை யாழ்ப்பாணத்து ஆலயங்களில் சின்னமேளம் என்று ஒரு நடனக் குழுவை பிடிப்பார்கள். அதில் சில நடனக் குழுக்கள் மூடிப் போர்த்துக் கொண்டு ஆடினாலும் சில் குழுக்களில் இடை தெரியும் படியான உடையலங்காரத்துடனே தான் ஆடுவார்கள்.
அவர்களின் இடுப்பில் காசு செருகிய இளம் பையன்கள் இப்போதும் பல் விழுந்த கிழவராக எம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது எங்கே போய் விட்டது உங்கள் கலாச்சாரமெல்லாம்.
இந்த காணொளியை ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரும் தன் முகநூலில் பகிர்ந்து அத்தளம் செய்தது சரி போலவே சுட்டிக் காட்டியிருந்தார். முதலில் எம்மவர்கள் எதைக் கலாச்சாரம் எதை நாகரீகம் என வரையறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே எம் சமூகத்தில் ஒரு கோட்பாடு இருக்கிறது. தாம் ஏதாவது மேற்கத்தைய உலகத்திற்கு மாறிக் கொண்டால் அது நாகரீகம் என்ற முத்திரையை குத்தி விட்டது மற்றையதெல்லாவற்றையும் தப்பான நோக்கத்துடனே நோக்குவார்கள்.
முதலில் படித்த சமூகமே இவற்றுக்குத் துணை போவது தான் வருந்தத்தக்க விடயம்.
தேச, மொழிப் பற்றாளர்களிடம் ஒரே ஒரு கேள்வி….. எம் ஈழத்தின் மானத்தை உலகுக்கு விற்கும் இத் தளத்தை புறக்கணிக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்…. எப்போது இந்த விடுப்புகளுக்காக ஒட்டி நின்று பார்ப்பதும், அநியாய வதந்திகளுக்கு அதை பரப்ப உதவியாக நின்று துணை போவதையும் தமிழன் கை விடுகிறானோ அன்று தான் எம் இனம் உருப்படும்….
இதையாவது ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ளுங்கள்..
குறிப்பு – இனி நான் குறிப்பிடுவதை விளம்பரமாக நீங்கள் குறிப்பிட்டாலும் எனக்கு கவலையில்லை ஆனால் இச் செய்தியை பகிர்வதன் மூலமும் எம் இழக்கப்பட்ட மானத்தை கொஞ்சமாவது மீள நிருபித்துக் கொள்ளலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

15 கருத்துகள்:

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ரசிகரை ஏமாளியாக்கும் சினிமாத்துறையின் புதிய விளம்பரங்கள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
வாருங்கள் ஆக்கத்திற்குள்
எந்த ஒரு தொழில்துறைக்கும் விளம்பரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கு பணம் செலவு செய்வதில் எந்த நிறுவனமம் பின் நிற்கக் கூடாது. ஆனால் சில நிறுவனங்கள் தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் தப்பித்துக் கொள்ளும்.
அந்தவகையில் சினிமாத்துறையில் தற்போதைய பாணி ஒன்று முளைத்திருக்கிறது. இது நடிகர் விஜய் இன் துப்பாக்கியில் தான் பரவலாக ஆரம்பித்திருந்தாலும் அதன் வழக்கின் போக்கும் அப்பிரச்சனையை ஓரளவு நம்ப வைத்திருக்கிறது. கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் முன்னர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தது முருகதாஸ் அப்பெயரை வைத்துத் தொலைக்க 7 தடவை அவ் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பின்னர் இது விஸ்வரூபம் எடுத்துச் செல்கிறது. நேற்று முன்தினம் சிம்புவின் வாலு படத் தலைப்பிற்கு சர்ச்சை உருவானது. இன்று சசிக்குமாரின் “சுந்தரபாண்டியன்” படத்தின் தலைப்பிற்கு சர்ச்சை தோன்றியுள்ளது.
இன்று முகநூலில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன் அதாவது இந்த “காதல்” என்ற தலைப்பில் முதல் முதல் படம் எடுத்தவர் எங்கே போய்விட்டார். அவர் இருந்திருந்தால் இன்று எத்தனை படங்கள் நீதிமன்றப்படிகளில் ஏறி நிற்க வேண்டி வந்திருக்கும்.
தலைப்பில் தவறான விளம்பர வழிமுறை எனக் கூறப்பட்டிருந்தாலும் இத் தவறுக்கு தலைப்புகளை பதிவிடும் சங்கமே பெரிதும் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக ஒரு கடையுடையதோ அல்லது நிறுவனத்துடையதோ பெயரை பதிவு செய்ய வேண்டுமானால் பதிவுத் திணைக்களத்தின் இணையத்திலேயே அதனை பரிசோதித்துக் கொண்டு பெயரை தெரிவு செய்யலாம்.
ஆனால் இவர்களிடம் அப்படி இணைய வசதி இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் ஒருவர் புதுப்பட அறிவிப்பை விட்டால் அதன் தலைப்பை பகிரங்க அறிவித்தலில் விட வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இத்தலைப்பிற்கு யாராவது ஆட்சேபனை தெரிவிக்காவிடில் அதன் பின்னர் கூறப்படும் எந்த மாற்றுக் கருத்தும் செல்லுபடியாகது என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே இந்தளவு தலைப்புப் பிரச்சனை என்றால் இன்னும் எத்தனை தலைப்புக்களுக்கு இப்படி பிரச்சனை வரப் போகிறது என எந்த ரசிகனாலும் விளங்கிக் கொள்ள முடியாமல் போவதுடன். வரப் போகும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ரசிகர்களைக் கொண்டே இலவச விளம்பரத்தை மேற்கொள்ள பல பட நிறுவனங்களுக்கு ஏதுவாக அமையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

