Featured Articles
All Stories

சனி, 30 ஆகஸ்ட், 2014

முன்னாள் போராளிகளுக்காக எமது புதிய குறும்படம்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?



எமது ஆய்வம் குழுமத்தின் மூன்றவது படைப்பாகவும் என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஐந்தாவது குறும்படமாகவும் (மிச்சக்காசு, தொடரி துலைக்கோ போறியள்  , ரொக்கட் ராஜா  ஐ தொடர்ந்து) வெளியாகிறது ”தழும்பு” குறும்படம்.
இக்குறும்படம் ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரித்துள்ளது.. பல விடயங்களை வசனமாகவோ கதையாகவோ உட்புகுத்த முடியாமையால் காட்சிகளாகவே புகுத்தியுள்ளோம்.
நானே இக் குறும்படத்துக்கான திரைக்கதையை அமைத்து இயக்கி நடித்துள்ளேன். நெற்கொழுதாசனுடைய சிறுகதை ஒன்றின் மூலத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைக்கதையை குறும்படத்துக்கு ஏற்றாற் போல மாற்றப்பட்டிருந்தது.
படத்துக்கான ஒளிப்பதிவை பாலமுரளியும், படத்தொகுப்பை மதுரனும், இசையை தர்சனனும் வழங்கியிருக்கிறார்கள்.
படத்துக்கான ஒலியமைப்பை சன்சிகள் மேற்கொள்ள சீனா உதயகுமார், தினேஸ் ஏகாம்பரம், லக்ஸ்மன், குமணன், தீபன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
குறும்படத்துக்கான முக்கிய உதவிகளை மாதவனும், துவாரகனும் வழங்கியிருக்கிறார்கள்.

இதே குழு தான் அடுத்த கட்டமாக ”உம்மாண்டி” என்ற முழு நீளத் திரைப்படத்துக்கான நகர்வுகளிகன் முக்கிய கட்டங்களை கடந்துள்ளது. முற்று முழுதாக ஈழத்தை மையப்படுத்தியதும் ஆனால் முற் போக்குத்தனமான ஈழத்தில் இதுவரை யாரும் தொடாத ஒரு பக்கத்தை தொடக் கூடியதுமான திரைக்கதையுடன் களம் இறங்கும் இக் குழுவுக்கு உதவ விரும்புபவர்கள் உதவலாம்.

கனடாவில் ஸ்டார் 67 என்ற வெற்றிப் படம் ஒன்றைக் கொடுத்த இயக்குனர் கதி செல்வக்குமாரின் இணைத் தயாரிப்புடன் பயணத்தை ஆரம்பித்திருக்கும் இக்குழுவிற்கு படைப்பை பூரணப்படுத்தவதற்கு தங்களால் இயன்ற சிறு தொகையையாவது கடனாக பகிரலாம். நிச்சயம் அத்தொகை தாங்கள் குறிப்பிடும் சட்ட ஒழுங்குகளுடன் பெறப்பட்டு திருப்பியளிக்கப்படும் என்பதை இயக்குனராக  உறுதிப்படுத்துகிறார்.

தொடர்பிற்கு -
mathisutha56@gmail.com
0094773481379

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:09 PM - By ம.தி.சுதா 4

வியாழன், 22 மே, 2014

அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி? உதாரணம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு -  இங்கு குறிப்பிடப்படும் படமானது கதைக்காக பார்ப்பவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்காது. ஆனால் ஒரு கதையை எப்படி காட்டினால் நல்லது என்பதற்கு உதாரணமானது.

மிக நீண்ட காலமாக கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை பார்ப்பதோடில்லாமல் அப்படியே தரவிறக்கி வைத்திருக்கும் பழக்கம் எனக்குள் இருக்கிறது.
ஆனால் அந்நிகழ்ச்சி குறும்படங்களுக்கான சரியான வழிகாட்டி என்று சொல்ல முடியாவிடினும் அதில் வரும் நடுவர்களிடம் இருந்து பல விடயங்களை பொறுக்கக் கூடிய மாதிரி இருக்கும்.
கடந்த ஞாயிறன்று (18.5.2014) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படம் ஒன்றில் இருந்து பல விடயங்களை என்னால் பொறுக்க முடிந்தது. சரி வாருங்கள் “சினம்“ என்ற அக்குறும்படத்துக்குள் செல்வோம்.

படத்தின் முதல் காட்சியை கடக்கும் போதே தங்கையை கொன்றவனை அண்ணன் பழி வாங்கும் இராமாயண காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கதை என யாருமே இலகுவாகச் சொல்லி விடலாம்.
ஆனால் இயக்குனரின் திறமை எங்கே வெளிப்படுகிறது என்றால் காட்சிகள் ஆக்கப்பட்டிருந்த ஒழுங்கும் அவை காட்டப்பட்ட விதங்களுமே.
வழங்கப்பட்ட genure ஆனது action ஆக இருந்ததால் சென்ரிமென்ருக்குள் அக்சனை புகுத்த வேண்டும் என்பதை விட அக்சனுக்குள் சென்ரிமென்டை புகுத்த வேண்டிய தேவையை இயக்குனர் நல்ல திரிலோடு தொடங்கும் ஆரம்பக் காட்சியுடன் ஆரம்பிக்கிறார்.

ஆனால் இரண்டாவது அக்சன் காட்சியிலேயே தங்கை இறந்து விட்டாள் என்பதை ஒரு சுவரொட்டி மூலம் 3 அல்லது 4 செக்கனுக்குள் காட்டி விடுகிறார். படம் பார்ப்பவர் நீண்ட நேரம் கண் மூடித் திறப்பவர் என்றால் அந்த முக்கிய திருப்பு முனை இடத்தை தவற விட்டு விடுவார்.

