வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
உலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.
தகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில் பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.
இந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின் மூலையில் இருந்து கொண்டு ஒரு தனிமனிதன் இந்தளவு வளர்ச்சி கண்டு இவ்வளவு சாதித்திருப்பது என்பது வியக்க வேண்டிய விடயமொன்றாகும். பணம் எதுவும் செய்யும் என்ற ஒரு வாக்கியத்தால் மறுவாதங்களை பிரயோகித்தாலும் உலகில் எவருமே எட்ட முடியாத ஒரு எல்லையைத் தான் அவர் எட்டியிருக்கிறார்.
இவருக்கு உலகமெங்கிலும் 114 மையங்களில் 1200 சத்யசாய் அமைப்புக்கள் உள்ளன. அவரது பக்தர்கள் 100 கோடி பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்புக் கூறுகின்றது.
அவருடைய நிறுவனங்கள் உலகமெங்கிலும் 136 நாடுகளில் சமூகசேவையாற்றுகின்றது. அதன் ஒரு பகுதி அமைப்பான விழுமிய சமூக அமைப்பானது ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தது.
விழுமிய கல்வி அமைப்பானது பல மாணவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. அதே போல விழுமிய மருத்துவ நிறுவனம் பல இலவச வைத்திய முகாம்களை அமைத்து உலகின் பல்வேறு இடங்களிலும் இலவச மருத்துவ உதவியை அளித்து வருகிறது. அத்துடன் புட்டர்பத்தியிலும் பெங்களுரிலும் மிகப் பெரும் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ வசதியளிக்கப்படுகிறது.
இவரது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுபவற்றில் பிரதானமானது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்காரர் ஆட்சியிலிருந்தே ஆந்திராவில் ஆனந்பூர் மற்றும் கோதாவாரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வறட்சியில் காணப்பட்டது. இப்பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பல் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவ்வளவு இடத்திற்கும் குடிநீர் கிடைக்கச் செய்து வழி செய்தார்.
சென்னையில் இருந்த குடி நீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆந்திர அரசுடன் இணைந்து இரு அரசும் முயற்சித்த தெலுங்கு கங்கை நீர்த்திட்டத்தை சுமார் 200 கோடி செலவழித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
இவை இப்படியிருக்கையில் பகுத்தறிவு பேசியும் ஆன்மீகவாதிகளை கீழ்த்தரப்படுத்தியும் அரசியல் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கூவம் நதியை துப்பரவு செய்து தரும்படி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இவர் மரணம் அடைந்த பொழுது உலகமெங்கிலும் இருந்து 4 லட்சம் பக்தர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவரது இறுதி நேரம் உறுதியாகிவிட்ட நிலையில் 6000 போலிஸ்காரர்கள் புட்டர்பத்தியில் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆந்திரா அரசு 4 நாட்கள் துக்கதினமாக அறிவித்து அனுஸ்டித்து அவரை கௌரவித்தது.
எல்லாம் தெரிந்தவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லை என சில பகுத்தறிவு பேசும் அரைகுறை அறிவாளிகள் கூறிக் கொண்டாலும் சித்தர்களைத் தவிர சமூக மாயைக்குள் வாழ்ந்த எந்த மனிதனும் மரணச் சக்கரத்தைக் குழப்பி வாழவில்லை என்பது அறிவுறுத்தியும் எடுபடப் போவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி வாழ்பவர்கள் தம்மை ஒரு குழுவிற்குள் வேறுபடுத்திக்காட்டவும் தம் நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தவுமே பகுத்தறிவு பேசுகிறார்கள்.
ஒரு தனிமனிதனால் 100 கோடி பேர் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதைப் போல சாதனை இந்த பாதக உலகத்தில் வேறெதுவாக இருக்க முடியும். அப்படி நம்பி வாழ்பவரை கீழ்த்தரப்படுத்துவதால் பாவிகள் உலகத்தை சிருஸ்டிக்கும் நீங்களே பாவிகளாக மாறிக் கொள்கிறீர்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
6 கருத்துகள்:
கருத்துரையிடுக