ஈழத்தமிழர்களின்
வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டுவோமானால் ஒவ்வொரு பக்கமும் இதற்கு முன் இரத்தக் கறைபடிந்த
ஒரு கை தட்டிப் பார்த்த தடயத்துடன் தான் நாமும் தட்டவேண்டியிருக்கும்.
காலத்துக்குக்
காலம் அவர்களது நிழலாக அவர்கள் மரணமும் துரத்திக் கொண்டே இருந்தது. அதில் ஒன்றாக 3
தசாப்தங்கள் கடந்தும் நினைவு விட்டகலாத ”வல்வைப் படுகோலை” நிகழ்வு ஆழ்மனதில் நிலையாய்
அமர்ந்திருக்கிறது. அமைதிப்படை எனக் கூறிக் கொண்டு தமிழர் பிரதேசங்களுக்குள் நுழைந்த
இந்தியராணுவமானது வல்வெட்டித்துறையில் ஆகஸ்டு மாதம் 2 ம் திகதி ஆரம்பித்த மக்களின்
உயிர் வேட்டையை தொடர்ந்து 3 நாட்களுக்கு அரங்கேற்றியது.
யாரும் உள்நுழைய
முடியாமல் ஊரடங்கைப் பிறப்பித்த அப்பிரதேசத்துக்குரிய இராணுவத்தளபதிகள் விடுதலைப்புலிகள்
மேல் இருந்த கொலைவெறி வெறுப்பை அப்பாவி மக்களிடம் போக்கிக் கொண்ட நாட்களாகும்.
இப்படுகொலை தொடர்பாக
திரு நா.அனந்தராஜா அவர்கள் எழுதிய India’s Mylai என்ற நூலை காணொளி வடிவமாக்கும் இந்த
ஆவணப்படத்தை இயக்கும் பொறுப்பை இற்றைக்கு 6 மாதங்களுக்கு முன்னர் என் பொறுப்பில் பெற்றுக்
கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை
இவ் ஆவணப்படமானது , 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த தலைவர்கள் செய்த தவறுக்காக இன்று இந்திய
அரசாங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்க வைக்கும் நோக்கில் நான் அமைக்கவில்லை
ஆனால் எங்களது அபிலாசைகளை அன்று இந்தியா எந்தளவுக்கு சிதைத்தது என்பதை என் தலை முறைக்கும்
சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒன்று இயற்கையாலேயே எனக்குள் அமைந்து விட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை
இங்குள்ள தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் கலாச்சார பண்பாடுகளை விரும்பியோ
விரும்பாமலோ உள்வாங்கிக் கொண்டு நகரும் வாழ்க்கை அமைப்பைக் கொண்ட குடித்தொகைகளைக் கொண்டதாகும்.
எல்லாவற்றையும் விட இப்படுகொலை நடந்த வல்வெட்டித்துறையை எடுத்துக் கொண்டால் அங்குள்ள
பெரும்பாலான வீடுகளின் வாசல்களை இன்றுவரை இந்தியாவின் பெரும்தலைவர்களின் படங்களே அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது. ஆனால் தன்மீது இந்தளவு பற்றுக் கொண்ட மக்களின் அபிலாசைகளை இந்தியா
ஒரு பொருட்டாகக் கூட மதித்ததில்லை.
இந்தியத் துணைக்கண்டத்தின்
அரசியல் நகர்வுக்கு இக்குடிமக்களின் துணை நேரடிப் பலமாக இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம்
ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர்களின் பங்கு பேசு பொருளாகவேனும் பெரும் பங்காற்றுகிறது.
ஈழத்தமிழர்களைப்
பொறுத்தவரை , இன்னொரு நாட்டின் மூலம் தமக்கு ஏதாவது அரசியல் இலாபம் கிடைக்குமானால்
அது இந்தியாவால் மட்டும் தான் ஆக்கபூர்வமாகக் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் மற்றைய நாடுகளின் இலங்கைப் பிரவேசமானது இலங்கைப் பெரும்பான்மை அரசாங்கத்துடனான
இராஜ தந்திர உறவுக்கானதாகவே அமையும் ஆனால் பாரத தேசத்திற்கு அண்மையாக இருக்கும் தமிழர்
பிரதேசங்களானது இந்தியாவை மதித்துக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இந்திய இராணுவத்தால்
பாதிக்கப்பட்ட இத்தனை பிரதேசங்களிலும் இந்திய கிரிக்கேட் அணியின் வெற்றிகளுக்கு பட்டாசு
கொழுத்திக் கொண்டாடும் அம்மக்கள் கூட்டமே மிகப் பெரும் உதாரணமாகும்.
இவ் ஆவணப்படத்தின்
மூலம் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு இம்மக்களை இத்தனை வருடத்துக்கு முன்னிருந்து நசுக்கினார்கள்
என்பதை புதிய தலைவர்களுக்கு தலைமுறையினருக்கும் நினைவூட்டுவதற்காக நல்ல ஒரு சந்தர்ப்பமாக
கருதியே இவ்வாவணப்படத்தை பூர்த்தி செய்திருக்கிறேன்.
இதன் நோக்கத்தைப்
புரிந்து மீளவும் ஒத்துழைப்புக் கொடுத்த மக்கள் அனைவரும் நன்றி கூறப்படவேண்டியவர்களே.
தமிழர் பிரதேசங்களின் பல்வேறு இடங்களில் இப்படியான மிலேச்சத்தனமாக வன்முறைகளை அவிழ்த்து
விட்டு பசியாறிய இராணுவ வீரர்கள் இன்று தம் இயற்கையின் இறுதிக்காலத்தை அண்மித்துக்
கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
அக்காலத்திலேயே
பல இராணுவ வீரர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் இந்தியாவின் பிரதமராக இருந்த
ராஜீவ் காந்தி அவர்கள் வரலாற்றுப் பக்கங்களில் இருந்து இதை மூடி மறைத்திருந்தார். இன்று
இருந்திருந்தாலும் அவர் இச்சம்பவத்துக்கு பிராஜச்சித்தம் செய்திருப்பாரோ தெரியாது ஆனால்
நிச்சயம் இங்கு நடைபெற்ற கொலைகள் அவரது உள்மனதைக் குடைந்து கொண்டு தான் இருந்திருக்கும்.
தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/mathisuthaofficial/
https://www.facebook.com/mathisuthaofficial/
1 கருத்துகள்:
கருத்துரையிடுக