வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நம்மளுக்கு சும்மாவே இந்த அண்ணன் தங்கச்சி கதை என்றால் இன்னொரு கதிரையையும் சேர்த்து உயரத்தில் இருந்து பார்ப்போம். ஆனால் நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் ஒரு அண்ணன் தங்கை சார்ந்த கதை என்பது ஒரு டெம்ளெட் கதையாக தான் இருக்கும்.
-தங்கையை சிரமப்பட்டு வளர்க்கும் அண்ணன்
-கொடுமைக்கார மச்சான்
-ஒரு வயது மட்டம் வந்த பின்னர் நடக்கும் கதை தான் படம் முழுக்க நகரும்
இதை விட உணர்வால் அழுத்தம் பெறுவது என்பது மிகக் குறைவு. ஆனால் இந்த ஈரானியப்படம் (Children of Heaven (1997)) ஒரே ஒரு சின்னக் கதையை வைத்துக் கொண்டு அத்தனை உணர்வையும் அள்ளிக் கொட்டி செதுக்கியிருக்கிறார்கள்.
தங்கையின் காலணியை தைத்து எடுத்து வரும் போது ஒரு அண்ணன் தொலைத்து விடுகிறான். வீட்டிற்கும் சொல்ல முடியாத நிலையில் அண்ணன் அழும் இடத்தில் காட்சி தொட்டு நிற்கிறது.
ஆனால் அண்ணனின் நிலமை புரிந்த தங்கையின் முகபாவம் ச்சே என்ன ஒரு இடமது......
ஒரு காலணியை இருவரும் மாற்றி மாற்றி பாடசாலை செல்கிறார்கள். ஒரு தடவை தங்கை காலணியைகால்வாய்க்குள் விழுத்தி விட்டு படும் அவலம் அளது பொறுப்புணர்வை தெளிவாகக் காட்டுகிறது.
அதே போல தனது காலணி இருக்கும் வீட்டை கண்டு பிடிக்க பயந்து பயந்து தயங்கி பின் போனவள் பின்னர் தமையனை அவ்வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது போகும் மிடுக்கு அவள் அண்ணன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பாசத்தோடு உணர்த்தும் காட்சி...
கடைசியில் அண்ணன் மீன்கள் கடிப்பது கூட உணராமல் புண் காலை தண்ணீருக்குள் விட்டிருக்கும் காட்சி அவன் எதையெல்லாம் மறந்திருக்கிறான் என்பதை உணர்த்தினாலும் படத்தின் இயக்குனர் பார்வையாளரை கவலையோடில்லாமல் சந்தோசத்தோடு தான் இருக்கையை விட்டு எழும்பிப் போக வைக்கிறார்.
அண்ணன்களை புரியாத தங்கைகளும் தங்கைகளை புரியாத அண்ணன்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமிது
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
3 கருத்துகள்:
கருத்துரையிடுக