புதன், 7 மே, 2014

48 மணித்தியால சர்வதேச குறும்படப் போட்டி எம் பட முன்னோட்டமும் போட்டதும் எடுத்ததும்

11:10 PM - By ம.தி.சுதா 4

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முதலில் இந்த போட்டி பற்றி சிறு விளக்கம்-
இப்போட்டியானது உலகின் பல்வேறுபட்ட நகரங்களில் ஒரே விதிமுறையின் கீழ் நடாத்தப்படும் போட்டியாகும். அந் நகரங்கள் பற்றி அறிய இங்கே செல்லவும்.
முக்கிய விதிமுறைகளில் இம்முறை எமக்கு வழங்கப்பட்டதை சொல்கிறேன்.
எடுக்க வேண்டிய கதை பிரிவு - time travel (காலம் மாறிப் பயணித்தல்)
 குறும்பட பாத்திரத்தின் பெயர் - விமல்
அவரது தொழில் - கடை முதலாளி
குறும்படத்தில் வர வேண்டிய பொருள் - பாய்
கட்டாயம் பேச வேண்டிய வசனம் - “நீ என்னத்தை வேண்டுமென்றாலும் சொல்லு ஆனால் அவன் கேட்க போறதில்லை“


இத்தனையையும் வைத்து சரியாக 48 மணி நேரத்தில் வைத்து படத்துக்கான 100 % வேலைகளையும் பார்க்க வேண்டும். வெற்றி தோல்விக்கப்பால் இந்த சவாலே பெரிய படிப்பினை தான்.

அதே போல ஒருவர் தான் பங்கு பற்றினால் அவருக்கு விருது கிடைக்கும் என்றில்லை. சர்வதேச தரத்துடன் ஒப்பிட்டு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் பெற்றால் தான் விருது கிடைக்கும்.

வெள்ளி இரவு 7 மணிக்கு பெற்றுக் கொண்டதும் தலையிடி ஆரம்பமாகியது. ஏற்கனவே நான் நாவலர் குறும்படப் போட்டிக்கு அனுப்ப வைத்திருந்த “தழும்பு“ குறும்படக் குறை வேலைகள் இருந்ததால் அதை மதுரனிடமும் சன்சிகனிடமும் கொடுத்து விட்டு லோககாந்தனின் ரஜெஸ்ரோன் குழுவுடன் இணைய வேண்டிய நிலமை.
எல்லோரும் குழுவாகி மோட்டார் சைக்கிளில் சாவகச்சேரி போய் லோககாந்தனின் வீடு சேர 9 மணி கடந்து விட்ட நிலையில் நான் பயணத்தின் போதே திரைக்கதையை ஒழுங்கமைத்து விட்டேன்.
அத்தனை பேருக்கும் கதை சொல்லப்பட்டது. அணித்தலைவரான லோககாந்தனிடம் இரண்டு கடுமையான நிபந்தனை சொன்னேன். (இருவரும் இதற்கு முதல் பல குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றியிருந்ததால் இருவருக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு இருந்தது.)
1. பாத்திரங்களை இயன்றளவுக்கு குறைத்தல்
2. நடிப்புக்காக ஒரு காட்சி கூட திருப்பி எடுக்க முடியாது எடுக்கவும் கூடாது அப்படிப்பட்ட பாத்திரங்கள் வேண்டும்.

இத்தனைக்குள்ளும் திரைக்கதையை மனதுக்குள் வைத்துக் கொண்டு கதையை தெளிவாக்கி விட்டு களத் தெரிவு பற்றி உரையாட ஆரம்பித்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் களத்தெரிவில் option கள் பல இருக்கையில் ஒருமித்து தீர்மானிப்பது முடிவாகியது.
உதாரணத்துக்கு ஒரு பணக்கார களம் தேவைப்பட்டது.
1. HNB வங்கி
2. Tilgo hotel bar
3. green grash hotel இதில் இரண்டு தெரிவுகளை கையில் வைத்துக் கொண்டு சாத்தியப்படுவதை எடுக்கலாம் எனக் கிளம்பினோம்.