அது மட்டுமல்லாமல் பாத்திரத் தெரிவுகள் பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த ஒரு சில கணங்களுக்கு மட்டும் வந்து போகும் தாயார் கூட நடிப்பால் மனதில் நிற்கிறார்.
ஆனால் படத்தில் இருந்த ஜதார்த்த மீறலாக நான் பார்த்த விடயம் இவ்வளவு பலசாலியாக அண்ணன் காட்டப்படுகிறான். அதே போல தங்கை சாத்தி விட்டுச் சென்ற கதவானது மிகச் சாதாரணமான கதவு. அதை ஏன் அவனால் உடைக்க முடியாமல் போனது.
இதற்கு மேல் படம் பற்றிப் பேசினால் அதன் சுவாரசியம் இழக்கப்பட்டு விடும் என்பதால் படத்தையே தருகிறேன் பாருங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


1:19 PM - By ம.தி.சுதா 5

புதன், 7 மே, 2014

48 மணித்தியால சர்வதேச குறும்படப் போட்டி எம் பட முன்னோட்டமும் போட்டதும் எடுத்ததும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முதலில் இந்த போட்டி பற்றி சிறு விளக்கம்-
இப்போட்டியானது உலகின் பல்வேறுபட்ட நகரங்களில் ஒரே விதிமுறையின் கீழ் நடாத்தப்படும் போட்டியாகும். அந் நகரங்கள் பற்றி அறிய இங்கே செல்லவும்.
முக்கிய விதிமுறைகளில் இம்முறை எமக்கு வழங்கப்பட்டதை சொல்கிறேன்.
எடுக்க வேண்டிய கதை பிரிவு - time travel (காலம் மாறிப் பயணித்தல்)
 குறும்பட பாத்திரத்தின் பெயர் - விமல்
அவரது தொழில் - கடை முதலாளி
குறும்படத்தில் வர வேண்டிய பொருள் - பாய்
கட்டாயம் பேச வேண்டிய வசனம் - “நீ என்னத்தை வேண்டுமென்றாலும் சொல்லு ஆனால் அவன் கேட்க போறதில்லை“


இத்தனையையும் வைத்து சரியாக 48 மணி நேரத்தில் வைத்து படத்துக்கான 100 % வேலைகளையும் பார்க்க வேண்டும். வெற்றி தோல்விக்கப்பால் இந்த சவாலே பெரிய படிப்பினை தான்.

அதே போல ஒருவர் தான் பங்கு பற்றினால் அவருக்கு விருது கிடைக்கும் என்றில்லை. சர்வதேச தரத்துடன் ஒப்பிட்டு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் பெற்றால் தான் விருது கிடைக்கும்.

வெள்ளி இரவு 7 மணிக்கு பெற்றுக் கொண்டதும் தலையிடி ஆரம்பமாகியது. ஏற்கனவே நான் நாவலர் குறும்படப் போட்டிக்கு அனுப்ப வைத்திருந்த “தழும்பு“ குறும்படக் குறை வேலைகள் இருந்ததால் அதை மதுரனிடமும் சன்சிகனிடமும் கொடுத்து விட்டு லோககாந்தனின் ரஜெஸ்ரோன் குழுவுடன் இணைய வேண்டிய நிலமை.
எல்லோரும் குழுவாகி மோட்டார் சைக்கிளில் சாவகச்சேரி போய் லோககாந்தனின் வீடு சேர 9 மணி கடந்து விட்ட நிலையில் நான் பயணத்தின் போதே திரைக்கதையை ஒழுங்கமைத்து விட்டேன்.
அத்தனை பேருக்கும் கதை சொல்லப்பட்டது. அணித்தலைவரான லோககாந்தனிடம் இரண்டு கடுமையான நிபந்தனை சொன்னேன். (இருவரும் இதற்கு முதல் பல குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றியிருந்ததால் இருவருக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு இருந்தது.)
1. பாத்திரங்களை இயன்றளவுக்கு குறைத்தல்
2. நடிப்புக்காக ஒரு காட்சி கூட திருப்பி எடுக்க முடியாது எடுக்கவும் கூடாது அப்படிப்பட்ட பாத்திரங்கள் வேண்டும்.

இத்தனைக்குள்ளும் திரைக்கதையை மனதுக்குள் வைத்துக் கொண்டு கதையை தெளிவாக்கி விட்டு களத் தெரிவு பற்றி உரையாட ஆரம்பித்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் களத்தெரிவில் option கள் பல இருக்கையில் ஒருமித்து தீர்மானிப்பது முடிவாகியது.
உதாரணத்துக்கு ஒரு பணக்கார களம் தேவைப்பட்டது.
1. HNB வங்கி
2. Tilgo hotel bar
3. green grash hotel இதில் இரண்டு தெரிவுகளை கையில் வைத்துக் கொண்டு சாத்தியப்படுவதை எடுக்கலாம் எனக் கிளம்பினோம்.

