முற்குறிப்பு - ஊடகங்கள் பிரசுரிக்க மறுக்கும் ஆக்கங்களில் இதுவும் ஒன்று. அதனால் என் சுதந்திர வலைத்தளத்தில் இட்டுக் கொள்கிறேன்..
பல்வேறுபட்ட தொடர்பாடலின் விளைவின் ஒரு பகுதியாக உள் நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் இடையிலான பொதிப்பரிமாற்றமும் அதிகரித்து வரும் இந்நிலையில் அதற்குள் கை மாறும் ஏமாற்று வித்தைகளும் அதிகரிக்கின்றது.
உதாரணத்துக்கு கனடாவில் இருந்து நீங்கள் ஒரு பொதி அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அங்கிருந்து பரிமாறும் முகவர் முழுத்தொகையும் என்னிடமே செலுத்தினால் போதும் என்று ஒரு பெரும் தொகைப்பணத்தைப் பெற்றுக் கொள்வார். அவரிலிருந்து கொழும்பிலிருக்கும் ஒரு முகவருக்கு மாற்றப்படும். அம்முகவருக்கான பணத்தை கனடாக்காரரே செலுத்திக் கொள்வார். ஆனால் இந்த கொழும்பு முகவர் தான் நேரடியாக பெறுநருக்கு அளிப்பார் அல்லது தான் கிளை முகவருக்கு ஒரு தொகைப்பணத்தைக் கொடுத்து பொதியை விநியோகிப்பார்.
இவை தான் ஒரு பொதிப்பரிமாற்றத்தில் நடக்கும் படிமுறைகளாகும். இதில் எங்கெங்கு ஏமாற்றபடுகிறது என்றால் கனடாவில் இருந்து பொதியை பெறும் பிரதான முகவரோ அல்லது கிளை முகவரோ இங்கிருந்து பொதியை பெறுபவரிடம் தம் கை வரிசையைக் காட்டிவிடுவார்கள்.
இது எப்படி நடைபெறுகின்றது என்பதை பார்ப்போமானால் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பொதிக்கு இங்கு பெறுவதற்கான பண பெறுதி ஒன்றை முன்வைப்பார்கள். ”அடடா இந்தளவு பெறுமதியான பொருளுக்கு இது ஒரு தொகையா” என நினைத்து செலுத்தி வாங்கிச் செல்பவரே அதிகம்.
பெறுநர் கொஞ்சம் சிக்கனப் பேர்வழி என்றால் அடுத்த கேள்வி கேட்பார். ”இதற்கு இவ்வளவு பணமா? ஏன் இப்படி சொல்கிறீர்கள்” என்றால் அதற்கு அளிக்கப்படும் பதில் ”பரவாயில்லை நீங்கள் எடுக்காவிட்டால் திருப்பி அனுப்பி விடுவோம்” என்பார்கள். அந்தப் பயத்தில் பொதியை பெற்றுச் செல்பவர்களே மிக மிக அதிகமாகும்.
ஆனால் அங்கு பொதியிட்டவர் தான் முழுப்பணத்தையும் செலுத்திவிட்டதாக பெறுநருக்கு பற்றுச்சீட்டுடன் அறிவுறுத்தியிருந்தால் இங்கிருக்கும் முகவர் வழங்கும் அறிவுறுத்தல் ”அது சரி அங்கு கட்டித் தான் இருக்கிறார்கள் ஆனால் இங்கு சுங்க வரி விதிக்கப்பட்டிருக்கிறது” என்பார். விசயம் தெரியாதவர் என்றால் இந்த இடத்தில் ஏமார வேண்டியது தான். ஆனால் கொஞ்சம் விசயம் தெரிந்தவர் சுங்கவரிப்பற்றுச்சீட்டைக் கேட்டால் அதற்கும் ஒரு பதில் தயாராக இருக்கும்.
”கப்பலில் வந்த பொதி என்பதால் மொத்த பொதிகளுக்கும் சேர்த்துத் தான் பற்றுச்சீட்டு உள்ளது” என்று மேசை அறையில் கிடக்கும் ஒரு பற்றுச்சீட்டைத் தூக்கிப் போடுவார்கள். இந்த இடத்திலும் நீங்கள் ஏமாரவில்லையானால் உங்களிடம் எழும் கேள்வியில் தான் நீங்கள் தப்பிப்பதற்கான வழி புலப்படும்.
அதாவது உங்களது பொதி இலங்கையில் சுங்க வரிக்குட்படாதவையாக இருந்தால் நீங்கள் அதைக் கூறுகையில் இங்கிருந்து சில தொலைபேசி அழைப்புக்கள் மாறும் அதன் படி அங்கிருந்து திரும்பும் பதிலில் ”ஓம் சரி அண்ணை உங்களது பணம் அங்கேயே செலுத்திவிட்டார்கள். இப்பற்றுச்சீட்டு உங்கள் பெயரில் மாறி வந்து விட்டது” என்ற சின்ன இற(ர)க்கத்துடன் உங்கள் பொதி கையளிக்கப்படும்.
இச்செயற்பாடனது ஒட்டு மொத்த பரிமாற்ற முகவர்களாலும் இடம்பெறாவிட்டாலும் சிலரால் ஈவிரக்கமின்றி பகல் கொள்ளையாக பெருமளவான பணம் அறவிடப்படுகிறது.
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனில் தான் குற்றம் என்ற மொழியை நாம் உண்மையாக்கமல் இருப்பதற்காவது முயற்சிப்போமே.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
குறிப்பு - இந்த தகவல் பலரைச் சென்றடைய வேண்டும் என்று கருதினால் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக