Featured Articles
All Stories

வெள்ளி, 22 மே, 2015

ஐபிஎல் போட்டிகளும் நான் வாங்கிக் கட்டும் சாத்திரங்களும்..

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
ipl இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் ஒவ்வொரு ஐபில் க்கும் நான் ஏதாவது சொல்லப் போய் வங்கிக் கட்டுவதுண்டு இந்த முறை இன்னும் வாங்கிக் கட்டாத காரணத்தால் இந்த பதிவு....
கடந்த இரண்டு வருடமாக நான் வாங்கிக் கட்டியவையில் முக்கியமானது சென்னை அணியாகும். அதற்கு முதல் வருடம் சென்னையின் மஞ்சள் மற்றும் வெற்றிக்கு அதிக சாத்தியமான நிறம் மஞ்சள் என்றும் பலரை கவர்ந்திழுக்க கூடிய நிறம் மஞ்சள் அது தான் சென்ன ஆதரவுக்கு காரணம் என கூற வரிசை கட்டி வந்து அடி விழுந்தது.
(மஞ்சளின் ஆதிக்கம் மற்றும் சிறப்பு பற்றி ஒக்டோபசை வைத்து நான் எழுதிய பழைய பதிவு ஒன்று தொடுப்பு இதோ - ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்... )
அதே போல போன வருடம் கூறியிருந்தேன். அதிக வருவாயை ஐபிஎல் லில் அள்ளிக் கொடுக்கும் அணி சென்னையணியாகும் அதனடிப்படையில் தான் அரையிறுதிவரையுமாவது உள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னைக்கான அதிகளவான* போட்டிகளைப் பாருங்கள் இரவுப் போட்டியாகவே இருக்கும் பகல் என்றால் அதிகளவில்* சனி ஞாயிறு தினங்களிலே தான் வருகிறது.
இவை எல்லாம் என் கணிப்பு எனக்கு அது சரியாகவே படுகிறது.. படும்....

அதே போலத் தான் இம்முறை ஒன்றை உளற விரும்புகிறேன்.
சென்னை என்பது கிழட்டு அணியாகி விட்டது. காரணம் டோனி என்ற சிங்கம் கிரிக்கேட்டின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. இனி இந்திய அணியின் தலைமைக்கு வரப் போபவர் கோலி தான் அதே போல அதிகளவு பெண்கள் பட்டாளம் ஒன்றை பின்னுக்கு வைத்திருப்பவர்.
இவையே போதும் ஐபிஎல் பணம் கொழிக்க. அதனால் ஏற்கனவே இந்திய அணியின் ரசிகர்களாலேயே வெறுக்கும் அளவுக்கு நடத்தையுள்ள விராட் கோலியை நாயகனாக்க வேண்டிய தேவை கட்டுப்பாட்டு சபைக்கு இருக்கிறது. ஏனென்றால் வரும் வருடம் கூட்டம் திரண்டு வருவதென்றால் அது கோலிக்காகத் தான் இருக்கும்.
அதனடிப்படையில் கோலியை கிண்ணம் வெல்ல வைக்க வேண்டிய தேவை ஒன்று உருவாகிறது. ஆனால் கோலி கிண்ணம் வென்றாலும் பெங்களுருக்கு இருக்கும் பார்வையாளர் பட்டாளத்தை விட சென்னைக்கான பட்டாளமே மிக மிக அதிகம்.
இதனடிப்படையில் கோலி இம்முறை தவற விட்டாலும் பெரும்பாலும் டோனிக்கு பின்னர் சென்னைக்குள் இழுத்து வரப்படப் போகும் ஒரு ராஜாவாக கோலி இருப்பார் என்பது என் நம்பிக்கையாகும்.
ஏனென்றால் கட்டுப்பாட்டுசாபைக்கு தேவைப்படுவது பணம் பணம் பணம்...

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:06 AM - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

வியாழன், 7 மே, 2015

குறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
முற்குறிப்பு - இப்பதிவை விறைத்த முகத்துடன் சீரியஸ் ஆக படிப்பவர்களது மன உளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல...


ஒரு இயக்குனர் தான் அமைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் முழுக்கவனமாகவே இருப்பான். அண்மையில் திரைவெளியில் உலாவிய ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை வைத்து பலவிதமான கருத்துக்கள் உலாவித் திரிந்தன.
எவ்வகையில் பார்ததாலும் அவ் இயக்குனரின் சிந்தனை வளத்தை பாராட்டியே பலர் கருத்திட்டிருந்தார்கள். ஆனால் எல்லோரும் பார்த்த பக்கம் காதல்மயமானதாகவும் ஆபாச வகையறாக்களுமானதாகவே இருந்தது. குறிப்பாக இவையை வைத்தே படத்துக்கு நிச்சயம் 'A' சான்றிதழ் கிடைக்க வைத்து விடுவார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன் அது ஒரு குறியீட்டுக் காட்சியாகும். அதாவது இவ்விளக்கத்தின்படி பார்த்தால் அது ஒரு காதல் படம் என்பதற்கப்பால் அது ஒரு science fiction திரைப்படமாக ஏற்றுக் கொள்வீர்கள்.
எதற்கும் இன்னொரு தடவை மேலே இட்டிருக்கும் படத்தை பார்த்து விட்டு கீழ் உள்ளதைப் படிக்கவும்...

1. இளநீர் என்பது உலகத்திலேயே கிருமிகள் அற்ற ஒரு திரவகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அதாவது வன்னியில் வேலை செய்த பல மருத்துவர்களுக்கு இவை பரிசோதனை ரீதியாகத் தெரியும் காரணம் சேலைன் பற்றாக் குறையான நேரங்களில் அதற்கு பதிலாக இளநீர் ஏற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.

2. ஒரு மனிதனின் வாயிற்குள் (இது பெண்களுக்கு மட்டுமென்றல்ல) உலக சனத்தொகைக்கு இணையான மக்கள் தொகை கொண்ட கிருமிகள் அடங்கிக் கிடக்கிறது என மருத்துவம் சொல்கின்றது.

இதில் என்ன குறியீடு ?

இளநீர் தான் இந்த உலகமாகும் அந்தளவு தூய்மையான இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் பொருளை நேரடியாகப் பருகாமல் ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குள் தான் இன்பம் இருக்கிறது எனக் கருதி அந்த தூய்மையான இன்பங்களை பெண்களுக்கூடாகப் பருக நினைத்து அழிந்து போகிறான். இதைத் தான் நேரடியாகச் சொல்லாமல் அவ் இயக்குனர் குறியீடாகச் சொல்கிறார். ஏன் யாரும் இப்ப சிந்திக்கிறீர்கள் இல்லை.

(இப்போது எத்தனை பேர் என்னை நோக்கி செருப்பெடுத்திருப்பீர்கள் என்று தெரியும் அதனால் அடியேன் தொலைகிறேன். விட்டு விடுங்கள் ஹர ஹர மகா தேவ கீ)

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

என்னுடைய பக்கத்துடன் LIKE செய்து இணைந்திருப்பதனூடு பதிவுகளை தொடர்ந்து பெறுங்கள்
https://www.facebook.com/actormathisutha/
12:07 PM - By ம.தி.சுதா 7

7 கருத்துகள்:

செவ்வாய், 5 மே, 2015

என் விருது வென்ற குறும்படம் ”தழும்பு“ ன் திரைக்கதையின் முழு வடிவமும் மூலக்கதையும்

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

ஒரு படைப்பானது படைப்பாளியின் பிரதிபலிப்பாக இருந்து அவனுக்கு மட்டும் திருப்தியளிப்பது போதுமானது என்ற பார்வைகளும் ஒரு பக்கம் இருந்தாலும் விருதுகளும் அவனுக்கான ஒரு அங்கீகாரம் தான்.