அதே போல நல்லூர் கோயிலில் முக்கிய காட்சி ஒன்று . ஆனால் கோயிலின் உட்பக்கம் கமரா கொண்டு செல்ல முடியாது. அதனால் கோயிலின் உட் புறத்தை ஒத்த வேறு கோயில் ஒன்றை தெரிந்தெடுத்தோம். அதற்கு மாட்டுப்பட்டது எமது குழுப் பெயருக்கு காரணமான ராஜேஸ்வரி அம்மன் தான்.
இன்னுமொரு காட்சிக்காக 30 வருடங்கள் பழமையான இடம் தேவைப்பட்டது அதற்காக நானும் லோகியும் 5 நிமிடத்துக்குள் 3 வீடுகள் புகுந்து வெளியேறினோம்.
ஆலோசனை முடிவில் லக்ஸ்மனும் நானும் நடிப்பது என முடிவானது. எழுத்து வேலையென்று செய்த உருப்படியான வேலை விஸ்ணுவைக் கொண்டு வசனங்களை எழுதி வைத்தது மட்டுமே. அதே போல கமரா பொறுப்பை மேனனும் வேந்தனும் பொறுப்பெடுத்துக் கொள்ள தர்சனுக்கு வித்தியாசமானதும் மிக முக்கியமானதுமான பொறுப்பு கையளிக்கப்பட்டது.
அதாவது நேரக்கணிப்பும் கட்டளையிடலும். யாராவது மெதுவாக வேலை செய்தாலும் உசார்ப்படுத்த வேண்டியது அவர் பொறுப்பு. அதே போல production பொறுப்புக்கள் அனைத்தும் சாருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
களம் தொடர்பான முழு விடயங்களையும் லவனின் மண்டைக்குள் புகுத்திக் கொண்டோம். அதே போல கமரா கோணங்கள் பற்றிய முழு விடயமும் லோகியின் மண்டைக்குள் புகுத்தி வைத்துக் கொண்டோம். அதே போல படப்பிடிப்புக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக சஞ்சிவன் பொறுப்பெடுத்துக் கொள்ள படப்பிடிப்புக்கள் பட பட வென 7 மணிக்கே அரம்பமாகியது.
மொத்தமாக முழுக் குறும்படத்துக்கும் 7 களங்கள் தேவைப்பட்டது. அதற்கேற்றாற் போல ஹயஸ் வாகனமும் சிறந்த ஓட்டுனராக கமரமென் வேந்தனும் கிடைத்தது வரப்பிரசாதமாகியது. படப்பிடிப்பு நேரங்களில் வாகனத்துக்கும் பொருட்களுக்கும் கோகிசன் (லோகியின் மருமகன் ஒரு காட்சியில் வருகிறார்) பொறுப்பாக நியமிக்கப்பட்டான்.

யாருக்குமே அசதி அலுப்பு இறுதி நேரம் வரை இருக்கவில்லை பட பட வென காட்சிகளை எடுக்க ஆரம்பித்தோம். இத்தனைக்கும் ஒழுங்கற்ற திரைக்கதை ஒரே களம் மாறி மாறி வரும். ஆனால் ஒரு களத்தை விட்டுக் கிளம்பினால் திரும்பி வர முடியாது. ஒரு கட்டத்தில் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கடை ஒன்றில் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கையில் மழைக் குணம் ஒன்று தென்பட மிக வேகமாக வேண்டிய நிலை அதற்கு பிறகு தான் கிறீன் கிராஸ் ஹொட்டல் மற்றும் கோட்டையில் படமாக்க வேண்டியிருந்தது.
ஒருவாறு கோட்டை போய் சேர்ந்தோம் நேரம் ஒன்றரை ஆகிவிட்டது நடு வெய்யில் பாவம் லோகி காலணியை தொலைத்ததால் துள்ளித் துள்ளித் தான் நின்றான்.
போதாக் குறைக்கு கோட்டையின் கருங்கல் சுவரில் அந்த நேரம் ஏற எப்படியிருக்கும் காட்சியின்படி லக்ஸ்மனும் நானும் செருப்பு போட முடியாது. அங்கே ஏறிப்பார்த்தால் மேல் தரை முழுக்க முள்ளு.
இறங்கி வந்து காட்சியை கமராமென்னுக்கு விளக்கினால் எல்லாரும் எங்கையோ பார்க்கிறாங்கள். அந்தளவுக்கு பசியும் தாகமும் ஒரு மாதிரி பல்லைக் கடித்துக் கொண்டு வந்த கடுப்பையும் பொத்திக் கொண்டு சிரிச்சு சிரிச்சு ஒருவாறு காட்சியை முடித்து விட்டு அவர்கள் முகத்தைப் பார்க்கும் போது பயங்கர பாவமாக இருந்தது.
எனக்கோ மூளை விறைத்துப் போனது மாதிரி ஒரு உணர்வு. ஏனென்றால் உண்மையாகவே ஸ்கிரிப்ட் கையில் இல்லை டயலக் எழுதிய ஒற்றையுடன் விஸ்ணு மட்டும் கூப்பிடும் போது ஒடி வந்து சொல்லிவிட்டுப் போவான். ஒரு காட்சி தவறவிடப்பட்டாலும் நான் செத்தான். ஒரு மாதிரி முடித்துக் கொண்டு பசியோடு இருந்த எம்மை ஜிம் ஹொட்டல் என்று ஒன்றுக்கு கூட்டிப் போனார்கள். அரைவாசிப் பேருக்கு மேல் சோற்றுக்கு தயாராக நான் லோகி போன்ற வேற்றுக்கிரகவாசிகள் கொத்து றொட்டி தான் வேண்டும் என்றோம். கடைக்காரன் போடமாட்டன் என்றதால் கொடுத்த ஓடரை அப்படியே நிறுத்திவிட்டு கழுவிய கைகளுடன் வெளியேறியதால் 13 சாப்பாடு நட்டத்தோடு போக நீலாம்பரி போனோம். அங்கே என்னடா என்றால் பரிமாறுபவர் போகும் பதையில் பெட்டி ஒன்றை அடுக்கி வைத்து விட்டு, இருந்த என்னை எழுப்பி எழுப்பி சீரழித்தார்கள். கிட்டத்தட்ட 3 பேருடன் சண்டை (நானும் என்ன செய்ய இருந்த கடுப்பை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டேன். காரணம் அவர்களால் அந்த பெட்டியை எடுக்க முடியாதாம். நான் சொன்னேன் நான் இங்கே அன்னதான மடத்தில் சாப்பிடவரவில்லை உங்கள் சட்டத்திற்கு ஆட என்றேன்)
ஒருவாறு வீடு வந்ததும் எல்லாரும் பொத்து பொத்தென விழுந்து படுத்தார்கள் காரணம் முதல் நாள் ஒரு மணித்தியாலம் தான் உறங்கினோம்.
இரவு எடிட்டிங் ஆரம்பமானதும் இசையமைப்பாளர் பிரியனுக்கு போன் பண்ணி கட்சிகளை விளக்கினேன். காலை லோகி சாம்பிள் கொப்பியை இணையத்தில் அனுப்பினான்.
படம் பல்வேறு கால கட்டத்தை பிரதிபலிப்பதால் எடிட்டிங் செய்த நேரமளவுக்கு நிறத் தெரிவுக்கு செலவளிக்க வெண்டியிருந்தது. லோகியின் கண் கழன்று விழும் போல இருந்தது ஆனால் இது பாவ இரக்கம் பார்க்கும் நேரம் இல்லை. ஏற்கனவே என் குணம் லோகிக்கு தெரியும். ( “தாத்தா“ படப்பிடிப்பில் சொந்தத் தங்கச்சிக்கு பேசிய பேச்சை அவன் இன்னும் மறக்கல )
இரண்டு தரமான கமராக்களை அனுவம் வாய்ந்த கமராமென்கள் கையாண்டதால் அவனுக்கு எடிட்டிங்கில் காட்சி விடயத்தில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
மதியமளவில் படத்தை எடுத்துக் கொண்டு டப்பிங்கிற்காக பிரியன் வீடு ஓடினோம். காலை எழுந்ததற்கு 4 மணிக்கு ஒரு மாதிரி காலைச் சாப்பாடாக லோகியின் கட்டாயத்தால் றோல் சாப்பிட்டபடி டப்பிங் நடந்தது. (டப்பிங்கில் ஒரு இடத்தில் பாருங்கள் வாயில் றோள் வைத்துக் கொண்டு பேசுவது தெரிகிறது)
அது முடிந்த கையுடன் பிரியன் பின்னணி இசைக்குள் இறங்கினார். உதவிக்கு நிர்மலன் ஆரம்பிக்க மிக வேகமாக இசை போடப்பட்டது. ஒரு தடவை கேட்டோம் எனக்கும் லோகிக்கும் லவனுக்கும் லக்ஸ்மனுக்கும் இசை திருப்தியாகப்பட்டதால் பிரியனை கை வைக்கவிடவில்லை காரணம் 6 மணியாகிவிட்டது. export ஆகா ஒரு மணித்தியாலம் பிடிக்கும் 7.30 க்குள் படம் ஒப்படைக்க வேண்டும். ஒருவாறு 6.45 க்கு கையில் படம் கிடைத்தது.

நானும் லக்ஸ்மனும் பென்ட்ரைவில் போட்டுக் கொண்டு முன்னுக்கு கிளம்பினோம். மழை ஈரமான வீதி. வேகமாக செலுத்தவும் முடியாது. கண் நித்திரைக்காக கெஞ்சுகிறது. ஒருவாறு போய் சேர்ந்து சரியாக 7.05 க்கு படத்தை ஒப்படைத்தோம். நாம் தான் முதலாவதாக ஒப்படைத்தது.

வரும் 15 ம் திகதி ராஜா திரையரங்கில் 7 குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. நடுவர்களின் தீர்ப்புக்கப்பால் பார்வையாளர்களின் வாக்கிடலும் இருப்பதால் நேர காலம் கிடைப்போர் வந்து பார்வையிட்டு தங்களுக்கு இருக்கும் 3 வக்கிடல் சந்தர்ப்பத்தில் ஒன்றாக எம் படைப்பையும் தெரியுமாறு (பிடித்திருந்தால் மட்டும்) அன்போடு வேண்டி நிற்கிறோம்.

முக்கிய குறிப்பு - இப்படியொரு சவாலான போட்டியை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் எமக்கு சந்தர்ப்பம் தந்து இப்படிப் பெரியதொரு அனுபவத்தை வகைதொகையின்றித் தந்த ஹிமாலயா கிரியேசனுக்கு அனைவர் சார்பிலும் நன்றிகள். அதுமட்டுமல்லாமல் அத்தனை சட்டதிட்டங்களையும் கைப்பேசிக் கூடாகவே உடனுக்குடன் தீர்த்து உதவிய துவாரகனுக்கும் அவரது சக ஏற்பாட்டாளருக்கும் நன்றிகள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

இத்தனை சிரமத்தில் நாம் செய்த “குறுவட்டு“ குறும்படத்தின் முன்னோட்டம் இதோ.

11:10 PM - By ம.தி.சுதா 4

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இலங்கை குறும்படத்துறையில் மொபைல் புரட்சியோடு எம் படைப்பு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற்குறிப்பு - இது ஒரு சுயபுராண ஆக்கமாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் “மிச்சக்காசு“ என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தோம் இக்குறும்படம் sumsung s3 மொபைலில் படமாக்கப்பட்டு sumsung galaxy tab ல் இசை அமைக்கப்பட்டும் இருந்தது.
இப்படைப்பில் மதுரன், துவா, மதீசன், சங்கர், சுதேசினி, சுஜிதா போன்றோர் உழைத்திருந்தார்கள்.
பல்வேறு பட்ட நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களிடம் இருந்தும் இப்படைப்புக்கு பாராட்டுக் கிடைத்தது ஒரு எதிர் பார்க்காத வெற்றி ஒன்றாகும்.
அதிலும் தென்னிந்திய இயக்குனர் ஒருவரின் பாராட்டுக்கிடைத்தது மிகப் பெரும் சந்தோசமாக இருந்தது.
குறிப்பாக உள் நாட்டிலேயே ஒரு சில ஊடகங்கள் தவிர மற்றைய எதுவும் கவனிக்கத் தவறிய படைப்பு ஒன்றை இந்திய ஊடகங்கள் கவனத்தில் எடுத்தது வியப்பை அளித்தது.
உ+ம் - சில நட்களுக்கு முன்னர் THE HINDU பத்திரிகையில் விமர்சனம் ஒன்று வெளியாகியிருந்தது.
அத்துடன் சிறந்த திரைக்கதைக்கான விருது ஒன்றையும் இக்குறும்படம் பெற்றுக் கொடுத்திருந்தது.
அதை விட எமக்கு பெருமை அளித்த விடயங்களில் ஒன்று MRTC ன் ஆவணப்பட செயலமர்விற்கு வந்திரந்த ஜேர்மனிய இயக்குனர் அலெக்சாண்டர் ரைடல் இப்படைப்பைப் பார்த்து வியந்து அளித்த கருத்துக்கள் தான். இப்படைப்பின் தரத்தை தனது நண்பர்களுக்கு காட்ட என அப்படைப்பை தன்னொடு எடுத்துச் சென்றதும் மிக முக்கிய சம்பவமாகும்.
அவர் கருத்தக்கள் இவ் ஒலித் தொடுப்பில் இருக்கிறது