அதே போல நல்லூர் கோயிலில் முக்கிய காட்சி ஒன்று . ஆனால் கோயிலின் உட்பக்கம் கமரா கொண்டு செல்ல முடியாது. அதனால் கோயிலின் உட் புறத்தை ஒத்த வேறு கோயில் ஒன்றை தெரிந்தெடுத்தோம். அதற்கு மாட்டுப்பட்டது எமது குழுப் பெயருக்கு காரணமான ராஜேஸ்வரி அம்மன் தான்.
இன்னுமொரு காட்சிக்காக 30 வருடங்கள் பழமையான இடம் தேவைப்பட்டது அதற்காக நானும் லோகியும் 5 நிமிடத்துக்குள் 3 வீடுகள் புகுந்து வெளியேறினோம்.
ஆலோசனை முடிவில் லக்ஸ்மனும் நானும் நடிப்பது என முடிவானது. எழுத்து வேலையென்று செய்த உருப்படியான வேலை விஸ்ணுவைக் கொண்டு வசனங்களை எழுதி வைத்தது மட்டுமே. அதே போல கமரா பொறுப்பை மேனனும் வேந்தனும் பொறுப்பெடுத்துக் கொள்ள தர்சனுக்கு வித்தியாசமானதும் மிக முக்கியமானதுமான பொறுப்பு கையளிக்கப்பட்டது.
அதாவது நேரக்கணிப்பும் கட்டளையிடலும். யாராவது மெதுவாக வேலை செய்தாலும் உசார்ப்படுத்த வேண்டியது அவர் பொறுப்பு. அதே போல production பொறுப்புக்கள் அனைத்தும் சாருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
களம் தொடர்பான முழு விடயங்களையும் லவனின் மண்டைக்குள் புகுத்திக் கொண்டோம். அதே போல கமரா கோணங்கள் பற்றிய முழு விடயமும் லோகியின் மண்டைக்குள் புகுத்தி வைத்துக் கொண்டோம். அதே போல படப்பிடிப்புக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக சஞ்சிவன் பொறுப்பெடுத்துக் கொள்ள படப்பிடிப்புக்கள் பட பட வென 7 மணிக்கே அரம்பமாகியது.
மொத்தமாக முழுக் குறும்படத்துக்கும் 7 களங்கள் தேவைப்பட்டது. அதற்கேற்றாற் போல ஹயஸ் வாகனமும் சிறந்த ஓட்டுனராக கமரமென் வேந்தனும் கிடைத்தது வரப்பிரசாதமாகியது. படப்பிடிப்பு நேரங்களில் வாகனத்துக்கும் பொருட்களுக்கும் கோகிசன் (லோகியின் மருமகன் ஒரு காட்சியில் வருகிறார்) பொறுப்பாக நியமிக்கப்பட்டான்.

யாருக்குமே அசதி அலுப்பு இறுதி நேரம் வரை இருக்கவில்லை பட பட வென காட்சிகளை எடுக்க ஆரம்பித்தோம். இத்தனைக்கும் ஒழுங்கற்ற திரைக்கதை ஒரே களம் மாறி மாறி வரும். ஆனால் ஒரு களத்தை விட்டுக் கிளம்பினால் திரும்பி வர முடியாது. ஒரு கட்டத்தில் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கடை ஒன்றில் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கையில் மழைக் குணம் ஒன்று தென்பட மிக வேகமாக வேண்டிய நிலை அதற்கு பிறகு தான் கிறீன் கிராஸ் ஹொட்டல் மற்றும் கோட்டையில் படமாக்க வேண்டியிருந்தது.
ஒருவாறு கோட்டை போய் சேர்ந்தோம் நேரம் ஒன்றரை ஆகிவிட்டது நடு வெய்யில் பாவம் லோகி காலணியை தொலைத்ததால் துள்ளித் துள்ளித் தான் நின்றான்.
போதாக் குறைக்கு கோட்டையின் கருங்கல் சுவரில் அந்த நேரம் ஏற எப்படியிருக்கும் காட்சியின்படி லக்ஸ்மனும் நானும் செருப்பு போட முடியாது. அங்கே ஏறிப்பார்த்தால் மேல் தரை முழுக்க முள்ளு.
இறங்கி வந்து காட்சியை கமராமென்னுக்கு விளக்கினால் எல்லாரும் எங்கையோ பார்க்கிறாங்கள். அந்தளவுக்கு பசியும் தாகமும் ஒரு மாதிரி பல்லைக் கடித்துக் கொண்டு வந்த கடுப்பையும் பொத்திக் கொண்டு சிரிச்சு சிரிச்சு ஒருவாறு காட்சியை முடித்து விட்டு அவர்கள் முகத்தைப் பார்க்கும் போது பயங்கர பாவமாக இருந்தது.
எனக்கோ மூளை விறைத்துப் போனது மாதிரி ஒரு உணர்வு. ஏனென்றால் உண்மையாகவே ஸ்கிரிப்ட் கையில் இல்லை டயலக் எழுதிய ஒற்றையுடன் விஸ்ணு மட்டும் கூப்பிடும் போது ஒடி வந்து சொல்லிவிட்டுப் போவான். ஒரு காட்சி தவறவிடப்பட்டாலும் நான் செத்தான். ஒரு மாதிரி முடித்துக் கொண்டு பசியோடு இருந்த எம்மை ஜிம் ஹொட்டல் என்று ஒன்றுக்கு கூட்டிப் போனார்கள். அரைவாசிப் பேருக்கு மேல் சோற்றுக்கு தயாராக நான் லோகி போன்ற வேற்றுக்கிரகவாசிகள் கொத்து றொட்டி தான் வேண்டும் என்றோம். கடைக்காரன் போடமாட்டன் என்றதால் கொடுத்த ஓடரை அப்படியே நிறுத்திவிட்டு கழுவிய கைகளுடன் வெளியேறியதால் 13 சாப்பாடு நட்டத்தோடு போக நீலாம்பரி போனோம். அங்கே என்னடா என்றால் பரிமாறுபவர் போகும் பதையில் பெட்டி ஒன்றை அடுக்கி வைத்து விட்டு, இருந்த என்னை எழுப்பி எழுப்பி சீரழித்தார்கள். கிட்டத்தட்ட 3 பேருடன் சண்டை (நானும் என்ன செய்ய இருந்த கடுப்பை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டேன். காரணம் அவர்களால் அந்த பெட்டியை எடுக்க முடியாதாம். நான் சொன்னேன் நான் இங்கே அன்னதான மடத்தில் சாப்பிடவரவில்லை உங்கள் சட்டத்திற்கு ஆட என்றேன்)
ஒருவாறு வீடு வந்ததும் எல்லாரும் பொத்து பொத்தென விழுந்து படுத்தார்கள் காரணம் முதல் நாள் ஒரு மணித்தியாலம் தான் உறங்கினோம்.
இரவு எடிட்டிங் ஆரம்பமானதும் இசையமைப்பாளர் பிரியனுக்கு போன் பண்ணி கட்சிகளை விளக்கினேன். காலை லோகி சாம்பிள் கொப்பியை இணையத்தில் அனுப்பினான்.
படம் பல்வேறு கால கட்டத்தை பிரதிபலிப்பதால் எடிட்டிங் செய்த நேரமளவுக்கு நிறத் தெரிவுக்கு செலவளிக்க வெண்டியிருந்தது. லோகியின் கண் கழன்று விழும் போல இருந்தது ஆனால் இது பாவ இரக்கம் பார்க்கும் நேரம் இல்லை. ஏற்கனவே என் குணம் லோகிக்கு தெரியும். ( “தாத்தா“ படப்பிடிப்பில் சொந்தத் தங்கச்சிக்கு பேசிய பேச்சை அவன் இன்னும் மறக்கல )
இரண்டு தரமான கமராக்களை அனுவம் வாய்ந்த கமராமென்கள் கையாண்டதால் அவனுக்கு எடிட்டிங்கில் காட்சி விடயத்தில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
மதியமளவில் படத்தை எடுத்துக் கொண்டு டப்பிங்கிற்காக பிரியன் வீடு ஓடினோம். காலை எழுந்ததற்கு 4 மணிக்கு ஒரு மாதிரி காலைச் சாப்பாடாக லோகியின் கட்டாயத்தால் றோல் சாப்பிட்டபடி டப்பிங் நடந்தது. (டப்பிங்கில் ஒரு இடத்தில் பாருங்கள் வாயில் றோள் வைத்துக் கொண்டு பேசுவது தெரிகிறது)
அது முடிந்த கையுடன் பிரியன் பின்னணி இசைக்குள் இறங்கினார். உதவிக்கு நிர்மலன் ஆரம்பிக்க மிக வேகமாக இசை போடப்பட்டது. ஒரு தடவை கேட்டோம் எனக்கும் லோகிக்கும் லவனுக்கும் லக்ஸ்மனுக்கும் இசை திருப்தியாகப்பட்டதால் பிரியனை கை வைக்கவிடவில்லை காரணம் 6 மணியாகிவிட்டது. export ஆகா ஒரு மணித்தியாலம் பிடிக்கும் 7.30 க்குள் படம் ஒப்படைக்க வேண்டும். ஒருவாறு 6.45 க்கு கையில் படம் கிடைத்தது.