வன்னியின் இயற்கை எழிலை தொகுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பக்கத்திற்கச் செல்வதற்கான தொடுப்பு கீழேமுகநூல் பக்கத்திற்கான தொடுப்பு
10:22 PM - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

சனி, 8 செப்டம்பர், 2012

போருக்கு பின்னரான வன்னியின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

வழமையாகவே அழகான காட்சி ஒன்றைக் கண்டால் அதை கமராவுக்குள் உள்ளடக்கி விட மனம் துடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அது moble camera விலிருந்து proffosional camera வரை தொடர்கிறது.

எனது இளமைக்காலங்களில் (இப்ப ஒன்றும் கிழவனில்லிங்கோ.... பாடசாலைக்காலத்தைச் சொன்னனேன்) வன்னியின் இரு எல்லைகளுக்கும் சைக்கிளில் அலைந்த காலத்தை என்றைக்குமே மறக்க முடியாது. அதற்கு காரணம் எல்லாம் எமது கிரிக்கேட் காய்ச்சல தான் என்றால் பலர் சிரிப்பீர்கள். ஆனால் அப்போது எந்த கமராவும் இல்லை. அதனால் பல காட்சிகளை இழந்தது உண்மையே.

ஆனால் இன்று அப்படியல்ல... வன்னியின் அனைத்து இயற்கை வளங்களையும் பார்க்கையில் அதன் அழகை வர்ணிப்பது என்பது மிகவும் இன்பமானதே. என்னால் முடிந்த அளவுக்கு என்னுடையதும் என் மைத்துனருடையதும் கைப்பேசியில் பெறப்பட்ட படங்களை தங்களுடன் பகிர்வதற்காகவே ஒரு முகநூல் பக்கம் ஒன்றை திறந்திருக்கிறேன். அதன் தொகுப்புக்களை காண்பதற்கு இங்கே சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.
பல இணையத்தளங்கள் அங்குள்ள படங்களை அப்படியே பகிர்ந்ததற்கு நன்றிகள்.
ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். அந்த பக்கத்தின் தொடுப்பையும் தங்கள் தளத்துடன் இணைத்து அப்பக்கத்தை அறிமுகப்படுத்திவிடுங்கள்.
பகுதி - 1 ஐ இங்கே தொகுத்துள்ளேன். படங்களின் மேல் சொடுக்குவதன் முலம் படத்தை பெரிதாக்கி பார்க்கலாம்.

முகநூல் பக்கத்திற்கான தொடுப்பு





நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
6:59 PM - By ம.தி.சுதா 8

8 கருத்துகள்:

