”சேரா காலமை புலிகளின்
குரல் கேட்டனியே”
கேசவன் சற்று இழுத்தபடியே
சொன்னான்.
”இல்ல OPD க்கு
வந்திட்டன் இழுக்காமல் சொல்லு”
சற்றே தயங்கியவனாக..
”திருமகள் வீரச்சாவாமடா”
அரைவாசியை விழுங்கிக்
கொண்டே சொன்னான். நான் அழுவேன் ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.
நானும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் கத்தி அழ வேண்டும் போல் இருந்தாலும் கண்களின் ஓரம்
வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கொஞ்ச எச்சிலையும் விழுங்கிக் கொண்டேன்.
மனதுக்குள் திருப்ப
திருப்ப சொல்லிக் கொண்டேன்
”காட்டிக் கொள்ளாதே
நீ ஒரு வைத்தியர் உன்னை நம்பி பல காயக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்”
கேசவன் என்னை முழுதாகப்
புரிந்தவன். அருகே வந்து கைகளைப் பற்றிக் கொண்டு
”உன்ர வோட் ஐ நானே
பார்க்கிறன் போயிட்டு வா பின்னேரம் தான் விதைக்க போகினமாம்”
”எங்க நடந்தது”
”கல்லாறு”
ஒரு தடவை வியந்து
போய் திருப்பியும் கேட்டான். ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்னர் தான் அங்கு முன்னரங்குக்கு
ஒரு மருத்துவ முகாமிற்குச் சென்றிருந்தான். அங்கு ஏதோ தாக்குதல் ஆரம்பிக்கப் போகிறது
என்பதை முதலே ஊகித்திருந்தான் ஏனென்றால் நான்கைந்து சினேப்பர் பிள்ளையள் முகம் முழுக்க
கரிபூசி உருமறைப்புடன் நிற்க அவர்கள் செக்சன் லீடர் ஏதோ அறிவுறுத்திக் கொண்டு நிண்டார்.
வந்த களைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை அவரது போத்தலை வாங்கித் தான் குடித்தேன்.
”என்னத்தில காயம்”
”வயித்து காயம்
சினேப் பண்ணியிருக்கிறாங்கள்”
ஏதோ அவளைப் பார்த்தே
ஆக வேண்டும் என்ற எண்ணம் இழுத்தது ஏனென்டால் அவள் முகத்தைக் கண்டு 2 வருடம் இருக்கும்.
படிக்கிற காலத்திலேயே முளை விட்ட காதல் அது. இருவருக்கும் மனசுக்குள் சின்ன பயம் இருந்தாலும்
எப்படியோ வீட்டுக்கு கதை போய் விட்டது. ஆனால் நாம் பயந்தளவுக்கு இருக்கவில்லை
”படிச்சு முடியட்டும்
செய்து வைக்கிறம் ஆனால் அதுவரைக்கும் எங்கட பேர் கெடக் கூடாது” அழுத்தமான நிபந்தனையால்
காணும் போது சிரிப்பது மட்டுமே எம் உச்ச பட்ச காதல் தொடர்பாகிப் போனது. அப்பப்போ கடிதங்கள்
மட்டும் புத்தகங்களால் காவப்படுவதுடன் சரி. அதன் பின்னர் வீட்டுக்கொருவர் போராட போக
வேண்டும் என்றதன் பிறகு இருவர் வீட்டிலும் நாமே முன் வந்து போய்க் கொண்டோம்.
”பெட்டி சீல் பண்ணியிருக்கா”
வெளிவராத குரலை
இழுத்து குரல் நாணில் பூட்டிக் கேட்டேன்.
”இல்ல துணைக்கு
ஆரையும் கூட்டிக் கொண்டு போ”
கூறிக் கொண்டே
என் வோட்டை பொறுப்பெடுப்பதற்கான ஆயத்தமாக ரிக்கேட்டுக்களை எடுத்து அடுத்த ஊசி போட வேண்டியவருக்குரிய
ஒழுங்கில் அடுக்க ஆரம்பித்தான்.
வழமையாக அடம்பிடிக்கும்
மோட்டார் சைக்கிள் இன்றைக்கு என் நிலமை புரிந்தோ தெரியவில்லை ஒரே தடவையில் பற்றிக்
கொண்டது. இன்னொரு மனித வலுவை வீணாக்க விரும்பாமையால் தனியாகவே புறப்பட ஆயத்தமானேன்.
ஆனால் மனதுக்குள்
ஏதோ உறுத்தியது. உயிரோடில்லாத அந்த முகத்தை நான் பார்க்கத் தான் வேண்டுமா?
அவளில் அடிக்கடி
நான் ரசித்து இன்று வரை என் நினைவில் எஞ்சி நிற்பது அந்த குழி விழுந்த கன்னமும் பல்
தெரியாத சிரிப்பும் தான் ஏன் அந்த முக விம்பத்தை நானே அழிப்பான்.
மோட்டார் சைக்கிளை
நிறுத்திக் கொண்டேன்.
வோட்டுக்குள் நுழைந்தேன்
கேசா ஊசி போட வேண்டியவருக்கு போட்டு முடித்திருந்தான். இன்று தியெட்டரில் எனக்கு 8
கேஸ் சேர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. புதிதாக வருவதைத் தவிர்த்து.
