வணக்கம் உறவுகளே நலம்
எப்படி?
எப்படி?
அண்மையில் நடந்து முடிந்த யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவானது பலதரப்பட்ட திரைப்படங்களை எம்மவர்க்கு அறிமுகப்படுத்தியதுமல்லாமல் தணிக்கைக் குழுவால் திரையரங்கத் திரையிடலுக்கு தடைசெய்யப்பட்ட படங்களை பார்க்க அனுமதியும் வழங்கியிருந்தது.
அந்த வகையில் எமக்கு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்த திரைப்படங்களில் ஒன்று தான் மனிதநேயச் செயற்பாட்டளாரான இயக்குனர் ”செரின் சேவியர்” ன் ”முற்றுப்புள்ளியா” என்ற திரைப்படமாகும்.
பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர் கொண்ட இந்த திரைப்படத்தை நான் ஒரு விமர்சகனாகவோ திறணாய்வாளனாகவோ எடுத்துரைக்க வரவில்லை. வன்னிப் போரில் வாழ்ந்த ஒரு குடிமகனாகவும் ஒரு படைப்பாளியாகவுமே அணுகுகின்றேன்.
அரசியல் ரீதியாக பெற்ற முன்னுரைக்கு மேலாக செரின் சேவியர் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மனிதநேய ஆர்வலராகத் தான் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் வசனங்களும் அவரது பெயரைக் காப்பாற்றியே இருக்கிறது என்பதை ஆணித்தரமாக ஏற்றுக் கொள்வேன்.
பொதுவாகமே எம்மவர்கள் எங்களுக்கென்று தனித் தனி அரசியலுக்கான ஒரு கண்ணாடியை வைத்துக் கொள்வோம் அப்படி போடப்பட்ட கண்ணாடியால் பார்க்கப்பட்ட ”செரின் சேவியர்” பலதரப்பட்ட கருத்துக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒரு படைப்பாளிக்கு தனது குழந்தையை சிலாகித்தால் எவ்வளவு கோபம் வருமோ அதே அளவுக்கு தன் படைப்பபை சிலாகித்தாலும் பொறுக்க முடியாது. ஆனால் இந்த இடத்தில் இதை சர்வசாதாரணமாக அவர் எதிர் கொண்டமை அவரது ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தது.
படத்தில் எம் பிரச்சனைகள் பச்சைப்படி அப்பட்டமாக வெளிக் கொணரப்பட்டிருந்தது. ஆனால் இப்படி காட்டப்பட்டதற்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்ட அரசியலாகவே பார்க்க முடிகிறது.
1. எம்மால் பேசவோ/ எழுதவோ/ எடுக்கவோ முடியாத பரப்பு ஒன்றை இயக்குனரால் தொட முடிந்திருக்கிறது 2. செரின் தன்னை ஒரு மனிதநேய செயற்பாட்டாளராக காட்டவே இப்படம் எடுத்தார்.
3. இப்படியான படம் எடுக்கப்பட்டால் கருத்து சுதந்திரம் இங்குள்ளது எனக் காட்ட முடியும்.
4. 50 இலட்சத்துக்கு மேல் செலவளிக்க வேண்டியிருந்திருக்கும் அப்படியானால் அந்த பணத்தை வைத்து தயாரித்தது யார்?
இப்படி பல்வேறு விமர்சனங்கள் இப்படைப்பு மேல் முன்வைக்கப்பட்டாலும் பல படைப்பாளிகள் இப்படைப்பை கருத்தியலுக்கப்பால் எதிர் கொண்ட விதம் வேறு. அந்த இடத்தில் தான் திரைப்படம் பலரை திருப்திப்படுத்தாமல் விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டது. மேற் சொன்னவை எல்லாம் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களாகப்பட்டாலும் ஒரு படைப்புக்கு கட்டாயம் கிடைக்கும் விமர்சனம் தான் அவை ஆனால் ஒரு 10 வருடத்தில் செரின் சேவியர் தனது உண்மையான நிலைப்பட்டை வலுப்படுத்திய பின்னர் சொன்னவர்களே வெட்கித் தலை குனியலாம்.
ஆனால் படைப்பாக இப்படம் சில சிக்கல்களை எதிர் நோக்கியது அது என்ன?