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் இஸ்லாமிய பதிவர்கள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இப்போதெல்லாம் இணையப்பக்கம் எட்டிப் பார்க்கவே சரியாக நேரம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் மெயில்களை பார்ப்பதோடு காலம்கழிகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.
இந்தப் பதிவானது இஸ்லாமிய சகோதரர் பலருக்கு கடுப்பை ஏற்றும் ஆனால் ஒரு முறை ஆறுதலாக படித்த பின்னர் கருத்துக்களையும் உங்கள் தொடுப்புக்களையும் இடுங்கள்.
தமிழ் நாட்டு பதிவுலகத்தில் ஒரு சில அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகள் மற்றைய மதங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு அலைந்து திரிவது பலரும் அறிந்ததே.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்தது போல இந்தளவு நாளும் மதங்களைத் தாக்கி வந்தவர்கள் இன்று ஒரு இனத்தின் பண்பாட்டை கொச்சபை்படுத்தும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் பல இருந்தும் இதைக் கண்டும் காணாமல் விட்டு இருப்பது எதிர்காலத்தில் அம் மதத்தின் மீதான ஒரு பெரும் காழப்புக்கு வழிவகுக்கும் என்பது அசைக்கமுடியாத கருத்தாகும்.
பல பண்பாடுகளுக்கு பெயர் போனது எம் தமிழ் இனம். செம்மொழிகளுக்குள் அங்கீகரிக்கப்பட்டதுடன் தொல்காப்பியம் என்னும் பெரும் இலக்கணவிளக்கம் கொண்ட நூலையும் கொண்டிருக்கிறது. இவையனைத்தையும் கொண்டிருக்கும் எமக்குள் உள்ள பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் என்ற பண்பாடாகும்.
அதில் உணவு பரிமாறல் என்பது மேற்கத்தையவரே வியக்கும் ஒரு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இப்படியான இடங்களில் வாழை இலை போட்டு பரிமாறுகையில் உணவு அருந்தி முடிந்ததும் ஒரு பழக்கத்தை கையாள்வார்கள். அதாவது திருமணம், பூப்புனித நீராட்டு விழா போன்ற சந்தோசமான இடங்களில் உணவருந்தி முடிந்ததும் தம் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள். அதே போல துக்க சம்பவம் நடந்த இடங்களானால் பரிமாறியவர் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள்.
இதன் விளக்கம் என்றால் சந்தோசத்தை நாங்களும் பெற்றுக் கொள்கின்றோம் அதே போல துக்க நிகழ்வென்றால் இப்படி ஒரு சம்பவம் இனியும் உங்களுக்கு வேண்டாம் என்பதற்காக இப்படிச் செய்வோம்.
இந்தச்சம்பவத்துக்கான ஆரம்பம் சென்னைப் பதிவர் சம்பவத்துடன் ஒரு சிறிய புகைப்படத்துடன் பிலேசபி பிரபாகரன் எதற்கோ போட்டதிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்கான விளக்கத்தை மகேந்திரன் அண்ணா கொடுத்திருந்த போது தரவிறக்கப்பட்ட அந்த குழு என்னவொரு வில்லங்கம் பண்ணுகிறது தெரியுமா?
துக்க வீடுகளில் இப்படி செய்வதால் செத்தவர் உயிர் கிடைத்து விடுமா? இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை என ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அஞ்சா சிங்கம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ”அப்படியானால் நீங்கள் போகும் இடம் எல்லாம் சாந்தியும் சமாதானமும் நிலவுக” என்கிறீர்களே நீங்கள் சொன்னதும் அப்படியே நடக்குமா?” என்றதற்கு யாருமே பதிலளிக்கவில்லை.
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் மூடநம்பிக்கை என்பது வேறு, பண்பாடு என்பது வேறு. இதையே ஒரு வேற்று மொழிக்காரன் சொல்லிருந்தால் பேசாமல் விட்டு விட்டு போகலாம். இல்லாவிடில் நீங்கள் அரபையோ அல்லது உருதையோ பேசிக் கொண்டு சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்களே பேசும் ஒரு மொழியின் பண்பாட்டை கொச்சைப்படுத்தும் தகுதி உங்களுக்கு துளி கூட வழங்கப்படவில்லை. எத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் தமிழுக்காகவும் இலக்கியத்துக்காகவும் உழைக்கிறார்கள் என்பது தெரியுமா?
இன்று கூட இலங்கையில் தமிழ் மாணவர்களுக்கான அதிகளவு நூலை எழுதியவர் கூட ஒரு இஸ்லாமிய ஆசான் தான்.
அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகளே உங்கள் மதப்பரப்பல் மொக்கதை் தனத்துக்காக உங்கள் இனத்தவரின் உழைப்பையே கேள்விக்கிடமாக்காதீர்கள்.
இப்படி நீங்கள் செய்வதால் எங்கள் பண்பாடு என்றைக்குமே சீர்குலையாது. 1050 வருசமாக ஆடும் உங்களுக்கு இந்தளவு தார்ப்பரியம் என்றால் இதை விட பல மடங்கு தார்ப்பரியம் கொண்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
படங்கள் - நன்றி கூகுல்

56 கருத்துகள்:

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

விட்ட குறையும் தொட்ட குறையும் (சிறுகதை)


முற்குறிப்பு - இச்சிறுகதையானது (அளவு குறுங்கதை தான்) நேற்றைய தினம் வெளியான தினக்குரல் பத்திரிகையில் வெளியாளது. எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி)

நேரமோ 4.30 ஐ கடந்து கொண்டிருந்தது. தொடர் நாடக கடமைக்காக காலையே கடமைக்கு திரும்பிய தொலைக்காட்சி திரைப்பட நேரத்தையும் பூர்த்தி செய்து கொண்டு இரவுக்கடமைக்கு ஆயத்தமாவதற்காக ஓய்வெடுத்தக் கொண்டிருந்தது.

ஆறுமணிக்கு முதல் போசனக் கடமையை முடிக்க வேண்டுமென்ற அவசரம் சமையலறையில் நடந்து கொண்டிருந்த வாத்தியக் கச்சேரியில் தெளிவாகத் தெரிந்தாது. இருந்தாலும் நான் கொடுத்த தேநீருக்கான ஓடர் ஏற்கப்பட்டிருந்தாலும் அது வந்து சேர்வதாய் இல்லை. மீள வலியுறுத்துமளவுக்கு என்னிடம் திரணியில்லை.

பத்திரிகையின் செய்திகள் கடந்து சிறு விளம்பரங்களையும் விழுங்கி எஞ்சியிருக்கும் மரண அறிவித்தல்களையும் என் விழி தின்று கொண்டிருந்தது எப்போது பணத்துக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேனோ அந்த அன்றே என் மானம், சூடு, சுறணை எல்லாம் காவு கொடுக்கப்பட்டு விட்டது. அந்தளவு லட்சங்களுக்கு அம்மாவால் விற்கப்பட்டதற்காக என் ஆண்மையை நிருபிக்க 4 பிள்ளைகளை மட்டுமே என்னால் பெற முடிந்தது.

காலாற ஒரு எட்டு வெளியே போய் வருவோமென்றால் நிச்சயம் அவள் இந்நேரம் வாசல்படியில் இருந்து தன் மகளுக்கு பேன் பார்த்துக் கொண்டிருப்பாள். என் வீட்டில் எதுவுமே என் மூப்பில் நடப்பதில்லை என்பதற்கு முன் வீட்டில் குடியமர்த்தப்பட்டிருக்கும் அந்த வாடகை வாசிகளின் பிரவேசமும் நல்ல உதாரணமே. இவளும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவளையே தேடிப்பிடித்து முன் வீட்டில் அமர்த்தியிருக்கிறாள்.

என் இளமை நாட்கள் எவ்வளவு இனிமையானவை. நான் காதல் சிறகுவிரித்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. அவள் வறிய குடும்ப பெண்ணாக இருந்தாலும் என் வீட்டில் எதிர்ப்பில்லாது போனது எல்லைகளையே கடந்த காதலாக மாற வைத்தது. கால ஓட்டம் செய்த சதியால் எல்லாம் மாற்றப்பட்டு விட்டது. சிலவேளை பிள்ளையின் எதிர்காலத்துக்காக அம்மா அப்படி செய்திருக்கலாம். பணமிருக்குமிடத்தில் குணமிருக்குமா என்பதை சிந்திக்காமல் விட்டதை எண்ணி அவர் இறுதி நேரத்திலும் வருத்தப்பட்டுக் கொண்டார்.
'டங்' என்ற ஒலியைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன் காலடியில் முக்கால் குவளை அளவுடன் பால் தேநீர் இருந்தது.
'ஏன் தேத்தணியை தந்திருக்கலாமே, அதுவும் முட்ட தந்திருந்திருக்கலாமே' இறுதிச் சொற்களை சற்று விழுங்கியபடியே கூறி முடித்தேன்.
'பரதேசிக் குடும்பம்.... சின்னனிலேயே இதுகளை குடிச்சிருந்தால் தானே நல்லதுகளைத் தெரியும். நாளையில இருந்து கோடிக்கை இருக்கிற வாளியை கழுவி வையுங்கோ உண்டண ஆத்தித் தாறன்' படார் என கன்னத்தில் அடித்தது போல பதில் வந்தது. மறுபேச்சின்றி மௌனமாகிக் கொண்டேன்.

இன்றாவது அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனது சொல்லிக் கொண்டே இருந்தது. இந்நேரம் அவள் தலைவாரி முடித்திருப்பாள் மகளும் கிளம்பியிருப்பாள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உந்துதலில் பாதி தேநீருடனேயே குவளையை பகிஸ்கரிப்பு செய்து கொண்டு கிளம்பினேன். அந்த உந்துதலில் எறும்பால் வரப் போகும் சிக்கலை நான் உணர மறந்தது என் தப்புத் தான்.