விருது விபரம்
என்னுடைய இயக்கத்தில் சென்ற வருடம் உருவாக்கப்பட்ட தழும்பு குறும்படம் ஆனது கனடாவில் இடம்பெற்ற சர்வதேச விருது விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருது ஒன்றைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன்னர் இக்குறும்படம் ஆனது பிரான்சின் நாவலர் குறும்பட விழாவில் தெரிவாகியதுடன், அதன் பின்னர் நோர்வே சர்வதேச திரை விழாவிலும் தெரிவாகியிருந்தது. அதன் பின்னர் கனடாவின் சர்வதேச தமிழத் திரைப்பட விழாவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததுடன் இவ்விருதை பெற்றுத் தந்திருந்தது.

கதை தெரிவு நடந்த விதம்..
இதன் மூலக்கதையை எழுதியவர் தற்போது பிரான்சின் ஆட்காட்டி இதழின் எழுத்தாளர் குழாமில் இருக்கும் முக்கிய எழுத்தாளரில் ஒருவரான நெற்கொழுதாசன் என்பவராகும். சருகுகள் என்ற அச்சிறுகதையை கண்டவுடனேயே ஏதோ எங்கள் சொந்த வாழ்க்கையுடன் ஒத்துப் போனதாலும் அவ் எழுத்தாளர் என் ஊரைச் சார்ந்த சிறு வயது அண்ணர் என்பதாலும் திரைக்கதையை முடித்து விட்டு தான் ஒரு முறைக்காக அவருக்கு தெரிவித்தேன்.... அதன் பின்னர் ஒரு நாள் திடீரென பார்த்த போது எமது மூத்த திரைத்துறையாளரான ஞானதாஸ் ஐயா அவர்களும் இக்கதையை பகிர்ந்து அருமையான கதை என எழுதியிருந்தார்.
மூலக்கதையை கீழே இணைக்கிறேன்.

குறும்படம் இது தான்..
படத்துக்கான ஒளிப்பதிவை பாலமுரளியும், படத்தொகுப்பை மதுரனும், இசையை தர்சனனும் வழங்கியிருக்கிறார்கள்.
படத்துக்கான ஒலியமைப்பை சன்சிகள் மேற்கொள்ள சீனா உதயகுமார், தினேஸ் ஏகாம்பரம், லக்ஸ்மன், குமணன், தீபன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
குறும்படத்துக்கான முக்கிய உதவிகளை மாதவனும், துவாரகனும் வழங்கியிருக்கிறார்கள்.




திரைக்கதை வடிவம்....
நான் சினிமாத்துறையில் எந்தத் துறையையும் முறையாகக் கற்றவன் அல்ல. நான் ரசித்த சினிமாவில் எனக்கு சரி என்று பட்டதையே தான் படைப்பாக செய்கிறேன். அதனால் இத்திரைக்கதை வடிவம் கூட இத்துறையை முறையாகக் கற்றவருக்கு தவறுகளுடன் தெரியலாம். ஆனால் இவற்றை எல்லாம் நான் கருத்தில் எடுக்கப் போவதில்லை.
கதைகளைக் கையில் வைத்துக் கொண்டு எப்படி திரைக்கதையை எழுதுவது என ஓடித் திரியும் பலரைக் கண்டிருக்கிறேன். அதை இப்படி எழுதிவிட்டு இப்படியும் உருவாக்கலாம் என்ற ஒரு நோக்குடனே பகிர்கிறேன்.
மிக முக்கியமாக இங்கு குறும்படத்தில் நீக்கப்பட்ட பல காட்சிகள் திரைக்கதையில் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இதைப் போன்னு என் மீதமுள்ள 8 குறும்படங்களின் திரைக்கதையையும் அடுத்த கட்டமாகப் பகிர்கிறேன்.