ஆரம்பத்தில் சாதாரணமாக போடி போக்ககத் தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தில் திரையரங்கு போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. காரணம் வெளிநாட்டில் வசித்த ஒருவரால் இப்படி ஒரு படத்தைக் காட்டுவதென்றால் எவ்வளவு தேடல்கள் செய்திருக்க வேண்டுமே அந்தளவுக்கு செய்திருந்தார் (சில ஜதார்த்த மீறல்கள் தவிர). சாதாரணமாக ஒரு ஆவணப்படம் எடுக்கும் எனக்கே அனுமதி உள்ள விடயங்களைத் தேடவே எவ்வளவு காலம், நேரம் எடுக்கும் என்பது தெரியும்.
உதாரணமாக தமிழீழ அடையாள அட்டை, தமிழ்த்தாய் நாட்காட்டி, அதில் தமிழீழ வைப்பக விளம்பரம், அண்ணையின் வசனம், போராளிகளுக்குப் பின்னுக்கிருக்கும் படங்கள் இப்படி பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் நல்லூருக்குள் அப்படி புலிப்படம் முதுகில் போட்ட ஒருவர் எப்படி என்பது எனக்கிருக்கும் கேள்வியே?
ஆனால் படமாக போன எமக்கு இவை அதிசயத்தைக் கொடுத்தாலும் ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையாக பெரும் ஏமாற்றம் காத்திருந்தது ஏனென்றால் ஆரம்பம் முதல் திரைப்படம் என விளம்பரப்படுத்தியிருந்தாலும் அங்கே முற்று முழுதாக ஆவணப்படம் ஒன்றின் தோற்றப்பட்டில் ஒரு கதையை மட்டும் கொண்டு அத்தனை மணித்தியாலம் படமாக எதிர் பார்த்துப் போனவனுக்கு திருப்தி ஏற்பட்டிருக்காது அது தான் பலரது கருத்து வெளிப்பாடகும் ஒரு ஆவணத்திரைப்படம் என முதலே விளம்பரமிட்டிருந்தால் நிச்சயம் இந்தக் கருத்து நடத்திருக்காது. இத்தனைக்குமப்பால் ”செரின் சேவியர்” என்ற அறிமுக இயக்குனர் முதல் படம் இப்படியாவது செய்திருக்கிறார் என்பதை எந்த ஒரு படைப்பாளியாலும் வியப்பாகவே தான் பார்க்க முடியும். காரணம் படத்தில் அந்தளவுக்கந்தளவு Research செய்யப்பட்ட உழைப்புக்கள் கொட்டப்பட்டிருந்தது.
இதை விட படத்தின் மொழி அவ்வளவாக எம்மோடு ஒட்டாமல் போனதும் ஒரு காரணம் இலங்கையில் டப்பிங் செய்ய முனைந்த போது 6 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னமே சில ஊடகவியலாளர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
படம் முழுக்க எனக்கு உறுத்தலாக இருந்த விடயம் அந்த தளபதியின் ஜீன்ஸ் தான் (என் தனிப்பட்ட கருத்து). அப்படிப் பிட்டத்துக்கு கீழ் வரும் ஜீன்சை எந்த ஒரு போராளி அணிந்தும் நான் கண்டதில்லை மிக மிக உறுத்தலாக இருந்ததுடன் அவர் சீருடை கழட்டி விட்டு அணியும் மினுக்கிய சேட் அவர் கதை, இந்திய பாத்திரங்களை நினைவுட்டம் மிடுக்கற்ற அந்த மீசை என முற்று முழுதாக அந்த பாத்திரம் என்னில் இருந்து அந்நியமானாலும் நடிகையான அன்னபூரணி போராளியாகவும் சரி முகாம் வாழ் பெண்ணாகவும் சரி என்னை திருப்திப்படுத்தியிருந்தார்.
தேடலுக்கு போன இடத்தில் பல தவறான தகவல்களும் செரினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு திருமணவீட்டிலும் பெண்ணுக்கு golden மணிக்கூடு கட்டப்படுகிறது. அவதானித்த வரை casio மணிக்கூடு தான் கட்டப்படுவதுண்டு.
அத்துடன் போராளியின் கை நூலை வைத்து பிரிவு அடையாளம் காணும் முறை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இருவர் கையிலும் தகடு இல்லை. கையில் தகட்டுக்காக மட்டுமே நூல் கட்டியிருக்க முடியும் என்பது தான் விதிமுறை மீறினால் கடுமையான punisment எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
இப்படி சில மீறல்கள் வன்னித் தள வாசிகளை படத்துக்கு வெளியே அடிக்கடி இட்டுச் சென்றாலும் ஒரு இடத்தில் வன்னிவாசிகளை மட்டுமல்லாமல் போரியல் வாழ்வோடு ஒட்டியிருந்த அனைவரையும் கட்டிப் போட்டார். அந்த இடம் எமது துயிலுமில்லப்பாடலாகும் (பாடல் இசை தான் வந்தது) எத்தனை தரம் அதைக் கேட்டாலும் எத்தனை பேருக்கு மண் போட்டோமோ அத்தனை பேரது முகங்களும் வரிசையாக வந்து போகும் சக்தி அந்தப்பாடலுக்குண்டு.