 

இக்குறும்படத்துக்கு வெளிப்படையான கருத்துக்களைத் தந்ததோடில்லாமல் பகிர்ந்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

மிச்சக்காசு குறும்படத்தைக் காண


இப்படைப்பை வழங்கிய அதே குழுவினர் “ஆய்வம்“ என்ற பெயருடன் இன்று இரவு 7 மணிக்கு “தொடரி“ என்றதொரு வித்தியாசமான படைப்புடன் உங்களை சந்திக்கிறார்கள். இக்குறும்படத்தில் 10 சோடி கால்களும் ஒரு சொடி கைகளும் மட்டுமே நடித்திருந்தமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

வியாழன், 27 மார்ச், 2014

இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி?

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அண்மைய ஒரு சில நாட்களாக கிடைத்த நேரப் பொழுதை வாசிப்பிற்கும் எழத்துக்கும் செலவழித்ததால் என் வலைப்பக்கத்தை தூசு தட்டியிருக்கிறேன்.
 
வலையுலகின் ஆரம்ப காலங்களில் பதிவர்கள் பிரபலமாக்க வாக்கிடல் முறையை திரட்டிகள் அறிமுகமாக்கியிருந்தது. அக்காலத்தில் நடந்த குளறுபடிகளால் உசாரான திரட்டிகள் நுட்பமான முறையை அறிமுகப்படுத்தியது. அக்காலத்தில் தான் எமது வலையுலக அறிமுகம் ஆரம்பமானது.
ஆரம்ப காலத்தில் இதற்கான தேடலிலேயே களைத்து விழுந்து ஏமாந்திருக்கிறோம். அப்போது கண்டறிந்த விடயங்களில் ஒன்று தான் இந்த கள்ள விளையாட்டுமொன்றாகும்.
இணையத்தில் pollsnack போன்ற தளங்கள் இப்படியான வாக்கெடுப்புக்கான நிரலிகளை வைத்திருக்கின்றன. அதில் குறிப்பிட்ட சில வேட்பாள மகுடங்கள் இடப்படும். அதற்கு வாக்கிட்ட பின்னர் நீங்கள் எத்தனை தடவை அந்த தொடுப்பிற்கு சென்றாலும் வாக்கு விபரங்கள் காட்டுமே தவிர உங்களுக்கு வாக்கிட அனுமதியில்லை.
அப்படியானால் எப்படி திருட்டு வாக்கிடுவது?
வாருங்கள் சொல்கிறேன். உதாரணத்திற்கு google chrome இணைய உலாவியை எடுத்து விளக்குகிறேன்.
வாக்கிட்ட பின்னர் அதன் setting பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே advance setting என்பதை சொடுக்கினால் இப்படி வரும்
அதன் பின்னர் clear browsing data என்பதை சொடுக்கினால் இப்படி வந்திருக்கும்
அதில் the past hours என்பதை சொடுக்கி வைத்திருந்தால் எமது பழைய வரலாறுகள் கடவுச் சொற்கள் அழிக்கப்படாமல் இருக்க கடந்த மணித்தியாலத்துக்குள் நாம் அடித்த கூத்துக்கள் மட்டும் அழிக்கப்படும்.

அதன் பின்னர் மற்றைய tab ல் இருக்கும் poll (voting button) ஐ reload செய்யுங்கள் அல்லது ctrl+r கொடுங்கள் மீண்டும் வாக்களிக்கலாம்.
இதை படிக்கும் போது பெரிய விசயமாக இருக்கும். அனால் செய்ய வெளிக்கிட்டால் நிமிடத்துக்கு 10 வாக்கிற்கு குறையாமல் இடலாம்.

முக்கிய குறிப்பு - தன்னிச்சையாகவே திருட்டு வாக்கிடச் செய்யக் கூடிய தானியங்கி நிரலிகளும் இருக்கிறது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
12:29 AM - By ம.தி.சுதா 4

செவ்வாய், 25 மார்ச், 2014

Missed Call போடும் நண்பனை பழி வாங்குவது எப்படி?

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இந்த பதிவானது 2011 ம் ஆண்டு நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது.