18 வருடமாக மனதில் புழுங்கிய விடயத்தை இன்று கொட்டி விட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே மனதில் இருந்தது. அவளை காத்திருக்கச் சொல்லி விட்டு அரபு தேசம் போனதன் பிற்பாடு அம்மாவின் கடிதத்தில் அவள் யாரோடையோ போயிட்டாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. நானும் திரும்பி வந்து தேடாத இடமே இல்லை ஆனால் அவள் பற்றி எதுவுமே அறிய முடியவில்லை.
படலையை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறேன். அவள் மகள் என்னை விலத்திக் கொண்டு போகிறாள். அவளது அதே முகவெட்டு ஆனால் அவள் நடை மட்டுமே என்னை மிகவும் உறுத்தியது காரணம் என் நடை போலவே இருந்தது.
அவள் வாசல் படியில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்தாள்.
'வந்து இவ்வளவு நாளாகியும் வரவில்லையே என குறை நினைக்க வேண்டாம்'
'இல்லை பரவாயில்லை' அவள் எழுந்தவாறே கூறினாள். சற்று உடம்பு பருத்து தலையில் அங்காங்கே நரையோடியிருந்தது.
'உன்னட்டை ஒன்று சொல்லவேணும்'
'இல்லை எனக்கு வேலை இருக்கிறது' அவளை வாய்திறக்க விடாமல் சொல்லி முடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கூற ஆரம்பித்தேன்.

'ஒன்றும் சொல்ல வேண்டாம் நடந்த தப்புக்கெல்லாம் நான் தான் காரணம். நான் செய்த பிழைக்கு மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறன். அம்மா தான் நீ யாரோடையோ... என தப்பா சொன்னதால நானும் மாற வேண்டியதப் போச்சு'

'அடடா அந்தப் புண்ணியவான் நீங்கள் தானா?' எனக்கு நெஞ்சு ஒரு முறை பக்கென்றது. இவளுக்கு என்ன நடந்திருக்கும்.

'மன்னிக்க வேணும் அது வேற யாருமில்லை என்ர அக்கா தான். நீங்கள் வெளிநாட்டில வேற கலியாணம் செய்திட்டதாக உங்கட அம்மா ஒரு படம் காட்டினவா. அக்கா அப்ப 8 மாசமாயிருந்தவா. ஊரில உங்களுக்கும் அவளுக்கும் எழுத்து முடிஞ்சிட்டுது என்று தான் சொல்லியிருந்தனாங்கள். ஆனால் உங்கட அம்மாவோ ஊர் ஊராக படத்தைக் காட்டி அது பொய்யென நம்ப வச்சிட்டா. அக்காவும் குழந்தை பிறந்து இரண்டாவது மாசமே என்ர கையில கொடுத்திட்டு ஊர் பேச்சு தாங்கேலாமால் தூக்கில தொங்கீட்டா. அன்றில இருந்து தனிமரமாக நின்று நான் தான் பிள்ளையை வளர்த்து வாறன்'

இரண்டு பெண்களின் வாழ்வை சிரழித்த பழி தான் என்னை வதைக்கிறது என எண்ணிக்கொண்டேன். என் கால்களுக்கு கீழே ஏதோ நழுவுவது போல இருந்தது.

உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா
click on the image


22 கருத்துகள்:

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சில்லறை வரிகள் பாகம் - 1


இந்த வாடிய மலரிலிருந்து
மொத்த இதழ்களும் விழுந்தாலும்
காம்பாய் நீயிருக்கும் வரை
இந்த விதை உதிராது#அக்கா


உன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்
பறந்து போய்விடும்.
என் மனதல்ல உன் மானம்.


என்றோ ஒரு நாள்
குட்டி போடும் என
புத்தகத்துள்வைத்த மயிலிறகை
இவ்வளவு நாளும் தேடி அலைந்தேன்
நேற்றுக் காயப்பட்டே
அறிந்ததோ தெரியவில்லை
ஓடி வந்து மருந்திட்டுப் போகிறது


சிப்பிக்குள் இருந்து
முத்துக்கள் பிடுங்கப்படுகிறது
சிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு
உலகச் சிறப்பு விருது
முத்தோ
பணக்காரன் பெட்டியில்முடங்கிக் கிடக்கிறது




வெற்றிலை சாத்திரி சொன்னான்
நீ உயிரோடிருக்கிறாயாம்
எங்கே என்றேன்தெரியலியாம்
உன் வெற்றிலையில்என் மனது தெரியாதா ?

18 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top