மற்றைய விடயம் தாலியாகும்...... எனக்கு மட்டுமல்லாமல் இன்னுமொரு சக படைப்பாளிக்கும் குழப்பமளித்த இடமாகும் காரணம் தாலியை அவர் கப்பல் ஏறும் போது கழட்டிக் கொடுத்தார் (பகல்) என்றே கதை நகர்ந்தது. ஆனால் முடிவில் இந்த இரவு நேர கூடாரத்தில் கொடுப்பதாகவும் கதை நகர்கிறது.
ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன் பல விடயங்களில் இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும் காரணம் விடுதலைப்புலிகள் எடுத்த படங்களைத் தவிர அவர்களை அதிகபட்சம் சரியாகக் காட்டி வெளித்தளத்தில் இருந்து ஒருவரால் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தானிருக்கும் (எல்லாளன் இந்திய ஈழ இயக்குனர்களின் கூட்டுத் தயாரிப்பாகும், ஆணிவேர் ஜான் இயக்கினாலும் முற்றுமுழுதாக போராளிகளின் பங்கே இருந்தது)
படத்தில் தளபதிகளின் வாழக்கை சமாதானகாலத்தில் மாறியமையும் தோல்விக்கு காரணம் எனப்பட்டிருந்தது. இயக்குனர் எப்படியான வாழ்க்கை என தெளிவாக காட்டவில்லையே எனக் கூட நினைத்தேன். ஆடம்பர வாழ்க்கை தொற்றிக் கொண்டமை காரணம் என்றால் நானும் ஏற்றுக் கொள்ளத் தயார். (அதற்கு உதாரணமானவர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அப்படியானார்கள்) ஆனால் திருமணம் தொடர்பாக முற்று முழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழனின் முற்று முழுதான போர் வாழ்வியலில் திருமணம் தடை செய்யப்பட்டிருப்பதாக வரலாறிருக்கவில்லை.
ஆனால் ஆடம்பர வாழக்கை தொற்றிக் கொண்டதும் ஒரு வகை காரணமே தவிர தோல்விக்கு அது தான் காரணம் என்பது தவறு.
கருத்தியல் காட்சிகளுக்குப்பால் ஒரு திரைப்படமாக இப்படத்தை எதிர் கொள்ள முடியாமல் போய்விட்டது. சொல்ல வந்த கதை தொங்கிப் போய் நிற்க சென்னைவாசிகள், செய்ற்பாட்டாளர்கள் என இடையில் வந்தாலும் கதைக்கு தேவையானது என வைத்தாலும் தேவையற்ற அவர்களது இழுவையான காட்சிகள் படத்தின் மையக் கதைக்கு வெளியே அதிக நேரம் தரிக்க வைத்து படம் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற கணிப்பீட்டை எமக்கு கொடுத்து விடுவதை இயக்குனரால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் ஈழத்திரைத்துறையில் ”முற்றுப்புள்ளியா?” என்ற திரைப்படமானது ஒரு பெரும் முயற்சி அதுவும் ஒரு பெண் இயக்குனரின் முனைப்பு என்பது எமது வளர்ச்சிப்படியின் ஒரு பெரிய அத்திவாரமே. இத்தனை கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து ஒரு தரமான துணிவான திரைப்படத்தை ”செரின் சேவியர்” எமக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமாகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
2 கருத்துகள்:
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/
'ஒரு படைப்பாளிக்குத் தன் குழந்தையைச் சிலாகித்தால்
எவ்வளவு கோபம் வருமோ... அதே அளவுக்குத் தன் படைப்பைச்
சிலாகித்தாலும் பொறுக்க முடியாது'.....என எழுதியுள்ளீர்கள்.
நானறிந்தவரை சிலாகித்தல் என்பதற்கு, மெச்சுதல், பாராடுதல்
எனும் பொருளே உண்டு. கண்டனம் செய்தல் என்ற கருத்து வர
இடமில்லை.
கருத்துரையிடுக