அக்காலம் வன்னிப்பிடியின் மீட்சிக்கு பின்னர் வெளியே தலைகாட்ட ஆரம்பித்த நேரம். அந்நேரம் wall painter ஆகாவும் வலைத்தள எழுத்தாளராகவும் காலத்தை ஓட்டிய நேரகாலமாகும்.
சில உறவுக்கார பையன்களுடன் தான் வேலைக்கு போவேன். பின்னர் இரவு வந்து இணையப்பயணம் அதன் பிறகு தூக்கம். அதுவும் oil paint (enamal) அடித்தால் மறு நாள் கண் ரெண்டும் வெளியே வந்து நிற்கும்.
(இதெல்லாம் சுய புராணம் போல இருக்கும் ஆனால் இதை சொல்வதற்கான காரணம் அந் நண்பனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ததற்கு காரணம் பயில வேண்டும் அல்லவா)
அப்படி படுக்கும் நேரம், சாமம் கடந்த பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் எழும்பி பார்தால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். அதையும் விட கேவலமாக நித்திரை வெறியில் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தால் இலங்கை தனியார் வானொலி பாணியில் அன்றைய செய்திகள் அனைத்தையும் சொல்லி முடிப்பான்.
எத்தனையோ நாள் சொல்லி, திட்டி, அடித்து எது செய்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு நாள் நானும், கஜனும், சிந்துவும், சீலனும் என்ன செய்தோம் என்றால் ஒரு விடயமாக யாழ்ப்பாணம் போய்விட்டு மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம் அப்போது தான் அந்த ஐடியா உதித்தது.
படத்தை பாருங்கள் தெரியும்.
வல்லை சந்தியில் இருக்கும் பேருந்து தரிப்பு நிலையத்தில் இப்படி எழுதித் தொலைத்தோம். மாஞ்சான் என்றால் உள் ஊர் பாசையில் விபச்சாரி என அர்த்தம். அதன் பிறகு தானாகவே வந்து சொல்வான் “கண்டபடி போன் வருகுதடா ஆரோ ஒரு பெட்டையின் பேரை சொல்லி தப்பாக கேட்கிறாங்கள்” 4 பேரும் மனதுக்குள் சிரித்துக் கொள்வோம். அதன் பிறகு சொல்லவா வேண்டும் கொஞ்ச நாள் தொலைபேசியை அணைத்து வைத்துக் கொண்டான்.


சரி இப்போது எங்கள் விடுப்புக்காரர் மனதுகளில் அந்த விடுகாலி யார் என்ற கேள்வி வருமே. என் திரைக்குழுவில் இருக்கும் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகன் ஒருவன் தான் அது. கரன் என்பது அவன் பெயர். எனக்கு பிரான்சில் விருது பெற்றுக் கொடுத்த “சுவர் தேடும் சித்திரம்“ பாடலிலும், படத்தொகுப்பில் இருக்கும் “தாத்தா“ குறும்படத்திலும் முக்கிய பாத்திரமாக நடித்திருக்கிறான்.



நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
9:30 PM - By ம.தி.சுதா 5

வெள்ளி, 14 மார்ச், 2014

மலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை

முல்லைத்தீவின் கடற்கரையில் முதுகை மணலில் உலர்த்திக் கொண்டிருந்த சாந்தனுக்கு ஒரு வாரமாகியும், கடலில் தான் கண்ட வெளிச்ச வீழ்ச்சியை மறக்க முடியவில்லை . எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். முல்லைத்தீவுக் கடலில் ஏதோ ஒன்று வெளிச்சத்தோடு வந்து விழுந்தது என்கிறார்கள். ஆனால் யாரும் நம்ப தயாரின்மையால் அலை போல கதையும் கரையோடு ஓய்ந்து போனது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் மலேசியாவின் MH370 காணாமல் போனது என செய்திகள் வேறு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கையில் இந்த கதை அமைதியாய் அமுங்கி போக ஆரம்பித்திருக்கிறது.
தலைமாட்டில் யாரோ நடக்கும் அசுமாத்தம் கேட்டதால் சற்று எம்பி பார்த்தவன் முகத்தில் சந்தேக ரேகைகள், ஆங்கிலப்படங்களில் பார்த்த பிச்சைக்காரர் போல அரை குறை தாடியுடன்  ஒரு வெள்ளையன் சோர்ந்து போய் அமர்கிறான்.
அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வினாவினால் அவன் சொன்ன பதில் “MH370“ ல் தவறியவனாம் ஒரு வாரமாக கடலில் கிடைத்த மரக்கட்டையை பிடித்து கரையேறியதாக” சொன்னான்.
அருகில் இருந்த வீட்டில் போய் அவனுக்கு தாகசாந்தி செய்து ஆசுவாசப்படுத்திய போது பேச ஆரம்பித்தான்.
“தான் ஒரு விஞ்ஞான பேராசிரியராம். தமது விமானம் கருந்துளைக்குள் தான் போனது ” என அரை குறை தொனியில் உளறிக் கொண்டிருந்தான்.
அதை விட குளம்பிப் போயிருந்த சாந்தன் இப்போது 119 ற்கு அழைப்பெடுத்து தானும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

குறிப்பு - time related theory தெரிந்தவர்கள் இதில் எத்தனை வகை உள்ளடக்கப்பட்டிருக்கிறது என சின்ன விளக்கம் தந்தால் நானும் ஒரு முடிவுக்கு வரலாம்.
11:43 PM - By ம.தி.சுதா 0

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

நான் கண்ட காதல் கன்னியின் நாதியற்ற கோலம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற்குறிப்பு- இப்பதிவானது ஒரு உண்மை சம்பவ பகிர்வாகும். பெண்ணியவாதிகள் யாரும் படிக்க வேண்டாம்.

   
2010 ம் ஆண்டு காலப்பகுதி. மல்லாவி மத்திய கல்லூரியில் காற்சட்டைப் பொடியளாக விளையாட்டுத் தான் எதிர்கால இலக்குப் போல வாழ்ந்த நேரமது. வம்பு தும்பிலிருந்து அனைத்திலும் என்னுடன் இணைந்திருந்த பெயர் சிறீகஜனுடையது (அவன் இப்போது தேறி பொலிசில் ஒரு நல்ல இடத்தில் வேலை செய்கிறான்) அப்போது அந்தச் சந்திப்பு நடந்தது.
இருவருக்கும் நேர காலம் இல்லாமல் தண்ணீர் விடாய்க்கும். ஒரு முறை தண்ணீர் அருந்த போய் காவல் நின்ற போது தண்ணி குடிக்கும் கிணற்றடியில் நின்ற ஒரு உயர்தர அக்கா சக உயர்தர அக்காவுக்கு ஒரு கொப்பியை திறந்து காட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
“இதுக்குள் 16 கடிதம் இருக்கடி இந்தளவும் தந்தது எவ்வளவு லுக்கான பொடியள் தெரியுமா”
“நீ பொய் சொல்லுறாய் போடி”
“சத்தியமாடி”
சொல்லி முடிச்சிட்டு திரும்பி பார்த்தால் நாங்கள் நிற்கிறோம். அக்கா எங்களை கணக்கிலேயே எடுக்கவில்லை. ஆனால் அடுத்த நாளே அவா சின்ன பொடியள் என்று நினைச்ச இந்த வப்புகளது பலனை அடைய வெளிக்கிட்டார்.

அக்காவுக்கு நாங்கள் வச்ச பட்டப் பெயர் “பதினாறு”
காணும் நேரம் எல்லாம் “அக்கா 17 வந்திட்டுதா” இது தான் எம் கேள்வி. அக்காவும் சிரித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்.
சில நேரங்களில் பெட்டையள் கூட்டமாக வரும் போது நாம் பேசாமல் நின்றாலும் எம்மை பார்த்து சின்ன புன்னகை எறிவார்.

ஆனால் இப்ப தான் புரியுது அவர் அதை தனது சாதனையாக நினைத்திருக்கிறார் என்றும். அவர் எம் வாயை தனது தூபமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
     உண்மையில் அந்தப் 16 ல் எத்தனை உண்மையானதோ என சந்தேகமாயிருக்கிறது. அதே போல அதில் எத்தனை அக்காவே பல்லைக் காட்டி மறுட்டி விட்டு சாதனைப்பட்டியலை வளர்த்துக் கொண்டதோ தெரியவில்லை. ஆனால் அவரை சென்ற வருட இறுதியில் எதேச்சையாகக் காண்டேன்.
ஆள் அடையாளமே தெரியவில்லை பழைய அழகில் 10 வீதம் கூட இப்ப இல்லை. 3 பிள்ளைகள் என்று சொன்னார். கணவர் இஞ்சினியர், டாக்குத்தர், வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் நினைத்திடாதிங்கோ.. கடை ஒன்றில் வேலை செய்கிறாராம். கருகிப் போய் கிடந்த அவர் உதடு அவரது மீத வரலாறு சொல்லியது.
அதற்கு மேல் அவரை பார்க்க அந்தரமாக இருந்தது நான் நைசாக நழுவி விட்டேன்.
நிச்சயம் அவர் தன் பழைய வாழ்க்கையை நினைத்து வருந்துகிறார் என்பது அவர் பார்வை சொல்லியது. எனக்கும் அவரை பார்க்க பரிதாபமாகவே இருந்தது. மற்றவரின் திட்டல் பலிக்குமோ என்ற கேள்வி அப்போதும் என் மனதில் சந்தேகமாகவே எழுந்து விழுந்தது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
7:38 PM - By ம.தி.சுதா 3

வியாழன், 16 ஜனவரி, 2014

என்னை பாதித்த அண்ணன் தங்கை பாசம் சொல்லும் ஈரானியப் படம் Children of Heaven (1997)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நம்மளுக்கு சும்மாவே இந்த அண்ணன் தங்கச்சி கதை என்றால் இன்னொரு கதிரையையும் சேர்த்து உயரத்தில் இருந்து பார்ப்போம். ஆனால் நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் ஒரு அண்ணன் தங்கை சார்ந்த கதை என்பது ஒரு டெம்ளெட் கதையாக தான் இருக்கும்.
-தங்கையை சிரமப்பட்டு வளர்க்கும் அண்ணன்
-கொடுமைக்கார மச்சான்
-ஒரு வயது மட்டம் வந்த பின்னர் நடக்கும் கதை தான் படம் முழுக்க நகரும்
 
இதை விட உணர்வால் அழுத்தம் பெறுவது என்பது மிகக் குறைவு. ஆனால் இந்த ஈரானியப்படம் (Children of Heaven (1997)) ஒரே ஒரு சின்னக் கதையை வைத்துக் கொண்டு அத்தனை உணர்வையும் அள்ளிக் கொட்டி செதுக்கியிருக்கிறார்கள்.
தங்கையின் காலணியை தைத்து எடுத்து வரும் போது ஒரு அண்ணன் தொலைத்து விடுகிறான். வீட்டிற்கும் சொல்ல முடியாத நிலையில் அண்ணன் அழும் இடத்தில் காட்சி தொட்டு நிற்கிறது.
ஆனால் அண்ணனின் நிலமை புரிந்த தங்கையின் முகபாவம் ச்சே என்ன ஒரு இடமது......
ஒரு காலணியை இருவரும் மாற்றி மாற்றி பாடசாலை செல்கிறார்கள். ஒரு தடவை தங்கை காலணியைகால்வாய்க்குள் விழுத்தி விட்டு படும் அவலம் அளது பொறுப்புணர்வை தெளிவாகக் காட்டுகிறது.
அதே போல தனது காலணி இருக்கும் வீட்டை கண்டு பிடிக்க பயந்து பயந்து தயங்கி பின் போனவள் பின்னர் தமையனை அவ்வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது போகும் மிடுக்கு அவள் அண்ணன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பாசத்தோடு உணர்த்தும் காட்சி...
கடைசியில் அண்ணன் மீன்கள் கடிப்பது கூட உணராமல் புண் காலை தண்ணீருக்குள் விட்டிருக்கும் காட்சி அவன் எதையெல்லாம் மறந்திருக்கிறான் என்பதை உணர்த்தினாலும் படத்தின் இயக்குனர் பார்வையாளரை கவலையோடில்லாமல் சந்தோசத்தோடு தான் இருக்கையை விட்டு எழும்பிப் போக வைக்கிறார்.
அண்ணன்களை புரியாத தங்கைகளும் தங்கைகளை புரியாத அண்ணன்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமிது

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

2:41 PM - By ம.தி.சுதா 3

வெள்ளி, 27 டிசம்பர், 2013

வெற்றி வானொலி குறும்படப் போட்டியும் விளக்கம் தேடும் சந்தேகங்களும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இப்பதிவானது என்னால் விளக்கம் பெற முடியாமல் போன ஒரு குறும்படப் போட்டி தொடர்பாக வரையப்படும் பகிரங்க மடலாகும். அவ்வானொலிக்கு தொடர்பு எடுத்தாலும் அறிவிப்பாளருடனேயே பேச முடிகிறது. பாவம் அவரது கடமை நேரத்தில் என் போன்ற சந்தேகப் பிசாசுகளுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும். தயவு செய்து அதன் வேறு பிரதிநிதிகள் யாராவது இருப்பின் எனக்கு விளக்கம் தந்து உதவவும்.

வாருங்கள் விடயத்துக்கு
வெற்றி வானொலி world tamil shortfilm festival என்ற போட்டிக்காக தை மாதம் 1 ம் திகதி வரைக்கும் குறும்படங்களை கோரி இருக்கின்றது. அதன் விதிமுறைகளிலும் அதன் விண்ணப்ப படிவங்களிலும் எனக்கு பல இடத்தில் தெளிவில்லை அதையே முன் வைக்கிறேன்.

1. ஃஃஃஃஃகுறுந்திரைப் படத்தில் பங்கு பற்றும் நடிகர்கள் மற்றும் அதன் குழு சார்ந்த இயக்குனர்,இசையமைப்பாளர்,படப்பிடிப்பாளர், ஏதோ ஒரு குறுந்திரைப் படத்தினூடாகவே போட்டியில் பங்குபற்றமுடியும்.மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஒருவராவது அந்த குழு சார்ந்து பங்கு பற்றும் போது அது அவதானிக்கப்படுமிடத்து அந்த நபர் அல்லது குழு சார்ந்து வந்த முதல் குறுந்திரைப் படமே போட்டிக்குள் எடுத்துக்கொள்ளப்படும்.ஃஃஃஃஃ

உதாரணத்திற்கு கடந்த 4 மாதத்திற்குள்  மட்டும் நான் 9 குறும்படங்களில் நடித்திருக்கிறேன் (துலைக்கோ போறியள், மிச்சக்காசு, தொடரி, போலி, தாத்தா, இளவரசர்கள், விட்டில்கள், உறவு தேடும் உயிர், (ஒன்றின் பெயரை சொல்ல அவ் இயக்குனரின் அனுமதியில்லை). இதில் 5 குறும்படங்கள் நான் இயக்கியவை. ஆகவே இவ்விதியால் எம்முடைய 8 படங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது. ஆகவே இவ் விதி தொடர்பான விளக்கம் தேவைப்படுகிறது.

2. Send your short film through Dropbox or Postal Submission இப்படி விதிமுறையில் கொடுக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பப்படிவத்தில்
Postal Submission: Please send a DVD copy of your film with a completed entry form before the competition deadline. Entries should be sent to
இப்படித் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதற்கான சீடியை அனுப்பவே 3000 ஆயிரத்துக்கு மேல் செலவழியும்.
Dropbox ல் பரிமாறுகையில் தாங்கள் பெறுவதில் எந்தச் சிக்கலுமே இருக்காது அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு வீண் செலவு வைக்கிறீர்கள்???

3. இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படங்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணம் கோரப்பட்டுள்ளது. இத் தொகை செலுத்துவதற்கு எத்தனை படங்களுக்கு சாத்தியமானதோ தெரியவில்லை. காரணம் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள் மூலம் படமெடுப்பவர்களுக்குச் சாத்தியப்பட்டாலும் சொந்தக் காசில் நொந்து நொந்து படமெடுப்பவர்களுக்கு அனுப்புவது சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு கைப்பேசியில் எடுத்த (அதற்காக தரக்குறைவானதல்ல 1080p தரம் கொண்ட படங்கள்) எனது “மிச்சக்காசு“ (600/=), “தொடரி“ (400/=) போன்ற படங்கள் மிகச் சொற்பப் பணத்திலேயே எடுக்கப்பட்டவை. எனக்கு அந்தப் பெரிய தொகை கட்டிப் படம் அனுப்ப எப்படி மனம் வரும்.

4. இந்தியப் போட்டியாளர்களுக்கு அந்நாட்டுப்பணத்தில் 3000 ரூபாய் கட்டுப்பணம். யூரியுப்பில் ஒரு நாளைக்கே அங்கிருந்து பல பெரிய பட்ஜெட் படங்கள் உள்நுழைந்து கொள்கிறது. அதனுடன் எம் பாரம்பரியத்தை, பிராந்திய மொழிவழக்கை, உள்நாட்டு இசையை பின்பற்றும் படங்கள் போட்டி போட முடியுமா? என்ற ஐயம் எனக்கிருக்கிறது (இது தனிப்பட்ட கருத்து)

ஆகவே இப்போட்டியில் எல்லா வகையில் பார்த்தாலும் இலங்கையருக்கு சந்தர்ப்பம் குறைவாக இருப்பது போலவே இருக்கிறது. யாராவது வெளிநாட்டுக்காரர் காசு கொடுத்து எடுத்த இலங்கைப்படங்கள் மட்டுமே இந்தப் போட்டிக்குள் எட்டிப் பார்க்கும். என்னைப் போல கைப்பேசியில் படம் எடுத்து வைத்திருக்கும் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உச்சம் போலவே எனக்கு இப் போட்டி இருக்கிறது.

இவை தான் என் சந்தேகங்கள். அந் நிறுவனம் சார்ந்த யாராவது இந்த சந்தேகங்களை எனக்கு தீர்தருளி உங்கள் போட்டிக் காட்டுப்பாட்டை தளர்த்தி என் போன்ற சக கலைஞர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

(உதாரணத்திற்காக எனது கைப்பேசிக் குறும்படமான “மிச்சக்காசு“ குறும்படத்தின் ட்ரெயிலரையும் “துலைக்கோ போறியள்“ படத்தையும் இணைக்கிறேன்)

1:02 AM - By ம.தி.சுதா 2

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top