குறுங்கதை
காலம் செய்த கோலம்
(23may2010 மித்திரன்)
”கிறீச்…..” என்ற சத்தத்துடன் அந்தப்படலை சற்றுச் சிரமத்துடன் திறந்து கொள்கிறது. அவன் போகும் போது அப்படி இருக்கவில்லை. முற்றத்தில் நின்ற செவ்வந்தி, சீனியாஸ் கன்றுகள் பெண்பிள்ளைகள் உள்ள வீடென்பதைக்காட்டி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவன் வீட்டை விட்டுப் போய் 8 வருடங்கள் தான் ஆகியிருந்தது.
வீட்டின் பின் மூலையில் நாயொன்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தது. அது நன்றாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ‘சலக் சலக்‘ என்ற சங்கிலியின் சத்தம் உரப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
அவன் மீண்டும் இந்த வீட்டுக்கு திரும்பி வருவான் என்று சற்றுக் கூட எதிர்பாக்கவில்லை. அவன் ஆசைகள் கனவுகள் எல்லாம் 10 வருடத்திற்கு முன்னமே எல்லாம் பறந்தொடிவிட்டது. அப்பாவியான அவனை கொலைச்சந்தேக நபர் என்ற பெயரில் விழுங்கிக் கொண்ட சிறை தாடி, மீசை என்பவற்றை பரிசாகக் கொடுத்து கக்கிவிட்டிருந்தது. அந்தக் கஷ்ட காலம் வராவிடில் இவன் இப்போது ஏதோ ஒரு நாட்டில் உழைத்துக் கொண்டு வீடு வந்து போயிருப்பான். அதே போல் வீட்டுக்காரர் கூட இப்படி ஓலைக் கொட்டிலில் இருக்க வேண்டியிருக்காது.
போய் முற்றத்தில் நிற்கிறான். உள்ளே தேங்காய் துருவும் சத்தம் கேட்கிறது. விறாந்தையில் இவன் படத்திற்கு முன்னே ஊதுபத்தி எரிந்து கொண்டிருந்தது.
”பிள்ளை ஆரோ வருகினம் போல ஆரெண்டு பார்”
”பொறணை நாய் கத்திக்கொண்டு நிற்குது அவிட்டுப் போட்டு வாறன்”
அவள் ஒரு முறை அந்தப் புதிய மனிதரை எட்டிப் பார்த்து விட்டுப் போகிறாள். மற்றவழும் தெரியாதவள் போல நித்திய கல்யாணியில் பூ பிடுங்கிக் கொண்டு நின்றாள்.
தலையை நீட்டிப்பார்த்த தாய் ”ஆரப்பு அது ஆளையும் மட்டுப்பிடிக்கேலாமல் கிடக்குது”என்றாள்.
அவன் வாயடைத்துப் போய் நின்றான். அவன் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் அடங்கிப் போனது.
அவள் நாயை அவிட்டு விட்டிருக்க வேண்டும். நாய் சந்தோசத்தில் வீட்டை ஒரு முறை சுற்றி விட்டு இவன் காலை முகர்ந்து பார்த்தது.
”அடிக்…..கலையடி புள்ள. அதுக்கு புது ஆக்களெண்டால் சரிவராது”
முகர்ந்து பார்த்த நாய் இவன் மீது காலைப் போட்டது. அவன் ”பப்பி” என அதன் தலையை வருடி விட்டான். அது இவனை பாய்ந்து பாய்ந்து நக்கியது.
”அம்மா இப்ப கூட உங்கட மகனை தெரியலையா?“
”அப்பு என்ர ராசா இப்பிடி மாறிட்டியே” தாய் கத்திக் கொண்டு ஓடி வந்தார். இப்போது நாய் தன் எஜமானரை காக்கும் பணியில் ஈடுபட்டது. அவர்கள் பக்கம் திரும்பி குரைக்க ஆரம்பித்தது.
4 கருத்துகள்:
கருத்துரையிடுக