“தழும்பு” திரைக்கதை..

காட்சி 1
களம் - நாயகன் வீடு
(கமராவில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது அதே பிறேமில் கமரா இருக்க வேண்டும்)
ஒரு சில சாவிகள் ஒரு மேசையில் இருப்பது போல 4 செக்கன் காட்சி நகர ஒரு ஆணின் கை அதை எடுக்கிறது. அதன் பின்னர் ஒரு பெண்ணின் கை (தாயின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்) ஒரு ரொபி (சொக்லட்) யுடன் தேநீரை வைக்கிறது.
அதே கை சாவியை திருப்பி வைத்து ரொபியை எடுக்கிறது.
(இதன் பின்னர் குளோசப்)  வாயால் பிய்த்து வாயினுள் போட்டு விட்டு தேநீரை அருந்துகின்றது.
அடுத்த காட்சியில் அவன் தனது சைக்கிள் ரிம்மை நேராக்குகிறான். அப்போது தான் அவனுக்கு கை இல்லாதது பார்வையாளருக்கு தெரிய வேண்டும். (இரண்டு கால்களுக்குள் சில்லை வைத்து நிமிர்த்துதல்)

காட்சி 2
சைக்கிளில் பயணிக்கிறான். பின் கரியலில் ஒரு கைவிளக்குமாறு இருக்கிறது. ஒவ்வொரு பூட்டிய கடை வாசலாக நின்று கடையை ஏக்கத்தோடு பார்க்கிறான்.
ஒரு கடை வாசலைப் பார்க்கும் போது “கடை திறந்திருக்குறதும் பூட்டியிருக்கிறதும் என்ர விருப்பம். தம்பி 3 லட்சம் அட்வான்ஸ் வை கடை தரலாம்.“
மற்றைய கடை வாசலில் “தம்பி தடுப்பால வந்த உங்களிட்டை கடையை தந்தால் எனக்கு பிரச்சனை வரலாம் குறை நினைக்காதிங்கோ“
பயணிக்கும் போது எதிரே ஒரு நண்பன் வருகிறான்.
நாயகன் – “மச்சான் என்னை அடையாளம் தெரியுதோ“
அவன் – எப்பீடீடா மறக்கிறது
நாயகன் – ஆருமே வேலை தாறாங்கள் இல்லையடா ஒரு லோனுக்கு சைன் வச்சு தாறியே.
அவன் – குறை நினைக்காத மச்சான் உங்களோட பழகினாலே பிரச்சனை வரலாம் மச்சான் ஒன்றிரண்டு வருசம் போகட்டும் நீ என்ன கேட்டாலும் செய்யிறன்.
சொல்லிவிட்டு அவன் போக ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்று விட்டுக் கிளம்புகின்றான்.
அடுத்த கடை வாசலுக்கு போகிறான் “தம்பி இந்த பிடி துறப்பு ஒண்டுக்கும் யோசிக்காதை கரண்ட் பில்லை மட்டும் ஒழுங்காக கட்டு“ இந்த வசனம் போகும் போதே அவன் துப்பரவாக்க ஆரம்பிக்கிறான்.
காட்சி 3
புதிய கடையில் இருக்கிறான். ஒரு சிறுவன் சிகரெட் வாங்க வருகிறான்.
“அண்ண ரெண்டு சிகரட் தாங்கோ“
“எத்தினை வயசடா உனக்கு“
“அப்பாவக்கு…“
“போய் கொப்பரை அனுப்பு..”

காட்சி 4
சில பியர் ரின்களில் தரித்து நிழற்கும் கமரா அப்படியே சிறுவர்களுக்கு மாறுகிறது. அப்படியோ பானிங் ஆகும் போது லோங்கில் நாயகன் வந்து கொண்டிருக்கிறான். மதியச் சாப்பாட்டுக்கு அவ் வீதியால் சென்று கொண்டிருக்கிறான். இவர் களைக் கடக்கும் போது
“இவர் தான் மச்சான் சிகரட் தர மாட்டனென்டவர்“
மற்றவன்
“இஞ்ச… ஹலோ..“
இவன் திரும்பிப் பார்க்க தெரியாதது போல அவர்கள் மற்றப்பக்கம் பார்க்கிறார்கள். இவன் கிளம்ப ஆயத்தமாகிறான்.
பின்னாலிருந்து குரல் வருகிறது.
“பிச்சக்காரத்தனமா கடை போட்டிருந்தா குடுக்கிற காசுக்கு சாமான் தரணும் கண்டியளோ”
சைக்கிளை விட்டு இறங்கியவன் ஸ்ரான்டை தட்டிவிட்டு அருகே போறான். போன வேகத்துக்கு கடைக்கு வந்த போடியனுக்கு பளார் என ஒரு அறை. அவன் சுழன்று விழுகிறான். மற்ற சைக்கிள்களும் பொத்தென்று விழ மற்றவர்கள் ஓடுகிறார்கள்.
இப்போது அவர்கள் ஓடுவதைக் காட்டத் தேவையில்லை வீழுந்த சைக்கிள் சில்லு சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களில் ஒருவன் திருப்பி வந்து செருப்பை எடுத்துக் கொண்டு ஓடுதலை காட்டினால் போதும்.
அடிவாங்கியவன் கன்னத்தை தடவிக் கொண்டு எழும்பி போகிறான்.
“பொறு உனக்கு அப்பாட்டை சொல்லி என்ன செய்யிறன் பார்“
“போடா போ.. கை இல்லாதவனெண்டால் போல பலமில்லாதவன் எண்டு நினைக்காதை கொப்பனையும் வெட்டிப் போட்டு ஜெயிலுக்கு போவன்ரா“ உச்ச கோபமா.. (இது அவன் இப்பவும் பலசாலி என்பதைக் காட்டுவதற்காக)
காட்சி 5
கடை வாசலில் கண்ணாடி துடைத்துக் கொண்டு நிற்கிறான்.
அப்போது தகப்பன் பின்னால் வருகிறார். அவரோடு அடிவாங்கியவனும் வருகிறான்.
கொஞ்சம் எட்டத்தில் நின்றபடி
“டேய் காட்டுமிராண்டி நாயே என்ர பொடியனுக்கு அடிக்க நீயாரடா“
திரும்பிப் பார்த்து விட்டு வன்முறை விரும்பாதவன் போல தன் வேலையை பார்க்கிறான். அவரது மகன் நகத்தைக் கடித்தபடி நிற்கிறான்.
“கொலைகாரா உன்ர குணத்தால தானே எல்லாரும் ஒதுக்கி வச்சிருக்குதுகள். செத்த சனத்தின்ர காசுகளை அடிச்சுக் கொண்டு வந்து கடை போட்டு பம்மாத்துக் காட்டிக் கொண்டு என்னை ஊரை ஏமாத்துறியாடா..”
இறுதி வசனங்கள் சொல்லும் போது கண் கலங்க வேண்டும் (இவனிலேயே கமரா நிற்க தந்தையின் தொனி குறைந்து அவர் திரும்பிச் செல்வதைக் காட்ட வேண்டும்…
அப்படியே கடைக்குள் ஓடிப் போய் ஒரு மூலைக்குள் இருக்கிறான்.
தன் இழந்த கையை தடவிவிட்டு மறுகையால் முகத்தைப் பொத்தி அப்படியே கீழே கையை விலக்கி வாயோடு நிறுத்துகிறான்.
குமுறி அழுதபடி “இந்தப் பேரெடுக்கவா இந்தளவையும் இழந்தன்“
கருந்திரையுடன் பெயர்கள் இடப்படுகிறது.

சிறுகதைக்கான மூலத் தொடுப்பு இங்கே சொடுக்கவும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா




8:02 PM - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top