”நீ போ நான் தியெட்டருக்கு
போறன்” என்றான் கேசா,
”வேண்டாம் நான்
போகேல்லை நீ போய் படு இரவு மாற ஆள் வேணும்”
அவன் பதில் எதுவும்
பேசவில்லை என் முடிவுகள் எப்போதும் மாற்றத்திற்குரியவையல்ல என்பது அவனுக்கு தெரியும்.
”சேரா….. திருமகளின்ர
செக்சன் லீடர் காலமை காயப்பட்டு இப்ப தான் வந்திருக்கிறா”
”கதைச்சியா”
”இல்ல மயக்கம்
தெளியேல்லை”
காதல் முடிந்து
விட்டது கடமையாவது ஒழுங்காகச் செய்வோம் என்று மனது தானாகவே சொல்லிக் கொண்டிருந்தது.
”ம்.... நான் தியெட்டர்
போறன் நீ ஓய்வெடுத்திட்டு வா”
கூறிக் கொண்டே
ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
கையை ஸ்க்ரப் பண்ணி
விட்டு வரவும், அல்லி அக்கா மயக்க மருந்து கொடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார். கையுறையை
அணிந்து கொண்டு வரவும் உதவியாளர்கள் அனைத்தும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். Wound toilet
செய்ய வேண்டிய காயம். இது தான் கடைசியாக செய்ய வேண்டிய wound toilet என்று மனதுக்குள்
நினைத்துக் கொண்டேன் காயத்தை சரியாக பராமரித்தால் அடுத்த வாரம் தையல் போடலாம்.
ஏனோ தெரியவில்லை
கத்தியை கையில் எடுத்ததும் என்னைச் சுழ இருப்பதே எனக்கு மறந்து விடும் அதற்குள் திருமகளும்
இன்று மாட்டுப்பட்டு விட்டாள். வேகமாகவே செய்து முடித்தேன். இரண்டாம் தரம்
ketamine கொடுக்க வேண்டிய தேவை அல்லி அக்காவுக்கு ஏற்படவில்லை.
சாதுவாக தலையிடிப்பது
போல இருந்தது.
”அக்கா அடுத்தாளை
ஏற்றுங்கோ ரீ ஏதாவது குடிச்சிட்டு வாறன்”
அவர் தலையசைத்ததைக்
கூடப் பார்க்காமல் கவுணைக் கழட்டிக் கொழுவி விட்டு வெளியே வந்தேன் மேசையில் சுடுதண்ணீர்ப்
போத்தலில் தேநீர் ஆயத்தமாகவே இருந்தது.
ஒரு தடவை தான்
வாயில் வைத்திருப்பேன் கேசவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வந்து ஜீன்ஸ் பொக்கட்டில்
கையை விட்டபடி…
”சேரா… அவா எழும்பீட்டா
திருமகள் உனக்கனுப்பச் சொல்லி குடுத்ததா ஒரு கடிதம் தந்தவா”
அவன் நீட்ட முதலே
இழுத்துப் பறித்துக் கொண்டேன்.
என்றும் என் அன்பிற்குரியவனுக்கு…
நலம் சுகம் எல்லாம்
விசாரித்தெழுதி உன் கடமை நேரத்தையும் என் கடமை நேரத்தையும் வீணாக்க முடியாது. அதோட
எனக்கடுத்ததா கடிதம் எழுத இன்னும் 3 பேர் பேனைக்கு காவல் நிக்கினம்..
நாம் ஒன்றாய் வாழும்
காலம் மிகவிரைவில் கை கூடும்
முக்கியமா ஒண்டு
சொல்லோணுமடா, இப்ப நீ அக்காவிட்டை தண்ணி வாங்கிக் குடிக்கும் போது உருமறைப்போட வரிசையில்
நிண்டது நான் தான். ஓடி வந்து கையை பிடித்து பேசோணும் போல இருந்தது. 2 வருசத்துக்கு
பிறகு பார்க்கிறன் உன்ர அழகும் மிடுக்கும் கண்டு மிரண்டு போனன். எல்லாரும் டொக்ரர்
டொக்ரர் எண்டும் போது பெருமையா இருந்தது. நான் காயப்பட்டு வந்தால் நோகாமல் மருந்து
கட்டுவியா.
கூப்பிடவில்லை
எண்டு கோபிக்காதை அணியில் நிற்கும் போது பேசவே கூடாது என்பது நான் சொல்லித் தான் உனக்கு
தெரியோணும் எண்டில்லை.
காகிதத்தின் அரைவாசி
கண்ணீரால் நிரம்பியிருந்தது. கேசவன் எதுவுமே பேச முடியாமல் என் முகத்தையே பார்த்துக்
கொண்டு நின்றான்.
”நீ போ போய் படு
நீ வந்தால் தான் நான் போய் படுக்கலாம்”
தன்னை விரட்டுகிறான்
எனப் புரிந்திருக்க வேண்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.
அல்லி அக்கா அடுத்த
காயத்தை ஆயத்தப்படுத்தியிருப்பார். கடிதத்தை மடித்து ஜீன்ஸ் பையில் வைத்துக் கொண்டேன்.
கட்டிலில் கிடந்தவனின்
காய வேதனைக் கதறல் சற்று அதிகமாகவே இருந்தது. மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க ஆரம்பிக்க
அவன் கத்தல் முனகலாக மாறிக் கொண்டிருந்தது. திருமகளின் வலியை மற்றைய ஜீன்ஸ் பையில்
மடித்து வைத்துவிட்டு கையுறையை போட்டு கத்தியை கையில் எடுத்துக் கொண்டேன்.
3 கருத்துகள்:
கருத்துரையிடுக