நானும் லக்ஸ்மனும் பென்ட்ரைவில் போட்டுக் கொண்டு முன்னுக்கு கிளம்பினோம். மழை ஈரமான வீதி. வேகமாக செலுத்தவும் முடியாது. கண் நித்திரைக்காக கெஞ்சுகிறது. ஒருவாறு போய் சேர்ந்து சரியாக 7.05 க்கு படத்தை ஒப்படைத்தோம். நாம் தான் முதலாவதாக ஒப்படைத்தது.

வரும் 15 ம் திகதி ராஜா திரையரங்கில் 7 குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. நடுவர்களின் தீர்ப்புக்கப்பால் பார்வையாளர்களின் வாக்கிடலும் இருப்பதால் நேர காலம் கிடைப்போர் வந்து பார்வையிட்டு தங்களுக்கு இருக்கும் 3 வக்கிடல் சந்தர்ப்பத்தில் ஒன்றாக எம் படைப்பையும் தெரியுமாறு (பிடித்திருந்தால் மட்டும்) அன்போடு வேண்டி நிற்கிறோம்.

முக்கிய குறிப்பு - இப்படியொரு சவாலான போட்டியை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் எமக்கு சந்தர்ப்பம் தந்து இப்படிப் பெரியதொரு அனுபவத்தை வகைதொகையின்றித் தந்த ஹிமாலயா கிரியேசனுக்கு அனைவர் சார்பிலும் நன்றிகள். அதுமட்டுமல்லாமல் அத்தனை சட்டதிட்டங்களையும் கைப்பேசிக் கூடாகவே உடனுக்குடன் தீர்த்து உதவிய துவாரகனுக்கும் அவரது சக ஏற்பாட்டாளருக்கும் நன்றிகள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

இத்தனை சிரமத்தில் நாம் செய்த “குறுவட்டு“ குறும்படத்தின் முன்னோட்டம் இதோ.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம் மதி சுதா!நலமா?///அருமை.உ(எ)ங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள்.இணையத்தில் குறும் படத்தை எதிர் பார்த்து..............

ம.தி.சுதா சொன்னது…

@Subramaniam Yogarasa

நன்றி ஐயா போட்டித் தீர்புகளின் பின்னர் வெளியாகும் நிற்சயம் தங்களுக்கும் பகிர்கிறேன்

தனிமரம் சொன்னது…

வாழ்த்துக்கள் சுதா குறும்படம் சமூகவ்லைத்தள்த்தில் வரும் என்ற நம்பிக்கையுடன் படம் வெற்றிகானவும், விருதுபெறவும் என் வாழ்த்துக்கள்§

இலங்கைத்தமிழர்களின் இன்னல் கன்டு மிகவும் துயரப்பட்டு இருந்த நான் , எம் உறவுகளின் இம்முயற்சியினை கன்டு சந்தோசம் கொள்கிறேன். பரவாயில்லையே நன்றாக இருக்கின்றது. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மீன்டும் 75ம் வருடத்திய இலங்கைத்தமிழர் வாழ்க்கை மீன்டெழ கடவுளை வேன்டுகிறேன்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top